Saturday 24 October 2015

வெள்ளிக்கொலுசு மணி

மாடியில துணி காயப் போடப் போயிருந்தேன். கீழ் வீட்டுல பேச்சுலர்கள் குடியிருக்குறாங்க. அவங்க துணிகள துவைச்சுப் போடுற அக்கா மாடியில துவைச்சுட்டு இருந்தாங்க. நான் நடந்து வர்ற சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தாங்க. ரொம்ப அசவுகர்யமா உக்கார்ந்திருந்தது மாதிரி தெரிஞ்சது.
“ஏன்க்கா முக்காலி இல்லையா?”
“இன்னாதும்மா?”
“இல்ல உக்கார்ர பலகை இல்லயான்னு கேட்டேன்”
“இல்லம்மா…இந்தப் பசங்கட்ட சொல்லி வெச்சேன்…ஒரு பலக வாங்கிக் குடுங்கன்னு…இன்னும் வாங்கியார்ல… அதான் துவைக்க கஷ்டமார்க்குது”
”அவங்க வாங்கிக் குடுக்குறவரைக்கும் எங்க வீட்ல வந்து வேணா வாங்கிக்கோங்கக்கா”
“ஆங்ங் ..சரிம்மா ..வாசல்ல கோலம் போட்டிருக்கே அந்த வீடா”
“ம்ம் ஆமா”
”உங்க கொலுசு அழகா இருக்கும்மா…இப்பல்லாம் இந்த மாதிரி பெரிய கொலுசு யாரும் போட மாட்டேங்குறாங்களே….மெல்லிசா மணி வெச்சு போடுறாங்க”
“ம்ம் இது என் கல்யாணத்தப்ப வாங்கினது..அப்டியே போட்டுட்டு இருக்கேன்”
“எங்க ஆயா சொல்லும்…நெறைய சலங்கை வச்சு கொலுசு போடுறவங்க நல்லா கலகலன்னு பேசுவாங்களாம்…உசாரா இருப்பாங்களாம்”
நான் சிரிச்சுக்கிட்டே “அட அப்டியா”
“ஆமா….உங்க கொலுசு சத்தம் கேட்டு தான் நான் திரும்பிப் பார்த்தேன்…இல்லாட்டி யாரு வந்தாலும் தெரியாதுல்ல”
”ம்ம்”
நான் ஆஃபீஸ் போய்ட்டு இருக்கும் போதும் கொலுசு போட்டிருந்தேன். நிறைய சலங்கை இல்லாம கொலுசு மாட்டுற இடத்துல மட்டும் மூணு முத்து வச்ச மாதிரி இருக்கும். நடக்கும் போது கொலுசு சத்தம் வராத மாதிரி நடக்கப் பழகியிருந்தேன்.
அப்போ புதுசா வேலைக்குச் சேர்ந்த ஒரு பெண் ஜால்ரா கொலுசு போட்டுட்டு ஆஃபீசுக்கு வருவாங்க. அவங்க நடந்து போகும் போது ஆஃபீஸ்ல இருக்க நிறையப் பேரோட கவனம் திரும்பும்..ஒருநாள் மேனேஜர் கூப்பிட்டு இவ்ளோ சத்தம் வர்ற மாதிரில்லாம் கொலுசு போட்டுட்டு வராதீங்கன்னு சொல்லிட்டார்…அந்தப் பொண்ணு மறுநாள்ல இருந்து வேலைக்கே வரல.
நான் ஸ்கூல்ல படிக்கும் போது எங்க ஹாக்கி கோச் எங்கிட்ட ”நீ கிரவுண்ட்ல ஹாக்கி விளையாட வந்தியா இல்ல பரதநாட்டியம் ஆட வந்தியா”ன்னு திட்டி இனிமே கொலுசு போட்டு கிரவுண்ட்ல இறங்கக்கூடாதுன்னு சொன்னது இன்னும் ஞாபகம் இருக்கு.
