Tuesday 6 January 2015

புத்தாண்டுப் பயணம் - பகுதி 2

அடுத்து ஸ்ரீபெரும்புதூர் நோக்கிப் பயணம். நிறைய மூங்கில் மரங்களையும் அவற்றினுள்ளே கீச் கீச்சென கத்திக்கொண்டிருந்த குருவிகளின் சத்தத்தையும் ரெட்டைவால் குருவிகள் அலகோடு அலகு உரசிக் கொண்டிருந்த காட்சியையும் வழியெங்கும் அல்லிப் பூத்திருந்த சிறு சிறு குளங்களையும், அசுரத்தனத்தில் பெருகி வரும் புதுக்கட்டிடங்களையும் , அதனால் பாதிக்கப்பட்டு பரப்பளவில் சுருங்கி வரும் நீர் நிலைகளையும்,  நிறைய தொழிற்சாலைகளையும் அவற்றின் குப்பைகள் சாலையோரம் கொட்டப்பட்டிருப்பதையும்,  எஞ்சியிருக்கும் நீர்நிலைகளில் அவற்றின் கழிவுநீர் கலக்கப்படுவதையும் பெருமூச்சோடு பார்த்துக் கொண்டே ஸ்ரீபெரும்புதூரை அடைந்தோம்.
வாசலில் நின்றிருந்த காவலாளர்களிடம் கேமிரா, செல்ஃபோன் தவிர்த்து மற்ற பொருட்கள் அடங்கிய பையை ஒப்படைத்து விட்டு ராஜீவ்காந்தி நினைவிடத்தினுள் நுழைந்தோம். அழகாகப் பராமரிக்கப்பட்ட நடைபாதை, புல்வெளி, செடிகளினூடே வரலாற்றுக் கொலையின் மவுன சாட்சியாய்ப் பரந்து விரிந்திருந்த மைதானத்தைச் சுற்றிலும் வெகு கம்பீரமாய் ஏழு தூண்கள். நடுவில் ஒரு பீடம். அதில் திரு “ராஜீவ் காந்தி” அவர்களின் நினைவுப் புகைப்படம். பீடத்தின் நடுவில் குருதி தோய்ந்தாற் போல ஒரு நினைவுச் செந்நிறக்கல். அதைப் பார்க்கையில் கனத்துத் தான் போகிறது மனம். பீடத்தின் பின்னால் சுற்றுச்சுவர்நெடுக அழகாய் விதம்விதமான சிற்பங்கள். நினைவிடத்தை விட்டு வெளியேறும் இடத்தில் ஆண்/பெண் கழிப்பறைகள் வெகுசுத்தமாய் இருந்தன. வெளியே வந்து ஒரு இளநீர் குடித்து விட்டு “மணி மங்கலம்” நோக்கிப் பயணித்தோம்.  
”மணி மங்கலம்” செல்லும் வழியில் ஓரிடத்தில் ஒன்றரை அடி உயரமே உள்ள நாற்புறமும் கற்கள் அமைக்கப்பட்டு நடுவில் ஒரு சாமி சிலை இருப்பதைக் கவனித்து வண்டியை விட்டிறங்கி அருகில் சென்று பார்த்தோம். சின்னஞ்சிறிய குகை போன்ற அமைப்பினுள்ளே ஓரடி உயரத்தில் இடுப்பளவு கொண்ட ஒரு சாமி சிலை சார்த்தி வைக்கப்பட்டு இருந்தது.  அணைந்த நிலையில் ஒன்றிரண்டு அகல் விளக்குகள் தென்பட்டன. நான்கடி தொலைவில் இடுப்புக்குக் கீழுள்ள சாமி சிலையின் மிச்சப்பகுதி கேட்பாரற்றுக் கிடந்தது. பக்கத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த முதியவர் ஒருவர் அந்த அம்மன் பெயர் “தீப்பாய்ந்தம்மன்” என்றும் வேண்டுதல்களை நிறைவேற்றும் சக்திவாய்ந்த தெய்வம் என்றும் கூறினார். அம்மனின் பெயர்க்காரணம் குறித்துக் கேட்டதற்கு தனக்கு எதுவும் தெரியாது எனவும் தனக்கு நினைவு தெரிந்த நாள் முதற்கொண்டு இந்த இடம் இப்படித்தான் இருப்பதாகவும் கூறினார். நன்றி சொல்லிக் கிளம்ப முற்படுகையில் அடுத்த வருடம் உங்களுக்கு அழகாய்க் குழந்தை பிறக்கும் என்று ஆரூடம் கூறியவரிடம் புன்னகையுடன் விடை பெற்றோம்.   
