Tuesday 25 November 2014

சாப்பிடலாம் வாங்க

சாப்பிடலாம் வாங்க ....

சாப்பிடுறதப் பத்திப் பேசுறது என்ன அவ்வளவு முக்கியமான விசயமான்னு கேட்டா .....என்னோட பதில் “இல்லையா பின்ன?” தொண்டை தாண்டிப் போனா டேஸ்ட் என்னன்னு உணர முடியாத இந்த சாப்பாட்டுக்குத் தான இவ்வளவு மெனக்கடுறோம். சாப்பாடு எப்படி இருந்தாலும் அதை ரசிச்சு ருசிச்சு சாப்பிடுறோமா இல்ல கடமைக்கேன்னு சாப்பிடுறோமாங்கிறது ஒவ்வொருத்தரைப் பொறுத்தும் மாறுபடும்......
 
தனியா உக்கார்ந்து சாப்பிடுறோமோ நாலைஞ்சு பேர் கூட சேர்ந்து உக்கார்ந்து சாப்பிடுறோமோ அது பிரச்சனையில்ல. எப்படி சாப்பிடுறோம்? ரசனையா
சாப்பிடும் சிலரைப் பார்த்தாலே நமக்கும் அந்த உணவை சாப்பிடணும் போல இருக்கும்.....
கோன் ஐஸ்கிரீமை கைகளில் வழிய வழியச் சுவைக்கும் சின்னப் பிள்ளைகள் நம்மளயும் சாப்பிடத் தூண்டுதில்லையா? நறுக்கிப் போட்ட மாங்காய் துண்டுகள்ல உப்பும் மிளகாப் பொடியும் தூவி ஒரு கடி கடிச்சு ஒரு கண்ணை மட்டும் இறுக மூடிச் சப்புக் கொட்டும் காலேஜ் பொண்ணப் பார்க்கும் போது நமக்கும் பல்லு கூசுதா இல்லையா? ஆமா தான.....அதான் விஷயம்....
 
பந்தியிலயோ, ஹோட்டல்லயோ அல்லது வேற ஏதாச்சும் பொது இடத்திலயோ மத்தவங்க கூட சேர்ந்து நாம சாப்பிடும் போது சோத்துல குழம்பை ஊத்தி மொத்தமா கான்க்ரீட் கலவை மாதிரி குழப்பி அடிக்காம கொஞ்சம் கொஞ்சமா பிசைஞ்சு சாப்பிடுறவங்களையும் , ரசம், தயிர், மோர் போட்டு சாப்பிடும் போது மொத்தமா சேர்ந்து பிசைஞ்சு (இப்ப மட்டும் கான்க்ரீட் கலவை இல்ல ஹிஹி) சாப்பிடுறவங்களையும், ரெண்டாவது தடவ கேட்டா கெடைக்காதுன்னு தெரிஞ்சும் சத்தம் (சண்டை!!!!) போட்டு அப்பளம் வாங்கி வேடிக்கை பார்குறவங்களப் பெருமையா/நக்கலா ஒரு பார்வை பார்த்துட்டு முழு அப்பளத்தையும் பாயாசத்துல நொறுக்கிப் போட்டு சாப்பிடுறவங்களையும் பார்த்தா ”என் இனமடா/டி நீ”-ன்னு மனசுக்குள்ள தோணுதுல்ல......”
 
ஆனா சிலர் இருக்காங்க.....பக்கத்துல உக்கார்ந்து அவங்க சாப்பிடுறதப் பார்த்தா நமக்கு எந்திரிச்சு ஓடிரலாமான்னு இருக்கும்....டீ காஃபி குடிப்பாங்க பாருங்க...சர் புர்ருன்னு எரும மாடு ஊறத்தண்ணியக் குடிச்ச மாதிரி.... எங்க ஆஃபீசுல புதுசா சேர்ந்த மேனேஜர் ஒருத்தரோட காஃபி குடிக்க நேர்ந்த போது மனுசன் சர்ன்னு சத்தத்தோட காஃபி குடிக்க, நான் அதை விட சத்தமா
சிரிச்சுட்டேன்.... அன்னையில இருந்து கடைசி வரைக்கும் அவருக்கும் எனக்கும் ஆகவே
ஆகாது. என்னை எப்போ பார்த்தாலும் முறைப்பாரு (பதிலுக்கு நானும் நமுட்டு சிரிப்போட
;) )...
 
