Friday 29 May 2020

கொரோனாவும் இயல்பு வாழ்க்கையும்

கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வரும் வேளையில் தெருவில் ஆட்களின் நடமாட்டமும் அதிகரித்தபடி இருக்கிறது. எங்கள் தெருவைப் பொறுத்தவரையில் காலையில் முதலில் கேட்கும் சத்தம் பக்கத்து வீட்டின் கீழ்த்தளத்தில் அவர்கள் கட்டுமானப்பொருட்கள் வைத்திருக்கும் அறையிலிருந்து வீட்டு வாசலில் நிற்கும் வண்டியில் அவற்றை ஏற்றி வைப்பது. இது காலை 5:30 மணியிலிருந்து 6:00 மணிக்குள் தொடங்கும் அன்றாட நிகழ்வு. இதைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தில் வாசல் தெளிக்கும் சத்தம் கேட்கத்தொடங்கும்.
6:30 மணிக்கு ஒரு புல்லட்டின் சத்தம் கேட்கும். காலையில் எழுந்ததும் அவர் புல்லட்டை வாக்கிங் கூட்டிப்போகும் சத்தம் அது…கொஞ்ச நாட்களாக ஓய்ந்திருந்த இந்த சத்தமும் இப்போது கேட்கத் தொடங்கிவிட்டது.
அடுத்தது புதன், ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் 6:30ல் இருந்து 7:00 மணிக்குள் கேட்கும் மீன் விற்கும் அக்காவின் சத்தம்… இன்றைக்கு புதன் கிழமை என்பதை அவரின் சத்தம் மூலம் தெரிந்து கொண்டேன். பக்கத்து வீட்டில் மோட்டார் போடும் சத்தமும் இந்த நேரத்தில் இணைந்து கொள்ளும்.
7:00 மணிக்கு மேல் கீரைக்காரரின் சத்தம் கேட்கும். அதே நேரத்தில் தெருவின் இந்தக் கோடிக்கும் அந்தக்கோடிக்குமாய் நாலைந்து முறை சென்றபடி இடியாப்பம் விற்பவரின் குரல் மைக்கில் கேட்கும். கிட்டத்தட்ட 9 மணி வரைக்கும் கூட அந்தக்குரல் கேட்டபடியே இருக்கும். அதைத் தொடர்ந்து காய்கறி, பழங்கள் வண்டிகளின் தொடர்ச்சியான சத்தங்கள் மதியம் 12:00 மணி வரைக்கும் தொடரும்.
9:30ல் இருந்து 10:30க்குள் பூக்கார அம்மாவின் சத்தம் கேட்கும்..ம்மா மல்ல்ல்லீய்ய் முல்லேய்ய்ய் என்று பிசிரில்லாமல் ஒரே ராகமாகப் பாடிக்கொண்டு நடந்து வருவார் அந்த அம்மா. கூடையில் சுமந்தபடி பொருட்களை விற்பவர்கள், சைக்கிளில் விற்பவர்கள், வண்டி, தள்ளுவண்டி, வேன் என பெரும்பாலான வியாபாரிகள் இப்போதெல்லாம் மைக்கிலேயே தான் சத்தம் குடுத்துக்கொண்டு வருகிறார்கள். இதில் விதிவிலக்காக இன்னும் தங்கள் குரலை நம்பி இருப்பவர்கள் சென்னை வீதிகளில் ரொம்பவே குறைவு.
பூக்கார அம்மாவைப்போலவே எங்கள் வீட்டுக்குப் பூ கொடுக்கும் பெரியவரும் டிவிஎஸ் 50 இல் ”சாமந்தீஈஈ…..ரோஸ்ஸ்ஸ்ஸ்” எனக் குரல் கொடுத்துக் கொண்டே தான் வருவார். இதற்கு முன் குடியிருந்த வீட்டில் இரண்டாவது மாடிக்கு நடந்து வந்து 30 ரூபாய்க்குப் பூக்களைக் கொடுத்துச் செல்வார்…அப்போது சைக்கிளில் வருவார். ஒரு சாயலில் அப்பாவை நினைவுபடுத்துவதால் அவர் மூச்சிறைக்கப் படியேறி வருவதைப் பார்த்து….” கீழ கேட்லயே கவர்ல வச்சிடுங்கய்யா நான் எடுத்துக்குறேன்” என்றாலும் ”பூ வாடிப்போவும்மா” என்பார்…கொஞ்ச நாட்கள் அவரை வீட்டுப்பக்கம் காணவில்லை….
பிறகு ஒரு நாள் சத்தம் கேட்டு நானே இரண்டு மாடி இறங்கிப் போய் என்னவென்று விசாரிக்கலாம் எனப் போனபோது அவரே கேட்டைத் திறந்து வந்து கொண்டிருந்தார்….கைகளில் பூக்கவரோடு…”என்னங்கய்யா ஆளையே காணோம்” என்றதும் ”கொஞ்சம் நெஞ்சுவலியாச்சுதம்மா….அதான் யாவாரத்துக்குப் போகவேணாம்னு பசங்க சொல்லிட்டாங்க…நமக்கு தான் வீட்ல உக்கார முடியலையே அதான் கொஞ்சம் சரியானதும் வந்தேன்…வாடிக்கையா வாங்குறவங்களுக்கு மட்டும் கொடுக்குறதும்மா” என்றார். பிறகு மெல்ல தயங்கியபடியும் கொஞ்சம் ஆர்வத்துடனும் “எம்மா…எதும் விசேசமா” என்றார்….”ஆமாங்கய்யா அஞ்சு மாசம்” என்றேன்…”அதான பார்த்தேன்…எம்மா இனிமே இப்டிப் படியிறங்கி வராதம்மா…நான் இங்க பைக் பக்கத்துல பூ வச்சிட்டுப் போறேன்..பத்திரம்மா” என்றுவிட்டுப் போனார்…
ஏழாம் மாதத்தில் அந்த வீட்டைக் காலி செய்து விட்டு இப்போதிருக்கும் வீட்டுக்கு மாறி வந்தோம்…அவரிடம் தகவல் சொல்ல முடியவில்லை.
இங்கே வந்து இரண்டு மாதங்கள் கழித்து வளைகாப்புக்கு ஊருக்குப் போனதோடு வெண்பா பிறந்து ஐந்தாம் மாதத்தில் தான் இந்த வீட்டுக்குத் திரும்பி வந்தேன்…அதன் பிறகு பல நாட்கள் கழித்து தெருவில் அவர் சத்தம் கேட்டு ஓடிப் போய் பால்கனியில் நின்று அவரை அழைத்ததும் சந்தோசமாக வீட்டு வாசலில் வந்து நின்றார்…வெண்பாவைக் கொண்டு போய்க் காண்பித்ததும்…”எம்மா குழந்தைய தூக்கிப் பார்க்கட்டுமா” என்று கேட்டார்… “இந்தாங்கய்யா” என்று கொடுத்தேன்…சந்தோஷமாக வாங்கிக் கொண்டவர்…”எம்மா அப்டியே உன்னையாட்டம் இருக்கும்மா….ராஜாத்தீ…தாத்தாவப் பாருடா கண்ணு” என்றபடி “பேர் என்னாம்மா” என்றார்… “வெண்பா” என்றதும் ”இந்தக் காலத்துப் புள்ளைங்க என்னவோ புதுசு புதுசா பேர் வைக்குறீங்க ஆனா மைசூர்பா மாதிரி இதுவும் நல்லா தான் இருக்கு” என்று சிரித்தார்….
வெண்பா வளர்ந்து அவர் சத்தம் தெருவில் கேட்டதும் “ம்மா பூக்காரத்தாத்தா வந்துக்கார் பாரு” என்று என்னை இழுத்துக்கொண்டு பூ வாங்க படியிறங்குவாள்…சில நாட்கள் அவள் கையில் பையையும் காசையும் கொடுத்து விட்டு பால்கனியின் நின்று பார்த்துக் கொண்டிருப்பேன்..கீழே கேட் எப்போதும் தாழ்ப்பாள் போட்டிருக்கும்….அவர் தாழ்ப்பாளைத் திறந்து அவளிடம் பூவைக் கொடுத்து விட்டு அவள் படியேறி மேலே என்னிடம் வந்து சேரும் வரை கீழே நின்று கொண்டிருப்பார்.
வீட்டில் ஏற்கனவே பூக்கள் இருந்தால் வெண்பாவிடம் “பூ இருக்கு தாத்தா நாளைக்கு வாங்கிக்குறோம்னு பால்கனியில் நின்னு சொல்லிட்டு வா” என்று அவளை அனுப்பி விட்டுப் பின்னாலேயே போவேன்…
ஒருநாள் அவர் சத்தம் கேட்டு இப்படியே சொல்லி அனுப்ப நான் பின்னால் வருவதற்குள் அவளே வீட்டுக்குள் திரும்பி வந்து “ம்மா தாத்தா உன்ன கூப்பிடுறாரு” அன்றதும் பால்கனியில் நின்றவாறே “பூ இருக்குங்கப்பா…நாளைக்கு வாங்கிக்குறேன்” என்றவளை “பூ கெடக்கும்மா…இங்க பாரு வண்டி வாங்கிருக்கேன்…பேத்திய கூட்டிட்டு வாம்மா…இதக் காட்டத்தான் கூப்ட்டேன்” என்றார்…அப்போது தான் கவனித்தேன்…முகப்பில் சந்தனம் தெறிக்க மாலையணிந்தபடி ஒளிராத ஹெட்லைட் கண்கள் மின்ன அவரின் டிவிஎஸ்50 நின்று கொண்டிருந்தது. பின்னால் கூடையில் ரோஜாவும் சாமந்தியும். நிஜமாகவே அவரைப் பார்க்க அன்றைக்கு மிக சந்தோஷமாய் இருந்தது. அப்பாவின் கனவுகளில் ஒன்று ஒரு டிவிஎஸ்50 வாங்கிவிட வேண்டுமென்பது. அவரின் கண்களில் அன்றைக்குக் கூடியிருந்த நீர்மையில் அந்தக் கனவு பூர்த்தியாகியிருந்தது.
வழக்கம் போல செயல்படத்துவங்கியிருக்கும் தெருவிற்குள் இன்னும் வந்து சேராமலிருப்பது இடியாப்பக்காரரின் குரலும், பூக்காரப்பெரியவரின் குரலும், காய்கறிக்காரப்பெரியவரின் கட்டைக் குரலும் தான்…இவர்கள் மூவரும் வந்து தெருவின் அன்றாடப் பரபரப்பில் கலந்து விட்டால் நானும் கூட ஃபேஸ்புக்கில் ’லிவ் இன் ரிலேஷன்ஷிப் வித் கொரோனா’ என்று பதிவிட்டுவிடலாம் என நினைத்திருக்கிறேன்….
அசைவப்பதிவு