”எனக்குக் கூட இத மாதிரி ஒண்ணு வாங்கிப் போடணும்னு ரொம்ப நாளா ஆச”
அப்பதான் அவங்க காலைப் பார்த்தேன்…கொலுசு இல்ல.
“உங்க ஆயா தப்பா சொல்லிருக்காங்கக்கா….கொலுசு இல்லாட்டியும் கூட நீங்க கலகலன்னு தான பேசுறீங்க.. நடந்து வர்ற சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தீங்களே அப்போ உசாராத்தான இருக்கீங்க”
அவங்க சிரிச்சுட்டே சொன்னாங்க “ஆமால்ல”
பி.கு : திரும்பவும் கொலுசு சத்தம் வராம நடக்கப் பழகணும் போல tongue emoticon

பாட்டியும் நானும்

பக்கத்து வீட்டுப் பாட்டி அவங்க ஊருக்குப் போயி ரெண்டு மாசம் ஆச்சு...பத்து நாளைக்கு ஒரு தரம் ஃபோன் பண்ணி எப்டி இருக்கேன்னு விசாரிச்சுக்குவாங்க. என்னை விட அவங்க மருமகளைப் பத்தி தான் விசாரிப்பாங்க பேரனை நல்லா பார்த்துக்குறாங்களான்னு...வழக்கமான மாமியார் தான். இன்னைக்கும் ஃபோன் பண்ணிருந்தாங்க.
“எப்டி இருக்க கண்ணு”
“நல்லாருக்கேன் பாட்டி”
“தம்பி நல்லாருக்குதா ...ஆஃபீஸ் போயிருக்கா?”
“ஆமா பாட்டி..நீங்க தாத்தால்லாம் நல்லாருக்காங்களா”
“ஆங்ங் எங்களுகென்ன...இருக்கோம் கண்ணு”
“ம்ம்”
“என் மருமவ வந்தாளா உங்க வீட்டுக்கு”
“நேத்து வந்தாங்க பாட்டி...இன்னைக்கு வரலையே”
“ஆங்ங் அதாங்கேட்டேன்”
“ஏன் பாட்டி என்னாச்சு”
“அது ஒண்ணுமில்லம்மா”
“அட சும்மா சொல்லுங்க பாட்டி”
“இல்லம்மா...ஒண்ணுமில்ல”
“ஏதோ சொல்ல வந்தீங்க...இப்ப ஒண்ணுமில்லங்குறீங்க...சொல்லுங்க பாட்டி”
“அய்ய...அதொண்ணுமில்ல கண்ணு...முந்தாநாளு வீட்டுக்குப் பின்னாடி ஏரியில யாரோ விழுந்து செத்துட்டாங்களாமாம்னு ஃபோன்ல சொல்லிச்சு...அதான் தேவிக்கு தெரியுமான்னு கேட்டேன்...இல்ல அவங்களுக்கு தெரியாது போலன்னு சொன்னா”
“ம்ம்”
“நாந்தான் அவகிட்ட இதெல்லாம் சொல்லாத...அது ஏற்கனவே பயந்து கிட்டு இருக்கும்னு சொல்லிவச்சேன்...அதான் உங்கிட்ட சொல்லிட்டாளோ என்னமோன்னு நெனைச்சு ஃபோன் பண்ணேன்”
“ gasp emoticon "
"அதெல்லாம் நீயொண்ணும் மனசுல நெனைச்சு பயந்துக்காத கண்ணு....நல்லா சாப்புடு...உடம்ப பார்த்துக்க...வச்சுரட்டா”
“ஆங்ங்ங்”
நான் பாட்டுக்கு செவனேன்னு இருந்தேன்....இப்ப ஃபோனப் போட்டு இப்டி பயமுறுத்திருச்சு பாட்டி gasp emoticon

கதை ஒன்று - காட்சி இரண்டு

கி.ரா-வின் “கோபல்ல கிராமம்” வாசித்துக் கொண்டிருக்கிறேன்.
