Tuesday 30 December 2014

சென்னை

ஏழு வருடங்களுக்கு முன் சொந்த ஊரில் தைப்பொங்கல் முடிந்த இரண்டாம் நாளில் வேலை மாற்றலுக்காய் இந்த நகரத்திற்குள் அடியெடுத்து வைத்த போது முதலில் தோன்றியது “திரும்ப எப்ப ஊருக்குப் போவோம்” என்ற நினைப்பு தான். சென்னை ஒன்றும் புதிதல்ல எனக்கு. அம்மாவின் பூர்வீகம் சென்னை தான். ஆச்சி, தாத்தா, மாமா, பெரியம்மா இன்னும் அம்மாவின் தாய்மாமா உள்பட நிறைய சொந்தங்கள் வாழும் ஊர். நான் பிறந்ததும் வண்ணாரப்பேட்டையின் ஒரு சிறிய மருத்துவமனையில் தான். வளர்ந்ததும் படித்ததும் விருதுநகரில். பள்ளிக்காலங்களின் ஆண்டு விடுமுறை நாட்களில் சென்னைக்குப் பலமுறை வந்ததுண்டு. அப்போதெல்லாம் மெரீனா பீச்சையும், பழைய வண்ணாரப்பேட்டையின் குறுகலான வீதிகளையும் தவிரப் பெரிதாய் ஒன்றும் சென்னையைச் சுற்றிப் பார்த்ததில்லை.
சென்னையில் எங்கள் அலுவலகம் இருந்தது அண்ணாநகரின் பிரதான சாலையில். ஆரம்பத்தில் தங்கியிருந்த பெரியம்மா வீட்டிலிருந்து அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த பெண்கள் விடுதியில் சில காலம் தங்கியிருந்தேன். உணவு, சுற்றுச்சூழல் உள்பட எதுவுமே அங்கு ஒவ்வாமல் போனதால் அண்ணாநகர் திருமங்கலத்தில் இருக்கும் அண்ணன் குடும்பத்துடன் சில மாதங்கள் தங்கியிருந்து வேலையைத் தொடர்ந்தேன். திருமங்கலத்தில் இருந்து தினமும் நடந்தே அண்ணாநகர் ரவுண்டானா வரை சென்று வேலை பார்த்த நாட்களில் அலுவலகம் செல்லும்போதும் திரும்பி வரும்போதும் இரு பக்கமும் சாலையையும், அதில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் மனிதர்களையும் வேடிக்கை பார்த்துப் பார்த்துப் பிரமிப்பில் பூத்துப் போனது கண்கள்.
வேலை, தங்குமிடம் இரண்டிலுமே மாற்றம் வந்தபின் திருவல்லிக்கேணியில் ரத்னா கஃபேவுக்கு பின்புறம் உள்ள ஹாஸ்டலில் 2 வருடங்கள் தங்கியிருந்தேன். அலுவலகம் எக்மோரில். பேருந்துக்கு காசு இல்லாத போதெல்லாம் எக்மோரில் இருந்து விடுதி வரை நடந்தே தேய்ந்து போனது செருப்புகள். அதன் பிறகு சேப்பாக்கத்தில் உள்ள தங்கும் வசதி மட்டும் உள்ள விடுதிக்கு மாறியபின் தானே சமைத்துச் சாப்பிட வேண்டியிருந்தது. உடன் தங்கியிருந்த தோழிகளின் வேலை நேரம், பொருளாதாரம் போன்ற காரணங்களால் தொடச்சியாய் சமைக்க முடியவில்லை.
அந்த நேரங்களில் ஆபத்பாந்தவன் ”ஆந்திரா மெஸ்” தான். சோறு, காரக்குழம்பு, ரசம், சாம்பார், தயிர், மோர், பொரியல், கூட்டு , அப்பளம் கூடிய ஒரு சாப்பாடு வாங்கி நான்கு பேர் பகிர்ந்துண்ட காக்கை கூட்டுக் காலங்கள். (தினசரி சாப்பாடு வாங்குவதால் கூடுதலாய் இரண்டு சிறிய வாழைப்பழங்கள் கொடுப்பார்கள்.) அதை இரவு உணவுக்குப் பின் சாப்பிட வைத்துக் கொள்ளுவோம். இரவுச் சாப்பாடு பாண்டியன் மெஸ்ஸில் 8 பரோட்டாவுக்கு கொடுக்கும் சால்னாவோடு கூடுதலாய் ஒரு பொட்டலம் கேட்டு வாங்கி பரோட்டாவை விட அதிகமாய் சால்னாவைத் தின்று பசியாறியதெல்லாம் ”வறுமையின் நிறம் சிவப்பு” படக் காட்சிகள்.
அறுந்து போன செருப்பை அப்படியே விட்டுப் போகவா அல்லது எடுத்துக் கொண்டு போய்த் தைத்துப் போடலாமா என் யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் பேருந்து வந்துவிட செருப்பை மறந்து வெறுங்கால்களுடன் மழைநீரில் வழுக்கி விழப் பார்த்து பின் சுதாரித்துப் பேருந்தில் தொற்றிக் கொள்ள, பக்கத்தில் நின்றிருந்த சக பயணியின் குதிகால் செருப்பின் நீண்டிருந்த கூர்மை என் இடதுகால் சுண்டு விரலின் வலிமையைப் பரிசோதித்த நாளில் தான் அறுந்து போன செருப்பின் அருமை தெரிந்தது. இன்று உடையின் நிறத்திக்கொன்றாய் செருப்பு வைத்திருப்பது வேறு விஷயம்.