எச்சரிக்கை : அசைவப்பதிவு….சைவர்கள் மாற்றுப்பாதையில் செல்லவும்….
இன்றைக்குக் காலையில் கோழிக்குழம்பு வைத்து தோசைக்கு தொட்டுக்கொள்ள தட்டில் போட்டு சாப்பிட உக்கார்ந்ததும் பக்கத்தில் வந்து ’என்ன சாப்பிடுற’ எனக்கேட்ட வெண்பாவிடம் ’சிக்கன்டி..இந்தா சாப்பிடு’ என நீட்ட இரு கைகளையும் முன்னே நீட்டித் தடுத்து உடலைப் பின்னே இழுத்து நகர்ந்தவள் “சிக்கன் பாவம்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.
நானும் இவளுக்கு அசைவத்தைப் பழக்க எவ்வளவோ முயற்சி செய்தும் சாப்பிட மறுக்கிறாள்… தெரியாமல் சாப்பாட்டுக்குள் நன்றாகப் பிசைந்து கொடுத்தாலும் மென்று துப்பி விடுகிறாள்…சரி இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் பழக்கி விடலாம் எனப் பார்த்தால்…நாட்கள் தான் வருடக்கணக்கில் போகிறது…அவள் தின்பாளில்லை.
பேச்சு, பார்வை, கோவம், முறைப்பு எல்லாவற்றிலும் அம்மையைக் கொண்டிருப்பவள் சாப்பாட்டு விஷயத்தில் மட்டும் அவள் அப்பாவைப் போல வந்துவிடுவாளோ எனப் பயமாகவும் இருக்கிறது.
மாமியார் வீட்டுக்கு வந்த புதிதில் ஒரு ஞாயிற்றுக்கிழமை, ஆட்டுக்கறி எடுப்போமா கோழிக்கறி எடுப்போமா என அத்தை என் விருப்பத்தைக்கேட்டபோது (நமக்கு கறியென்றால் ஆட்டுக்கறி தான்…கோழியெல்லாம் வெறும் சிக்கன் என்ற அளவிலேயே முடிந்து விடும்) ஆட்டுக்கறில உங்களுக்கெல்லாம் என்ன பிடிக்குமோ அதே எடுக்கலாம் என்றதும் குழம்பிவிட்டார்…ஆட்டுக்கறில தனியா என்னம்மா எடுக்கறது….கறி எடுத்துட்டு வந்து குழம்போ அல்லது சுக்காவோ வச்சிரலாம் என்றார்….நான் அதன் பிறகும் “இல்ல அத்தை …ஆட்டுக்கறின்னா அதுல தலையா, மூளையா, ரத்தமா, ஈரலா, எலும்பா, குடலா, கொத்துக்கறியா, சுவரொட்டியா, காலா என அடுக்கிக்கொண்டே போகவும் மொத்த வீடும் மிரண்டு போய் என்னைப் பார்த்தது….
உதய் மட்டும் மெதுவாக என்னிடம் ’இ.ந்.த… வாலெல்லாம் சாப்பிட மாட்டீல்ல’ என்று கேட்டு நிம்மதிப்பெருமூச்சு விட்டுக்கொண்டதும் நான் யோசனையுடன் ’அதெல்லாம் எங்க ஊர்ல சாப்பிட்டதில்ல சென்னையில சாப்பிடுவாங்களா? கேள்விப்பட்டிருக்கியா?’ எனக்கேட்டதும் நெஞ்சைப்பிடித்துக்கொண்டு சுவற்றில் சாய்ந்தது இன்னமும் ஞாபகம் இருக்கிறது….
அப்புறம் தான் தெரிந்தது…அவர்கள் அசைவமெல்லாம் நாள், கிழமை பார்த்து நறுக்காக, நாசுக்காக சாப்பிடுபவர்கள் …தவிர ஒரு வேளைக்கு மட்டுமே அதை சாப்பிடுபவர்கள் என்பதும்….இதில் உதய்க்கு சிக்கன் மட்டுமே விருப்பம் அதுவும் ரோஸ்ட் செய்தால் மட்டுமே கூடுதலாக ரெண்டு துண்டு தொண்டையில் இறங்கும்…மத்தபடி ஆட்டுக்கறியெல்லாம் விரும்பி சாப்பிடுவது கிடையாது. மீன்குழம்பு என்றால் சமையலறைக்குள் வந்து தண்ணீர் கூடக் குடிக்கிற ஆள் இல்லை என்று மாமியார் பெருமையுடன் சொன்னதும் எனக்குப் பேரதிர்ச்சி…(அடேய்களா….நான்லாம் பக்கத்து வீட்ல மீன்குழம்பு வச்சாகூட அவங்க வீட்டு கிச்சன்ல போய் உக்கார்ந்துருவேன்டா)
பின்னாளில் வெண்பா வயிற்றில் இருந்த போது நான் மட்டும் மீன் குழம்பு வைத்து சாப்பிட்டு விட்டு மசக்கையில் வாந்தியெடுத்துக் கொண்டிருந்த நேரத்தில் மாமியார் ஃபோன் செய்யவும், மீன்குழம்பு வைத்த பாத்திரத்தை உதய் கழுவிக் கொண்டிருப்பதைச் சொன்னவுடன் எதிர்முனையில் சில நிமிடங்கள் பேச்சு மூச்சில்லை… இன்றைக்கும் உதய் மீன் , கருவாடு சாப்பிடுவது கிடையாது..
அம்மா வீட்டில் வாரத்திற்கு மூன்று நாட்கள் அசைவம் தான். கறி, கோழி, மீன், கருவாடு என அசைவம் இல்லாத வாரமே கிடையாது…வீட்டில் எல்லோருமே அசைவம் விரும்பி சாப்பிடுபவர்கள். அப்பா பொதுவாகவே உணவை ரசித்துச் சாப்பிடுகிறவர். எந்தப் பதார்த்தமானாலும் மென்றுகொண்டிருக்கும் நேரத்திலேயே அந்த பதார்த்தத்தின் சேர்மானப்பொருட்களைச் சொல்லி….கூடவே நிறை குறைகளையும் யாராக இருந்தாலும் பொட்டில் அடித்தாற் போலச் சொல்லிவிடுவார்.
வீட்டில் எல்லோரும் ஒன்றாக உக்கார்ந்து சாப்பிடும் போது அப்பா, பிள்ளைகள் எங்களை கவனித்துக் கொண்டே சாப்பிடுவார் சாப்பிடச் சொல்லியும் கொடுப்பார். ’அந்த நல்லிய எடுத்துக்கடி’ ‘தட்டுல ரெண்டு தட்டு தட்டிட்டு ஒரு உறிஞ்சு உறிஞ்சு’ ’ஆங்ங்…அப்படித்தான்’ என்பார்… ’இந்தா இத சாப்பிட்டுப்பாரு கறுக்முறுக்குன்னு இருக்கும்’ என்று கோழி, ஆட்டின் சதைப்பகுதியில் மெல்லிய ஜவ்வு போல ஆனால் எலும்பை விடக் கொஞ்சம் உறுதி குறைந்த பகுதியைக் குழம்பில் தேடி எடுத்துக் கொடுப்பார்….அதை இன்றைக்கும் நாங்கள் கருக்மொறுக் என்றே தான் சொல்கிறோம். அப்பாவைப் பொறுத்தவரை ஆட்டு எலும்பென்றால் மென்று துப்பி விட வேண்டும்…கோழி எலும்பென்றால் மென்று சாப்பிட்டு விட வேண்டும்…அவ்வளவு தான் …சத்தெல்லாம் எலும்பிலே தானிருக்கிறதென்பார்.
குழம்பில் கிடக்கும் கெளுத்திமீனின் சினைப்பை ரவை போலப் பக்குவமாய் வெந்திருக்கும். அதைத் தனியே எடுத்துத் தின்னக்கொடுப்பார்…. அதுவொரு தனி ருசி… அதை செனப்பு என்போம். குழம்போ வறுவலோ மீனின் ஜவ்வரிசி அளவிலான வெந்த கண்களை எப்போதும் எங்கள் கண்கள் தேடும். வறுவலில் மீனின் தலையோடு ஒட்டியிருக்கும் அது குழம்பில் சில நேரம் தனியே மிதந்து கிடக்கும்…ஒவ்வொருவரின் தனிப்பங்கு கணக்கில் வராமல் அதை எடுத்துப் பதுக்குவதற்கு எப்போதும் எங்களிடையே போட்டியிருக்கும்.
சென்னையில் ஹாஸ்டலில் இருந்த நாட்களில் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு சிவக்க வதக்கிய பின் துண்டு கருவாடு சேர்த்த சட்டியையெல்லாம் தூக்கத்தில் கூட நெஞ்சோடு சேர்த்து அணைத்துப் படுப்பது போல் கனவு வரும் எனக்கு. கறிக்குழம்பில் மிதக்கும் கெட்டிக் கொழுப்பும், அல்வாத்துண்டு பதத்தில் வதக்கிய மூளையும், லச்சகொட்டைகீரை சேர்த்து தேங்காய்ப்பூ தூவிய ரத்தப்பொரியலும், பெரிய பயிறு போட்டு சமைத்த ஆட்டுக்கால் குழம்பும், பஞ்சாய் வெந்திருக்கும் குடல்கறியும் நினைத்த மாத்திரத்தில் நாசிக்குள் ஏற்றும் வாசனையை மூளை எப்போதும் சேமித்து வைத்திருக்கிறது.
எந்த வயதிலிருந்து அசைவம் சாப்பிட ஆரம்பித்திருப்பேனென ஞாபகம் இல்லை. ஆனால் ஐந்தாம் வகுப்பின் மதிய உணவு இடைவேளை முடிந்த சில நிமிடங்களுக்குப் பின் ஒரு மூன்றடுக்கு டிபன் கேரியரில் எனக்கும் அக்காவுக்கும் சேர்த்து இரண்டடுக்கில் சுடு சோறும் மேலடுக்கில் கொதிக்க கொதிக்க ஆட்டுக்கால் குழம்பும் கொண்டு வந்து அப்பா எங்களுக்கு ஊட்டி விட்டது மட்டும் நினைவிலிருக்கிறது. அதுவும் வெற்றிச்செல்வி பல்லைப்பிடுங்கி விட்ட அதே வேப்பமரத்தினடியில் தான். சோறும் குழம்பும் சேர்த்துப் பிசைந்து உள்ளங்கையிலேயே ஆற வைத்து அப்பா ஊட்டி முடிக்கவும் அவர் கொண்டு வந்திருந்த சின்னக் கைத்துண்டில் எங்களுக்கு வாய் துடைத்து விட்ட மாத்திரத்தில் வகுப்பறைக்குத் தெறித்து ஓடி வந்து அமர்ந்த பிறகும் நாடியிலும் மேலுதட்டிலும் காரத்தின் காரணமாய் வியர்த்து வழிந்தது இன்னும் மறக்கவில்லை.
விரும்பிச் சாப்பிடும் எந்த உணவானாலும் அதன் வாசமும், ருசியும் மூளைக்குள் சேகரமாக வேண்டும்…நினைத்த மாத்திரத்தில் வாசனையை நாசிக்கும் ருசியை நாவிற்கும் கடத்திச் செல்லும் உணர்வு வாய்க்க வேண்டும். அந்த உணர்வில் தான் வயிறு மட்டுமல்ல மனமும் நிறையும் என்று நம்புகிறேன்.
அசைவத்தில் தான் இப்படியே தவிர மற்ற உணவுகளை உண்ணும் போது 'அம்மா ரொம்ப டேஸ்ட்டா இருக்கு 'என்பதும் 'இத எப்டி பண்ணுன' எனக்கருத்தாய் கேள்வி கேட்பதுமாக இருக்கிறாள். எந்த உணவானாலும் அதன் நிறைகுறைகளை சொல்லத் தெரிந்திருக்க வேண்டும். அது தான் அந்த உணவுக்கும் அதை சமைத்தவர்களுக்குமான மரியாதை என்பது என் எண்ணம். அந்த வகையில் தாத்தா செல்வராஜனின் பேரைக் காப்பாற்றி விடுவாள் போலத் தான் தெரிகிறது.
காய்கறி விற்கும் பெரியவர்

