Tuesday 30 December 2014

சென்னை

ஏழு வருடங்களுக்கு முன் சொந்த ஊரில் தைப்பொங்கல் முடிந்த இரண்டாம் நாளில் வேலை மாற்றலுக்காய் இந்த நகரத்திற்குள் அடியெடுத்து வைத்த போது முதலில் தோன்றியது “திரும்ப எப்ப ஊருக்குப் போவோம்” என்ற நினைப்பு தான். சென்னை ஒன்றும் புதிதல்ல எனக்கு. அம்மாவின் பூர்வீகம் சென்னை தான். ஆச்சி, தாத்தா, மாமா, பெரியம்மா இன்னும் அம்மாவின் தாய்மாமா உள்பட நிறைய சொந்தங்கள் வாழும் ஊர். நான் பிறந்ததும் வண்ணாரப்பேட்டையின் ஒரு சிறிய மருத்துவமனையில் தான். வளர்ந்ததும் படித்ததும் விருதுநகரில். பள்ளிக்காலங்களின் ஆண்டு விடுமுறை நாட்களில் சென்னைக்குப் பலமுறை வந்ததுண்டு. அப்போதெல்லாம் மெரீனா பீச்சையும், பழைய வண்ணாரப்பேட்டையின் குறுகலான வீதிகளையும் தவிரப் பெரிதாய் ஒன்றும் சென்னையைச் சுற்றிப் பார்த்ததில்லை.
சென்னையில் எங்கள் அலுவலகம் இருந்தது அண்ணாநகரின் பிரதான சாலையில். ஆரம்பத்தில் தங்கியிருந்த பெரியம்மா வீட்டிலிருந்து அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த பெண்கள் விடுதியில் சில காலம் தங்கியிருந்தேன். உணவு, சுற்றுச்சூழல் உள்பட எதுவுமே அங்கு ஒவ்வாமல் போனதால் அண்ணாநகர் திருமங்கலத்தில் இருக்கும் அண்ணன் குடும்பத்துடன் சில மாதங்கள் தங்கியிருந்து வேலையைத் தொடர்ந்தேன். திருமங்கலத்தில் இருந்து தினமும் நடந்தே அண்ணாநகர் ரவுண்டானா வரை சென்று வேலை பார்த்த நாட்களில் அலுவலகம் செல்லும்போதும் திரும்பி வரும்போதும் இரு பக்கமும் சாலையையும், அதில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் மனிதர்களையும் வேடிக்கை பார்த்துப் பார்த்துப் பிரமிப்பில் பூத்துப் போனது கண்கள்.
வேலை, தங்குமிடம் இரண்டிலுமே மாற்றம் வந்தபின் திருவல்லிக்கேணியில் ரத்னா கஃபேவுக்கு பின்புறம் உள்ள ஹாஸ்டலில் 2 வருடங்கள் தங்கியிருந்தேன். அலுவலகம் எக்மோரில். பேருந்துக்கு காசு இல்லாத போதெல்லாம் எக்மோரில் இருந்து விடுதி வரை நடந்தே தேய்ந்து போனது செருப்புகள். அதன் பிறகு சேப்பாக்கத்தில் உள்ள தங்கும் வசதி மட்டும் உள்ள விடுதிக்கு மாறியபின் தானே சமைத்துச் சாப்பிட வேண்டியிருந்தது. உடன் தங்கியிருந்த தோழிகளின் வேலை நேரம், பொருளாதாரம் போன்ற காரணங்களால் தொடச்சியாய் சமைக்க முடியவில்லை.
அந்த நேரங்களில் ஆபத்பாந்தவன் ”ஆந்திரா மெஸ்” தான். சோறு, காரக்குழம்பு, ரசம், சாம்பார், தயிர், மோர், பொரியல், கூட்டு , அப்பளம் கூடிய ஒரு சாப்பாடு வாங்கி நான்கு பேர் பகிர்ந்துண்ட காக்கை கூட்டுக் காலங்கள். (தினசரி சாப்பாடு வாங்குவதால் கூடுதலாய் இரண்டு சிறிய வாழைப்பழங்கள் கொடுப்பார்கள்.) அதை இரவு உணவுக்குப் பின் சாப்பிட வைத்துக் கொள்ளுவோம். இரவுச் சாப்பாடு பாண்டியன் மெஸ்ஸில் 8 பரோட்டாவுக்கு கொடுக்கும் சால்னாவோடு கூடுதலாய் ஒரு பொட்டலம் கேட்டு வாங்கி பரோட்டாவை விட அதிகமாய் சால்னாவைத் தின்று பசியாறியதெல்லாம் ”வறுமையின் நிறம் சிவப்பு” படக் காட்சிகள்.
அறுந்து போன செருப்பை அப்படியே விட்டுப் போகவா அல்லது எடுத்துக் கொண்டு போய்த் தைத்துப் போடலாமா என் யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் பேருந்து வந்துவிட செருப்பை மறந்து வெறுங்கால்களுடன் மழைநீரில் வழுக்கி விழப் பார்த்து பின் சுதாரித்துப் பேருந்தில் தொற்றிக் கொள்ள, பக்கத்தில் நின்றிருந்த சக பயணியின் குதிகால் செருப்பின் நீண்டிருந்த கூர்மை என் இடதுகால் சுண்டு விரலின் வலிமையைப் பரிசோதித்த நாளில் தான் அறுந்து போன செருப்பின் அருமை தெரிந்தது. இன்று உடையின் நிறத்திக்கொன்றாய் செருப்பு வைத்திருப்பது வேறு விஷயம்.
அதன்பிறகு எக்மோருக்கே ஹாஸ்டல் மாறி வந்தேன். இரண்டாம் மாடியில் ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்த அறை அது. தனித்தனி மரக்கட்டில்களுடன் ஆளுக்கொரு டேபிள் அளித்த ஹாஸ்டல் நிர்வாகத்தினரின் கருணைக்கு எல்லையே இல்லை. ஒரு நாளின் அத்தனை காரியங்களும்……உண்பது, உறங்குவது, உடைகள் வைத்திருப்பது என சர்வமும் நடப்பது அந்தக் கட்டிலில் தான். ஹாஸ்டல் சாப்பாடு பாரபட்சமாய் அளிக்கப்பட வார்டன் முன்பு தட்டுகளை விசிறியடித்து சண்டை போட்டதன் விளைவாக அங்கும் என் ரவுடித்தனம் வெளிச்சப்பட்டுப் போனது. இரவுச் சாப்பாட்டுக்குக் கடலை உருண்டை வாங்கி வந்த இனிதான நாட்கள்.
தண்ணீர் வசதிக்குறைவு, மின் இணைப்பு, கழிப்பறை வசதி எனத் தொடந்த நெருக்கடிகளால் ஹாஸ்டலை விட்டு வெளி வந்து தோழிகள் நான்கு பேர் சேர்ந்து எக்மோரிலேயே ஒரு வீட்டை வாடகைக்குப் பிடித்து அதில் குடி வந்தோம்.வீட்டு நிர்வாகத்தைக் கற்றுக். கொண்டது அங்கு தான். அட்வான்ஸ்,வீட்டு வாடகை, வீட்டு ஒப்பந்தப்பத்திரம், கியாஸ் இணைப்பு, வரவு, செலவு, சமையல், தண்ணீர், மின்சாரம் உள்பட வீட்டின் அனைத்து மேற்பார்வைகளும் என் பொறுப்பிலேயே இருந்தது. பேருந்து செலவுக்குக் கூட திணறிய காலம் போய் தினமும் அலுவலகம் சென்று வர ஆட்டோ பயன்படுத்துமளவுக்குப் பொருளாதாரம் மேம்பட்டது பணியோடு சேர்ந்து சம்பள உயர்வும் கிடைத்த இந்த காலக்கட்டத்தில் தான்.  
சீராகவேப் பயணித்துக் கொண்டிருந்தாலும் எதிர்காலம் குறித்த ஒரு பயம் தொடந்து கொண்டே இ\ருந்தது. சரியாக ஒரு வருடம் முன்பு நவம்பர் ஒன்றாம் தேதி சென்னையில் இருந்து விருதுநகருக்கு ஒரு வார விடுப்பில் சென்றேன். திருமண ஏற்பாடுகள், வீட்டு சூழ்நிலை, என்னுடைய உடல்நிலை எல்லாமுமாகச் சேர்ந்து நினைத்த நேரத்தில் சென்னைக்குத் திரும்ப முடியவில்லை. ஒரு மாறுதல் தேவைப்பட்டிருந்த அந்த சமயத்தில் உடலும் மனமும் சொந்த ஊரை நிறையவே சார்ந்திருந்ததை மறுக்க முடியாது. வேலையில் திரும்ப சேர்வதற்கான கால அவகாசமும் ஒத்தி வைக்கப்பட்டது. அம்மாவின் கவனிப்பிலும், அக்கா குழந்தைகளின் அருகாமையிலும் நிறையவே தெம்பு வந்தது உடலிலும் மனதிலும். ஜூன் மாதத்தின் இரண்டாம் வாரத்தில் குடும்ப நண்பர் மூலம் உதயசங்கர் தரப்பிலிருந்து என்னைப் பெண் கேட்டு வந்தனர். பரஸ்பர விசாரிப்புகளின் அடிப்படையில் ஒரு நிறைவான நாளில் மதுரை “கூடலழகர் கோவிலில்” முதன்முறையாக உதயசங்கரும் நானும் அவரவர் குடும்பத்துடன் நேரில் சந்தித்துப் பேசினோம்.
பெரியோர்கள் கலந்து பேசி நிச்சயித்தபடி செப்டம்பர் 4ம் தேதி என்ற ஆசீர்வதிக்கப்பட்ட நாளில் அப்பா இல்லாத குறை தெரியாமல் கல்யாண ஏற்பாடுகளைப் பார்த்துக் கொண்ட தம்பிகளால்  மிகக் கோலாகலமாய் நடந்தது திருமணம். அதே மாதம் 12ம் தேதி சென்னையில் புது வீட்டில் குடியேறி , 14ம் தேதி திருமண வரவேற்பும் சிறப்பாக நடைபெற்று இதோ மூன்று மாதங்கள் ஓடியே போய்விட்டது.  
சென்னையைப் புறக்கணிக்க ஒரு போதும் காரணங்கள் இருக்கவில்லை எனக்கு. சொந்த ஊரில் தங்கியிருந்த மாதங்களில் கூட சென்னைக்கு இனிப் போக முடியுமா என்ற கவலையுடன் கூடிய ஏக்கம் இருந்தது. திருமணம் முடித்து சென்னைக்கே குடிவருவேன் என்பதெல்லாம் நானே எதிர்பாராதது. சொந்தங்களை விட நண்பர்கள் தான் கஷ்ட நஷ்டங்களில் பங்கேற்று என்னைத் தேற்றியவர்கள். சென்னை என் சுயத்தை ஒருபோதும் பறித்துக் கொள்ளவில்லை. வேலை, பணம், வசதி, நாகரீகம், நண்பர்கள், தன்னம்பிக்கை, சுயமரியாதை, படிப்பினை என இங்கு கற்றதும் பெற்றதும் ஏராளம். அத்தனைக்குப் பிறகும் நான் நானாகவே இருக்கிறேன் அப்போதும் இப்போதும்.
சென்ற வருடம் குறித்துச் சொல்வதற்கு நிறைய இருக்கிறது. ப்ளாக் தொடங்கியது, யமஹா ”ரே” வண்டி வாங்கியது, திருமணம் என மூன்று பெருங்கனவுகளை மகிழ்வான தருணங்களோடு நிறைவேற்றி வைத்த வருடம் இது. இந்த வாழ்வும் இனி வரவிருக்கும் புதிய வருடமும் நெஞ்சம் நிறைய நம்பிக்கைகளையும் தெளிவான ஒரு பாதையையும் உடன் பயணிக்க ஒரு தந்தையுமானவனையும் தந்திருக்கிறது. ஒவ்வொரு நாளும் கூடிக்கொண்டே போகும் இந்தக் காதலின் தன்மை வாழ்வை உயிர்ப்போடு வைத்திருக்கிறது.