சில நிமிட பைக் பயணத்தில் சாலையோரத்தில் சத்தமாய் பாடிக்கொண்டிருந்த ஒலிப்பெருக்கியின் பக்திப்பாடல் வந்த திசையில் ஒரு ஆஞ்சநேயர் கோவில் தெரிந்தது., நிறைய பைக்குகளும் கார்களும் அணிவகுத்து நிற்க அவற்றினூடே பள பள ஆடைகள் அணிந்த மனிதர்கள் கூட்டமாக நின்றிருந்தனர். ஆர்வமும் வியப்பும் மேலிட பைக்கை அந்த இடத்தில் நிறுத்திவிட்டு நான்கடி தூரத்தில் இருந்த ஆஞ்சநேயர் கோவிலைத்தாண்டி உயரத்தில் தெரிந்த பெருமாள் கோவில் கோபுரத்தைப் பார்த்து விரைவாக நடை போட்டோம். காரணம் அப்போது மணி பகல் 12:00 ஐ நெருங்கிவிட்டிருந்தது. கோவில் நடை சார்த்துவதற்குள் உள்ளே சென்றுவிட எடுத்த முயற்சி தோல்வியடையும் படி கோவில் குருக்கள் அகலமான அந்தப் பழைய கதவைச் சிரமத்துடன் தாளிட்டுக் கொண்டிருந்தார். ஏமாற்றத்தோடு ஒருவரையொருவர் பார்க்கையில் நாசியில் அறைந்ததொரு தெய்வீகப் “புளியோதரை மணம்”.
பசியுடன் பின்னால் திரும்ப , என்னைக் காணாமல் தாண்டிச் சென்று பெருமாளைத் தரிசிக்க முடியுமாவென ஏளனமாய்க் கேட்டபடி ஆஞ்சநேயர் தான் அருள்பாலித்துக் கொண்டிருந்தார். தாராளமாய் வெண்ணெய் சார்த்தப்பட்டிருந்த ஆஞ்சநேயரிடம் மன்னிப்பு கேட்டபடி கும்பிட்டு முடித்த கைகளில் சுடச்சுட சர்க்கரைப் பொங்கலும் புளியோதரையும் தாராளமாய்த் தந்தனர் கோவில் நிர்வாகத்தினர். நின்ற நிலையிலேயே சற்று தள்ளிச் சென்று சாப்பிட ஆரம்பித்தோம். பசியும் ருசியும் போட்டி போட்டுக் கொள்ள இலை வெகு விரைவில் காலியானது. நல்லெண்ணெய் கமகமத்த கைகளை வீதியோர குழாயடியில் கழுவியபடி சுற்றுமுற்றும் வேடிக்கை பார்த்தோம்.
இரு பக்கமும் பழமை மாறாத கூரைஓட்டு வீடுகள். உறுதியான தூண்கள் கூரையைத் தாங்கியபடி கம்பீரமாய் நிற்க, பரந்து விரிந்த திண்ணையொன்றில் கருநீலப் பட்டுச்சேலை அணிந்தபடி பாட்டியொருத்தியும் பேத்தியொருத்தியுமாய்க் கதை பேசிக் கொண்டிருந்தது கவிதைக் காட்சி. அனுமதி கேட்டுப் புகைப்படம் எடுத்துக் கொண்டோம். பின் அங்கிருந்து கிளம்பி அருகிலிருந்த சிவன் கோவிலுக்குப் புறப்பட்டோம்.

தூரத்தில் தென்பட்ட கோவில் கோபுரத்தை அடையாளமாகக் கொண்டு சில நிமிடங்களில் கோவிலை அடைந்தோம். வண்டியை நிறுத்திவிட்டு ஐம்பதடி தூரம் நடந்து சென்றே கோவில் முகப்பை அடைய முடியும். வாசலை அடையும் முன் வழிமறித்து நின்றதொரு ராட்சத ஆலமரம். அண்ணாந்து பார்த்துப் பிரமித்தபடி கோவிலினுள் நுழைந்தோம்.  
பயணம் தொடரும் .....    

4 comments:

  1. அருமையான பதிவு. மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்.

    தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  3. நன்றி ரத்னவேல் ஐயா

    ReplyDelete
  4. நன்றி ஸ்ரீனிவாஸன் சார்

    ReplyDelete