Wednesday 25 March 2020

96’ திரைப்படத்தை இன்னும் முழுதாகப் பார்க்கவில்லை….நேற்றைக்கு வாட்சப்பில் அந்தப் படத்திலிருந்து ”யமுனை ஆற்றிலே” பாட்டை ஜானு பாடும் காட்சியைப் பார்த்து விட்டு யூ ட்யூபில் அந்தப் படத்தின் மற்ற காட்சிகளைத் தேடிப் பார்த்துக் கொண்டிருந்தேன்….
ராம், அவனது பள்ளிப்பருவத்திலும் பிறகு அவர்களுடைய வகுப்பு ஒன்றுகூடலின் போதும் ஜானுவிடம் இந்தப்பாடலைப் பாடும்படி மிகவும் விரும்பி ….இன்னும் சொல்லப்போனால் ஜானு அந்தப்பாடலை ஒருமுறையாவது பாடிவிடமாட்டாளா என ஏக்கமாகக் கேட்கிறான்…..நண்பர்கள் முன்னிலையில் ராம் கேட்கும் ஒவ்வொரு முறையும் ஜானு அவன் கோரிக்கையை நிராகரிக்கிறாள்….
பிறகு ஜானு, ராம் இருவரும் ராம்-மின் வீட்டில் பேசிக்கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது கரண்ட் கட்டாகிறது….எதிர்பாராத அந்த சூழலில் அந்த இருட்டில் அவள் தடுமாறிவிடக்கூடாது என்று ராம் “ நீ இருட்டில் எழுந்துக்காத ஜானு இதோ நான் வர்றேன்” என்று எழுந்து போகிறான்….
முழுக்க இருள் சூழ்ந்த, பின்னணியில் மழைச் சாரல் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டிருக்கும் அந்த நேரத்தில் ராம் தன் வாழ்நாளில் ஒருமுறையேனும் ஜானுவின் குரலில் கேட்க விரும்பிய அந்தப் பாடலை அவள் பாடுகிறாள்…..அந்தப் பாடல் ராமுக்கு விருப்பமானதாகவே அதுவரை காட்டப்பட்டிருந்தது மறைந்து போய் ஜானுவுக்கு ராம் எத்தனை விருப்பமானவனாக இருந்தால் அவன் விரும்பிய அந்தப் பாடலை கூட்டத்தில் நண்பர்களுக்கு முன் பாடாமல் அவனும் அவளும் மட்டும் தனித்திருக்கும் போது அவன் எதிர்பாராத அந்த நேரத்தில் அதுவும் அவன் கேட்காமலே ஜானு பாடியிருப்பாள் என்று தோன்றியது….
அவளுக்கு இத்தனை விருப்பத்துக்குரியவனான ராம், ஜானு அந்தப் பாடலைப் பாடும்போது என்ன செய்திருக்க வேண்டும்…….இருட்டுக்குள் போனவன் அவள் குரலில் அந்தப் பாடலைக் கேட்ட நொடியில் கால்கள் மரத்துப் பேச மறந்து சுவாசிக்க மறந்து சிலையாக நின்றிருக்க வேண்டுமா இல்லையா …குறைந்தபட்சம் அதற்கு முன்பான காட்சிகளில் ஜானுவின் ஸ்பரிசம் பட்ட நொடியில் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு மயங்கி விழுவதைப் போல விழுந்திருக்கவாவது வேண்டுமா இல்லையா…..
இது எதுவும் செய்யாமல் அவன் இருட்டுக்குள் அங்குமிங்கும் ஓடி கைகளில் தட்டுப்படும் பொருட்களைத் தள்ளி விட்டு அந்த அமைதியைக் குலைத்து தட்டுத் தடுமாறி எதையோ எடுக்கிறான்…..சரி அது டேப் ரெக்கார்டர் போல…ஜானுவின் குரலைப் பதிவு செய்ய தேடி எடுத்திருக்கிறான் என்று நினைத்தால் அது டேப் ரெக்கார்டரும் இல்லை…அதுவொரு எமர்ஜென்ஸி லைட்… அதை உயிர்ப்பித்து எரிய வைத்து ஜானுவின் முகத்துக்கு நேரே கொண்டு வந்து நிற்கும் போது ”பாவம் ராதா” என்று அந்தப் பாடலைப் பாடி முடித்தே விடுகிறாள்….. உண்மையில் பாவம் நீ தான் ஜானு …..அடேய் ராம்….லைட்டாடா இப்ப முக்கியம் என்று கேட்கத் தோன்றியது…..