மனம் முழுக்க ஒரு புத்துணர்ச்சி பரவியிருக்கும் இந்த நிமிடத்தில் இரண்டு நாட்களாய்த் தொடந்த மழையினால் அழுக்கு தீரக் குளித்த சென்னைச் சாலைகள் தன் பளபளப்பான நியான் கண்களால் என்னை வசீகரித்துக் கொண்டிருக்கிறது. லவ் யூ சென்னை.

Monday 22 December 2014

வற்றா நதி

புத்தக வெளியீட்டுக்கு வந்திருங்கக்கான்னு சொன்ன கையோட ....சாரி வாயோட “புத்தகத்தப் பத்தி ரெண்டு வார்த்த பேசுறீங்களக்கா”ன்னு கேட்டான் கார்த்தி.
“இன்ன்ன்னாது ...புத்தகத்தப் பத்தி நான் பேசுறதா? புத்தகம்னா என்னான்னு தெரியாது. புத்தக வெளியீடுன்னா என்னன்னு தெரியாது. என்னப் போய்ய்...பேசச் சொல்றியே”ன்னு கேட்டதும் ,
“வெரி குட் ...யூ ஆர் செலக்டடு”ன்னு சொல்லி அப்போ தான் அச்சிலிருந்து வந்த புத்தம் புதுப் புத்தகத்த ....”வற்றா நதி”யக் கையில குடுத்துட்டுப் போய்ட்டான்.  அட்டைப் படத்தை மட்டுமே அரை மணி நேரம் பார்த்துட்டு உக்கார்ந்திருந்தேன். கால்கள் சில்லிப்பை உணர்ந்தது. அத்தனை அழகு. வாழ்த்துகள் சிவகாசி சுரேஷ்.
காலேஜ்ல படிக்கும் போது 46 பசங்க 6 பொண்ணுங்க (பாவப்பட்ட பசங்க  ) இருந்த எங்க கிளாஸ்ல “கன்ஸ்ட்ரக்‌ஷன் மெட்டீரியல்ஸ்” பத்தி செமினார் எடுத்த தைரியத்துல நானும் புத்தகத்த வாசிக்க ஆரம்பிச்சேன்.
ரெண்டுமூணு கதைகள் வாசிச்சு முடிச்சதுமே ரொம்ப ஆச்சர்யமாச் போச்சு. “நிலைக்கதவு” கதையில வர்ற பெரியாச்சி வீட்டுக்கதவு மாதிரி தான் எங்க லட்சுமி ஆச்சி வீட்டுக் கதவும். மஞ்சள் கலர் பெயிண்ட் அடிச்சு , மூணு குறுக்குக் கட்டைகளோட அழகழகா குமிழ்கள் வச்சு அதுல வளையமும் தொங்க அவ்ளோ பிரம்மாண்டமா கனமா இருக்கும். ரெண்டு கைகளாலயும் அழுத்தித் தள்ளினா தான் கதவைத் திறக்க முடியும்.
கி.ராஜநாராயணன் அவர்கள் எழுதின “கதவு” கதையில வர்ற சின்னப் பசங்க மாதிரி தான் நாங்களும் அந்தக் கதவுல ஏறிக் குறுக்குக் கட்டையில கால ஊனி நின்னுக்கிட்டு ரெண்டு பேர் தள்ளிவிட்டு விளையாடுவோம். கார்த்தி இதையெல்லாம் பார்க்கல. ஆனா எழுதியிருக்கானே . எப்படி!!!!!!
அதே மாதிரி “டெஸி” கதையில வர்ற டெஸி தான் எங்க பக்கத்து வீட்டுக் காம்பவுண்டுல இருந்த கிருஷ்ணவேணி. பத்தாங்கிளாஸ் படிக்கும் போது ஏதோ பிரச்சனையில மண்ணெண்ணெய் ஊத்தித் தீக்குளிச்சு தற்கொலை பண்ணிக்கிட்டா. உடம்புல தீயோட அவ ஓடி வந்து விழுந்தது எங்க தெருவே தண்ணி பிடிக்குற குழாயடியில தான். எப்ப தண்ணி பிடிக்கப் போனாலும் உசுரக் கையில பிடிச்சுட்டுப் போவேன் நான். இப்ப டெஸி கதை வாசிச்சதுல இருந்து ரெண்டு நாளா கிருஷ்ணவேணி ஞாபகம் தான் வருது 

