Thursday 27 November 2014

”குரோட்டன்ஸ் மனிதர்கள்”

ஊருக்கு சற்றே ஒதுக்குப்புறத்தில் நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து செல்லும் பாதையில் அமைந்திருந்தது அந்த அப்பார்ட்மெண்ட். பெருநகரங்களைப் போலவே இப்போதெல்லாம் குடியிருப்புகள் பெருகிவிட்டிருக்கும் சிறிய நகரங்களில் இதுவும் ஒன்று.
நெடுஞ்சாலையின் ஓரத்தில் இருந்த வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தை தாண்டித்தான் அந்த குடியிருப்புக்கு சென்றாக வேண்டும். வட்டாட்சியர் அலுவலகத்தை ஒட்டி ஒரு பெரிய கல்கிடங்கு இருக்கும். சிறு வயதில் அந்தக் கல்கிடங்கில் மீன் பிடிக்கத் தூண்டிலோடு அப்பாவுடன் சைக்கிளில் போன நினைவுகள் வந்தது.
இப்போது கல்கிடங்கே இல்லை. அத்தனை பெரிய கல்கிடங்கை எப்படி மூடி சமன்படுத்தி கட்டிடம் கட்டியிருக்கிறார்கள் என்ற நினைப்பே ஆயாசத்தை தந்தது. அந்தக் கட்டிடம் கல்கிடங்கு தண்ணீருக்கும் அதில் வாழ்ந்த ஜீவராசிகளுக்கும் உயிரோடு கட்டப்பட்ட சமாதியாகவே தெரிந்தது.
ஊருக்கு நடுவில் அடுக்கி வைத்த தீப்பெட்டிகளாய் நெருக்கியடித்துக் கிடந்த தெருக்களுக்குள் 28 வருடங்களாய் குடியிருந்த அம்மா இந்த ஒதுக்குப்புற குடியிருப்பில் எப்படி இருக்கப் போகிறாள் என்ற கவலை புதிதாய் முளைத்தது. பக்கத்து வீட்டில் அடுப்பெரிகிறதா இல்லையா என்பதைக் கூட குறிப்பாலுணர்ந்து ”என்னக்கா இன்னைக்கு சோறாக்கலையா” என்று கேட்கக்கூடிய அன்பான மனிதர்கள் நிறைந்த இடத்தை எப்படி ஈடு செய்யப் போகிறது ஒவ்வொரு வீட்டுக்கும் தனித்தனி கேட் போடப்பட்டிருக்கும் இந்த அப்பார்ட்மெண்ட்?
அம்மா…….முப்பது வருடங்களாய் ஒரு மிகச் சிறந்த மனிதரோடு வாழ்க்கை நடத்தியவள். தங்கமனைத்தும் மனிதனாய் உருவெடுத்தது போல் வாய்த்த கணவரின் இன்ப துன்பங்கள் அனைத்திலும் பங்கு போட்டுக் கொண்டவள்.
அப்பா மாரடைப்பால் இறந்த பின் வந்த அடுத்த மூன்று வருடங்களில் பிள்ளைகளின் சம்பாத்தியத்தில் கடனையெல்லாம் அடைத்து விட்டு கையிருப்பாய் இப்போது நகைகளும் பணமும் வசதி வாய்ப்புகளும் வந்த பின்னும் கூட பகட்டை வெளிக்காட்டிக் கொள்ளாதவள். மகன்கள் ஆசையாய் செய்து தந்த தங்கச் சங்கிலியைக் கூட அணிய மறுத்து மகளின் திருமணத்தில் தான் அணிவேன் என்று பிடிவாதத்தோடு இருப்பவள்.அப்பாவின் நினைவுச் சின்னங்களில் ஒன்றாய் இருப்பது இப்போதிருக்கும் இந்த வீடும் தான்.
வீட்டு வாசலில் அம்மா ஆசையோடு வளர்த்த வாத நாராயணன் மரம் இப்போது தான் பூத்துக் குலுங்கி ஒன்றிரண்டாய் காய்க்கவும் தொடங்கியிருக்கிறது. நகராட்சி தெருக்களில் எல்லாம் இப்போது தரைகளில் பேவர் ப்ளாக் கற்கள் பதிக்கப்பட்ட பின்னும் இரண்டு கற்களை வாசற்படியோரம் நெம்பி எடுத்து அதில் நட்டு வளர்த்த மரம் இது. மரத்தையொட்டியிருக்கும் ஒரு சின்ன தொட்டியில் அடர் நீல நிற சங்குப்பூவும் பூத்துக் கிடக்கும். அதற்கடுத்தாற் போல ஒரு கற்றாழைச்செடி, தக்காளி, மிளகாய்ச் செடிகள்……