வேளச்சேரிக்குக் குடி வந்த புதிதில் வீட்டுக்குத் தேவையான காய்கறிகளையெல்லாம் ஆதம்பாக்கம் மார்கெட்டிலேயே தான் வாங்கிக் கொண்டிருந்தோம். வீட்டுக்குப் பக்கத்தில் கடைகள் இல்லாமலில்லை.ஆனால் குறிப்பிட்ட காய்கறிகள் மட்டுமே இருக்கும்..தவிர சென்னையில் பரவலாகக் கிடைக்கும் கோவைக்காய், சுரைக்காய், சௌ சௌ, புடலங்காய் அளவிலான பாகற்காயெல்லாம் எனக்குப் பிடித்தமானதாக இல்லை. அதனால் மொத்தக்கடையில் வாங்கலாமென்று தான் ஆதம்பாக்கத்துக்குப் போய் வாங்கி வந்து கொண்டிருந்தோம்…
அங்கே எனக்குப்பிடித்த சேனைக்கிழங்கு, மிதி பாகற்காய், சேப்பங்கிழங்கு தவிர சீசனில் கிடைக்கும் சிறுகிழங்கு,சீனிக்கிழங்கு, பழங்கள் என எல்லாவற்றையும் ஒரே கடையில் வாங்க முடிந்தது….அப்போதும் வாரம் ஒருமுறை தான் காய்கறி வாங்கி வந்து வைப்போம்..
வெண்பா பிறக்கும் வரையிலும் வீட்டில் ஃப்ரிட்ஜ் வாங்கவில்லை…தவிர்த்திருந்தோம்..எனக்கு பால், தயிர், முட்டை எல்லாவற்றையும் ஃப்ரிஜ்ஜில் வைத்து உபயோகப்படுத்துவது பிடிக்காத ஒன்று. அவ்வப்போது தேவைப்படுவதை அப்போது ஃப்ரெஷ்ஷாக வாங்க வேண்டும். அப்போதைய சமையலை அப்போதே சமைத்து சாப்பிட வேண்டும் என்பதே அதன் காரணம். இந்த லாக்டவுன் காலம் ஆரம்பிக்கும் முன்பு வரை கூட ஃப்ரிஜ்ஜில் அதிகக் காய்களை வாங்கி வைத்துப் பழக்கமே இல்லை…பெரும்பாலும் வெண்ணெய், சீஸ், பனீர், மாவு போன்றவை தான் ஃப்ரிஜ்ஜில் கிடக்கும்.
இந்த வீட்டுக்குக் குடி வந்த பின் ஆரம்பத்தில் எதிரில் உள்ள கடையிலும் பிறகு அருகில் உள்ள மார்கெட்டிலுமாக காய்கறிகள் வாங்கி வந்தாலும் ஆதம்பாக்கத்துக்கும் நேரம் கிடைக்கும் போது போய் வருவோம். அதன் பிறகு ஃபீனிக்ஸ் மாலுக்கு வெண்பாவுக்காக வாரம் ஒருமுறை போக வேண்டி இருந்ததால் அங்கே பிக் பஜாரில் கொஞ்ச காலம் காய்கள் வாங்கி வந்து கொண்டிருந்தோம்…அதில் அதிக வெயிட்டைத் தூக்கிக் கொண்டு வாசல் வரை நடந்து வந்து பின்பு பக்கத்து தெருவில் பைக்கை பார்க் பண்ணியிருக்கும் இடம் வரை உதய் தூக்கிக் கொண்டு நடக்க வேண்டியிருந்த சிரமத்தால் அதையும் நிறுத்தினோம்.
அதன் பிறகு தினமும் தள்ளு வண்டியில் தெருவில் காய்கள் கொண்டு வருபவர்களிடம் வாங்கத் தொடங்கினேன். அதில் பக்கத்து வீட்டு அக்கா ரெகுலராக ஒரு பெரியவரிடம் காய்கள் வாங்குவார். வீட்டின் பால்கனியில் இருந்து ஒரு கயிறில் பையைத் தூக்கிப் போட்டு அதில் தேவைப்படும் காய்களின் அளவை சொல்லி வாங்கி விட்டு மேலே இழுத்துக் கொள்வார்…பின் அந்தப் பையிலேயே காசையும் போட்டு மீதத்தை வாங்கிக் கொள்வார். ஆரம்பத்தில் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பேன். கீழேயிருந்து அவர் ஒரு விலை சொல்வதும் அந்த அக்கா இங்கிருந்து கேள்வி கேட்பதும் பல நேரங்களில் வேடிக்கையாக இருக்கும்.
ஒரு நாள் எங்கள் வீட்டுக்கு முன்னேயிருந்த வீட்டில் வியாபாரத்தை முடித்து விட்டு சில்லறை கொடுக்கப் பையைத் தேடியவர் அப்போது தான் காசுப் பை இல்லாததைக் கவனித்திருக்கிறார். பதட்டத்தோடு தெருவின் முனை வரைக்கும் ஓடி அங்குமிங்கும் தேடிக் கொண்டிருந்தார். காய்கறி வாங்கிக் கொண்டிருந்தவர்களும் பரபரப்பாக அவரோடு சேர்ந்து தேடினார்கள். ஆனால் அந்தப் பை கிடைக்கவில்லை. சுற்றி நின்ற எல்லோரும் ஒவ்வொரு கேள்வியாய் அவரைக் கேட்டுக் குடைந்து கொண்டிருக்க, அவரோ கூண்டுக்குள் சிக்கிய எலி போல பதட்டத்துடன் இங்குமங்கும் பார்த்தபடி தவித்துக் கொண்டிருந்தார்.
எனக்கு அப்பாவின் ஞாபகம் வந்தது. அவர் ஒருமுறை தள்ளுவண்டியில் பழங்கள் விற்று வியாபாரம் முடித்து வீட்டுக்கு வந்த பிறகு தான் துட்டுப்பை(அப்படித்தான் நாங்கள் சொல்லுவோம்) இல்லாததைக் கவனித்தார். அப்பாவுக்கு சட்டை தைக்கும் டெய்லர் அப்பாவின் கால்சட்டைத்துணியில் மீந்திருக்கும் துணியில் துட்டுப்பைகளை தைத்துக்கொடுப்பார்…நாலைந்து நிறங்களில் வீட்டில் துட்டுப்பைகள் இருக்கும். இரண்டு பிரிவாக தைக்கப்பட்டிருக்கும் ..ஒன்றில் ரூபாய் நோட்டுகளும் மற்றொரு பக்கம் சில்லறைகளும் போடுவதற்கு வசதியாய்.. அதில் எப்போதும் சில்லறைகள் போடும் பக்கம் தான் எடை கூடிக்கிடக்கும்….இன்னும் கூட தொலைந்து போன அந்த சிமிண்ட் நிற துட்டுப்பை கண்ணிலேயே இருக்கிறது. இன்னும் மீதமிருக்கும் துட்டுப்பைகளை அப்பாவின் நினைவாக அப்படியே வைத்திருக்கிறோம்…
பெரியவர் எப்போதும் சாயம் போன ஒரு மஞ்சள் பையிலே தான் காசைப் போடுவதைப் பார்த்திருக்கிறேன்…அப்பாவின் கைகளில் துட்டுப்பையின் கைப்பிடி ஒரு பாம்பைப் போல லாவகமாக சுற்றியிருக்கும். இவர் தள்ளுவண்டியில் தராசு பக்கத்தில் வைத்திருப்பார் போல. கடைசிவரை அதைக் காணவேயில்லை. பக்கத்து வீட்டு வாசலில் தன் வழுக்கைத் தலையில் கை வைத்து அவர் சோகமாக உக்கார்ந்ததும் அதற்கு மேல் வேடிக்கை பார்க்க முடியாமல் அன்றைக்கு உள்ளே வந்து விட்டேன்.
மறுநாள் அவர் குரல் எப்போது கேட்கும் எனக் காத்திருந்து அன்றைக்கு கொஞ்சம் காய்கள் வாங்கிக் கொண்டேன்…அன்றைக்கு அக்கம் பக்கத்தில் ஒருவரும் வாங்கவில்லை. எனக்கோ அவருடைய காசுப்பை கிடைத்ததா எனக்கேட்க சங்கடமாக இருந்தது. ஆனால் அவர் எப்போதும் போல வியாபாரம் செய்து கொண்டிருந்ததால் பேசாமல் வீட்டுக்கு வந்து விட்டேன். அதன் பிறகு பக்கத்து வீடுகளில் பலரிடம் கேட்டுப் பார்த்தும் யாரும் அவரிடம் அதைப் பற்றிக் கேட்கவில்லை என்று தெரிந்து அதோடு அந்த சம்பவத்தை மறக்கடித்தேன்.
இன்றைக்குக் காலையில் வேளச்சேரியில் தள்ளுவண்டியில் காய்கறிகள் விற்பவருக்குக் கொரோனா பாதிப்பு என்று செய்தியில் பார்த்தபோது ஒரு வேளை இவராக இருக்குமோ என்று வருத்தமாக இருந்தது. அக்கம்பக்கத்திலும் அவர் தான் பாதிக்கப்பட்டிருக்கிறார் எனச் சொல்கிறார்கள். அவரோடு சேர்ந்து அவருடைய குடும்பத்தினர் 11 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்று.
பெரியவர், ஆள் கட்டையாக இருப்பார். கணீர் குரல்…வழுக்கை தலையும், வட்ட முகமும் நெற்றியில் குங்குமக்கீற்றுமாக வேட்டி சட்டையில் கலகலவென்று வியாபாரம் செய்கிற ஆள். இந்த முறை ஊருக்குப் போய் வரும் போது அப்பாவின் துட்டுப்பையில் ஒன்றை எடுத்து வந்து அவருக்குக் கொடுக்க வேண்டும் என நினைத்திருந்தேன். இப்போது நான் போக முடியாவிட்டாலும் ஊரிலிருந்து தம்பி வரும் போது எடுத்து வரச் சொல்லிவிடுவேன்.
பெருசு காய்கறி வண்டியோடு என்றைக்குத் திரும்பி வருகிறதோ அன்றைக்கு அப்பாவின் துட்டுப்பையைக் கையில் கொடுத்து எப்படி லாவகமாக சுற்றிக்கொள்ள வேண்டுமென சொல்லிக்கொடுக்க வேண்டும்…பத்திரமா திரும்பி வா பெருசு … அயம் வெய்ட்டிங்
கொரோனாவும் கோல் போஸ்ட்டும்
கிட்டத்தட்ட எண்பதுக்கும் மேற்பட்ட கதவு எண்களும் அதை விட மும்மடங்கு எண்ணிக்கை கொண்ட வீடுகளும் உள்ள எங்கள் தெருவில் மொத்தம் இரண்டு மளிகை+காய்கறிக் கடைகள். இரண்டு கடைகளும் தெரிவின் இரண்டு கோடியில் இருப்பவை...அதில் ஒன்று எங்கள் வீட்டுக்கு எதிரே உள்ள கடை..வீட்டு வாசலில் இருந்து ஒரு லாங் ஜம்ப் செய்தால் கடையின் வாசலில் போய் பொத்தென்று விழுந்து விடக்கூடிய தூரம் தான்.
தினமும் இரண்டு மாநகராட்சி ஊழியர்கள்( இளம் பெண்கள்) தெருவிலுள்ள ஒவ்வொரு வீடாகச் சென்று வீட்டிலுள்ளவர்களின் உடல்நிலை குறித்து குறிப்பெடுத்துக்கொண்டும் காலையிலிருந்து மாலை வரை இந்தக்கடைசிக்கும் அந்தக் கடைசிக்கும் நடந்தவாறே தெருவில் போய்க்கொண்டு இருப்பவர்களிடம் மாஸ்க் அணியுமாறு வலியுறுத்திக் கொண்டும் இருப்பார்கள்.
இன்றைக்கு காலையில் தெருவில் ஒரே பரபரப்பு. அந்தப்பெண்களில் ஒருவர் எங்கள் வீட்டுக்கு எதிரே உள்ள கடையில் இருந்து யாரெல்லாம் பொருட்கள் வாங்கினீர்கள் என்று விசாரித்துக்கொண்டிருந்தார்...நாங்கள் தினமும் காலையில் பால் வாங்குவது எதிர் கடையில் தான்...இந்த கொரோனா தடைக்கால ஆரம்பத்தில் இருந்தே அவர் காய்கறிகள் வாங்கி விற்பதைக் குறைத்து விட்டிருந்தார்...அதனால் காய்கறிகளை பெரும்பாலும் தெருவில் வருகிற தள்ளுவண்டிக்காரர்களிடமே தான் வாங்கி வந்தோம்...அல்லது பக்கத்து தெருவில் உள்ள மார்க்கெட்டில் நிறைய காய்கறிக்கடைகள் இருக்கிறது...ஆனால் அங்கு சென்று வாங்கியது மிக மிகக் குறைவான தடவைகள் தான்...
அந்தப் பெண்கள் பரபரப்பாக விசாரித்ததன் காரணம் மளிகைக்கடைக்காரருக்குக் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டிருப்பது தான்...அக்கம்பக்கம் எல்லா வீடுகளிலும் குறைந்தபட்சம் பாலுக்காகவேணும் தினமும் போகிற கடை.. தெருவில் நின்று கொண்டிருந்த எல்லாருடைய முகத்திலும் பீதி..
கடைக்காரரின் அண்ணனுக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகச் சொல்லி அவருடைய மளிகைக் கடையையும் சீல் வைக்கப்பட்டிருப்பதாகச் சொன்னவுடன் எல்லோருக்கும் குழப்பம்...காரணம் என்னவென்றால் இந்த கடைக்காரரின் அண்ணனும் இவரும் இந்த கடையிலே தான் இரு வேளைகள் மாறி மாறி அமர்ந்து வியாபாரம் செய்பவர்கள்...அவருக்கென்று தனியாகக் கடை ஏதும் இல்லை...இதைத் தெளிவுபடுத்தியதும் பெரும்பாலான முகங்களில் நிம்மதிப் பெருமூச்சு...
ஆக கொரோனா தொற்று வந்தவர் தெருவின் இன்னொரு முனையில் கடை வைத்திருப்பவர் என்று உறுதியானது...அவருடைய அண்ணனுக்கு பக்கத்துத் தெருவில் இன்னொரு காய்கறிக்கடை உள்ளது..இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்...கடைக்கான காய்கறிகள் கோயம்பேட்டிலிருந்து தான் வந்திருக்கிறது...
நாங்கள் பொதுவாகவே அந்தக்கடையில் அன்னம் தண்ணீர் புழங்குவதில்லை என்பதால் இப்போதைக்கு பயம் கொஞ்சம் குறைந்திருக்கிறது என்றாலும் எதிர்கடை, மாவுக்கடை, முட்டைக்கடை, கறிக்கடை என்று பாதிப்புக்குள்ளாக வைக்கும் காரணிகள் இன்னும் நிறையவே இருக்கிறது...
பக்கத்து வீட்டில் குடியிருக்கும் தம்பதிகள் சித்த மருத்துவப் பொருட்களை விற்பவர்கள் என்று தெரிந்தவுடன் 'கபசுரக் குடிநீர், ஒரு பாக்கெட் வாங்கி வைத்திருந்தோம்...நிலவேம்புக்குடிநீர் முன்பு வாங்கியதே பிரிக்கப்படாமல் இருந்தது...விட்டமின் சி மாத்திரைகளை லாக்டவுனுக்கு முன்னேயே வாங்கி வைத்திருந்தோம்...
மாவுக்கடை வைத்திருக்கும் அம்மாவின் மகள் சித்த மருத்துவர் என்பதால் இப்போது அரசு பரிந்துரைத்துள்ள Ars Alb 30 ஒரு குப்பியை காலையில் மாவு வாங்கப் போகும் போது வாங்கி வைத்தாயிற்று...
தெருவின் இரண்டு முனைகளையும் பேரிகார்ட் வைத்து அடைக்கும் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது...நடமாடும் வட்டம் சுருக்கப்பட்டிருக்கிறது....
ஹாக்கி விளையாட்டில் மொத்த ஆடுகளத்தை ஆக்ரமித்து 11 பேர் ஆடுவதைக் காட்டிலும் D top என்கிற கோல் போஸ்ட்டுக்கு அருகில் உள்ள அரை வட்டத்துக்குள் பந்து இருக்கும் போது ஆடும் ஆட்டம் சுவாரஸ்யமானது...தவிர டை பிரேக்கரின் போது கோல்கீப்பரை எதிர்த்து கோல் போட 11 பேரில் இருந்து ஐந்து பேருக்கு ஆளுக்கொரு வாய்ப்பு கொடுக்கப்படும்....நிலவேம்புக்குடிநீர், கபசுரக்குடிநீர், Ars Alb, விட்டமின் சி யோடு ஐந்தாவதாக இத்தனை நாள் பேணி வந்த சுத்தம், சுகாதாரம், ஆரோக்கியம், உடலின் தாங்குதிறனோடு மன வலிமையையும் சேர்த்து ஐந்து பேராக ஆட்டையில் நிற்போம் 😜...D Topக்குள் பந்து சென்று விட்டால் அது கோலில் முடிய வேண்டும் என்பது பொதுவான ஆட்ட விதி....
ஆனால் இந்த முறை கோல்போஸ்ட்டில் நாம் நின்று கொண்டிருக்க டி டாப்பில் கொரோனா நின்று கொண்டிருக்கிறது....பார்க்கலாம்
வேம்பும் பல்லும்....