அதுவும் அந்த டெஸி வெள்ளைக்கலர் டிரெஸ்ஸுல கையில பைபிளோட உலாவுறதா கார்த்தி சொல்லும் போது லேசா சிரிப்பு வந்தாலும் மெய்யாலுமே பயமாக்கீது பா 

“லைட்ஸ் ஆஃப்” கதையில வர்ற பாக்கு மண்டி ராமசாமி நாடாரெல்லாம் அப்படியே எங்க ”கருப்பட்டிக்கடை வெள்ளைசாமி நாடார்” தாத்தா தான். தலைப்பாக்கட்டும் மீசையும் அப்படியே. அவர் ஃபோட்டோ ஃப்ரேமுக்கு முன்னாடி ஏத்தி வச்ச “சர்வோதயா ஊதுபத்தி” ரைட்டர் டச்.... 

நிறையக் கதைகளக் குறும்படமா எடுக்கக் கூடிய காட்சி அமைப்புகள் இந்தக் கதைத் தொகுப்புல இருந்தாலும் என்னோட ஓட்டு “பச்ச” கதைக்குத்தான். ”பொங்கலோ பொங்கல்” “ தீபாவளி” பத்தின கதைகளெல்லாம் அப்படியே பண்டிகை நேரத்துக் காட்சிகளையும் மன உணர்வுகளையும் அப்படியே படம் பிடிச்சுக் காட்டியிருக்கார் கதாசிரியர்.
இப்பல்லாம் மக்கள் ரொம்பத் தெளிவு. மைசூர்பாகுல “மைசூரே” வேணும்னு கேக்குறாங்க. சிமெண்ட்ல உயிர் இருக்கணும்கிறாங்க. அட ....டூத் பேஸ்ட்ல கூட உப்பு இருக்கணும்கிற மாதிரி ரஜினி படத்துல எல்லாம் லாஜிக், கதை வேணும்னு கேக்க ஆரம்பிச்சுட்டாங்க. கலி முத்திடுச்சு .... காசு குடுத்துப் புத்தகம் வாங்குற வாசகன் அதிகபட்சம் எதிர்பார்க்குறது கவிதப் புத்தகத்துல கவிதையையும், கதைப் புத்தகத்துல கதையையும் மட்டும் தான் . நம்ம நூலாசிரியர் அதைச் சரியாப் புரிஞ்சுக்கிட்டு இந்தத் தொகுப்புல மொத்தம் 22 சிறுகதைகள் குடுத்திருக்கார். அத்தனையிலும் ”கதை” இருக்கு 

தீபாவளிப் பட்சணங்கள், பொங்கல் நேரத்து பரபரப்பான வீதிகள், விடலைப் பருவத்தில் அரும்பும் காதல்கள், நட்பு, பாசம், செண்டிமெண்ட், நகரத்து வாழ்க்கையில் தொலைத்திட்ட இயல்புகள், பேருந்துப் பயணம், சாதி வெறி, மரணம், ஏக்கம்னு எல்லா உணர்வுகளுக்கும் இந்தத் தொகுப்பில் இடமுண்டு. “சென்னையில இருக்கதே உத்தியோகஸ்தனம்”னு நெனைக்கிற ஊர்க்காரப் புரிதலை ஒரே வரியில் சொன்ன சாமர்த்தியத்துக்கு 100 லைக்ஸ்.
இல்லாத ஒன்றைக் கற்பனையாகவோ , நடக்காத ஒன்றை நடந்ததாகவோ கதை ஆசிரியர் சொல்லல. புத்தகம் முழுக்க சொல்லப்பட்டிருக்கும் சம்பவங்கள் எல்லாமே உங்களுக்கும் எனக்கும் எங்கோ எப்போதோ நடந்தது தான். நம்ம வீட்டிலேயோ அல்லது அக்கம்பக்கத்து வீடுகள்லயோ நிச்சயம் ஒரு க்ரிஸ்டியோ, மைக்கேலோ, நாதனோ, அபிராமியோ, டெஸியோ, ப்ரீத்தியோ உண்டு. இவங்க தான் இந்தக் கதைத்தொகுப்பின் காரணகர்த்தாக்கள்.
சம்பவங்களையெல்லாம் நேர்த்தியான சம்பாஷைனைகளாக் கோர்த்து நெல்லை மண் மணக்க மணக்க மாலையாக்கித் தொடுத்திருக்கிறார் கதை ஆசிரியர். அத்தனைத் தெளிவான எழுத்து நடை. வட்டார வார்த்தைப் பிரயோகம். வாசிக்கும் போதே நெல்லை மண்ணின் வீதிகளில் நாம் நடந்து கொண்டிருப்பதை உணர முடிகிறது.
நெல்லையப்பரையும் , இருட்டுக்கடை அல்வாவையும் மட்டுமே தெரிந்து வைத்திருக்கும் நாமும் இனி சென்னையில் இருந்து ஊருக்குச் செல்லும் பயணத்தின் போது நெல்லை வட்டார மக்கள் உடனிருந்தால் அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் படிப்பது ”மேரி ஆர்டனா” “மேரி சார்ஜண்ட்டா” இல்ல “கதீட்ரலா”ன்னு கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். கூடவே வீடு எங்கே “பொதிகை நகரா” “என்.ஜி.ஓ. காலனியா” இல்ல “டேனியல் தாமஸ் தெருவா”ன்னு பரிச்சயம் காட்டிக் கொள்ளலாம்.
நீங்களும் ”வற்றா நதி”யை வாசிச்சுப் பாருங்க. புரியும். உங்களுக்கும் பிடிக்கும். வற்றா நதிக்குக் ”காட்டாறு”ன்னு கூடப் பேர் வச்சிருக்கலாம் தான். அப்படி ஒரு பாய்ச்சல் கார்த்தியின் எழுத்து நடையில்.
”வற்றா நதி”யில் வாசகர் வெள்ளம் பெருகி வளம் சேர்க்கட்டும்.
வாழ்த்துகள் கார்த்தி.