இந்தப் புதிய அப்பார்ட்மெண்ட்டில் மொத்தம் பன்னிரண்டு வீடுகள். கீழ்த் தளத்தில் இடது பக்கம் மூன்றும் வலது பக்கம் மூன்றும் நடுவில் விஸ்தாரமான மாடிப் படிக்கட்டுகளோடு முதல் மாடியிலும் அதே வரிசையில் ஆறு வீடுகளுமாய் அழகாய் இருக்கிறது. இரண்டு கெஸ்ட் ரூம்களோடு கூடிய அகலமான மொட்டை மாடி துணி காயப் போடும் கம்பிகளோடு வரவேற்கத் தயாராய் காத்துக் கிடக்கிறது.
முதல் மாடியில் படிக்கட்டு முடியுமிடத்தில் வலது பக்கம் திரும்பியவுடன் முதல் வீடு எங்களுடையது. வீட்டினுள்ளே நுழைந்ததும் சின்னதாய் ஒரு இடம். காலணிகள் வைக்கும் இடம் போக மூன்று பேர் தாராளமாய் படுத்துத் தூங்கும் அளவு இருந்தது. அதைத் தாண்டியதும் பெரிய ஹால், இடது பக்கம் சமையலறை நல்ல காற்றோட்டமும் வெளிச்சமும் நிறைந்திருந்தது. இரண்டு படுக்கையறைகளோடு ஒரு அட்டாச்டு டாய்லட் பாத்ரூம். எல்லா அறைகளிலும் தேவையான அளவுக்கு அடுக்குகள்… பளிச்சிடும் டைல்ஸ் தரையுமாய் வீடு வெகு அம்சமாய் இருந்தது.
வசதியான வீட்டுக்குக் குடி போகும் போது கார் வாங்கப் போவதாய் தம்பி சொல்லியிருந்தது பார்க்கிங் பகுதியைக் கடக்கும் போது அம்மாவுக்கு ஞாபகம் வந்திருக்கும் போல….”வண்டி வாங்கினா இங்க நிறுத்திக்கலாம்ல”ன்னு ஒரு இடத்தைக் காட்டிப் பெரிதாய் புன்னகைத்தாள்.
”ம்மா இங்க உங்களுக்கு தெரிஞ்சவங்க யாரும் இல்ல…நீங்க இருந்துக்குவீங்களா? நம்ம தெரு மாதிரி இல்ல….பேச்சுத் துணைக்கு ஆள் இருக்க மாட்டாங்க. எதிர்ல பார்த்தா வெறுமனே சிரிக்கக் கூட கொஞ்சம் நாள் ஆகும். இதெல்லாம் பரவால்லயா உங்களுக்கு?”
“நான் என்ன இப்ப எனக்காகவா இங்க வரேன். பசங்க எல்லாரும் வளர்ந்துட்டீங்க. வீட்டுல நல்ல நாள் விசேஷம்னு சொந்தபந்தம் வரும் போது வீடு கொஞ்சம் பெருசா இருந்தாத்தான நமக்கும் நல்லா இருக்கும். இப்ப இருக்க வீட்டுல பழைய சாமான்கள்லாம் இருக்கட்டும். எப்போ வேணும்னாலும் திரும்பி வந்து இருந்துக்கலாம்ல.”
“அந்த வீட்டுல இப்ப இருக்க சங்குப்பூ, தக்காளி, பச்சை மிளகாய், கத்தாழ , வாதாம் மரமெல்லாம் இங்க வைக்க முடியாது”
“செடி வைக்கணும்ன்னா வீட்டுக்குள்ளேயே வளர்க்குறாங்களே…அது மாதிரி வாங்கிக்குவோம்…என்ன ஒண்ணு அந்த வீட்ல இருக்க செடியெல்லாம் பார்த்துக்க தான் ஆளிருக்க மாட்டாங்கல்ல. ஒவ்வொண்ணும் பிள்ள மாதிரி வளர்த்தது. மத்தபடி எனக்குப் பிரச்சனை இல்ல. உங்க எல்லாருக்கும் பிடிச்சிருக்கில்ல….அப்புறம் என்ன. நான் இருந்துக்குவேன்டி”
“ம்ம்…..”
பூரண சுதந்திரத்தோடு தரையில் வளரும் செடி கொடி மரங்கள் இப்போதெல்லாம் நிறையவே மாற்றங்களுக்குட்பட்டு போன்சாய் போல வீடுகளுக்குள்ளேயே வளர்க்கப்படுவது போலத்தான் இன்றைய மனிதர்களும் . வசதிகள் இருப்பது மட்டுமே வீடாகிப் போவதில்லை….வாழ்வதற்கு உகந்ததே வீடாக இருக்கிறது. வெறும் கட்டடங்களையே வாழுமிடமாக மாற்ற அம்மா போன்ற மனிதர்களால் மட்டுமே முடிகிறது. தரையில் வளர்ந்தாலும் மரமாய் நிழல் தந்தும் , வீட்டுக்குள் வைத்தாலும் பார்வைக்கு அழகாய் இருக்குமிடத்தை வைத்திடும் அம்மா போன்ற “குரோட்டன்ஸ் மனிதர்கள்”..மட்டுமே வாழ்தலை சாத்தியமாக்கி வருகிறார்கள்.