பக்கத்து வீட்டில் பெரிய வேப்பமரம் இருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன் கொஞ்சம் வேப்பிலைக்கொத்து கேட்டிருந்தேன்…..மாடிக்குப் போகும் போது பறித்துத் தருகிறேன் எனச் சொல்லியிருந்தார் அந்த அக்கா. காலையில் பறித்துக்கொண்டு வந்து பால்கனியில் நின்று இந்தா என்று இரு கைகள் சேர்த்துப்பிடிக்குமளவு வேப்பிலைக் கொத்தைக் கொடுத்தார்…..
“தண்ணில ஊறப்போட்டு வீடு துடைக்கவா” என்றார்….
“இல்லக்கா”
“அப்பறம் என்ன செய்வ?”
“நான் ஆவி பிடிக்க வெந்நீர் போட்டுக் குளிக்கக் கேட்டேன்”
”அப்டிக் குளிச்சா நல்லதா”
“நான் உடம்பு வலிக்கு இப்டிப் பண்ணி குளிப்பேங்க்கா….வேப்பிலைன்னு இல்ல…புளிய எல, நொச்சி எல, யூக்கலிப்டஸ் எலன்னு நிறைய இருக்கு….”
“ஆங்ங்ங் …உங்கள மாதிரி ஊர்க்காரங்களுக்கு தான் இதெல்லாம் தெரிது…நாங்கல்லாம் மெடிக்கல்ல மாத்திரய வாங்கிப்போட்டு கம்னு போய் படுத்துக்குவோம்” என்றார்
சிரித்துக்கொண்டே வேப்பிலையை வாங்கி வந்தேன்….
அதில் பாதிக்குப்பாதி பூக்கள்….
சின்ன வயதிலிருந்தே வேப்பம்பூக்கள் மீது ஒரு ஈர்ப்பு…. மல்லி, பிச்சி போல இல்லையென்றாலும் வேப்பம்பூக்களுக்கு ஒருபிரத்யேக மணம் உண்டு… சிறுவயதில் வேப்பிலை, வேப்பம்பூக்கள் சார்ந்த ஞாபகங்கள் அதன் வாசனையோடே இன்னும் நினைவில் மிச்சமிருக்கிறது…
அப்போதெல்லாம் மாதம் ஒருமுறையாச்சும் வேப்பிலைக்கொழுந்தை அம்மியில் மையாக அரைத்து அரை நெல்லியளவு உருண்டை பிடித்து அப்பாவும் அம்மாவும் சாப்பிட வைப்பார்கள்….தொண்டைக்குழி தாண்டுவதற்குள் உள்ளங்கையில் கடலைமிட்டாயோ, வெல்லமோ அல்லது தேன்மிட்டாயோ வைக்கப்படும்….
பள்ளி விடுமுறைக் காலங்களில் உதிர்ந்து கிடக்கும் வேப்பங்கொட்டைகளை பொறுக்கி எடுத்துப் பையில் கொண்டு போய்க்கொடுத்தால் உள்மார்க்கெட்டில் நாட்டுமருந்துக்கடை வைத்திருக்கும் அண்ணாச்சி தராசில் எடை போட்டு கிலோவுக்கு இவ்வளவு என்று காசு கொடுப்பார்….
ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் போது முன் பற்களில் இடப்பக்கம் இரண்டாவது பல்லொன்று நான்கு நாட்களாகவே லேசாக ஆடுவது போலிருந்தது….நுனி நாக்கால் பல்லை வாயின் உள்ளிருந்து தள்ளிப்பார்த்து ஆடுவதை உறுதி செய்துகொண்டேன். மதிய உணவு இடைவேளையில் வேப்பமரத்தடியில் சாப்பிட்டு முடித்து உக்கார்ந்திருந்தபோது வெற்றிச்செல்வி தான் ”நான் வேணா பல்லை பிடுங்கி விடட்டா” எனக் கேட்டாள்….
பக்கத்தில் மண்ணில் கிடந்த புளியமுத்தை எடுத்துப் பாவாடையில் துடைத்து விட்டு இடப்பக்கம் தானே வலிக்கிறது என வலப்பக்கக் கடைவாயில் வைத்து ஒதுக்கி அப்போது தான் கடிக்கத் தொடங்கியிருந்தேன்….புளியமுத்தின் மேல்தோல் கடினமாக இருக்கும்….கடைவாய்ப்பல்லில் வைத்துக் கொஞ்சம் கொஞ்சமாய்க் கடித்துத் திங்கும் போது மேல்த்தோலின் துவர்ப்பு ருசி மெல்ல நாவைத் தொடும்…பிறகு புளிய முத்தை நீள்வாக்கில் வைத்து அழுந்தக்கடித்தால் வாய்க்குள்ளேயே ரெண்டாய் உடையும்…பிறகு பொறுமையாய் மென்று திங்கலாம்…. கடுக்கென்று கடித்ததில் கடைவாய்ப்பல்லே உடைந்து போய் புளிய முத்தோடு பல்லையும் சேர்த்து ரத்தத்தோடு துப்பியவள்களும் இருந்தாள்கள்…. பாடவேளையின் போது கூட டீச்சரையும் பாடத்தைப் பற்றியும் கவலைப்படாமல் சாப்பிட்ட ஸ்நாக்ஸ் அது.
பல் பிடுங்கும் சடங்கில் வெற்றிச்செல்வியின் மீது நிறையவே நம்பிக்கை இருந்தது… தமிழரசிக்கும் அவள் தான் பல்லைப்பிடுங்கி விட்டிருந்தாள். ஆனால் அது கடைவாய்ப்பல்….வெற்றிச்செல்வியின் பற்களே கூட நவகிரகங்கள் போல ஒன்றுக்கொன்று முறைத்தபடி முகத்தைத் திருப்பிக் கொண்டிருக்கும்…அவள் சிரிக்கும் போது ஒவ்வொரு பல்லும் தனியாய் சிரிப்பது போலிருக்கும்… பின்னாளில் அவளொரு வல்லிய பல்டாக்டராய் வருவாள் என சத்தியமாய் நம்பியிருந்தேன்….ஆனாலும் தின்று கொண்டிருக்கும் புளியமுத்தைப் பாதியில் துப்ப மனமில்லை…இன்னும் பத்து நிமிடங்களாவது ஆகும் தின்று முடிக்க…. “இப்ப வேண்டாம் ரீசஸ் விடும்போது பிடிங்கிரலாமா?” எனக்கேட்டதற்கு சரியென்றாள்..
மதியம் முதல் இரண்டு பீரியட் முடியும் வரை பெஞ்ச்சின் நுனியிலேயே பரபரப்பாய் உக்கார்ந்திருந்தேன்….ரீசஸ் மணி அடித்ததும் வெற்றிச்செல்வியும் நானும் ஒன்றாய் வெளியே வந்தோம்….வேப்பமரத்தடி…மண்ணுக்குள் அங்குமிங்கும் தேடிப்பார்த்து ஒரு கனத்த குச்சியைக் கையில் எடுத்திருந்தாள் வெற்றிச்செல்வி…அது தான் அவளது பல் பிடுங்கும் ஆயுதம்…. வேப்பமரக்கிளையின் உடைந்த ஒரு பகுதியின் சிறு குச்சி தான் அது…
குச்சியின் மீதிருந்த மண்ணைத் தட்டி விட்டுப் பாவாடையில் ஒருமுறை துடைத்து விட்டுக் கையில் வாட்டமாகப் பிடித்துக்கொண்டாள்… “ஆ காட்டு” முதலில் அவள் கட்டைவிரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் நடுவில் பல்லைப் பிடித்து மேலும் கீழும் ஆட்டிப்பார்த்துக்கொண்டாள்….எனக்குப் பல் ஆடுவது போலவே தெரியவில்லை….அவள் விரல்கள் தான் மேலும் கீழுமாக அசைந்து கொண்டிருந்தது இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது… அவள் மேலும் மேலும் சக்தியனைத்தையும் விரலுக்குக் கொண்டு வந்து பல்லை அசைத்துக்கொண்டிருந்தாள்…
வலி கூடிக்கொண்டேயிருந்தது….அப்போது தான் நற நறவென்று மெல்ல மெல்ல பல் ஈறை விட்டு விலகுவது தெரிந்தது….அப்படீன்னா பல் இத்தனை நாளா ஆடல….நான் நாக்க வச்சுத் தள்ளுறதால அது ஆடுறது போலத் தெரிஞ்சிருக்கோ என குழம்பிக்கொண்டிருந்த நேரத்தில் வெற்றிச்செல்வி பல்லைப் பாதி சாய்த்துவிட்டாள்…..
வலியில் உயிர் போக ஆரம்பித்துவிட்டது… வேணாம்… என அவளிடம் சைகையில் சொன்னதை அவள் கவனிக்கவேயில்லை அல்லது கவனித்தது போலக்காட்டிக்கொள்ளவேயில்லை…. ஏகலைவன் புறாக்கண்ணின் மீது கொண்ட இலக்காய் அவள் சுற்றுப்புறம் அத்தனையும் மறந்து என் பல்லையே குறி வைத்து குச்சியால் அழுத்திக்கொண்டிருந்தாள்…
இப்போது எல்லாப்பல்லுமே வலிப்பது போலிருந்தது….நான் பேச வாயெடுத்தால் அவள் வைத்திருக்கும் குச்சி இடம் மாறி நாக்கிலோ அல்லது கன்னத்தின் உள்பகுதியிலோ நிச்சயம் காயப்படுத்திவிடக்கூடும் என்று தெரிந்தது….அவளோ நான் பிறந்ததே உன் பல்லைப்பேர்த்து எடுக்கத்தான் என்பது போல பல்லும் கருத்துமாய் அவள் காரியத்தில் ஆழ்ந்திருந்தாள்….
இடைவேளை முடிந்து மணியடிக்கத் தொடங்கியது….திடீரென்ற மணிச்சத்தத்தில் ஒரு நொடி அதிர்ந்தவள் இன்னும் பல்லைப்பிடுங்க முடியவில்லை என்ற ஆத்திரத்தில் கடைசிக்கடைசியாக மொத்த வலுவையும் சேர்த்து அழுத்தியதில் முன்னம்பல் உடைந்து ரத்தம் வழியத்தொடங்கியது…..
வெற்றிச்செல்வி வெற்றி பெற்றேவிட்டாள்…..
வேகவேகமாய் குழாயடிக்கு ஓடி வாயைக்கழுவும்போதே “ஏல....பல்ல எடுத்து பத்திரமா வச்சிக்கோல….சாணிக்குள்ள போட்டு உருண்ட பிடிச்சு வீட்டுக்கூர மேல போட்ரு” என்றாள்…. உள்ளங்கைக்குள் உடைந்த பல்லைப்பத்திரப்படுத்தி பேப்பருக்குள் மடித்து வைத்தேன்….
வீட்டுக்குப்போவதற்குள் பல்லிலிருந்து வலி உச்சி மண்டைக்கு ஏறியிருந்தது….வாயின் முன்பக்கம் வீங்கிப்போய் குழந்தை ஹனுமான் போல இருந்தேன்….அந்த வீக்கம் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் அன்றைக்கு அப்பா அடி வெளுத்திருப்பார்…
வலியில் அழுது கண்கள் முகம் என எல்லாமும் வீங்கி மறுநாள் காய்ச்சல் கண்டிருந்தேன்….வேப்பங்குச்சியினாலோ அல்லது காய்ச்சலுக்குக்கொடுத்த மருந்தாலோ மூன்று நாட்கள் வரை வாய்க்குள் ஒரே வேம்பின் கசப்பு…..
அதற்குப்பிறகு ரொம்பவே சோதித்து தான் பல் முளைத்தது….அதுவும் நான் முளைக்குமோ இல்லை காலம் பூராவும் ஓட்டைப்பல்லியாக இருந்து விடுவோமோ என்று பயந்து போய் அடிக்கடி நுனிநாவால் நிரடிவிட்டுக்கொண்டே இருந்ததில் அந்தப்பல் தெற்றுப்பல்லாகவே போய்விட்டது….காலேஜ் முடியும் வரை கூட சிரிக்கும் போது வாயை மூடிக்கொண்டு தான் சிரிப்பேன்….ஒரு கட்டம் வரை மிகுந்த தாழ்வுணர்ச்சி கொள்ள வைத்திருந்தது அந்தப்பல்…..
ஊரில் போன வருடம் திருவிழா சமயத்தில் மாரியம்மன் கோவிலுக்கு தண்ணீர் ஊற்றப் போயிருந்தபோது வெற்றிச்செல்வியைப் பார்த்தேன்…என்னைப்போலவே நிறைகுடத்தில் மஞ்சளும் வேப்பிலையும் தளும்பத் தளும்ப தண்ணீர் எடுத்து வந்து கொடிக்கம்பத்தில் ஊற்றிக்கொண்டிருந்தாள் ….அவளுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை….நெருங்கிப்போய் நான் யாரெனச் சொல்லிவிட்டு இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறாள் எனக்கேட்க வேண்டும்போல் இருந்தது…ஒரு வேளை அவள் பல்டாக்டராகவே இருந்தாலும் இனி ஜென்மத்துக்கும் அவளிடம் போய்ப் பல்லைக்காட்டுவதாய் இல்லை….