இந்த வீடியோவைத் தொடந்து யூ ட்யூப் பரிந்துரைகளின் நூல் பிடித்துச் சென்றதில் இந்தப் பாடலின் ஒரிஜினல் வர்சனான தளபதி படத்தில் இடம்பெறும் ”யமுனை ஆற்றிலே” பாட்டையும் பார்க்க நேர்ந்தது…..பாடலின் நிறைவு வரிகளின் போது ரஜினியும் ஷோபனாவும் எதிர் எதிரே உக்கார்ந்திருக்கும் காட்சி….அதிலும் தலைவரின் முக பாவனையும், தலையைக் கோதியபடி, ஒரு கையை தாடையில் வைத்துப் பாட்டையும் ஷோபனாவையும் ஒரு சேர ரசிப்பதும்……க்ளாஸிக் 😍😍😍😍

சானிடரி பேட்களுக்கான புதிய விளம்பரம் ஒன்று நேற்று கண்ணில் பட்டது. ராதிகா ஆப்தே தோன்றும் அந்த விளம்பரத்தில் மாதவிடாய் காலத்தின் அதீத உதிரப்போக்கு நேரங்களில் உபயோகிக்கக் கூடிய பேட்களை ”ரியோ நிறுவனம்” புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கிறது…
இதற்கு முன்பான அத்தனை சானிடரி நாப்கின் விளம்பரங்களிலும் உதிரப்போக்கை நீல நிறத்தில் ’திரவம்’ போல மட்டுமே காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்….குழந்தைகள் உபயோகத்திற்கான டயாப்பர் விளம்பரத்திற்கும் இந்த வகை சானிடர் நாப்கின் விளம்பரங்களுக்கும் எவ்வித வேறுபாடும் இருந்ததில்லை….
வீட்டில் இங்க் கொட்டிய குழந்தைகள் அதைத் துடைப்பதற்கு சானிடரி நாப்கின்கள் கேட்டதாகவெல்லாம் வாரமலர் “இது உங்கள் இடம்’ பகுதிகளில் இடம் பெற்றிருக்கிறது….
மாதவிடாய் காலத்தில் பெண்கள் உதிரப்போக்கு,உடல்நிலை, மனநிலையெல்லாம் பெண்ணுக்குப் பெண் வேறுபடும்….சும்மா படுத்துக் கொண்டு இருந்தாலே போதுமென்றிருக்கும் சிலருக்கு……நானெல்லாம் அந்த நேரத்தில் தான் வேலைகளை இழுத்துப் போட்டு செய்து கொண்டிருப்பேன்….
சானிடரி நாப்கின்களை உபயோகித்துக்கொள்வது கூட நேரம், இடம் , சூழல் பொறுத்து ஆளுக்காள் மாறுபடும்….வீட்டிலேயே இருந்தாலும் கூட தனி டாய்லெட் இல்லாமல் பொதுக்கழிவறை அமைப்பில் உள்ளவர்கள், கூட்டுக்குடித்தனத்தில் பலர் உபயோகிக்கும் டாய்லெட்டைக் கொண்டவர்கள், அலுவலகத்தில் இருபாலரும் ஒன்றாக உபயோகிக்கும் கழிவறை அமைப்பைக் கொண்டவர்கள் என இந்த லிஸ்ட் நீண்டு கொண்டே தான் போகிறது….