Tuesday 25 November 2014

நேற்றைய பொழுது

காலையில அக்காவுக்கு ஃபோன் பண்ணிப் பேசிட்டு இருந்தேன்.

“கீதா , தர்ஷினி ஸ்கூலுக்கு கிளம்பிட்டாங்களா?”

“எங்க..... சின்னவ இப்போ தான் உக்கார்ந்து ஹோம் வொர்க் எழுதிட்டு இருக்கா. பெரியவ தலை வாரிட்டு இருக்கா. ரெண்டு பேரும் இவ்ளோ நேரம் ஒரே சண்டை. நான் சமையல் வேலையப் பார்ப்பேனா....ஆஃபீசுக்கு கிளம்புவேனா ...இல்ல இவளுங்கள சண்டையத் தீர்ப்பேனா.....ஒண்ணும் முடியல. வர வர ரெண்டு பேரையும் சமாளிக்க முடியல. நீயே என்னான்னு கேளு ”

“ம்க்கும் ...நேர்ல இருந்து சொல்லும் போதே என் பேச்சு கேக்க மாட்டாங்க. இதுல ஃபோன்ல சொன்னா மட்டும் கேக்க போறாங்களாக்கும்”

“எனக்கு அடுப்புல வேலை இருக்கு. நீ பேசிட்டு இரு வரேன்”

“சரி தர்ஷினிட்ட ஃபோன குடு”

“ஹலோ சித்தி...”

“என்ன பாப்பா ...அம்மா பேச்சு கேக்க மாட்டேங்குறியாம். சண்டை போட்டுட்டே இருக்கீங்களாம். நீ தானே பெரியவ. நீ தான் அவள அட்ஜஸ்ட் பண்ணிப் போகணும். அது சின்னப் பிள்ளை தானே. அவளுக்கு என்ன தெரியும்?”

“நான் எவ்ளோ தான் சித்தி அட்ஜஸ்ட் பண்ணிப் போறது. அவ எப்பப் பார்த்தாலும் எங்கூடவே வம்பு இழுக்குறா”

“சரிப்பா ...நம்ம பாப்பா தானே. கொஞ்சம் பெரியவளானதும் அவளே புரிஞ்சுக்குவா. . . ஃபோன அவகிட்ட குடு. நான் சொன்னா கேட்டுக்குவா.”

“ஹலோ ...சித்தி”

“என்ன கீதா ரொம்ப சேட்டை பண்றியாமே?”

“இல்லையே”

“எப்பப் பாரு அவ கூட சண்டை போடுறியாம்?”

“அவ மட்டும் நேத்து ஃபைவ் ஸ்டார் சாக்லேட் வாங்கி சாப்பிடும் போது எனக்குக் குடுக்காம சாப்பிடுறா”

“ஷப்பா....நேத்து நடந்தது, நேத்து சொன்னது, நேத்து சண்டை போட்டதெல்லாம் மறந்துடணும். புரியுதா? நேத்துங்கிறது முடிஞ்சு போச்சு. இப்போ இன்னைக்கு என்னவோ அதை மட்டும் தான் பார்க்கணும். சரியா? இனிமே ரெண்டு பேரும் சண்டை போடாம இருக்கணும் . குட் கேர்ள்னு எல்லரும் சொல்ற மாதிரி நடந்துக்கணும்....ஓக்கேவா?”