Wednesday 22 April 2020


நேற்று யூ-ட்யூப்பில் “உயரே” மலையாள திரைப்படம் பார்த்தேன்… சப்டைட்டில்கள் இல்லாத பிரிண்ட்….சப்டைட்டில்களை  வாசிக்கும் நேரத்தில் கேரக்டர்களின் உடல்மொழியைப் புரிந்து கொள்ள மெனக்கெடலாம் என்பது என் புரிதல்…..அப்படித்தான் நிறைய வேற்றுமொழிப் படங்களைப் பார்க்கிறேன்…..
இதில் “உயரே” மொத்தப் படமும் எத்தனை நிமிடங்கள் என்று தெரியவில்லை….நான் பார்த்ததில் 2 மணிநேரம் 6 நிமிடங்கள் என்று இருந்தது…..காட்சிகள் ஏதும் விடுபட்டிருந்ததாவெனத் தெரியவில்லை….மலையாளமும் எனக்குத் தெரியாது…..வசனங்கள் தவிர்த்துப் படத்தைப் புரிந்து கொண்டவகையில் சில கேள்விகள் இருக்கிறது….அதனால் இந்தப் பதிவு…
பள்ளிப்பருவத்திலிருந்தே பைலட் ஆகும் கனவுகளுடன் வளர்கிறார் பார்வதி…. அம்மா இறந்தவுடன் ஹாஸ்டலில் சேர்ந்து படிப்பைத் தொடரும் நேரத்தில் சீனியர் பையன் கோவிந்தனுடன் அறிமுகமாகும் நட்பு பள்ளியிலிருந்து கல்லூரி வரையிலும் தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொள்ளும் முடிவு வரையில் கொண்டு செல்கிறது….
தன்னுடைய முன்கோபத்தாலும் நிலையின்மையாலும் தொடர்ந்து ஒரே வேலையில் நிலைக்க முடியாமல் பல கம்பெனிகள் மாறுகிறான் கோவிந்தன்….பார்வதியின் விருப்பப்படி கோவிந்தனை அவனது அலுவலகத்தில் சந்திக்கச் செல்கிறார் பார்வதியின் அப்பா….பத்து நிமிட சந்திப்பிலேயே அவன் மீது நம்பிக்கையின்மை கொள்கிறார்…
வீட்டுக்கு வந்து அதைப் பார்வதியிடம் சொல்லி தெளிவான சிந்தனையுள்ள பெண்ணான நீ எப்படி கோவிந்தனை விரும்பினாய் எனப்புரியவில்லை எனக் கேட்கிறார்…. பார்வதி, தான் ஹாஸ்டல் சேர்ந்த புதிதில் தன்னுடைய சக மாணவர்களின் கேலிப்பேச்சுகளிலிருந்து தன்னைக்காத்து தனக்கு பாதுகாப்பாகவும் சப்போர்ட்டாகவும் கோவிந்தன் இருந்ததாகப் பதில் சொல்கிறார்….திகைப்புடன் இதை ஏன் அப்போதே என்னிடம் சொல்லவில்லை என்ற கேள்விக்கு அப்போது நான் உங்களை வெறுத்திருந்த காலம் அப்பா என்று சங்கடத்துடன் சொல்கிறாள்.
இதன் நடுவே தன்னுடைய கனவுப்படி பைலட் பயிற்சிக்காக மும்பை செல்கிறாள் பார்வதி…. பார்வதியின் மீதான பொஸஸிவ்னஸ்ஸும், இயல்பிலே முன்கோவமும் கொண்ட கோவிந்தன், பார்வதி பைலட் பயிற்சி வகுப்பில் இருக்கும்போதும் நண்பர்களுடன் இருக்கும்போதும் அவ்வப்போது போனில் அழைத்தும், அவள் ஃபோனை எடுக்காவிட்டால் கையை கிழித்துக்கொள்வது போன்ற கிறுக்குத்தனங்களையும் செய்து அவளை எரிச்சலடையச் செய்கிறான்….
பயிற்சி வகுப்பு வெற்றிகரமாக நிறைவடைந்த தினத்தில் இரவு டின்னருக்கு நண்பர்களுடன் ஹோட்டல் செல்கிறாள்….ஹோட்டலில் இருக்கும்போது போன் செய்யும் கோவிந்தனிடம், அவன் இயல்பைப் புரிந்து கொண்டதால் தான் ஹாஸ்டல் அறையில் இருப்பதாகவும் தனக்கு உடல்நிலை சரியில்லாததால் நாளை காலை பேசுகிறேன் எனவும் சொல்கிறாள்.
இடையிடயே மறுபடி தொடரும் கோவிந்தனின் ஃபோன்கால்களை துண்டித்தவாறும், நண்பர்களுடன் ஒன்றமுடியாத மனதோடும் ஹாஸ்டல் வந்து சேர்கிறாள்…..அங்கே ஊரிலிருந்து சொல்லாமல் கொள்ளாமல் வந்து வாசலிலேயே அவளுக்காக கோவிந்தன் காத்திருக்கிறான்….
அவள் எத்தனையோ எடுத்துச் சொல்லியும் இப்படித்தான் தினமும் என்னிடம் பொய் சொல்லிவிட்டு நண்பர்களுடன் ஊர் சுற்றுகிறாயா எனக் கோவம் கொண்டு அவளை திட்டுகிறான்…..ஒரு கட்டத்தில் அதற்கு மேலும் பொறுக்க முடியாமல் பார்வதி, தனக்கான இடைவெளி ஒன்று வேண்டுமென கோவிந்தனிடம் சொல்கிறாள்….தன் வாழ்விலிருந்து வெளியேறும்படி சொல்லிவிட்டு தன் அறைக்குள் செல்கிறாள்…. அன்றைய இரவு முழுவதும் கோவிந்தனின் தொடர் தொலைபேசி அழைப்புகளை துண்டிப்பதோடு ஃபோனையும் அணைத்து வைக்கிறாள்…..
மறுநாள் காலை தன்னுடைய வண்டியில் வெளியே செல்லும்போது கோவிந்தன் அவளிடம் பேச வேண்டுமென நிற்கச் சொல்கிறான்….அவன் தனக்களித்திருந்த மோதிரத்தைக் கழற்றிக் கொடுத்தவாறே வண்டியில் தொடந்து செல்ல முயற்சிக்கும் பார்வதியின் முகத்தில் ஆஸிட் எறிந்து விட்டு ஓடுகிறான் கோவிந்தன்….      
கோர்ட்டில் விவாதம் நடக்கும் போது கோவிந்தன் இதைச் செய்யவில்லை என கோவிந்தனின் வக்கீலும் கோவிந்தனும் நீதிபதியிடம் சொல்கின்றனர்….தான் அன்றைக்கு ஒரு இண்டர்வியூவில் கலந்து கொள்வதற்காக மும்பை சென்றதாக கோவிந்தன் சொல்கிறான்….
கோவிந்தனின் வக்கீல் நீதிபதியிடம் “கோவிந்தன் இந்தப் பெண்ணைத்தான் திருமணம் செய்துகொள்வதாக இருந்தார்….இப்போதும் அவர் அதற்கு தயாராகவே இருக்கிறார்” எனச் சொல்கிறார்…..
நீதிபதி பார்வதியிடம் “அவர் சொல்வது போல் உங்களுக்கு எண்ணமிருக்கிறதா?” எனக் கேட்கிறார்….
அதிர்ந்து போகும் பார்வதி “வாட் யூ மீன்” என நடுங்கும் குரலிலே தான் கேட்கிறாள்…..
அதற்குப் பதில் பேசும் நீதிபதி பார்வதியிடம் “Mind ur language” எனச் சொல்கிறார்…..கோவிந்தன் பார்வதி மீது ஆஸிட் வீசியதை விடவும் அதிகம் அதிர்ந்து நான் கோவப்பட்டது இந்தக் காட்சியில் தான்… நண்பர் ஒருவரிடம் இந்தக் காட்சி பற்றிக் கேட்டபோது நீதிபதியிடம் ”What u… “ என்று சொல்வது அவரையும் நீதிமன்றத்தையும் அவமதிக்கும் தொனி என்பதால் அப்படிப் பேசக் கூடாது எனச் சொன்னார்….
எனக்குத்தான் மனது ஆறவில்லை… நீதிபதி என்பவர் வழக்கின் இருபக்கத்தையும் விசாரித்து இரு தரப்பு சாட்சியங்கள் அடிப்படையில் தீர்ப்பு சொல்பவர் என்ற வரையில் ஓக்கே….இந்தக்கதையில் தனிமனிதத் தாக்குதலில் சிக்கி உருக்குலைந்து சிதைந்து போய் உடலளவிலும் மனதளவிலும் பாதிக்கப்பட்டு கண்முன்னே நிற்கும் ஒரு பெண்ணிடம் கூடவா நீதிமன்றத்திற்கும் நீதிபதிக்கும் மரியாதை தேவைப்படுகிறது…. உண்மையில் அந்தப்பெண் எதிர்வினையின்றி தாக்கப்படும் இடம் இது….ப்ச் …. இது போலத்தான் தாக்கியவனை அடையாளம் காட்டும் காட்சியும்….அப்போதும் அவளை அலட்சியக் கண்களுடன் பார்த்து விட்டு வேறு பக்கம் முகத்தைத் திருப்புவான் கோவிந்தன்…..      
பதினான்கு வயதிலிருந்து கண்களில் சுமந்து கொண்டு வந்த தன் கனவை தன் திறமையாலும், அறிவாலும், உழைப்பாலும் அந்தப் பெண் வெற்றிகரமாக அடையப் போகிற நேரத்தில் முன்கோவம், பொறுப்பின்மை,முட்டாள்தனம், சந்தேகபுத்தி நிறைந்த ஒரு கேவலமான ஆண் சிதைத்துப் போட்டு அதைத் தான் செய்யவேயில்லை என்றும் அபோதும் அவளைத் திருமணம் செய்யத் தயார் என்றும் சொல்லும்போது அந்தப் பெண் வேறென்ன செய்ய வேண்டுமென அந்த மெத்தப் படித்த நீதிபதி நினைக்கிறார் எனப் புரியவில்லை. இந்த இடத்தில் கோவிந்தனும் அந்த நீதிபதியும் ஒரு தராசின் இரு சமநிறை எடைக்கற்களே…..
பெண்கள் மீதான வன்முறைகள் தினந்தோறும் கணக்கேயின்றி உலகெங்கும் நடந்து கொண்டிருந்தாலும் …இந்தப் படத்தில் இத்தனைக் கொடூரமாக ஆஸிட் வீசி (தான் விரும்பிய ) பெண்ணைத் தாக்கியபின்னும் அதைச் செய்தவன் அந்தக் குற்றவுணர்வின் சாயல் சிறிதுமின்றி அலட்சியத்துடனே படம் முழுக்க வளைய வருவதாகக் காட்டப்பட்டிருப்பது மிகத்தவறான காட்சிப்படுத்தல்… அது போலவே மீடியா என்றொரு விசயமே இந்தப் படத்தில் இல்லை….ஒரு பெண் ஆசிட் வீசித் தாக்கப்படுவது என்பது சாதாரணமாகப் பஸ்ஸில் பயணிக்கும்போது பர்ஸ் திருடப்பட்டுவிட்டதைப் போல மலிந்து விட்டதாக நினைத்தார்கள் போல….
அதன் பிறகு தொடர் உடல் பயிற்சிகளின் மூலம் தேறி வரும் பார்வதி இந்த ஆஸிட் தாக்குதலால் இடது கண்பார்வையில் குறைபாடு ஏற்பட்டு அதனால் விமானத்தை இயக்குவதில் குழப்பங்கள் ஏற்படும் என்ற நிலையின் மூலம் பைலட் லைசென்ஸ் ரத்து செய்யப்படுகிறது…. பார்வதி நொறுங்கிப் போகிறாள்…
ஒரு விமானப்பயணத்தில் இரண்டாம் முறையாக சந்திக்கும் டோவினோ மூலம் ஏர் ஹோஸ்டஸ் ஆகிறார்…..அந்த வேலையில் தன்னம்பிக்கையோடு தொடரும் நேரத்தில் ஒரு நாள்  அந்த விமானத்திலேயே பயணிக்கும்  கோவிந்தன் அவளுடன் பேச முயற்சிக்கிறான்…. அவனைக் கண்டுகொள்ளாமல் தவிர்க்கும் பார்வதியிடம் எரிச்சலடையும் கோவிந்தன் அவளிடம் வழக்கம் போல திமிராகப் பேச அவன் முகத்தில் தண்ணீரை வீசுகிறாள்…இதனால் கோவிந்தன் அவள் பணிபுரியும் விமானசேவை அலுவலகத்தில் அவளைப் பற்றிய குற்றச்சாட்டை எழுத்துப்பூர்வமாகக் கொடுக்கிறான்…பார்வதியின் வேலை ஒரு மாத நோட்டீஸ் பீரியடுடன் பறிபோகிறது…
பார்வதியின் கடைசிநாள் பணியில் போது அந்த விமானத்தின் பைலட் உடல்நலக்குறைவால் மயக்கமடைய விமானம் தடுமாறுகிறது…. உதவி பைலட்டின் அனுபவமின்மையும் பதட்டமும் அவரை அந்தச் சூழலைக் கையாளத் தெரியாமல் திணறவைக்கிறது….விமான சேவை அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு நிலைமையைச் சொல்லி விமானம் தரையிறங்க உதவி தேவைப்படுவதாக சொல்கிறார்….
அலுவலகத்திலிருந்து பேசும் மூத்த அதிகாரி விமானத்திலுள்ள பயணிகளில் யாரேனும் முறைப்படி விமானம் ஓட்டப் பயிற்சி பெற்ற பைலட் இருக்கிறார்களா எனக்கேட்கிறார்…..திரும்பத்திரும்ப இந்தக்காட்சியைப் பார்த்தபின்னும் கூட அவர் கேள்வியின் லாஜிக்கே புரியவில்லை….ஒரு ரயில் பயணத்திலோ பஸ் பயணத்திலோ ஓட்டுனருக்கோ பயணிகளுக்கோ ஏதேனும் மருத்துவ உதவி தேவைப்படும்போது அந்த பஸ்ஸில் அல்லது ரயிலில் யாரேனும் மருத்துவர்கள் இருக்கிறார்களா எனக் கேட்பதில் ஒரு லாஜிக் இருக்கிறது….பெரும்பாலும் முன்பதிவுகளிலேயே டாக்டர் என்றால் அதைக் குறிப்பிடுவோம் என நினைக்கிறேன்….
இது எதுவுமே இல்லையென்றாலும் ரங்கநாதன் தெருவின் நடுவே நின்று கொண்டு கூட்டத்தைப் பார்த்து இங்கே யாரும் டாக்டர் இருக்கிறீர்களா எனக்கேட்டால் நிச்சயம் பத்துப்பேரும் இஞ்சினியர் எனக்கேட்டால் நூறுபேரும் வந்து நிற்பார்கள்….அத்தனைக்கு சாத்தியம் இருக்கும் இடம் அது….
ஆனால் அந்த விமானத்தில் முறைப்படி பைலட் லைசன்ஸ் பெற்ற பைலட் யாரும் இருக்கிறார்களாவென பணிப்பெண்ணிடம் கேட்டறியச் சொல்லி அலுவலகத்திலிருந்து கத்துகிறார் பிரதாப்போத்தன்…பயணிகளின் விபரத்தில் பைலட் என்ற குறிப்பு இருக்காதா….அப்படி இல்லையென்றால் அதை விட முட்டள்தளம் ஏதுமில்லை….சரி அதை விட்டுவிடலாம்…
இப்போது விமானத்தைத் தொடந்து இயக்கி அது சேர வேண்டிய இடத்திற்கு கொண்டு செல்ல முடியாது என்பது உண்மைதான்….ஆனால் விமானத்தை பத்திரமாக தரையிறக்கியாக வேண்டும்…வேறு வழியின்றி பார்வதி காக்பிட்டுக்குள் நுழைந்து பைலட்டாக அமர்கிறாள்….
துணை விமானியின் செய்தி மூலம் பார்வதி அங்கே அமர்ந்திருப்பதை அறிந்த பிரதாப் போத்தன் பதற்றம் கொள்கிறார்….டோவினோவை அழைத்து பார்வதியை அங்கே இருந்து வெளியேறும்படி சொல்லச் சொல்கிறார்…அவளுக்குப் பார்வைக்குறைபாடு இருப்பதால் அவளால் விமானம் ஓட்டமுடியாது என அவளுடைய பைலட் லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டிருப்பதைச் சொல்லிவிட்டு “How dare she get in cockpit?” எனக் கேட்கிறார்…..
அந்த விமானத்தில் உள்ள பயணிகளில் யாருமே பயிற்சி பெற்ற பைலட் இல்லை…துணை விமானியும் பதட்டத்தில் இருக்கிறார்…விமானத்தைத் தரையிறங்க வைக்கப் பார்வதியின் துணை அன்றி வேறு தீர்வே அங்கு இல்லை….ஆனாலும் பார்வதியை நோக்கி “How dare” என்ற கேள்வியே கேட்கப்படுகிறது…இது அந்தப் பெண்ணின் மீதான இன்னொரு வகை தாக்குதல் தான்….
அப்பாவிடமும், பிரதாப்போத்தனின் தலைமையிலான அலுவலகத்திடமிருந்தும் கடும் நெருக்கடிகள் வந்த போதும் பார்வதியின் மீதுள்ள நம்பிக்கையில் அவளால் விமானத்தை இயக்கி பத்திரமாகத் தரையிறங்கமுடியும் என டோவினோ நம்புகிறான்….அந்த நம்பிக்கையைப் பார்வதிக்கும் கடத்துகிறான்….பார்வதி விமானத்தை பத்திரமாகத் தரையிறக்குகிறாள்….
சக விமானி “I can’t see the runway” எனும் போது பார்வதி “I can” என்கிறாள்….Yes…she can…because it’s just not only the runway…it’s her dream”
படம் பார்த்துவிட்டு disturbed ஆகவே தூங்கப் போயிருக்கிறேன் போல….இரவில் கண்ட கனவு காலையில் கூட தெளிவாக நினைவுக்கு வந்தது…. என் வீட்டுச் சுவற்றை விமானம் ஒன்று பறந்து வந்து இடித்து விட்டு நிற்பது போலக் கனவு….கேபிள் டீ.வி வயரெல்லாம் பிய்ந்து தொங்கிக் கொண்டிருந்தது….நல்லவேளையாக எனக்குப் பைலட் ஆகும் கனவும் இல்லை அந்த விமானத்தை நான் ஓட்டி வரவும் இல்லை என்பது மட்டுமே மிஞ்சி நின்ற ஆறுதல்….ஆனா இப்போ ஹாக்கி ஸ்டிக் வேணுமே…ஞான் எந்து செய்யும் L 