முதல் மரியாதை திரைப்படத்தில் அனைத்துக் காட்சிகளும் சிறப்பாக இருந்தாலும் தண்ணீர் குடிக்க ஆற்றுக்குள் இறங்கும் ரஞ்சனி பொட்டுத் தங்கத்துக்காகக் (கம்மல்) கொலை செய்யப்படும் போது உயிரைக் காப்பாற்றிக்கொள்ளப் போராடி கொலைகாரனின் கால் கட்டை விரலைக் கடித்து துண்டிப்பதாக வரும் காட்சியைப் படம் பார்த்த எவருமே நிச்சயம் மறந்திருக்க முடியாது.
கி.ரா வின் “கோபல்ல கிராமத்திலும்” இப்படியான ஒரு காட்சி வருகிறது. தண்ணீர் தாகத்தை தணித்துக் கொள்ள குளத்தில் இறங்கி நீர் அருந்தும் பெண்ணின் பாம்படங்களைக் கொள்ளையடிக்க முயற்சிக்கும் ஒருவன் அவளைத் தண்ணீரில் அமிழ்த்தி கொலை செய்து பாம்படங்களை அபகரித்துக் கொள்கிறான். அந்தப் பெண் உயிர்ப் போராட்டத்தில் கொலைகாரனின் வலது கால் கட்டை விரலைக் கடித்த படியே உயிரை விடுகிறாள். பின்னர் பிணத்தின் வாயிலிருந்து கொள்ளைக்காரனின் கால் கட்டை விரலை கிருஷ்ணப்ப நாயக்கர் அறுத்து எடுப்பதாக அந்தக் காட்சி அமைந்திருக்கும்.
”முதல் மரியாதை” திரைப்படம் 1985-ம் வருடம் திரைக்கு வந்ததாக விக்கிப்பீடியா சொல்கிறது.
“கோபல்ல கிராமம்” நாவலின் முதல் பதிப்பு 1976-ம் ஆண்டு வெளிவந்திருக்கிறது.
( ஒருவேளை “கோபல்ல கிராமம்” வாசித்த பாதிப்பில் பாரதிராஜா அந்தக் காட்சியை படத்தில் சேர்த்தாரா என்னன்னு தெரியல)

கீழடி - நம் முன்னோர்களின் காலடி

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்த நம் தமிழ் மக்களின் வாழ்விடத்தை சற்றும் சலனமேயின்றி தன்னுள் புதைத்து வைத்தவாறு அன்றைய வரலாற்றின் மவுன சாட்சியாய் பரந்து கிடந்தது அந்த தென்னந்தோப்பு. கால் பதிக்கும் இடமெல்லாம் சிதறிக் கிடக்கும் மண்பாண்டத் துண்டுகளில் மறைந்து போன அம்மக்களின் பசி தீர்த்த கலயங்கள் எத்தனையோ !!!! இத்தனை ஆயிரம் வருடங்கள் கழித்தும் இந்த பூமிக்குப் பங்கமின்றி அவர்கள் விட்டுச் சென்ற பொருட்களுக்கு இன்றைய தினத்தில் விலை மதிப்பே இல்லை.
மண்பாண்டங்களின் வடிவமைப்பும், உறுதியும், வேலைப்பாடுகளும் இத்துனை வருடங்கள் தாண்டியும் சிதையாமல் இருப்பதில் அதை வனைத்தவர்களின் உழைப்பும், ஈடுபாடும், அர்ப்பணிப்பும் பிரமிக்க வைக்கிறது. அவர்கள் அணிந்திருந்த ஆபரணத்தில் தங்கமும் வைரமும் இல்லை தான்.... கண்ணாடியிலும் களிமண்ணிலும் கண்ணைக் கவரும் வகையில் கலைநயத்துடன் ஆபரணங்களை வடிவமைக்கத் தெரிந்தவர்களுக்கு தங்கம் வைரத்தின் தேவையென்ன இருந்திருக்கப் போகிறது?. அன்றைக்கு நம் பூட்டி அணிந்திருந்த அந்த நகைகள் தான் இன்றைய நவீன நங்கையரின் நாகரீக அடையாளமான டெரகோட்டா நகைகள். வரலாறு இந்த இடத்தில் திரும்பித்தான் இருக்கிறது….