“ம்ம்ம்.... சரி சித்தி”

“சரி ஃபோன கட் பண்றேன். அம்மாகிட்ட அப்புறமா பேசுறேன்னு சொல்லு”

“சரி”

ரெண்டே நிமிஷத்துல திரும்ப அக்காகிட்ட இருந்து ஃபோன்.

“ஏய்....ஃபோன்ல கீதா கிட்ட என்ன சொன்ன?”

“ஹி ஹி ஏன்....இனிமே அக்கா கூட சண்டை போட மாட்டேன்னு சொன்னாளா?”

“நேத்து குடுத்த ஹோம் வொர்க்க நேத்தே மறந்துடணும்னு சித்தி சொன்னாங்க. அதனால இப்போ ஹோம் வொர்க் எழுத மாட்டேன்னு அடம் பிடிக்குறா”

” ஞே ???????????”

நாலு பேருக்கு நல்லதுன்னா ...


துணிக்கடைக்குப் போயிருந்தேன். சுடிதார் செக்சன்ல ஓரளவு கூட்டமா தான் இருந்தது. நான் விரும்பி எடுக்குற காட்டன் துணிகள் பக்கம் போய் பார்த்துட்டு இருந்தேன்.

எனக்குப் பக்கத்துல ஒரு ஆணும் பெண்ணும் நின்னு ஒவ்வொரு சுடிதார் துணியையும் கவர்ல இருந்து வெளிய எடுத்துப் போட்டு கலர், டிசைன் எல்லாம் பார்த்துட்டு இருந்தாங்க.

அந்தப் பையன் செலக்சன் அந்தப் பொண்ணுக்குப் பிடிக்கல. அந்தப் பொண்ணு செலக்ட் பண்றது அந்தப் பையனுக்குப் பிடிக்கல போல. ரெண்டு பேருக்கும் பக்கத்துல நின்னுட்டு எந்த டிசைனையும் என்னால சரியாப் பார்க்க முடியல. அதனால புடவை செக்சன் போய்ட்டு அப்புறமா வரலாம்னு போய்ட்டேன்.

அங்கே செலக்ட் பண்ணி முடிச்சுட்டு திரும்பி வந்தா அந்த ஜோடி அப்பவும் கிளம்பாம ரெண்டு சுடிதார் செட்டை ஹேங்கர் மேல போட்டுட்டு இதுவா அதுவான்னு குழம்பிட்டு இருந்தாங்க. எனக்கு அதுக்கு மேல வெயிட் பண்ணப் பொறுமை இல்ல.

ஒரு முடிவோட  சட்டுன்னு அந்த ரெண்டு சுடிதார்ல ஒண்ணை எடுத்ததும் அந்தப் பொண்ணு வேகமா "எஸ்க்யூஸ்மீ அதை நான் செலக்ட் பண்ணி வச்சிருக்கேன்"னு சொல்லி எங்கிட்ட இருந்து பிடுங்காத குறையா வாங்கிட்டு "இதையே எடுத்துக்குறேன். வாடா போகலாம்"னு ஒரு வழியா சொன்னதும் அந்தப் பையன் என்னைப் பார்த்து (அந்தப் பொண்ணுக்குத் தெரியாம தான்  ) தேங்க்ஸ் சொல்ற மாதிரி லேசா சிரிச்சுட்டுப் போனான்.

நானும் பதிலுக்கு "பார்த்தியா எப்டி செலக்ட் பண்ண வச்சேன்"னு பெருமிதமா ஒரு பார்வை பார்த்தேன்.
அப்பாடா இனி ஃபிரீயா டிசைன்ஸ் பார்க்கலாம்னு திரும்பினா........

 ரெண்டு கையையும் இடுப்புல வச்சி முறைச்சுப் பார்த்துட்டே நடந்து வந்த அந்த செக்சன் இன்சார்ஜ் லேடி என்கிட்ட வந்து "ஏம்மா துணிய எங்க கிட்ட குடுத்தா நாங்க அழகா பிரிச்சுக் காட்டப் போறோம். அதை விட்டுட்டு நீங்களே இப்டி இஷ்டத்துக்கு எடுத்துப் போட்டா எப்டி"ன்னு கத்தினாங்க.