அதன்பிறகு எக்மோருக்கே ஹாஸ்டல் மாறி வந்தேன். இரண்டாம் மாடியில் ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்த அறை அது. தனித்தனி மரக்கட்டில்களுடன் ஆளுக்கொரு டேபிள் அளித்த ஹாஸ்டல் நிர்வாகத்தினரின் கருணைக்கு எல்லையே இல்லை. ஒரு நாளின் அத்தனை காரியங்களும்……உண்பது, உறங்குவது, உடைகள் வைத்திருப்பது என சர்வமும் நடப்பது அந்தக் கட்டிலில் தான். ஹாஸ்டல் சாப்பாடு பாரபட்சமாய் அளிக்கப்பட வார்டன் முன்பு தட்டுகளை விசிறியடித்து சண்டை போட்டதன் விளைவாக அங்கும் என் ரவுடித்தனம் வெளிச்சப்பட்டுப் போனது. இரவுச் சாப்பாட்டுக்குக் கடலை உருண்டை வாங்கி வந்த இனிதான நாட்கள்.
தண்ணீர் வசதிக்குறைவு, மின் இணைப்பு, கழிப்பறை வசதி எனத் தொடந்த நெருக்கடிகளால் ஹாஸ்டலை விட்டு வெளி வந்து தோழிகள் நான்கு பேர் சேர்ந்து எக்மோரிலேயே ஒரு வீட்டை வாடகைக்குப் பிடித்து அதில் குடி வந்தோம்.வீட்டு நிர்வாகத்தைக் கற்றுக். கொண்டது அங்கு தான். அட்வான்ஸ்,வீட்டு வாடகை, வீட்டு ஒப்பந்தப்பத்திரம், கியாஸ் இணைப்பு, வரவு, செலவு, சமையல், தண்ணீர், மின்சாரம் உள்பட வீட்டின் அனைத்து மேற்பார்வைகளும் என் பொறுப்பிலேயே இருந்தது. பேருந்து செலவுக்குக் கூட திணறிய காலம் போய் தினமும் அலுவலகம் சென்று வர ஆட்டோ பயன்படுத்துமளவுக்குப் பொருளாதாரம் மேம்பட்டது பணியோடு சேர்ந்து சம்பள உயர்வும் கிடைத்த இந்த காலக்கட்டத்தில் தான்.  
சீராகவேப் பயணித்துக் கொண்டிருந்தாலும் எதிர்காலம் குறித்த ஒரு பயம் தொடந்து கொண்டே இ\ருந்தது. சரியாக ஒரு வருடம் முன்பு நவம்பர் ஒன்றாம் தேதி சென்னையில் இருந்து விருதுநகருக்கு ஒரு வார விடுப்பில் சென்றேன். திருமண ஏற்பாடுகள், வீட்டு சூழ்நிலை, என்னுடைய உடல்நிலை எல்லாமுமாகச் சேர்ந்து நினைத்த நேரத்தில் சென்னைக்குத் திரும்ப முடியவில்லை. ஒரு மாறுதல் தேவைப்பட்டிருந்த அந்த சமயத்தில் உடலும் மனமும் சொந்த ஊரை நிறையவே சார்ந்திருந்ததை மறுக்க முடியாது. வேலையில் திரும்ப சேர்வதற்கான கால அவகாசமும் ஒத்தி வைக்கப்பட்டது. அம்மாவின் கவனிப்பிலும், அக்கா குழந்தைகளின் அருகாமையிலும் நிறையவே தெம்பு வந்தது உடலிலும் மனதிலும். ஜூன் மாதத்தின் இரண்டாம் வாரத்தில் குடும்ப நண்பர் மூலம் உதயசங்கர் தரப்பிலிருந்து என்னைப் பெண் கேட்டு வந்தனர். பரஸ்பர விசாரிப்புகளின் அடிப்படையில் ஒரு நிறைவான நாளில் மதுரை “கூடலழகர் கோவிலில்” முதன்முறையாக உதயசங்கரும் நானும் அவரவர் குடும்பத்துடன் நேரில் சந்தித்துப் பேசினோம்.
பெரியோர்கள் கலந்து பேசி நிச்சயித்தபடி செப்டம்பர் 4ம் தேதி என்ற ஆசீர்வதிக்கப்பட்ட நாளில் அப்பா இல்லாத குறை தெரியாமல் கல்யாண ஏற்பாடுகளைப் பார்த்துக் கொண்ட தம்பிகளால்  மிகக் கோலாகலமாய் நடந்தது திருமணம். அதே மாதம் 12ம் தேதி சென்னையில் புது வீட்டில் குடியேறி , 14ம் தேதி திருமண வரவேற்பும் சிறப்பாக நடைபெற்று இதோ மூன்று மாதங்கள் ஓடியே போய்விட்டது.  
சென்னையைப் புறக்கணிக்க ஒரு போதும் காரணங்கள் இருக்கவில்லை எனக்கு. சொந்த ஊரில் தங்கியிருந்த மாதங்களில் கூட சென்னைக்கு இனிப் போக முடியுமா என்ற கவலையுடன் கூடிய ஏக்கம் இருந்தது. திருமணம் முடித்து சென்னைக்கே குடிவருவேன் என்பதெல்லாம் நானே எதிர்பாராதது. சொந்தங்களை விட நண்பர்கள் தான் கஷ்ட நஷ்டங்களில் பங்கேற்று என்னைத் தேற்றியவர்கள். சென்னை என் சுயத்தை ஒருபோதும் பறித்துக் கொள்ளவில்லை. வேலை, பணம், வசதி, நாகரீகம், நண்பர்கள், தன்னம்பிக்கை, சுயமரியாதை, படிப்பினை என இங்கு கற்றதும் பெற்றதும் ஏராளம். அத்தனைக்குப் பிறகும் நான் நானாகவே இருக்கிறேன் அப்போதும் இப்போதும்.
சென்ற வருடம் குறித்துச் சொல்வதற்கு நிறைய இருக்கிறது. ப்ளாக் தொடங்கியது, யமஹா ”ரே” வண்டி வாங்கியது, திருமணம் என மூன்று பெருங்கனவுகளை மகிழ்வான தருணங்களோடு நிறைவேற்றி வைத்த வருடம் இது. இந்த வாழ்வும் இனி வரவிருக்கும் புதிய வருடமும் நெஞ்சம் நிறைய நம்பிக்கைகளையும் தெளிவான ஒரு பாதையையும் உடன் பயணிக்க ஒரு தந்தையுமானவனையும் தந்திருக்கிறது. ஒவ்வொரு நாளும் கூடிக்கொண்டே போகும் இந்தக் காதலின் தன்மை வாழ்வை உயிர்ப்போடு வைத்திருக்கிறது.