கட்டிடங்களுக்கு உபயோகப்படுத்தியிருக்கும் செங்கற்களின் அதிக எடையும் அளவும் அவற்றின் கட்டமைப்பும் அதீத பலத்துடன் இன்றும் கம்பீரமாய் இருக்கிறது. உறைகிணறுகள் , தரைப்பரப்பு, தண்ணீர்த்தொட்டிகள் , தானியங்கள் சேமித்து வைக்கும் குலுதாடி , இரும்பு ஆயுதங்கள், சிட்டாங்கல் விளையாடப் பயன்படுத்தும் வட்டவடிவ தட்டைக்கல், மண்பொம்மைகள், தந்தம், கண்ணாடியில் செய்யப்பட்ட ஆபரணங்கள் எனப் பலவற்றையும் காண முடிந்தது.
இந்த வருடம் மழைக்காலம் தொடங்குவதற்குள் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட இந்த இடங்கள் அனைத்தும் மறுபடி மூடப்படும் என அங்குள்ள ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இத்தனைப் பேரின் முயற்சியாலும் உழைப்பாலும் அடையாளம் காணப்பட்டுள்ள இந்த அரிய பொக்கிஷத்தை அதிக விலை கொடுத்தேனும் பாதுகாக்காமல் மறுபடி ஏன் மூடுகிறார்கள் என விளங்கவேயில்லை. அரசாங்கம் இந்த இடத்தை தன்னகப்படுத்தி மேலும் ஆராய்ச்சிகள் செய்ய ஊக்கப்படுத்தினால் இன்னும் பலப்பல அரிய பொருட்களும் நம் தமிழ் வரலாற்றின் தொன்மையும் தெளிவாக உலகுக்கு தெரியும் என்பதில் ஐயமேதும் இல்லை.
அடுத்தமுறை இங்கு வந்தால் இவற்றை மறுபடி பார்க்க முடியுமா என்ற சிந்தனையோடு அந்த தென்னந்தோப்பை விட்டு வெளியேறுகையில் மனதில் தோன்றியது ஒரு விஷயம் தான். அதிகபட்சம் இரண்டே இரண்டு வருடங்களில் நம் வாழ்நிலத்தை பிளாஸ்டிக் பொருட்களால் எளிதாக சீரழித்துக் கொள்ள முடிகிற நமக்கு இந்த வரலாறு சொல்லும் பாடம் என்ன தெரியுமா? நமக்குப் பின்னான சந்ததிக்குமானது தான் இந்த நிலமும் நீர்ப்பரப்பும்….இயற்கை கொடுத்த எதையுமே அழிக்கும் உரிமை மனிதனுக்கு கிடையாது. நம் முன்னோர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ள அதே சமயத்தில் நமக்குப் பின்னான அனைத்து உயிர்களும் வாழக்கூடியதாய் இந்த பூமியை விட்டுச் செல்வதில் தான் நாம் வாழும் வாழ்க்கைக்கு முழுமையான அர்த்தம் உள்ளது.
கீழடி – நம் முன்னோர்களின் காலடி

ஆட்டிச நிலையாளர்களின் பெற்றோர் ஒன்றுகூடல் நிகழ்வு

”ஆட்டிச நிலையாளர்களின் பெற்றோர் ஒன்றுகூடல்” நிகழ்வு நேற்று மாலை சென்னை தி.நகரில் “வினோபா அரங்கம், தக்கர் பாபா வித்யாலயாவில் மாலை 4 மணி அளவில் தொடங்கியது.