முன்பு வேலை பார்த்த அலுவலகத்தில் நான் ஒருத்தி மட்டுமே பெண்….உயரதிகாரியிலிருந்து கடைநிலை அலுவலர் வரை கிட்டத்தட்ட 15க்கும் மேற்பட்ட ஆண்கள் வேலை பார்த்த அந்த அலுவலகத்தில் அனைவருக்கும் ஒரேயொரு வெஸ்டர்ன் டாய்லட்…..அந்த டாய்லட்டுக்குள்ளும் குப்பைக்கூடை கிடையாது…..அதை வைக்க வேண்டுமென்ற அவசியம் எதற்கு என்பது கூட அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை…..ஒருவர் உள்ளேயிருக்கும்போதே மற்றொருவர் வரிசையில் நிற்பது தினந்தோறும் நடக்கும் நிகழ்வு….
ஒருவழியாக டாய்லெட்டை உபயோகித்து விட்டு தண்ணீரை ஃப்ளஷ் (நாப்கினை அல்ல) செய்து விட்டு வந்தால் சாக்ஸ் அணிந்த கால்களுடன் உள்ளே போகும் நபர் கீழே ஈரம்படுகிறது என்ற கோவத்தோடு முனகிக் கொண்டே நம் இருக்கையைக் கடந்து செல்வார்….அந்தக் கோவமும் நாம் கேட்கும் ரிப்போர்ட்களை தாமதித்து அனுப்புவதில் தான் அவர்களுக்கு அடங்கும்….அதே ஆஃபீஸில் தான் பரபரப்பான வேலைகளுக்கிடையே இங்குமங்கும் ஓடிக்கொண்டு ஒருவழியாக இருக்கைக்கு வந்து சேர்ந்த நேரத்தில் பக்கத்தில் வந்து மெல்லிய குரலில் ’மேடம் உங்க டிரெஸ் ’அழுக்காகி’ இருக்கு’ என ஒரு அலுவலர் சொல்லிவிட்டுப் போனார்….
பெண்கள் உடலில் இப்படியொரு மாதாந்திர நிகழ்வு நடக்கிறது என்பதே கூட தெரியாமல் அல்லது தெரிந்தும் கண்டுகொள்ளாமல் இருக்கும் ஆண்களின் எண்ணிக்கை இப்போது குறைந்திருந்தாலும், இன்னும் கூட ஆண்கள் நாப்கின் வாங்கி வருவதை ஒரு பாவச்செயலாகவே நினைப்பவர்களும் இருக்கிறார்கள். எங்கள் வீட்டில் நான் நாப்கின் வாங்கி வந்ததை விட உதய் எனக்கு வாங்கித் தந்ததே அதிகம். பிராண்ட், விலை முதற்கொண்டு உதய்க்கே சரியாக நினைவில் இருக்கும். இன்றைக்கும் பெரும்பாலான கடைகளில் நாப்கின்களை பேப்பரில் சுற்றியே தான் தருகின்றனர்…. வீட்டுக்குள் கூட அலமாரிக்குள் அதை ஒரு கஞ்சா, அபின் போல ரகசியமாய் மறைத்து வைத்திருக்கும் ஆட்களையும் பார்க்கிறேன்….நானெல்லாம் அப்படி மறைத்து வைத்தால் இடத்தை ஞாபகம் வைத்து திரும்ப யோசித்து எடுப்பது ரொம்பவே கஷ்டம்….
எங்கள் வீட்டுக்கு எதிரே இருக்கும் கடைக்காரர் எந்தப்பொருளைக் கேட்டாலும் நாம் சொல்லும் பிராண்ட் இல்லையென்றால் அவர் ஸ்டாக் வைத்திருக்கும் பிராண்டைச் சொல்லி பலவருடங்களாகத் தங்கள் குடும்பமே தாத்தா பாட்டி காலம் தொட்டு தலைமுறை தலைமுறையாக அதைத் தான் உபயோகிக்கிறது என்று கூசாமல் பொய் சொல்லுவார் அந்த பிராண்ட் அன்றைக்கு தான் சந்தைக்கு வந்திருந்தாலும் கூட….அவரிடம் தர்க்கம் செய்யாமல் நான் வாங்கி வரும் ஒரே பொருள் சானிடர் நாப்கின் மட்டுமே…..அதை கொடுக்கும் போது கூட தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு ஒருவிதமான பதட்டத்தோடு தான் கையில் கொடுப்பார்….