மனம் முழுக்க ஒரு புத்துணர்ச்சி பரவியிருக்கும் இந்த நிமிடத்தில் இரண்டு நாட்களாய்த் தொடந்த மழையினால் அழுக்கு தீரக் குளித்த சென்னைச் சாலைகள் தன் பளபளப்பான நியான் கண்களால் என்னை வசீகரித்துக் கொண்டிருக்கிறது. லவ் யூ சென்னை.

12 comments:

  1. சென்னையில் தனிப் பெண்ணாக வசிப்பதில் இத்தனை கஷ்டமான பக்கங்கள் இருப்பது இப்போதான் உணர முடியுது என்னால் உங்கள் எழுத்துக்களில். போகட்டும்.... மனதுக்குப் பிடித்த கணவருடன், தொடரும் இனிய இல்லறமும், வாழ்வும் இனி என்றும் உங்களுக்கு மகிழ்ச்சியையே தரட்டும் ஸ்ரீதேவி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயம் நிறைந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. இந்த மகிழ்ச்சி,
    என்றும் தொடர,வாழ்த்துக்கள்..சகோதரி!

    ReplyDelete
  3. Replies
    1. நன்றி மைக்கேல் அமல்ராஜ் அண்ணே

      Delete
  4. வந்தவரையும் வெந்தவரையும் வாழவைக்கும் நமது சென்னை.................... :)

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா திவ்யா ...மொத்தத்தில் வாழ வைக்கும் சென்னைக்கு ”ஜே”

      Delete