Wednesday 25 March 2020

96’ திரைப்படத்தை இன்னும் முழுதாகப் பார்க்கவில்லை….நேற்றைக்கு வாட்சப்பில் அந்தப் படத்திலிருந்து ”யமுனை ஆற்றிலே” பாட்டை ஜானு பாடும் காட்சியைப் பார்த்து விட்டு யூ ட்யூபில் அந்தப் படத்தின் மற்ற காட்சிகளைத் தேடிப் பார்த்துக் கொண்டிருந்தேன்….
ராம், அவனது பள்ளிப்பருவத்திலும் பிறகு அவர்களுடைய வகுப்பு ஒன்றுகூடலின் போதும் ஜானுவிடம் இந்தப்பாடலைப் பாடும்படி மிகவும் விரும்பி ….இன்னும் சொல்லப்போனால் ஜானு அந்தப்பாடலை ஒருமுறையாவது பாடிவிடமாட்டாளா என ஏக்கமாகக் கேட்கிறான்…..நண்பர்கள் முன்னிலையில் ராம் கேட்கும் ஒவ்வொரு முறையும் ஜானு அவன் கோரிக்கையை நிராகரிக்கிறாள்….
பிறகு ஜானு, ராம் இருவரும் ராம்-மின் வீட்டில் பேசிக்கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது கரண்ட் கட்டாகிறது….எதிர்பாராத அந்த சூழலில் அந்த இருட்டில் அவள் தடுமாறிவிடக்கூடாது என்று ராம் “ நீ இருட்டில் எழுந்துக்காத ஜானு இதோ நான் வர்றேன்” என்று எழுந்து போகிறான்….
முழுக்க இருள் சூழ்ந்த, பின்னணியில் மழைச் சாரல் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டிருக்கும் அந்த நேரத்தில் ராம் தன் வாழ்நாளில் ஒருமுறையேனும் ஜானுவின் குரலில் கேட்க விரும்பிய அந்தப் பாடலை அவள் பாடுகிறாள்…..அந்தப் பாடல் ராமுக்கு விருப்பமானதாகவே அதுவரை காட்டப்பட்டிருந்தது மறைந்து போய் ஜானுவுக்கு ராம் எத்தனை விருப்பமானவனாக இருந்தால் அவன் விரும்பிய அந்தப் பாடலை கூட்டத்தில் நண்பர்களுக்கு முன் பாடாமல் அவனும் அவளும் மட்டும் தனித்திருக்கும் போது அவன் எதிர்பாராத அந்த நேரத்தில் அதுவும் அவன் கேட்காமலே ஜானு பாடியிருப்பாள் என்று தோன்றியது….
அவளுக்கு இத்தனை விருப்பத்துக்குரியவனான ராம், ஜானு அந்தப் பாடலைப் பாடும்போது என்ன செய்திருக்க வேண்டும்…….இருட்டுக்குள் போனவன் அவள் குரலில் அந்தப் பாடலைக் கேட்ட நொடியில் கால்கள் மரத்துப் பேச மறந்து சுவாசிக்க மறந்து சிலையாக நின்றிருக்க வேண்டுமா இல்லையா …குறைந்தபட்சம் அதற்கு முன்பான காட்சிகளில் ஜானுவின் ஸ்பரிசம் பட்ட நொடியில் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு மயங்கி விழுவதைப் போல விழுந்திருக்கவாவது வேண்டுமா இல்லையா…..
இது எதுவும் செய்யாமல் அவன் இருட்டுக்குள் அங்குமிங்கும் ஓடி கைகளில் தட்டுப்படும் பொருட்களைத் தள்ளி விட்டு அந்த அமைதியைக் குலைத்து தட்டுத் தடுமாறி எதையோ எடுக்கிறான்…..சரி அது டேப் ரெக்கார்டர் போல…ஜானுவின் குரலைப் பதிவு செய்ய தேடி எடுத்திருக்கிறான் என்று நினைத்தால் அது டேப் ரெக்கார்டரும் இல்லை…அதுவொரு எமர்ஜென்ஸி லைட்… அதை உயிர்ப்பித்து எரிய வைத்து ஜானுவின் முகத்துக்கு நேரே கொண்டு வந்து நிற்கும் போது ”பாவம் ராதா” என்று அந்தப் பாடலைப் பாடி முடித்தே விடுகிறாள்….. உண்மையில் பாவம் நீ தான் ஜானு …..அடேய் ராம்….லைட்டாடா இப்ப முக்கியம் என்று கேட்கத் தோன்றியது…..
இந்த வீடியோவைத் தொடந்து யூ ட்யூப் பரிந்துரைகளின் நூல் பிடித்துச் சென்றதில் இந்தப் பாடலின் ஒரிஜினல் வர்சனான தளபதி படத்தில் இடம்பெறும் ”யமுனை ஆற்றிலே” பாட்டையும் பார்க்க நேர்ந்தது…..பாடலின் நிறைவு வரிகளின் போது ரஜினியும் ஷோபனாவும் எதிர் எதிரே உக்கார்ந்திருக்கும் காட்சி….அதிலும் தலைவரின் முக பாவனையும், தலையைக் கோதியபடி, ஒரு கையை தாடையில் வைத்துப் பாட்டையும் ஷோபனாவையும் ஒரு சேர ரசிப்பதும்……க்ளாஸிக் 😍😍😍😍