சிறப்பு விருந்தினர்களாக நடிகர் திரு.பிருத்விராஜ், மருத்துவர் திரு.சிவபிரகாஷ் ஸ்ரீனிவாசன் மற்றும் மருத்துவர் திருமதி தேவகி. சாத்தப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆட்டிச நிலையாளர்களின் பெற்றோர் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொள்ள வந்திருந்தனர். குழந்தைகள் பொழுதுபோக்கிற்காக அரங்கின் வெளியே இருபுறமும் பெரிய அளவிலான சறுக்கு பலூன்கள் அமைக்கப்பட்டிருந்தன. குழந்தைகள் மிகுந்த உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் விளையாடத் துவங்கினர். நிகழ்வில் தன்னார்வத்துடன் வந்திணைந்த இளைஞர்கள் அவர்களை கவனித்துக் கொண்டதால் பெற்றோர்கள் இலகுவாக அரங்கத்தினுள் பொருந்தி இருக்க முடிந்தது.
“அரும்பு அறக்கட்டளை”யின் நிர்வாகி திருமதி.லக்‌ஷ்மி பாலகிருஷ்ணனின் துவக்க உரையுடன் நிகழ்வு இனிதே தொடங்கியது. ”ஆட்டிச நிலையாளர்களின் பெற்றோர் ஒன்றுகூடல்” நிகழ்வின் காரணத்தையும், அவசியத்தையும், முக்கியத்துவத்தையும் மிகச் சிறப்பாக எடுத்துரைத்துப் பேசினார் திருமதி.லக்‌ஷ்மி பாலகிருஷ்ணன்.
அடுத்ததாகப் பேசிய “அரும்பு அறக்கட்டளை”யின் மற்றொரு நிர்வாகியும், “ஆட்டிசம் சில புரிதல்கள்” மற்றும் “சந்துருவுக்கு என்னாச்சு” போன்ற ஆட்டிச நிலையாளர்களை முன்வைத்து எழுதப்பட்ட நூல்களின் ஆசிரியருமான திரு.யெஸ்.பாலபாரதி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதன் பின்புலத்தையும் ஒரு பெற்றோராக தன்னுடைய அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். நடிகர் திரு.பிருத்விராஜ் பற்றிப் பேசும் போது ”ஒரு முறை பிருத்விராஜ் விமானப்பயணம் மேற்கொண்ட போது ஆட்டிசநிலையில் இருந்த அவர் மகனுக்கு விமானத்தில் பயணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டதை தொடந்து முனைப்புடன் அரசுடன் போராடி”ஆட்டிச நிலையாளர்கள் விமானத்தில் பயணம் மேற்கொள்ள தடையேதும் இல்லை” என்ற நீதிமன்ற தீர்ப்பினை வெற்றிகரமாகப் பெற்றுத் தந்திருக்கிறார் என்பது குறிப்பிட்டதோடு இன்றைக்கு ஆட்டிச நிலையாளர்கள் விமானத்தில் இலகுவாகப் பயணிக்க முடிவதின் பெரும்பங்கு திரு.பிருத்விராஜ் அவர்களையே சாரும்” என்று கூறியது அங்கு வந்திருந்த பலருக்கும் வியப்பான , பாராட்டத்தகுந்த செய்தியாக இருந்தது.
சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட நடிகர் திரு.பிருத்விராஜ் அவர்கள் பேசும் போது அவருடைய மகனுக்கு வயது 20 என்றும், இருபது ஆண்டுகளுக்கு முன் ஆட்டிசம் என்ற சொல்லே பரவலாக அறியப்படாத காலத்தில் இருந்து இன்றுவரை தான் சந்தித்து வந்த சோதனைகளையும் அவற்றை வெற்றிகரமாகக் கையாண்டதையும் தன்னுடைய மகனின் ஒவ்வொரு நடவடிக்கையும் ஒவ்வொரு நாளும் புதிதாய் ஒன்றைக் கற்றுக் கொண்டு அவர் செய்யும் செயல்களும் தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், சராசரி குழந்தைகளைப் பெற்ற பெற்றோருக்கு இருக்கும் எவ்விதக் கவலையும் தனக்கு இல்லையென்றும் தன் மகன் ஒரு ஆட்டிச நிலையாளர் என்பதை தான் எல்லாவகையிலும் ஏற்றுக் கொண்டு மகிழ்வுடன் வாழ்வதாகவும் கூறியது அங்கு வந்திருந்த அனைத்து பெற்றோர்களுக்கும் மிகுந்த ஆறுதலும் நம்பிக்கையும் அளிப்பதாக இருந்தது.
அடுத்ததாகப் பேசிய மருத்துவர் திரு.சிவப்ரகாஷ் ஸ்ரீனிவாசன் அவர்களின் பேச்சும் , மருத்துவர் திருமதி.தேவகி சாத்தப்பன் அவர்களின் உரையும் வந்திருந்த பெற்றோரின் மனத்தடைகளை உடைத்ததோடு வாழ்வின் இடர்களை உள்ளது உள்ளபடி ஏற்றுக் கொண்டு வாழப் பழகிக் கொண்டால் ”வாழ்தல் இனிதே” என்பதை தெளிவாக உணர வைத்தது.
நிகழ்வின் இனிய திருப்பமாக, ஆதித்யா தொலைக்காட்சியின் வழி நாம் அனைவரும் நன்கறிந்த “கலக்கப் போவது யாரு” நிகழ்ச்சி பிரபலம் திரு.வெங்கடேஷ் ஆறுமுகம் அவர்கள் தனி ஒருவனாக மேடையேறி நகைச்சுவை விருந்தளித்தார். அரங்கம் முழுவதையும் கைதட்டலாலும் சிரிப்பலைகளாலும் நிரம்பச் செய்தார்.
நிகழ்வில் கலந்து கொண்ட பெற்றோர்கள் சக பெற்றோர்களின் அன்றாடப் பிரச்சனைகளையும் ஒவ்வொரு நாளும் மேற்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்களையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டதோடு சிறப்பு விருந்தினர்களின் ஆலோசனையையும் பெற்று இதுபோல மேலும் பல நிகழ்வுகளின்வழி ஆட்டிசநிலையாளர்களின் பெற்றோரை ஒன்றிணைக்க வேண்டுமாறு அரும்பு அறக்கட்டளையின் நிர்வாகிகளான திரு.யெஸ்.பாலபாரதி, திருமதி.லக்ஷ்மி பாலகிருஷ்ணனை உரிமையுடன் கேட்டுக்கொண்டு நெகிழ்வோடு விடைபெற்றனர்.
ஆட்டிசம் குறித்த புரிதல் ஆட்டிசநிலையாளர்களின் பெற்றோர் மட்டுமன்றி மற்ற அனைவருக்குமே பரவலாகச் சென்றடைய வேண்டியதன் அவசியம் இந்நிகழ்வின் வாயிலாகத் தெளிவாகத் தெரிகிறது. ஆட்டிசநிலையாளர்கள் எந்தவொரு பொது இடத்திலும் இயல்பாகப் பொருந்தி இருக்குமாறு சூழலை மாற்றுவதில் சமுதாயத்தில் அனைவருக்கும் நிச்சயம் பங்கு இருக்கிறது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். மகிழ்ச்சியான வாழ்வு எல்லாருக்கும் பொதுவானது என்பதைத் தெளிவாக உணர்த்திய ஒரு சிறப்பான மன நிறைவான நிகழ்வின் தொகுப்பாளராக சிறிய அளவில் பங்கேற்றதில் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்கிறேன்.
பி.கு: நண்பர்கள் இந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள சுட்டினைப் பகிர்ந்து பலருக்கும் சென்றடைய உதவுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி !!!