கையால பிசைஞ்சு சாப்பிடும் போது சாணி தட்டி சுவத்துல அப்பப் போற மாதிரி அஞ்சு விரல்லயும் சாப்பாடு ஒட்டியிருக்கும் சிலருக்கு. பேனா, பென்சில் பிடிச்சு எழுதும் போது ரெண்டு விரல்ல தான் பிடிச்சு எழுதுறோம். அஞ்சு விரல் இருக்குன்னு மொத்தமாவா பிடிச்சு எழுதுறோம் ??. அதனால சாணி மாதிரி பிசையாம உள்ளங்கையில  ஒட்டாம  விரல்கள்ல மட்டும் படும்படி பிசைஞ்சு சாப்பிடணும்.

இன்னும் சிலர் சாப்பிடும் போது சுவத்துல பல்லி சத்தம் போடுற மாதிரி சப்பக் சப்பக்குன்னு சத்தமா மென்னுட்டு சாப்பிடுவாங்க. நமக்கு சப்புன்னு ஒரு அப்பு அப்பணும் போல இருக்கும். எரும எரும்....நீ சாப்பிடுறது உனக்கு தெரிஞ்சா போதாதா? ஊருக்கே தெரியணுமான்னு கேக்கணும் போல இருக்கும். ஒரு சாக்லேட் விளம்பரத்துல கை வாயெல்லாம் ஒட்டிக்கிட்டு ஒத்தை விரல்ல நக்கி நக்கி (இதான் சுத்த தமிழ் வார்த்தை) சாப்பிடுற அழகைப்(!!!!) பார்த்தா எனக்கென்னமோ அருவெறுப்பு தான் வருது.
 
சாப்பிடும் போது ஃபோன் வந்ததுன்னா எதிர் முனைல இருக்கவங்களுக்கு நீங்க சாப்பிட்டுட்டு இருக்கீங்கன்னு தெரிய வேண்டிய அவசியம் இல்ல. அப்டியே மென்னுட்டு இருக்க வாயோட பேசும் போது கேக்குறவங்களுக்கு எரிச்சலாவும் இருக்கும், சமயத்துல தெளிவாவும் புரியாது. சின்னப் பிள்ளைங்க தானாவே சாப்பிட ஆரம்பிக்கும் போது தட்டுல போட்ட சாப்பாட்டுல பாதி வெளிய சிந்திக் கெடக்கும். பிள்ள  எம்புட்டு அழகா தானாவே சாப்பிடுது பாருன்னு நமக்கு பெருமையா இருக்கும். அதுவே பெரியவங்க சிந்திச் சிதறி சாப்பிட்டா பார்க்க நல்லாவா இருக்கும். யோசிங்க.....யோசிங்க.

உடை உடுத்தியிருக்கும் நேர்த்திக்கு அடுத்து ஒருத்தர் நாகரீகமா சாப்பிடுவது அவங்க மீதான மரியாதையை அதிகரிக்கும். மனதுக்கு நெருக்கமானவங்க கூட இருக்கும் நேரங்கள்ல முக்கியமானது ஒண்ணா உக்கார்ந்து சாப்பிடும் நேரமும் தானே. அதனால  நல்லா ரசிச்சு சாப்பிடுவோம். ருசிச்சு சாப்பிடுவோம். நாகரீகமா சாப்பிடுவோம். நாசூக்கா சாப்பிடுவோம்.

No comments:

Post a Comment