சானிடரி பேட்களுக்கான புதிய விளம்பரம் ஒன்று நேற்று கண்ணில் பட்டது. ராதிகா ஆப்தே தோன்றும் அந்த விளம்பரத்தில் மாதவிடாய் காலத்தின் அதீத உதிரப்போக்கு நேரங்களில் உபயோகிக்கக் கூடிய பேட்களை ”ரியோ நிறுவனம்” புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கிறது…
இதற்கு முன்பான அத்தனை சானிடரி நாப்கின் விளம்பரங்களிலும் உதிரப்போக்கை நீல நிறத்தில் ’திரவம்’ போல மட்டுமே காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்….குழந்தைகள் உபயோகத்திற்கான டயாப்பர் விளம்பரத்திற்கும் இந்த வகை சானிடர் நாப்கின் விளம்பரங்களுக்கும் எவ்வித வேறுபாடும் இருந்ததில்லை….
வீட்டில் இங்க் கொட்டிய குழந்தைகள் அதைத் துடைப்பதற்கு சானிடரி நாப்கின்கள் கேட்டதாகவெல்லாம் வாரமலர் “இது உங்கள் இடம்’ பகுதிகளில் இடம் பெற்றிருக்கிறது….
மாதவிடாய் காலத்தில் பெண்கள் உதிரப்போக்கு,உடல்நிலை, மனநிலையெல்லாம் பெண்ணுக்குப் பெண் வேறுபடும்….சும்மா படுத்துக் கொண்டு இருந்தாலே போதுமென்றிருக்கும் சிலருக்கு……நானெல்லாம் அந்த நேரத்தில் தான் வேலைகளை இழுத்துப் போட்டு செய்து கொண்டிருப்பேன்….
சானிடரி நாப்கின்களை உபயோகித்துக்கொள்வது கூட நேரம், இடம் , சூழல் பொறுத்து ஆளுக்காள் மாறுபடும்….வீட்டிலேயே இருந்தாலும் கூட தனி டாய்லெட் இல்லாமல் பொதுக்கழிவறை அமைப்பில் உள்ளவர்கள், கூட்டுக்குடித்தனத்தில் பலர் உபயோகிக்கும் டாய்லெட்டைக் கொண்டவர்கள், அலுவலகத்தில் இருபாலரும் ஒன்றாக உபயோகிக்கும் கழிவறை அமைப்பைக் கொண்டவர்கள் என இந்த லிஸ்ட் நீண்டு கொண்டே தான் போகிறது….
முன்பு வேலை பார்த்த அலுவலகத்தில் நான் ஒருத்தி மட்டுமே பெண்….உயரதிகாரியிலிருந்து கடைநிலை அலுவலர் வரை கிட்டத்தட்ட 15க்கும் மேற்பட்ட ஆண்கள் வேலை பார்த்த அந்த அலுவலகத்தில் அனைவருக்கும் ஒரேயொரு வெஸ்டர்ன் டாய்லட்…..அந்த டாய்லட்டுக்குள்ளும் குப்பைக்கூடை கிடையாது…..அதை வைக்க வேண்டுமென்ற அவசியம் எதற்கு என்பது கூட அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை…..ஒருவர் உள்ளேயிருக்கும்போதே மற்றொருவர் வரிசையில் நிற்பது தினந்தோறும் நடக்கும் நிகழ்வு….
ஒருவழியாக டாய்லெட்டை உபயோகித்து விட்டு தண்ணீரை ஃப்ளஷ் (நாப்கினை அல்ல) செய்து விட்டு வந்தால் சாக்ஸ் அணிந்த கால்களுடன் உள்ளே போகும் நபர் கீழே ஈரம்படுகிறது என்ற கோவத்தோடு முனகிக் கொண்டே நம் இருக்கையைக் கடந்து செல்வார்….அந்தக் கோவமும் நாம் கேட்கும் ரிப்போர்ட்களை தாமதித்து அனுப்புவதில் தான் அவர்களுக்கு அடங்கும்….அதே ஆஃபீஸில் தான் பரபரப்பான வேலைகளுக்கிடையே இங்குமங்கும் ஓடிக்கொண்டு ஒருவழியாக இருக்கைக்கு வந்து சேர்ந்த நேரத்தில் பக்கத்தில் வந்து மெல்லிய குரலில் ’மேடம் உங்க டிரெஸ் ’அழுக்காகி’ இருக்கு’ என ஒரு அலுவலர் சொல்லிவிட்டுப் போனார்….
பெண்கள் உடலில் இப்படியொரு மாதாந்திர நிகழ்வு நடக்கிறது என்பதே கூட தெரியாமல் அல்லது தெரிந்தும் கண்டுகொள்ளாமல் இருக்கும் ஆண்களின் எண்ணிக்கை இப்போது குறைந்திருந்தாலும், இன்னும் கூட ஆண்கள் நாப்கின் வாங்கி வருவதை ஒரு பாவச்செயலாகவே நினைப்பவர்களும் இருக்கிறார்கள். எங்கள் வீட்டில் நான் நாப்கின் வாங்கி வந்ததை விட உதய் எனக்கு வாங்கித் தந்ததே அதிகம். பிராண்ட், விலை முதற்கொண்டு உதய்க்கே சரியாக நினைவில் இருக்கும். இன்றைக்கும் பெரும்பாலான கடைகளில் நாப்கின்களை பேப்பரில் சுற்றியே தான் தருகின்றனர்…. வீட்டுக்குள் கூட அலமாரிக்குள் அதை ஒரு கஞ்சா, அபின் போல ரகசியமாய் மறைத்து வைத்திருக்கும் ஆட்களையும் பார்க்கிறேன்….நானெல்லாம் அப்படி மறைத்து வைத்தால் இடத்தை ஞாபகம் வைத்து திரும்ப யோசித்து எடுப்பது ரொம்பவே கஷ்டம்….
எங்கள் வீட்டுக்கு எதிரே இருக்கும் கடைக்காரர் எந்தப்பொருளைக் கேட்டாலும் நாம் சொல்லும் பிராண்ட் இல்லையென்றால் அவர் ஸ்டாக் வைத்திருக்கும் பிராண்டைச் சொல்லி பலவருடங்களாகத் தங்கள் குடும்பமே தாத்தா பாட்டி காலம் தொட்டு தலைமுறை தலைமுறையாக அதைத் தான் உபயோகிக்கிறது என்று கூசாமல் பொய் சொல்லுவார் அந்த பிராண்ட் அன்றைக்கு தான் சந்தைக்கு வந்திருந்தாலும் கூட….அவரிடம் தர்க்கம் செய்யாமல் நான் வாங்கி வரும் ஒரே பொருள் சானிடர் நாப்கின் மட்டுமே…..அதை கொடுக்கும் போது கூட தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு ஒருவிதமான பதட்டத்தோடு தான் கையில் கொடுப்பார்….
இந்தக்கூத்தெல்லாம் ஒருபுறம் இருக்க உபயோகித்த நாப்கின்களை முறையாகவும் சுகாதாரத்தோடும் அப்புறப்படுத்துவது அனுமார்வால் போல நீண்ட நெடிய தொடர்…..இதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு இன்னும் பெண்களுக்கே போதுமான அளவு இல்லை என்பதே உண்மை…… பள்ளி, கல்லூரிகளில், ஹாஸ்டல் அறைகளில், ஹோட்டல்கள், சுற்றுலாத்தலங்கள் போன்ற பொது இடங்களில் முறையாக அவற்றை அப்புறப்படுத்துவதற்கான வசதிகள் இங்கே இல்லவே இல்லை….
திருச்செந்தூர், ராமேஸ்வரம் போன்ற இடங்களிலெல்லாம் கடலில் குளித்து விட்டுப் பெண்கள் உடை மாற்றும் இடத்திற்கு வந்தோமானால் மானாவாரியாக உபயோகப்படுத்திய நாப்கின்கள் சிதறிக்கிடக்கும்…..கூட்டம் கூட்டமாய் மக்கள் வந்து போகும் புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்களுக்கே இந்தப் பாடென்றால் இன்னும் ஆறு, குளம் , ஏரி, அருவிகள் ஓரம் பற்றியெல்லாம் வாய்விட்டுச் சொல்லவே முடியாது….. உபயோகித்த நாப்கின்களை குறைந்தபட்சமாக பேப்பரிலாவது சுற்றி அப்புறப்படுத்துவது நலம் என்கிற அறிவு இங்கே மிக மிகக் குறைவு….
அசைவம் உண்பவர்களாகவே இருந்தாலும் கூட இன்னும் ஆடு, மாடு, கோழி, மீன் வெட்டும்போது ரத்தத்தைக் காணச் சகியாமல் ஒதுங்கி நிற்கிறவர்கள் உண்டுதானே....மாமிசத்தின் மேல் படிந்திருக்கும் ரத்தவாடை ஒவ்வாமல் அசைவம் சமைக்கும்போது சமையலறைக்குள் எட்டிப்பார்க்காமல் ஓடுகிறவர்கள் இன்னும் இருக்கிறார்கள்.... இல்லையா....
இத்தனை ஆரவாரங்களுக்கும் ஒரே காரணம் அந்த மாதவிடாயின் நிறம்….அந்தச் சிவப்பு…..அடர் சிவப்பு…..ஈரத்தை உறிஞ்சியபின் மாறும் கருஞ்சிவப்பு…. விளம்பரங்களில் சித்தரிக்கப்படுவது போல் அது வெறும் திரவமென்றால் இத்தனை ஒளிவுமறைவு எதற்கு? எனில் அந்த நிறத்தை அந்த உதிரத்தை அதன் உண்மைத்தன்மையோடு காட்சிப்படுத்துதல் என்பது அவசியமானதாகிறது…
நம் வீடுகளில் தட்டின் முன்னால் உக்கார்ந்திருக்கும் வேளைகளில் டாய்லட் க்ளீனர் விளம்பரங்கள் வருவதைக் கண்டு முகம் சுளிக்கும் பெரும்பான்மை மக்களின் முன்னே இந்த விளம்பரம் நிச்சயம் அதிர்வை ஏற்படுத்தும் என நினைக்கிறேன்….அது தேவையானதும் கூட….
ஆக காலங்காலமாய் நம் டீவி விளம்பரங்களில் காட்டப்பட்டதைப் போல சானிடரி நாப்கின்களில் உறிஞ்சப்படுவது வெறும் நீல நிறத் திரவம் அல்ல.....அது சிவப்பு நிற உதிரம் !!!

Thursday 23 January 2020

சிறுகிழங்கு


சென்னைக்கு வந்து இத்தனை வருசம் ஆனாலும் இன்னும் கூட சில நேரங்கள்ல இங்க பேசுற சில வார்த்தைகள் எங்க ஊர்ப்பக்கம் பேசுற வார்த்தைகளோட ரொம்பவே முரண்பட்டிருக்கும்….எனக்கும் சில வார்த்தைகள் சுட்டுப்போட்டாலும் இங்க பேசுற மாதிரி வராது….
அதனாலேயே வெளி இடங்களுக்குப் போய் பேசும் போது நம்ம இந்த ஊரு ஆளு இல்லன்னு ரொம்ப ஈஸியா கண்டுபிடிச்சுடுவாங்க…. ஆஃபீஸில இருந்தப்ப கட்டடம் சம்பந்தமான பல வார்த்தைகளெல்லாம் ஊர்ல பேசுறதுக்கு அப்டியே ரிவர்ஸ்ல இருக்கும்….
பள்ளம் நோண்டிருக்காங்க - தோண்டியிருக்காங்க 
காவா அடைச்சிருக்கு     - வாய்க்கால் அடைச்சிருக்கு
இப்டி நிறைய்ய வார்த்தைகள்…..
ஆனாலும் இந்தக்காய்கறி வாங்கும் போது அதிலும் குறிப்பா கிழங்கு வகைகள்லாம் ஒவ்வொண்ணுக்கும் ஒவ்வொரு பேர் இருக்க இவங்க ஏன் எல்லாக் கிழங்கையும் ஒரே பேர் சொல்லிக் கூப்பிடுறாங்கன்னு இருக்கும்…..
இன்னைக்கு காய்கறிக்கடையில சிறு கிழங்கு இருக்கான்னு கேட்டேன்….காய்கறி வாங்க வந்த ரெண்டு மூணு லேடீஸுக்கு அப்படி ஒரு கிழங்கு இருக்குன்னே தெரியல….அது பரவால்ல….ஒரு அக்கா சேப்பங்கிழங்க எடுத்துக் காட்டி ”தோ ருக்கு பாரும்மா”ன்னாங்க…
“அய்யோ அக்கா அது பேரு சேப்பங்கிழங்கு”ன்னு சொன்னேன்….
“தோ பார்ரா….சேனக்கெழங்க சேப்பக்கெழங்குன்னுது”ன்னாங்க
“அதான பாரேன்ன்”ன்னு இன்னொரு அக்கா சொன்னதும்
“ஆமா…இது பேரு சேப்பங்கிழங்கு தான்….அதோ இருக்கே அது பேரு தான் சேனக்கிழங்குன்னு சொன்னதும்
“தோ….இதான் சேனக்கெழங்கு”ன்னு கருணக்கிழங்க எடுத்து காட்டுனாங்க
“இது கருணக்கெழங்குக்கா… பிடி கருணைன்னு சொல்லுவோம் …இதுல புளிக்குழம்பு வைப்போமே”ன்னதும்
“ன்னாது அது புளிக்கொழம்பு”
“அதான்….இங்க காரக்குழம்புன்னு சொல்லுவீங்களே”
“ஆங்ங்ங்….சரியாப் போச்சு…..ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு மாதிரி போல”ன்னுட்டு போய்ட்டாங்க
எல்லாத்தையும் வேடிக்கை பார்த்துட்டு இருந்த பெரியம்மா ஒருத்தங்க மெதுவா கிட்ட வந்து ”யம்மா…இதுக்கு உங்கூர்ல என்னா பேரு”ன்னாங்க
“எல்லா ஊர்லயும் இதுக்குப் பேரு உருளைக்கிழங்குதான்”னதும் ஒரு பெருமூச்சு விட்டு முகத்தை முந்தானையால துடைச்சிட்டு “இந்த ஊர் நாட்டுக்காரங்கல்லாம் பேர் வைக்கிறதே வேலன்னு இருப்பாங்க போல”ன்னு முனகிட்டே போனாங்க….
இதெல்லாம் போகட்டும்….இந்த சிறுகிழங்கு பத்தி நிறைய பேருக்குத் தெரியல….தை மாசம் ஒட்டி தான் இந்தக் கிழங்கு நிறைய கிடைக்கும்….கிழங்கு முழுக்கவே மண்ணு ஒட்டியிருக்கும்….கொஞ்சம் ஈரப்பதத்தோட இருக்கும் போதே கையால அல்லது சாக்குப்பையால கிழங்க தேய்ச்சோம்னா அதோட தோல்பகுதி தனியா வந்துடும்…கிழங்கு வெளேர்னு இருக்கும்….கழுவிட்டு ஒண்ணு ரெண்டா துண்டாக்கி கனத்த இரும்புச்சட்டியில எண்ணெய் விட்டு காய்ஞ்சதும் மிளகாய்த்தூள் உப்பு சேர்த்துப் போட்டு அதுல கிழங்க வறுத்து எடுத்து சாப்பிட்டா அவ்ளோ ருசியா இருக்கும்….அல்லது குக்கர்ல ஒரு விசில் வேக வச்சு தோல உரிச்சு வதக்கியும் சாப்பிடலாம்…..
கிழங்கு வகைகள் எல்லாமே மண்ணுக்குள்ள தான் விளைஞ்சு வருது ஆனாலும் இந்தக்கிழங்கோட ஸ்பெஷல் என்னன்னா சமைச்சதுக்கப்புறம் கூட இந்தக்கிழங்குல மண் வாசம் இருக்கும்….சாம்பார் பருப்பு மாதிரியான குழம்புக்கெல்லாம் சூப்பரான சைட் டிஷ்…..இன்னும் ரெண்டு மாசத்துக்கு கிடைக்கும்னு நினைக்கிறேன்….கடைகள்ல பார்த்தீங்கன்னா கண்டிப்பா வாங்கி சாப்பிட்டுப் பாருங்க….    

Sunday 19 January 2020

விருப்பக்குரலும் திருத்த வேண்டிய உச்சரிப்பும்....


”சித் ஸ்ரீராம் முறைப்படி சங்கீதம் கத்துக்கிட்டு பாட வந்தவரு…அதென்ன அப்டி சொல்லிட்டீங்க….சரியா பாடலேன்னு…உச்சரிப்பு சரியில்லேன்னு…..”

“அவன் பயோவ கூகுள்ல தேடிப் பாரு…எத்தனை அவார்ட் வாங்கிருக்கான்னு…திறமை இல்லாமலா அவார்ட் குடுக்குறாங்க?”

“க்கா….சித் வாய்ஸ் எவ்ளோ சூப்பரா இருக்கு….அவனப் போய் நல்லாப் பாடலன்னு சொல்லிட்டீங்க….அதான் அந்த போஸ்ட நான் லைக் பண்ணவும் இல்ல…கமெண்ட் பண்ணவும் இல்ல…அப்டியே போய்ட்டேன்”

அன்பின் சித் ஸ்ரீராம் ரசிகர்காள்.....ரோமியோ ஜூலியட் படத்துல வர்ற “தூவானம் தூவ தூவ” பாட்டப் பாடின விஷால் தத்லானி தமிழன் இல்ல….

“பேட்ட” படத்துல “உல்லாலா” பாட்டப் பாடின நர்கீஸ் அஜீஸ் தமிழன் இல்ல….