Thursday 18 December 2014

ஏர் ஹோஸ்டஸ்

”ஸ்ரீ .... பக்கத்து ஃப்ளாட்ல புதுசா ஒரு ஏர்ஹோஸ்டஸ் குடி வந்திருக்காங்க போல.... ஃப்ரெண்ட் பிடிச்சு வச்சிக்கோ. ஏதாச்சும் ஆஃபர் வந்தா ஹெல்ப் கேக்க யூஸ் பண்ணிக்கலாம்”

“சேச்சே ...எனக்கு இண்ட்ரஸ்ட் இல்ல”

“என்ன இன்ட்ரஸ்ட் இல்ல”

“ப்ச் ....ஏர்ஹோஸ்டஸ் ஆக இன்ட்ரஸ்ட் இல்லன்னு சொன்னேன். ஷிஃப்ட் மாத்தி மாத்தி வரும். டைம் செட் ஆகாது. அதோட எனக்கு உயரம்னா ரொம்ப பயம். ரெண்டாவது மாடியில இருந்து எட்டிப் பார்க்கவே பயப்படுவேன். ஃப்ளைட்ல அவ்ளோ உயரத்துலயா ???? அதுவுமில்லாம ஏர்போர்ட் கூரை வேற அடிக்கடி உடைஞ்சு விழுதாம். அதனால நோ சான்ஸ்”

“ஹேய்ய்ய் உன்ன யாருடி இப்ப ஏர்ஹோஸ்டஸ் வேலைக்குக் கூப்பிட்டாங்க”

“பின்ன....நீ தானப்பா சொன்ன ....ஏதாச்சும் ஆஃபர் வந்தா ஹெல்ப் கேட்டு யூஸ் பண்ணிக்கலாம்னு ..... ”

“நான் சொன்னது ஃப்ளைட் டிக்கெட்ஸ்க்கு ஏதும் ஆஃபர் வந்தா யூஸ் பண்ணிக்கலாம்னு”

“ஹி ஹி அப்டியா”

“வர வர நீ எப்ப சீரியஸா பேசுற எப்ப காமெடி பண்றன்னே தெரியல”
( பாவம் அவரே கன்ஃப்யூஸ் ஆகிட்டாரு  ...... )

காளி

ஒவ்வொரு காயத்தின் மீது
கூர் தீட்டிப் பார்த்து
கவனமாய் செதுக்கியிருக்கிறேன்
என் வலிகளனைத்தையும்

உன் குருதி பார்க்கத் துடிக்கும்
என் வலியின் நாவினை
கடிவாளமிட்டுச் சற்றே
பொறுத்திருக்கப் பழக்கியிருக்கிறேன்

இன்னும் தீர்ந்துவிடவில்லை
நம் எல்லாக் கணக்குகளும்
தீர்ப்பெழுதா வழக்கொன்றில்
தண்டிக்கப்பட்டவள் நான்

வலி சுமந்தலையும் யட்சிணி
பலி கேட்கிறாள் உன் சிரசை
குரூரம் உறைந்திருக்கும் இதயத்தை
எரித்துச் சாம்பலாக்கி

நரம்புகளறுத்து மாலையாக்கி
கடைசித்துளி உதிரத் திலகமிட்டு
வெற்றிக் களியாடும் பொழுதினில்
மீண்டும் காளியாவேன் நான்......

Monday 15 December 2014

இடியாப்ப அச்சு

காலங்காத்தால 6:00 மணிக்கெல்லாம் (!!!!) காலிங் பெல் சத்தம் கேட்டு திடுக்குன்னு எழுந்து போய்ப் பார்த்தா பக்கத்து வீட்டுப் பையன்.

“என்னடா சக்தி”

“அம்மா ....இடியாப்பம் பிழியுறது வாங்கிட்டு வரச் சொன்னாங்க ஆண்ட்டி”

“இரு வரேன்”னு சொல்லிட்டுப் போய் எடுத்துக் குடுத்தேன்..

உதய்க்கும் தூக்கம் கலைஞ்சு போய்..... “யாரது ..இந்நேரத்துல காலிங்பெல் அடிச்சுட்டு”

“பக்கத்து வீட்டுப் பையன்”

“என்னவாம்”

“இடியாப்பம் பிழியுறது கேட்டு வந்தான்”

“ப்ச் ...அதுக்கு இவ்ளோ காலங்கார்த்தால இப்டியா காலிங் பெல் அடிச்சுக் கேக்குறது”

“ம்ம்.. தப்பு தான்”

“கதவைத் தட்டியாவது கேக்கலாம்ல...காலிங்பெல் அடிச்சது தலை வலிக்குது”

“சரி அவனுக்குத் தெரிஞ்சது அவ்ளோ தான்”

“ இதெல்லாம் சொந்தமா வாங்கி வச்சுக்க வேண்டியது தான ....காலையில வந்து கடன் கேட்டுட்டு”

“ம்ம்ம்”

” இனி தூங்கின மாதிரி தான். ”

“சின்னப் பையன் தான ...”

"நீ போய் அவங்க அம்மாகிட்ட சொல்லு ...இனி எதும் கேக்குறதுன்னா கதவைத் தட்டிக் கேக்க சொல்லுங்க ...காலிங்பெல் அடிக்காதீங்கன்னு”

“ சரி விடுப்பா ...எனக்கு தூக்கம் வருது”

திடீர்னு ஞாபகம் வந்து “ஆமா ...நம்ம வீட்ல ஏது இடியாப்பம் பிழியுறது????”

“அது அவங்களோடது தான் .....போன வாரம் நான் தான் அவங்ககிட்ட இருந்து இடியாப்பம் செய்யலாம்னு  வாங்கிட்டு வந்தேன்.... திருப்பிக்குடுக்க மறந்துட்டேன்”

.............

என்னவோ திட்ற மாதிரி சத்தம் கேட்டுச்சு ...அதுக்குள்ள நான் தூங்கிட்டேன்

Wednesday 10 December 2014

தாய் மண்

புதிதாய் முளைத்த ஒரு செடியை வேரோடு பிடுங்கி வேறொரு இடத்தில் நட்டு வைக்க நேர்கையில் தவறாமல் அதன் தாய்மண்ணையும் சேர்த்தே எடுத்துச் செல்வது வழக்கம். புதிய சூழல், மண்ணின் தன்மை , ஈரப்பதம், பழகி வேர்விடத் தொடங்கும் செடிக்கு ஆதாரமே அந்தத் தாய்மண் தான்.

பெண்களின் திருமண வாழ்வும் இப்படித் தான். திருமணம் முடிந்து கணவனுடன் புதிதாய் ஒரு வாழ்வைத் தொடங்கும் பெண்ணும், அவள் வந்தடைந்த புதிய சூழல், புதிய மனிதர்கள், அவர்தம் பழக்கவழக்கங்கள் என எல்லாவற்றிலும் .....தான் அத்தனைக் காலம்  ஒன்றி வாழ்ந்திட்ட தாய்வீட்டின் சாயலையே அஸ்திவாரமாக்கிக் கட்டமைத்துக் கொள்கிறாள்.