இந்தக்கூத்தெல்லாம் ஒருபுறம் இருக்க உபயோகித்த நாப்கின்களை முறையாகவும் சுகாதாரத்தோடும் அப்புறப்படுத்துவது அனுமார்வால் போல நீண்ட நெடிய தொடர்…..இதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு இன்னும் பெண்களுக்கே போதுமான அளவு இல்லை என்பதே உண்மை…… பள்ளி, கல்லூரிகளில், ஹாஸ்டல் அறைகளில், ஹோட்டல்கள், சுற்றுலாத்தலங்கள் போன்ற பொது இடங்களில் முறையாக அவற்றை அப்புறப்படுத்துவதற்கான வசதிகள் இங்கே இல்லவே இல்லை….
திருச்செந்தூர், ராமேஸ்வரம் போன்ற இடங்களிலெல்லாம் கடலில் குளித்து விட்டுப் பெண்கள் உடை மாற்றும் இடத்திற்கு வந்தோமானால் மானாவாரியாக உபயோகப்படுத்திய நாப்கின்கள் சிதறிக்கிடக்கும்…..கூட்டம் கூட்டமாய் மக்கள் வந்து போகும் புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்களுக்கே இந்தப் பாடென்றால் இன்னும் ஆறு, குளம் , ஏரி, அருவிகள் ஓரம் பற்றியெல்லாம் வாய்விட்டுச் சொல்லவே முடியாது….. உபயோகித்த நாப்கின்களை குறைந்தபட்சமாக பேப்பரிலாவது சுற்றி அப்புறப்படுத்துவது நலம் என்கிற அறிவு இங்கே மிக மிகக் குறைவு….
அசைவம் உண்பவர்களாகவே இருந்தாலும் கூட இன்னும் ஆடு, மாடு, கோழி, மீன் வெட்டும்போது ரத்தத்தைக் காணச் சகியாமல் ஒதுங்கி நிற்கிறவர்கள் உண்டுதானே....மாமிசத்தின் மேல் படிந்திருக்கும் ரத்தவாடை ஒவ்வாமல் அசைவம் சமைக்கும்போது சமையலறைக்குள் எட்டிப்பார்க்காமல் ஓடுகிறவர்கள் இன்னும் இருக்கிறார்கள்.... இல்லையா....
இத்தனை ஆரவாரங்களுக்கும் ஒரே காரணம் அந்த மாதவிடாயின் நிறம்….அந்தச் சிவப்பு…..அடர் சிவப்பு…..ஈரத்தை உறிஞ்சியபின் மாறும் கருஞ்சிவப்பு…. விளம்பரங்களில் சித்தரிக்கப்படுவது போல் அது வெறும் திரவமென்றால் இத்தனை ஒளிவுமறைவு எதற்கு? எனில் அந்த நிறத்தை அந்த உதிரத்தை அதன் உண்மைத்தன்மையோடு காட்சிப்படுத்துதல் என்பது அவசியமானதாகிறது…
நம் வீடுகளில் தட்டின் முன்னால் உக்கார்ந்திருக்கும் வேளைகளில் டாய்லட் க்ளீனர் விளம்பரங்கள் வருவதைக் கண்டு முகம் சுளிக்கும் பெரும்பான்மை மக்களின் முன்னே இந்த விளம்பரம் நிச்சயம் அதிர்வை ஏற்படுத்தும் என நினைக்கிறேன்….அது தேவையானதும் கூட….
ஆக காலங்காலமாய் நம் டீவி விளம்பரங்களில் காட்டப்பட்டதைப் போல சானிடரி நாப்கின்களில் உறிஞ்சப்படுவது வெறும் நீல நிறத் திரவம் அல்ல.....அது சிவப்பு நிற உதிரம் !!!