லதா மங்கேஷ்கர், உஷா உதூப்ல இருந்து ஸ்ரேயா கோஷல் வரைக்கும் தமிழ் தெரியாத பாடகர்கள் பாடின தமிழ்ப்பாட்டுகளைக் கேக்கும் போது இவங்களுக்கெல்லாம் தமிழ் தெரியாதுன்னே சொல்ல முடியாது….அத்தனை கச்சிதமான உச்சரிப்பு இருக்கும்…

கர்நாடக சங்கீதம் தெரியாத சினிமா பாடகர்கள் ரொம்பவே கம்மி தான்….ஆனா சினிமாவுல பாட்டு பாடும் போது அந்த சாயல் வராம பாட்டு சிச்சுவேஷனுக்கு ஏத்த மாதிரிப் பாடுறதுல தான அவங்க திறமை இருக்கு…அதையும் மீறி ஒண்ணு ரெண்டு இடங்கள்ல அவங்க ஒரிஜினாலிட்டி வெளிப்படும் தான்….ஆனா முழுப்பாட்டும் அப்படியே இருக்கும்போது தான் பாட்டு அந்நியமாகுது….

விஜய் பிரகாஷ எடுத்துக்கிட்டோம்னா “நான் கடவுள் “ படத்துல வர்ற “ஓம் சிவோஹம் பாட்டு”ல மனுசன் பிரிச்சி மேய்ஞ்சிருப்பாரு…அந்தப் பாட்டுக்கான அத்தனை தேவையும் அதில குறையில்லாம இருக்கும்….அதே விஜய் பிரகாஷ், ”தென்மேற்குப் பருவக்காற்று” படத்துல வர்ற ’ஏடி கள்ளச்சி’ பாட்டுல  ”முள்ளு தச்ச ஆடு போல நெஞ்சுக்கு”ழி” நோக-ன்னு ”ழி”க்கு அத்தனை அழகா அழுத்தம் குடுத்துப் பாடியிருப்பாரு…ஆனா படத்துல விஜய் சேதுபதி தேனி பக்க ஊர்க்காரர்…அங்கிட்டு இருக்கவய்ங்களுக்கெல்லாம் ”ழ” எப்டிய்யா வரும்”

அதே மாதிரி தான் ’எள்ளு வய பூக்கலையே’ பாட்டுல ’கொல்லையில வாழ எல, கொட்டடியில் கோழிக்குஞ்சு”ன்னு பாடும்போது சைந்தவி ”ழ”கரத்த அத்தனை அழகா உச்சரிச்சுருப்பாங்க….ஆனா இதுலயும் படம் எடுக்கப்பட்ட இடம்…திருநெல்வேலிப்பக்கம்….அங்கயும் யாருக்கும் “ழ” வராது….ரெண்டு படமுமே நேட்டிவிட்டிய சொல்லியிருக்க விதம் அட்டகாசமா இருக்கும்…அந்தப் பாய்ச்சல்ல இந்தப்பாட்டுகள்ல வர்ற இந்தச் சின்ன விசயமெல்லாம் ஒரு பொருட்டே இல்ல….ஆனாலும்…அந்த உச்சரிப்புல நேட்டிவிட்டி மிஸ் ஆகிடுதுல்ல….. 

இதெல்லாம் கூட ஒண்ணு ரெண்டு எழுத்துக்களோட பெருசா கவனத்த சிதைக்காம பாட்டோட ஒட்டிக் கிடக்குறதால நாமளும் அத கண்டுக்குறதில்ல….ஆனா சித்ஸ்ரீராம் பாட்டுல இது எல்லாமே தனித்தனியா அங்கங்க தொங்கிட்டு இருக்கது தான் பிரச்சனயே…..   

பாடகர்கள்தான்னு இல்ல, இன்னும் கூட ரஜினி , அர்ஜூன் உச்சரிப்பப் பார்த்தீங்கன்னா சில தமிழ் வார்த்தைகள் அவங்களுக்கு வரவே வராது….உதாரணமா….”ஒண்ணு சொல்றேன்”ங்கிறது ரஜினி வாயில இருந்து ”வொண்ணு சொல்றேன்”னு தான் வரும்….சமீபத்திய உதாரணம் தர்பார் படத்துல வற்ற டயலாக் ”ஒரிஜினலாவே நான் வில்லன் தான்ப்பா”ங்கிறத “வொரிஜினலாவே”ன்னு தான் சொல்லுவார்….

சரி இவங்கல்லாம் தமிழர்கள் இல்ல….அதனால மன்னிச்சு விட்ரலாம்…தக்காளி சித்துவுக்கெல்லாம் என்ன கேடுன்றேன்….

ஆனாலும் சித்ஸ்ரீராமின் பொருட்டு விரும்பியே பாரம் சுமக்கும் பரிசுத்த ஆவிகளுக்கு ஆறுதலான ஒரு செய்தியும் இருக்கிறது…. ஆளானப்பட்ட ஜேசுதாஸ் கூட ஆரம்ப காலகட்டத்துல திருக்கோவிலை ”தெருக்கோவிலேன்னு” பாடினவரு தான்….. அதனால மனச தளரவிட்ராம கொஞ்சம் மெனக்கெட்டு தமிழ சரியா உச்சரிச்சுப் பாடினா கேக்க இன்னும் நல்லா இருக்கும்.

கறிவேப்பிலை : பாட்டை ரொம்ப சிலாகிச்சு எங்கூட ஃபேஸ்புக், வாட்ஸப், ஃபோன்கால்ல சண்டை போட்டவங்களுக்கு நாலு வரி ’நான் பாடினத’ அனுப்பியும் வச்சிருக்கேன்… அத்தோட அங்கிட்டு நாலு ஆத்மா ஜீவசமாதி ஆகிருச்சு….வேற யாருக்கும் பாட்டு வேணுமா???

Friday 17 January 2020

பொங்கல் துணி

எப்பவும் துணி தைக்கக் குடுக்குற டெய்லர் அக்கா…பொங்கலை முன்னிட்டு ரொம்ப பிஸியாகிட்டதால எனக்குத் தைக்க வேண்டிய துணியை எடுத்துட்டு வேற ஒரு டெய்லர் கடைக்குப் போயிருந்தேன்….
வாசல்லயே குறுக்கும் நெடுக்குமா பெண்கள் ஒரு பரபரப்போட உலாவிட்டுருந்தாங்க….. அதப் பார்த்ததும் எனக்கு டெலிவரிக்கு ஆஸ்பத்திரி போன ஞாபகம் வந்தது…அங்க தான் பெண்கள் முகத்துல இவ்ளோ டென்சனப் பார்த்திருக்கேன்…
இது போக நாலைஞ்சு பேர் வரிசையில வேற நின்னுட்டு இருந்தாங்க…..அவங்கள்லாம் துணி தைக்கக் குடுக்க காத்திருக்க வரிசையாம்….சரின்னு கடைசியாப் போய் நின்னேன்….குடுகுடுன்னு ஒரு அக்கா ஓடி வந்து எனக்கு முன்ன இருந்தவங்களக் காட்டி இவங்களுக்கு அடுத்து உங்களுக்கு முந்தி நான் தான்….முன்னாடி இருக்க நாலு பேர் தைக்கக் குடுக்குறதுக்குள்ள நான் போய் மாவு வாங்கிட்டு வந்துர்றேன்….நீங்க யாரையும் விட்ராதீங்கன்னு மிரட்டாத குறையா சொல்லிட்டுப் போனாங்க…
சரி யார் தான் அந்த டெய்லர் அக்கான்னு பார்ப்போமேன்னு நாலு பேரைத் தாண்டி அந்த அளவெடுக்குற அக்காவ எட்டிப் பார்த்தேன்….டேபிள் மேல துணியெல்லாம் குவிச்சு வச்சிருந்ததால …அவங்க முகத்தப் பார்க்க முடியல….சரின்னு ஒரு ஸ்டெப் பின்னாடி நகர்ந்தா கால்ல ஏதோ இடிக்குற மாதிரி ஃபீலாகவும் திரும்பிப் பார்த்தா எனக்குப் பின்னாடி ஒருத்தங்க….நான் கொஞ்சம் முன்னால நகர்ந்த கேப்-ல அவங்க துணிப்பைய என் காலுக்குப் பின்னாடி வச்சிருக்காங்க…”என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா”ன்னு கேக்க நினைச்சு நிமிர்ந்து பார்த்தா என் உயரத்துக்கு அவங்க தோள் மட்டும் தான் தெரியுது…. ஆள் தோரணையப் பார்த்து பேசாம திரும்பி அட்டென்சன்ல நின்னுக்கிட்டேன்….
இதுக்குள்ள முதல் ஆள் தைக்கக் குடுத்துட்டு கிளம்ப மத்தவங்களும் முன்னால நகர்ந்ததும் நானும் ஒரு அடி எடுத்து வைக்க பழையபடி பின்னங்கால்ல கட்டைப்பை….தோள்பக்கமா மெல்ல திரும்பி அவங்களுக்குத் தெரியாம முறைச்சுட்டு முன்னாடி திரும்புனா , என் மூக்குல முட்டுற மாதிரி மூஞ்சியக் கொண்டு வந்து ”போட் நெக்குன்னா என்ன”னு எனக்கு முன்னாடி நின்னுட்டு இருந்தவங்க கேட்டாங்க….
”போட் நெக்குன்னா கழுத்து உயரமா வைக்குறதுங்க”
“முன்னாடியா பின்னாடியா”ன்னு கேட்டதும் நான் முழிச்சுட்டு நிக்க…
பின்னாடி இருந்து கட்டப்பை என் தோள்ல கை போட்டு அழுத்தி “ஏங்க அறம் படத்துல நயந்தாரா போட்டுட்டு வர்றது தாங்க போட் நெக்”குன்னு சொன்னதும் முன்னாடி இருந்தவங்க “ஓ….அப்ப போட் நெக் தச்சுப் போட்டா நாமளும் நயந்தாரா மாதிரி இருப்பமா”ன்னு இந்தம்மா கேக்க “ஆமா அடுத்து ரஜினி படத்துல நடிக்க உங்களத்தான் கூப்புடுவாங்க”ன்னு அந்தம்மா சொல்ல கலகலப்பு படத்துல பேயிக்கும் திமிங்கலத்துக்கும் நடுவுல சந்தானம் மாட்டிக்கிட்டு தலையில அடிச்சுக்குற மாதிரி என்னைய நிக்க வச்சுட்டு ரெண்டு பேரும் ஒரே சிரிப்பு….
ரெண்டாவது ஆளும் தைக்கக் குடுத்துட்டுப் போய்ட்டாங்க… அடுத்ததா நம்ம போட் நெக்கும் வேலைய முடிச்சுட்டு நகர அப்பாடான்னு கட்டப்பையிட்ட இருந்து சந்தோசமா கால நகர்த்துனேன்…..க்ளைமேக்ஸ்ல ப்ளாட்ஃபார்ம்ல விழுந்தடிச்சு ஓடி வந்து டிரெயின்ல போற ஹீரோயின நிறுத்துற ஹீரோ மாதிரி நம்ம மாவு அக்கா மூச்சு வாங்க வந்து என் கைய பிடிச்சு நிறுத்திட்டாங்க…. “நல்ல வேள நீங்க குடுக்குறதுக்குள்ள வந்துட்டேன்”ன்னதும் ஆத்தீ…நம்மள விடப் பெரிய்ய அத்லெட்டா இருப்பாங்க போலன்னு நினைச்சுட்டே “கொஞ்சம் மூச்சு விட்டுக்கோங்கக்கா”ன்னேன்….
ஒரு வழியா என்னோட முறை வந்து பைக்குள்ள இருந்து துணிய வெளிய எடுத்து டேபிள் மேல வச்சேன்… டெய்லர் அக்கா அதிர்ச்சியாகி ”நைட்டியா”ன்னு கேட்டுட்டு ”கூட வச்சிருக்கவங்களுக்கெல்லாம் பெட்ரோமாக்ஸ் குடுக்குறதில்லம்மா” கணக்கா…. ”இப்ப இருக்க பிஸிக்கு பொங்கலுக்கு நைட்டில்லாம் நைட்டி தச்சுக்குடுக்க முடியாதுங்க…வேணும்னா 22ம் தேதி வாங்கிக்கோங்க” நெக்ஸ்ட்ன்னு சொல்லாத குறையா எனக்குப் பின்னாடி நின்னுட்டுருந்த கட்டப்பையப் பார்க்கவும் விட்டா மூஞ்சில தூக்கி எறிஞ்சிடுவாங்க போலயேன்னு மரியாதைய காப்பாதிக்க வேற வழி இல்லாம “பரவால்ல….அவசரம் இல்ல….நீங்க பொங்கலுக்கு அப்புறமே தச்சுக் குடுங்கன்னு குடுத்துட்டு திரும்பினேன்….
ஏதோ ஞாபகம் வர ”நீங்க பில்லு குடுக்கலையே”ன்னு கேட்க அவங்க கட்டப்பைக்கு அளவு நோட் பண்ணிட்டே “இப்போதைக்கு யாருமே நைட்டி தைக்க குடுக்கலைங்க…நான் ஞாபகம் வச்சிருப்பேன்….அது அங்கேயே தான் இருக்கும்….எதுக்கும் 22ம் தேதி ஒரு ஃபோன் பண்ணிட்டு வாங்க”ன்னுட்டு நோட்ல எழுத ஆரம்பிச்சாங்க……கட்டப்பை லைட்டா திரும்பி “போட் நெக்குக்கு நீ முழிக்கும் போதே நெனைச்சேன்….நீ நைட்டி கோஷ்டின்னு” எகத்தாளமா பார்க்க நொந்துட்டே வீட்டுக்கு வந்தா வாசல்கிட்ட பக்கத்து வீட்டுக்காரம்மா
”என்ன வெண்பாம்மா….பொங்கல் வந்திருச்சு போல”ன்னு கையில இருந்த துணிப்பைய பார்த்துட்டே கேக்க கவுண்டமணி வடக்குப்பட்டி ராமசாமிகிட்ட குடுத்த கடன் மாதிரி ஊ ஊன்னு ஊளைச்சத்தம் தான் மண்டைக்குள்ள கேக்குது….