நானும் அப்படியே. திருமணம் முடிந்து சென்னையில் துவங்கிய புதுவாழ்க்கை. வீட்டின் ஒவ்வொரு இடத்திலும் உள்ள பொருட்களை வைப்பதில் என் தாய் வீட்டு சாயல்

Thursday 27 November 2014

”குரோட்டன்ஸ் மனிதர்கள்”

ஊருக்கு சற்றே ஒதுக்குப்புறத்தில் நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து செல்லும் பாதையில் அமைந்திருந்தது அந்த அப்பார்ட்மெண்ட். பெருநகரங்களைப் போலவே இப்போதெல்லாம் குடியிருப்புகள் பெருகிவிட்டிருக்கும் சிறிய நகரங்களில் இதுவும் ஒன்று.
நெடுஞ்சாலையின் ஓரத்தில் இருந்த வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தை தாண்டித்தான் அந்த குடியிருப்புக்கு சென்றாக வேண்டும். வட்டாட்சியர் அலுவலகத்தை ஒட்டி ஒரு பெரிய கல்கிடங்கு இருக்கும். சிறு வயதில் அந்தக் கல்கிடங்கில் மீன் பிடிக்கத் தூண்டிலோடு அப்பாவுடன் சைக்கிளில் போன நினைவுகள் வந்தது.
இப்போது கல்கிடங்கே இல்லை. அத்தனை பெரிய கல்கிடங்கை எப்படி மூடி சமன்படுத்தி கட்டிடம் கட்டியிருக்கிறார்கள் என்ற நினைப்பே ஆயாசத்தை தந்தது. அந்தக் கட்டிடம் கல்கிடங்கு தண்ணீருக்கும் அதில் வாழ்ந்த ஜீவராசிகளுக்கும் உயிரோடு கட்டப்பட்ட சமாதியாகவே தெரிந்தது.
ஊருக்கு நடுவில் அடுக்கி வைத்த தீப்பெட்டிகளாய் நெருக்கியடித்துக் கிடந்த தெருக்களுக்குள் 28 வருடங்களாய் குடியிருந்த அம்மா இந்த ஒதுக்குப்புற குடியிருப்பில் எப்படி இருக்கப் போகிறாள் என்ற கவலை புதிதாய் முளைத்தது. பக்கத்து வீட்டில் அடுப்பெரிகிறதா இல்லையா என்பதைக் கூட குறிப்பாலுணர்ந்து ”என்னக்கா இன்னைக்கு சோறாக்கலையா” என்று கேட்கக்கூடிய அன்பான மனிதர்கள் நிறைந்த இடத்தை எப்படி ஈடு செய்யப் போகிறது ஒவ்வொரு வீட்டுக்கும் தனித்தனி கேட் போடப்பட்டிருக்கும் இந்த அப்பார்ட்மெண்ட்?
அம்மா…….முப்பது வருடங்களாய் ஒரு மிகச் சிறந்த மனிதரோடு வாழ்க்கை நடத்தியவள். தங்கமனைத்தும் மனிதனாய் உருவெடுத்தது போல் வாய்த்த கணவரின் இன்ப துன்பங்கள் அனைத்திலும் பங்கு போட்டுக் கொண்டவள்.
அப்பா மாரடைப்பால் இறந்த பின் வந்த அடுத்த மூன்று வருடங்களில் பிள்ளைகளின் சம்பாத்தியத்தில் கடனையெல்லாம் அடைத்து விட்டு கையிருப்பாய் இப்போது நகைகளும் பணமும் வசதி வாய்ப்புகளும் வந்த பின்னும் கூட பகட்டை வெளிக்காட்டிக் கொள்ளாதவள். மகன்கள் ஆசையாய் செய்து தந்த தங்கச் சங்கிலியைக் கூட அணிய மறுத்து மகளின் திருமணத்தில் தான் அணிவேன் என்று பிடிவாதத்தோடு இருப்பவள்.அப்பாவின் நினைவுச் சின்னங்களில் ஒன்றாய் இருப்பது இப்போதிருக்கும் இந்த வீடும் தான்.
வீட்டு வாசலில் அம்மா ஆசையோடு வளர்த்த வாத நாராயணன் மரம் இப்போது தான் பூத்துக் குலுங்கி ஒன்றிரண்டாய் காய்க்கவும் தொடங்கியிருக்கிறது. நகராட்சி தெருக்களில் எல்லாம் இப்போது தரைகளில் பேவர் ப்ளாக் கற்கள் பதிக்கப்பட்ட பின்னும் இரண்டு கற்களை வாசற்படியோரம் நெம்பி எடுத்து அதில் நட்டு வளர்த்த மரம் இது. மரத்தையொட்டியிருக்கும் ஒரு சின்ன தொட்டியில் அடர் நீல நிற சங்குப்பூவும் பூத்துக் கிடக்கும். அதற்கடுத்தாற் போல ஒரு கற்றாழைச்செடி, தக்காளி, மிளகாய்ச் செடிகள்……
இந்தப் புதிய அப்பார்ட்மெண்ட்டில் மொத்தம் பன்னிரண்டு வீடுகள். கீழ்த் தளத்தில் இடது பக்கம் மூன்றும் வலது பக்கம் மூன்றும் நடுவில் விஸ்தாரமான மாடிப் படிக்கட்டுகளோடு முதல் மாடியிலும் அதே வரிசையில் ஆறு வீடுகளுமாய் அழகாய் இருக்கிறது. இரண்டு கெஸ்ட் ரூம்களோடு கூடிய அகலமான மொட்டை மாடி துணி காயப் போடும் கம்பிகளோடு வரவேற்கத் தயாராய் காத்துக் கிடக்கிறது.
முதல் மாடியில் படிக்கட்டு முடியுமிடத்தில் வலது பக்கம் திரும்பியவுடன் முதல் வீடு எங்களுடையது. வீட்டினுள்ளே நுழைந்ததும் சின்னதாய் ஒரு இடம். காலணிகள் வைக்கும் இடம் போக மூன்று பேர் தாராளமாய் படுத்துத் தூங்கும் அளவு இருந்தது. அதைத் தாண்டியதும் பெரிய ஹால், இடது பக்கம் சமையலறை நல்ல காற்றோட்டமும் வெளிச்சமும் நிறைந்திருந்தது. இரண்டு படுக்கையறைகளோடு ஒரு அட்டாச்டு டாய்லட் பாத்ரூம். எல்லா அறைகளிலும் தேவையான அளவுக்கு அடுக்குகள்… பளிச்சிடும் டைல்ஸ் தரையுமாய் வீடு வெகு அம்சமாய் இருந்தது.
வசதியான வீட்டுக்குக் குடி போகும் போது கார் வாங்கப் போவதாய் தம்பி சொல்லியிருந்தது பார்க்கிங் பகுதியைக் கடக்கும் போது அம்மாவுக்கு ஞாபகம் வந்திருக்கும் போல….”வண்டி வாங்கினா இங்க நிறுத்திக்கலாம்ல”ன்னு ஒரு இடத்தைக் காட்டிப் பெரிதாய் புன்னகைத்தாள்.
”ம்மா இங்க உங்களுக்கு தெரிஞ்சவங்க யாரும் இல்ல…நீங்க இருந்துக்குவீங்களா? நம்ம தெரு மாதிரி இல்ல….பேச்சுத் துணைக்கு ஆள் இருக்க மாட்டாங்க. எதிர்ல பார்த்தா வெறுமனே சிரிக்கக் கூட கொஞ்சம் நாள் ஆகும். இதெல்லாம் பரவால்லயா உங்களுக்கு?”
“நான் என்ன இப்ப எனக்காகவா இங்க வரேன். பசங்க எல்லாரும் வளர்ந்துட்டீங்க. வீட்டுல நல்ல நாள் விசேஷம்னு சொந்தபந்தம் வரும் போது வீடு கொஞ்சம் பெருசா இருந்தாத்தான நமக்கும் நல்லா இருக்கும். இப்ப இருக்க வீட்டுல பழைய சாமான்கள்லாம் இருக்கட்டும். எப்போ வேணும்னாலும் திரும்பி வந்து இருந்துக்கலாம்ல.”
“அந்த வீட்டுல இப்ப இருக்க சங்குப்பூ, தக்காளி, பச்சை மிளகாய், கத்தாழ , வாதாம் மரமெல்லாம் இங்க வைக்க முடியாது”
“செடி வைக்கணும்ன்னா வீட்டுக்குள்ளேயே வளர்க்குறாங்களே…அது மாதிரி வாங்கிக்குவோம்…என்ன ஒண்ணு அந்த வீட்ல இருக்க செடியெல்லாம் பார்த்துக்க தான் ஆளிருக்க மாட்டாங்கல்ல. ஒவ்வொண்ணும் பிள்ள மாதிரி வளர்த்தது. மத்தபடி எனக்குப் பிரச்சனை இல்ல. உங்க எல்லாருக்கும் பிடிச்சிருக்கில்ல….அப்புறம் என்ன. நான் இருந்துக்குவேன்டி”
“ம்ம்…..”
பூரண சுதந்திரத்தோடு தரையில் வளரும் செடி கொடி மரங்கள் இப்போதெல்லாம் நிறையவே மாற்றங்களுக்குட்பட்டு போன்சாய் போல வீடுகளுக்குள்ளேயே வளர்க்கப்படுவது போலத்தான் இன்றைய மனிதர்களும் . வசதிகள் இருப்பது மட்டுமே வீடாகிப் போவதில்லை….வாழ்வதற்கு உகந்ததே வீடாக இருக்கிறது. வெறும் கட்டடங்களையே வாழுமிடமாக மாற்ற அம்மா போன்ற மனிதர்களால் மட்டுமே முடிகிறது. தரையில் வளர்ந்தாலும் மரமாய் நிழல் தந்தும் , வீட்டுக்குள் வைத்தாலும் பார்வைக்கு அழகாய் இருக்குமிடத்தை வைத்திடும் அம்மா போன்ற “குரோட்டன்ஸ் மனிதர்கள்”..மட்டுமே வாழ்தலை சாத்தியமாக்கி வருகிறார்கள்.