 நான் ஒண்ணும் பதில் பேச முடியாம அந்த ஜோடியைத் தேடுனா அவங்க பில் கவுண்ட்டர்ல நின்னுட்டு என்னைப் பார்த்தும் பார்க்காத மாதிரி கமுக்கமா சிரிச்சுட்டே திரும்பிக்கிட்டாங்க. (அடப்பாவிங்களா ???????????? )

நீதி : நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல தான். ஆனா அந்த நாலு பேர்ல நாமளும் ஒருத்தரா இருக்கணும்

பழிக்குப் பழி

"இதென்ன......சோத்துல உப்பே இல்ல"

"பக்கத்துல தான உப்பு டப்பா இருக்கு. போட்டுக்கோ"

"குழம்புல காரம் ஜாஸ்தியா இருக்கு"

"இனிமே குழம்பு வைக்கும் போது மிளகாப்பொடி கொஞ்சம் குறைச்சுப் போட்டா சரியா போச்சு"

"ப்ச். . .பொரியல்ல காய் இன்னும் கொஞ்சம் வதக்கியிருக்கணும்"

"பரவால்ல போகப் போக சரியாகிடும்"

"கடவுளே . . . . இன்னும் எத்தனை நாளைக்கு தான் இப்டில்லாம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு சாப்பிடணுமோ"

"அடிப்பாவி .....உனக்கு முன்னாடி சாப்பிட்ட நானே ஒண்ணும் சொல்லாம கம்முன்னு இருக்கேன். நீ சமைச்சத நீயே இவ்ளோ குறை சொல்லிட்டு சாப்பிட முடியலைங்குற"

"நீங்க தான் முதல்லயே சாப்பிட்டீங்கல்ல. அப்பவே உப்பு, காரம் சரியில்லைன்னு சொல்ல வேண்டியது தான. நான் சாப்பிட்டு பார்த்து சொல்ற வரைக்கும் கம்முன்னு இருக்கீங்க????"

"பின்ன...... நான்லாம் எப்டி உன்ன பழி வாங்குறது"

"ஞே "

சமையல் பழகிப் போச்சு


"ஏங்க இன்னைக்கு சாம்பார் எப்டி இருக்கு?”

“ம்ம்ம் எப்டி இருக்குன்னா..... வாய் வரைக்கும் வருது...ஆனா...”

“எது? வாந்தியா?”

“இல்லடி. வார்த்தைய சொன்னேன்”

“ஓஹ்...சரி சொல்லுங்க”

“ஏதோ ஒரு டேஸ்ட்ல இருக்கு....எப்டின்னு சொல்லத் தெரியல”

’அன்னைக்கு முள்ளங்கி சாம்பார்ல சாம்பார் பொடிக்கு பதிலா வத்தக் குழம்பு பொடி போட்டு வச்சிருந்தேனே. அது மாதிரியா?”

“சீச்சீ ...அவ்வளவு கேவலமால்லாம் இல்ல”

“அப்போ இன்னொரு நாள் முருங்கைக்காய் சாம்பார்ல மிளகாப்பொடி அதிகமாப் போட்டு கோரமா ...ச்சே காரமா வச்சிருந்தேனே...அது மாதிரியா”

“சேச்சே அந்த அளவுக்கு மோசமா இல்லப்பா”

“அப்போ போன வாரம் சாம்பார்ல உப்பே போடாம பருப்பும் வேகாம இருந்திச்சே அது மாதிரியா?”

“இல்லல்ல அப்டில்லாம் இல்ல”

“ரைட்டு.. இப்ப சொல்லுங்க. சாம்பார் எப்டி இருக்கு?”

“சூப்பர்ப்பா”

“ஆங்ங்ங்ங் ....அது”

மை.வா : சக்ஸஸ்ஸ்ஸ்.... சமையல் பழகிப் போச்சு ....... அவருக்கு

இனிமே எல்லாம் இப்டி தான்


மாடியில காயப் போட்ட துணியை எடுக்கப் போயிருந்தேன். ரொம்ப நேரமா தெருவில பட்டாசுச் சத்தம் கேட்டுட்டே இருந்தது. என்ன சத்தம்னு கீழ எட்டிப் பார்த்தா தெருவில யாரோ இறந்துட்டாங்க போல. வழியெல்லாம் பூவா தூவிட்டு இறந்தவரை வண்டியில எடுத்துட்டுப் போய்ட்டு இருந்தாங்க.