Tuesday 25 November 2014

நேற்றைய பொழுது

காலையில அக்காவுக்கு ஃபோன் பண்ணிப் பேசிட்டு இருந்தேன்.

“கீதா , தர்ஷினி ஸ்கூலுக்கு கிளம்பிட்டாங்களா?”

“எங்க..... சின்னவ இப்போ தான் உக்கார்ந்து ஹோம் வொர்க் எழுதிட்டு இருக்கா. பெரியவ தலை வாரிட்டு இருக்கா. ரெண்டு பேரும் இவ்ளோ நேரம் ஒரே சண்டை. நான் சமையல் வேலையப் பார்ப்பேனா....ஆஃபீசுக்கு கிளம்புவேனா ...இல்ல இவளுங்கள சண்டையத் தீர்ப்பேனா.....ஒண்ணும் முடியல. வர வர ரெண்டு பேரையும் சமாளிக்க முடியல. நீயே என்னான்னு கேளு ”

“ம்க்கும் ...நேர்ல இருந்து சொல்லும் போதே என் பேச்சு கேக்க மாட்டாங்க. இதுல ஃபோன்ல சொன்னா மட்டும் கேக்க போறாங்களாக்கும்”

“எனக்கு அடுப்புல வேலை இருக்கு. நீ பேசிட்டு இரு வரேன்”

“சரி தர்ஷினிட்ட ஃபோன குடு”

“ஹலோ சித்தி...”

“என்ன பாப்பா ...அம்மா பேச்சு கேக்க மாட்டேங்குறியாம். சண்டை போட்டுட்டே இருக்கீங்களாம். நீ தானே பெரியவ. நீ தான் அவள அட்ஜஸ்ட் பண்ணிப் போகணும். அது சின்னப் பிள்ளை தானே. அவளுக்கு என்ன தெரியும்?”

“நான் எவ்ளோ தான் சித்தி அட்ஜஸ்ட் பண்ணிப் போறது. அவ எப்பப் பார்த்தாலும் எங்கூடவே வம்பு இழுக்குறா”

“சரிப்பா ...நம்ம பாப்பா தானே. கொஞ்சம் பெரியவளானதும் அவளே புரிஞ்சுக்குவா. . . ஃபோன அவகிட்ட குடு. நான் சொன்னா கேட்டுக்குவா.”

“ஹலோ ...சித்தி”

“என்ன கீதா ரொம்ப சேட்டை பண்றியாமே?”

“இல்லையே”

“எப்பப் பாரு அவ கூட சண்டை போடுறியாம்?”

“அவ மட்டும் நேத்து ஃபைவ் ஸ்டார் சாக்லேட் வாங்கி சாப்பிடும் போது எனக்குக் குடுக்காம சாப்பிடுறா”

“ஷப்பா....நேத்து நடந்தது, நேத்து சொன்னது, நேத்து சண்டை போட்டதெல்லாம் மறந்துடணும். புரியுதா? நேத்துங்கிறது முடிஞ்சு போச்சு. இப்போ இன்னைக்கு என்னவோ அதை மட்டும் தான் பார்க்கணும். சரியா? இனிமே ரெண்டு பேரும் சண்டை போடாம இருக்கணும் . குட் கேர்ள்னு எல்லரும் சொல்ற மாதிரி நடந்துக்கணும்....ஓக்கேவா?”

“ம்ம்ம்.... சரி சித்தி”

“சரி ஃபோன கட் பண்றேன். அம்மாகிட்ட அப்புறமா பேசுறேன்னு சொல்லு”

“சரி”

ரெண்டே நிமிஷத்துல திரும்ப அக்காகிட்ட இருந்து ஃபோன்.

“ஏய்....ஃபோன்ல கீதா கிட்ட என்ன சொன்ன?”

“ஹி ஹி ஏன்....இனிமே அக்கா கூட சண்டை போட மாட்டேன்னு சொன்னாளா?”

“நேத்து குடுத்த ஹோம் வொர்க்க நேத்தே மறந்துடணும்னு சித்தி சொன்னாங்க. அதனால இப்போ ஹோம் வொர்க் எழுத மாட்டேன்னு அடம் பிடிக்குறா”

” ஞே ???????????”

நாலு பேருக்கு நல்லதுன்னா ...


துணிக்கடைக்குப் போயிருந்தேன். சுடிதார் செக்சன்ல ஓரளவு கூட்டமா தான் இருந்தது. நான் விரும்பி எடுக்குற காட்டன் துணிகள் பக்கம் போய் பார்த்துட்டு இருந்தேன்.

எனக்குப் பக்கத்துல ஒரு ஆணும் பெண்ணும் நின்னு ஒவ்வொரு சுடிதார் துணியையும் கவர்ல இருந்து வெளிய எடுத்துப் போட்டு கலர், டிசைன் எல்லாம் பார்த்துட்டு இருந்தாங்க.

அந்தப் பையன் செலக்சன் அந்தப் பொண்ணுக்குப் பிடிக்கல. அந்தப் பொண்ணு செலக்ட் பண்றது அந்தப் பையனுக்குப் பிடிக்கல போல. ரெண்டு பேருக்கும் பக்கத்துல நின்னுட்டு எந்த டிசைனையும் என்னால சரியாப் பார்க்க முடியல. அதனால புடவை செக்சன் போய்ட்டு அப்புறமா வரலாம்னு போய்ட்டேன்.

அங்கே செலக்ட் பண்ணி முடிச்சுட்டு திரும்பி வந்தா அந்த ஜோடி அப்பவும் கிளம்பாம ரெண்டு சுடிதார் செட்டை ஹேங்கர் மேல போட்டுட்டு இதுவா அதுவான்னு குழம்பிட்டு இருந்தாங்க. எனக்கு அதுக்கு மேல வெயிட் பண்ணப் பொறுமை இல்ல.

ஒரு முடிவோட  சட்டுன்னு அந்த ரெண்டு சுடிதார்ல ஒண்ணை எடுத்ததும் அந்தப் பொண்ணு வேகமா "எஸ்க்யூஸ்மீ அதை நான் செலக்ட் பண்ணி வச்சிருக்கேன்"னு சொல்லி எங்கிட்ட இருந்து பிடுங்காத குறையா வாங்கிட்டு "இதையே எடுத்துக்குறேன். வாடா போகலாம்"னு ஒரு வழியா சொன்னதும் அந்தப் பையன் என்னைப் பார்த்து (அந்தப் பொண்ணுக்குத் தெரியாம தான்  ) தேங்க்ஸ் சொல்ற மாதிரி லேசா சிரிச்சுட்டுப் போனான்.

நானும் பதிலுக்கு "பார்த்தியா எப்டி செலக்ட் பண்ண வச்சேன்"னு பெருமிதமா ஒரு பார்வை பார்த்தேன்.
அப்பாடா இனி ஃபிரீயா டிசைன்ஸ் பார்க்கலாம்னு திரும்பினா........

 ரெண்டு கையையும் இடுப்புல வச்சி முறைச்சுப் பார்த்துட்டே நடந்து வந்த அந்த செக்சன் இன்சார்ஜ் லேடி என்கிட்ட வந்து "ஏம்மா துணிய எங்க கிட்ட குடுத்தா நாங்க அழகா பிரிச்சுக் காட்டப் போறோம். அதை விட்டுட்டு நீங்களே இப்டி இஷ்டத்துக்கு எடுத்துப் போட்டா எப்டி"ன்னு கத்தினாங்க.

 நான் ஒண்ணும் பதில் பேச முடியாம அந்த ஜோடியைத் தேடுனா அவங்க பில் கவுண்ட்டர்ல நின்னுட்டு என்னைப் பார்த்தும் பார்க்காத மாதிரி கமுக்கமா சிரிச்சுட்டே திரும்பிக்கிட்டாங்க. (அடப்பாவிங்களா ???????????? )

நீதி : நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல தான். ஆனா அந்த நாலு பேர்ல நாமளும் ஒருத்தரா இருக்கணும்

பழிக்குப் பழி

"இதென்ன......சோத்துல உப்பே இல்ல"

"பக்கத்துல தான உப்பு டப்பா இருக்கு. போட்டுக்கோ"

"குழம்புல காரம் ஜாஸ்தியா இருக்கு"

"இனிமே குழம்பு வைக்கும் போது மிளகாப்பொடி கொஞ்சம் குறைச்சுப் போட்டா சரியா போச்சு"

"ப்ச். . .பொரியல்ல காய் இன்னும் கொஞ்சம் வதக்கியிருக்கணும்"

"பரவால்ல போகப் போக சரியாகிடும்"

"கடவுளே . . . . இன்னும் எத்தனை நாளைக்கு தான் இப்டில்லாம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு சாப்பிடணுமோ"

"அடிப்பாவி .....உனக்கு முன்னாடி சாப்பிட்ட நானே ஒண்ணும் சொல்லாம கம்முன்னு இருக்கேன். நீ சமைச்சத நீயே இவ்ளோ குறை சொல்லிட்டு சாப்பிட முடியலைங்குற"

"நீங்க தான் முதல்லயே சாப்பிட்டீங்கல்ல. அப்பவே உப்பு, காரம் சரியில்லைன்னு சொல்ல வேண்டியது தான. நான் சாப்பிட்டு பார்த்து சொல்ற வரைக்கும் கம்முன்னு இருக்கீங்க????"

"பின்ன...... நான்லாம் எப்டி உன்ன பழி வாங்குறது"

"ஞே "

சமையல் பழகிப் போச்சு


"ஏங்க இன்னைக்கு சாம்பார் எப்டி இருக்கு?”

“ம்ம்ம் எப்டி இருக்குன்னா..... வாய் வரைக்கும் வருது...ஆனா...”

“எது? வாந்தியா?”

“இல்லடி. வார்த்தைய சொன்னேன்”

“ஓஹ்...சரி சொல்லுங்க”

“ஏதோ ஒரு டேஸ்ட்ல இருக்கு....எப்டின்னு சொல்லத் தெரியல”

’அன்னைக்கு முள்ளங்கி சாம்பார்ல சாம்பார் பொடிக்கு பதிலா வத்தக் குழம்பு பொடி போட்டு வச்சிருந்தேனே. அது மாதிரியா?”

“சீச்சீ ...அவ்வளவு கேவலமால்லாம் இல்ல”

“அப்போ இன்னொரு நாள் முருங்கைக்காய் சாம்பார்ல மிளகாப்பொடி அதிகமாப் போட்டு கோரமா ...ச்சே காரமா வச்சிருந்தேனே...அது மாதிரியா”

“சேச்சே அந்த அளவுக்கு மோசமா இல்லப்பா”

“அப்போ போன வாரம் சாம்பார்ல உப்பே போடாம பருப்பும் வேகாம இருந்திச்சே அது மாதிரியா?”

“இல்லல்ல அப்டில்லாம் இல்ல”

“ரைட்டு.. இப்ப சொல்லுங்க. சாம்பார் எப்டி இருக்கு?”

“சூப்பர்ப்பா”

“ஆங்ங்ங்ங் ....அது”

மை.வா : சக்ஸஸ்ஸ்ஸ்.... சமையல் பழகிப் போச்சு ....... அவருக்கு

இனிமே எல்லாம் இப்டி தான்


மாடியில காயப் போட்ட துணியை எடுக்கப் போயிருந்தேன். ரொம்ப நேரமா தெருவில பட்டாசுச் சத்தம் கேட்டுட்டே இருந்தது. என்ன சத்தம்னு கீழ எட்டிப் பார்த்தா தெருவில யாரோ இறந்துட்டாங்க போல. வழியெல்லாம் பூவா தூவிட்டு இறந்தவரை வண்டியில எடுத்துட்டுப் போய்ட்டு இருந்தாங்க.

அதுக்கு மேல பார்க்கப் பயந்துட்டு பேசாம துணிகளை எடுத்துட்டு இருந்தேன். பக்கத்து வீட்டுப் பாட்டி வேடிக்கை பார்க்க மாடிக்கு வந்தாங்க. ஈரத் தலைய துவட்டிட்டே கீழ எட்டிப் பார்த்துட்டு “கொஞ்ச வயசு தான் போல”

“நான் கவனிக்கல பாட்டி. எனக்கு இதெல்லாம் பார்க்க ரொம்ப பயம்”

“அட....இப்டில்லாம் பயப்படக்கூடாதும்மா. தைரியமா இருக்கணும்”

“ம்ம்”

“நம்ம பில்டிங்க்கு ரெண்டு பில்டிங் தள்ளி காலியா இருக்க இடத்துல தான் திதி குடுப்பாங்க தெரியுமா?” (வீட்டுக்குப் பின்னாடி ஏரி இருக்கு)

“அய்யய்யோ ....அப்டியா ..எனக்கு தெரியாதே பாட்டி”

“ஆமா ..அடிக்கடி பார்க்கலாம். இதெல்லாம் பார்த்து பயப்படக் கூடாது”

“ம்ம்”

“இப்போ நாங்க இருக்க வீட்ல இதுக்கு முன்னாடி இருந்த ஃபேலிமில ஒருத்தங்க தூக்கு மாட்டிக்கிட்டாங்களாம். நாங்க குடி வந்த பிறகு தான் தெரியும். அதுக்கு என்ன பண்றது”

“ஆங்ங்ங்  "

“அதோ அந்த மாடி ஓரமா பக்கத்து வீட்டு தண்ணி தொட்டி இருக்குல்ல”

“ஆமா”

“அங்க தான் கொத்த வேலை செஞ்சுட்டு இருந்த கொஞ்ச வயசுப் பையன் இருத்தன் தவறி விழுந்து செத்துட்டான்”

“அய்யோ பாட்டி .இதெல்லாம் சொல்லாதீங்க. நான் ரொம்ப பயப்படுவேன்”

"நானும் உன்ன மாதிரி வயசுல பயப்படுவேம்மா. இப்போல்லாம் பழகிப் போச்சு. ஹா ஹா ஹா “

நல்லா காய்ஞ்சிருந்த வெள்ளை முடி காத்துல நாலா பக்கமும் பறக்க சிரிச்சுட்டு இருந்த பாட்டியப் பார்க்கவே பயமா இருந்தது.

“பாட்டி உங்க காலுக்கிட்ட க்ளிப் ஒண்ணு கிடக்கு பாருங்க”

பாட்டி லேசா சேலையை இழுத்து காலுக்குக் கீழ பார்க்க, ”நல்ல வேள இருக்கு”

“எங்கேம்மா காணோமே”

“நான் கால சொன்னேன் பாட்டி”

“:o"

“சரி பாட்டி நான் வரேன்”

“சாயங்காலம் பொழுது போகலேன்னா மாடிக்கு வாம்மா. நான் இங்க தான் இருப்பேன்”

”நான் எங்க வீட்டு பால்கனிலயே கொடி கட்டி துணி காயப் போடப் போறேன் பாட்டி”

“ஏம்மா”

“இனிமே எல்லாம் அப்டித்தான் பாட்டி”

“ஆங்ங்ங்ங்”

சிக்கன் கொத்து பரோட்டா

ஹோட்டலுக்குப் போயிருந்தோம். செம பசி. எல்லா டேபிளும் ஃபுல்லா இருந்தது. .நாலு பேர் உக்காரக்கூடிய டேபிள்ல ஒரு ஹஸ்பண்ட் வைஃப் பக்கத்து பக்கத்துல உக்கார்ந்து சாப்பிட்டுட்டு இருந்தாங்க.

எதிர் வரிசை சீட் ரெண்டும் காலியா இருந்ததால அவங்க கிட்ட கேட்டு யாரும் வரலைன்னு கன்ஃபர்ம் பண்ணிட்டு உக்கார்ந்தோம். ஆர்டர் சொல்ல ஆளைத் தேடினா அவர் பிஸியா அங்கிட்டும் இங்கிட்டும் ஓடிட்டு இருந்தாரு.

இங்க கொத்து பரோட்டா சூப்பரா இருக்கும்னு கேள்விப்பட்டதால அதையே ஆர்டர் பண்ணலாம்னு முடிவு பண்ணியிருந்தேன். "வயிறு வேற பசிக்குது. ஆர்டர் வாங்க ஆளைக் காணோமே"ன்னு சத்தமா சொல்லிட்டு இருந்தேன்.

எதிர் சீட்ல இருந்த லேடி நான் பேசுறதக் கேட்டு லேசா சிரிச்சாங்க. நானும் பதிலுக்கு சிரிச்சதும் "இந்த ஹோட்டல்ல ஆர்டர் குடுக்குறது தான் கொஞ்சம் கஷ்டம். மத்தபடி சாப்பாடு எல்லாம் சூப்பரா இருக்கும்"னு சொல்லிட்டே சாப்பிட்டுட்டு இருந்தாங்க.

ஒரு வழியா ஆர்டர் வாங்குறவரைக் கூப்பிட்டு சிக்கன் கொத்து பரோட்டா ஆர்டர் சொன்னா அது இல்லைன்னுட்டார். சரின்னு அரை மனசோட வேற ஆர்டர் பண்ணிட்டு வெயிட் பண்ணிட்டு இருந்தோம்.

"நான்ஆசைப்பட்டு சாப்பிடலாம்னு நெனைச்சு வந்தேன் .......சிக்கன் கொத்து பரோட்டா இல்லையே. இப்போ ஆர்டர் எடுத்துட்டு போய் எப்ப கொண்டு வருவாய்ங்களோ"ன்னு இவர் கிட்ட பொலம்பிட்டு இருந்தேன்.

எதிர்ல உக்கார்ந்திருந்த லேடி அவங்க ஆர்டர் பண்ணி வாங்கி வச்சிருந்த சில்லி பரோட்டாவை அப்போ தான் சாப்பிட ஆரம்பிச்சவங்க ,அந்த பிளேட்டை என் பக்கம் லேசா நகர்த்தி இதை சாப்பிடுங்க. நல்ல டேஸ்ட்டா இருக்குன்னு சொல்ல,

நான் ரொம்பப் பெருந்தன்மையா "அய்யய்யோ பரவால்ல மேடம். நீங்க ஆசைப்பட்டு ஆர்டர் பண்ணிருப்பீங்க. நீங்களே சாப்பிடுங்க"ன்னு சொல்லவும் ஒரு செகண்ட் முழிச்சுட்டு அப்புறம் "இல்லங்க இதை ஆர்டர் பண்ணி சாப்பிடுங்கன்னு சொன்னேன்"னு சொல்லிட்டு கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக்கிட்டாங்க. நான் அசடு வழிஞ்சுட்டே

"ஹிஹி"

### என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா

பக்கத்து வீட்டு கிசு கிசு

மாடியில காயப் போட்ட துணிகள எடுக்கப் போகும் போது பக்கத்து வீட்டுல இருக்க காலேஜ் படிக்குற பொண்ணும் அவ ஃபிரண்டும் அங்கே நின்னு பேசிட்டு இருந்தாங்க.

"அனிதாவப் பார்த்தியாடி. எவ்ளோ ஸ்லிம் ஆகிட்டால்ல. . . நானும் வெயிட் குறைக்க டிரை பண்ணப் போறேன்டி. ஸ்விம்மிங் போலாமா?"

"ஹேய். . . . ஸ்கின் கருத்துடும்டி"

"அப்ப ஜிம் போகலாமா?"

"அது பாதியில நிறுத்திட்டா இன்னும் வெயிட் போடும்"

"தினமும் கொள்ளு சாப்பிடலாமா?"

"முதல் நாள் ஊற வச்சு மறுநாள் வேக வச்சு சாப்பிடலாம். ஆனா அந்த தண்ணீ சகதி மாதிரி இருக்கும். உனக்கு டேஸ்ட் பிடிச்சா கண்டின்யூ பண்ணு"

"சகதி மாதிரியா. ...... அய்யிய்ய வேண்டாம். சொல்லும் போதே என்னவோ போல இருக்கு"

"வேற டிரை பண்ணு"

" ம்ம்ம்...... கெல்லாக்ஸ் சாக்கோஸ் சாப்பிட்டுப் பார்க்கட்டுமா?"

"அது வேக வச்ச நாய்த்தோல வெட்டி வச்ச மாதிரில்ல இருக்கும் "

என்னாது. . . . .நாய்த் தோலா. , . "உவ்வே''

ரெண்டு பேரும் என் பக்கம் திரும்பி 
"என்னாச்சுக்கா"

"ஒண்ணுமில்லப்பா"

"ஹூம். . . .வேற என்ன தான் டி பண்றது"

"ம்ம்ம்ம். . . . நீ முதல்ல இவ ஃபிரண்ட்ஷிப்ப கட் பண்ணு"ன்னு மனசுக்குள்ளயே நினைச்சுக்கிட்டேன்.

பின்ன. . . . . . ஏதாச்சும் உருப்படியா யோசனை சொன்னா நாமளும் ஃபாலோ பண்ணலாமேன்னு பார்த்தா. . . , . . வெட்டி நாயம் பேசிட்டு இருக்குதுக பக்கிகன்னுட்டு விறுவிறுன்னு இறங்கி வந்துட்டேன்