அதுக்கு மேல பார்க்கப் பயந்துட்டு பேசாம துணிகளை எடுத்துட்டு இருந்தேன். பக்கத்து வீட்டுப் பாட்டி வேடிக்கை பார்க்க மாடிக்கு வந்தாங்க. ஈரத் தலைய துவட்டிட்டே கீழ எட்டிப் பார்த்துட்டு “கொஞ்ச வயசு தான் போல”

“நான் கவனிக்கல பாட்டி. எனக்கு இதெல்லாம் பார்க்க ரொம்ப பயம்”

“அட....இப்டில்லாம் பயப்படக்கூடாதும்மா. தைரியமா இருக்கணும்”

“ம்ம்”

“நம்ம பில்டிங்க்கு ரெண்டு பில்டிங் தள்ளி காலியா இருக்க இடத்துல தான் திதி குடுப்பாங்க தெரியுமா?” (வீட்டுக்குப் பின்னாடி ஏரி இருக்கு)

“அய்யய்யோ ....அப்டியா ..எனக்கு தெரியாதே பாட்டி”

“ஆமா ..அடிக்கடி பார்க்கலாம். இதெல்லாம் பார்த்து பயப்படக் கூடாது”

“ம்ம்”

“இப்போ நாங்க இருக்க வீட்ல இதுக்கு முன்னாடி இருந்த ஃபேலிமில ஒருத்தங்க தூக்கு மாட்டிக்கிட்டாங்களாம். நாங்க குடி வந்த பிறகு தான் தெரியும். அதுக்கு என்ன பண்றது”

“ஆங்ங்ங்  "

“அதோ அந்த மாடி ஓரமா பக்கத்து வீட்டு தண்ணி தொட்டி இருக்குல்ல”

“ஆமா”

“அங்க தான் கொத்த வேலை செஞ்சுட்டு இருந்த கொஞ்ச வயசுப் பையன் இருத்தன் தவறி விழுந்து செத்துட்டான்”

“அய்யோ பாட்டி .இதெல்லாம் சொல்லாதீங்க. நான் ரொம்ப பயப்படுவேன்”

"நானும் உன்ன மாதிரி வயசுல பயப்படுவேம்மா. இப்போல்லாம் பழகிப் போச்சு. ஹா ஹா ஹா “

நல்லா காய்ஞ்சிருந்த வெள்ளை முடி காத்துல நாலா பக்கமும் பறக்க சிரிச்சுட்டு இருந்த பாட்டியப் பார்க்கவே பயமா இருந்தது.

“பாட்டி உங்க காலுக்கிட்ட க்ளிப் ஒண்ணு கிடக்கு பாருங்க”

பாட்டி லேசா சேலையை இழுத்து காலுக்குக் கீழ பார்க்க, ”நல்ல வேள இருக்கு”

“எங்கேம்மா காணோமே”

“நான் கால சொன்னேன் பாட்டி”

“:o"

“சரி பாட்டி நான் வரேன்”

“சாயங்காலம் பொழுது போகலேன்னா மாடிக்கு வாம்மா. நான் இங்க தான் இருப்பேன்”

”நான் எங்க வீட்டு பால்கனிலயே கொடி கட்டி துணி காயப் போடப் போறேன் பாட்டி”

“ஏம்மா”

“இனிமே எல்லாம் அப்டித்தான் பாட்டி”

“ஆங்ங்ங்ங்”

சிக்கன் கொத்து பரோட்டா

ஹோட்டலுக்குப் போயிருந்தோம். செம பசி. எல்லா டேபிளும் ஃபுல்லா இருந்தது. .நாலு பேர் உக்காரக்கூடிய டேபிள்ல ஒரு ஹஸ்பண்ட் வைஃப் பக்கத்து பக்கத்துல உக்கார்ந்து சாப்பிட்டுட்டு இருந்தாங்க.

எதிர் வரிசை சீட் ரெண்டும் காலியா இருந்ததால அவங்க கிட்ட கேட்டு யாரும் வரலைன்னு கன்ஃபர்ம் பண்ணிட்டு உக்கார்ந்தோம். ஆர்டர் சொல்ல ஆளைத் தேடினா அவர் பிஸியா அங்கிட்டும் இங்கிட்டும் ஓடிட்டு இருந்தாரு.

இங்க கொத்து பரோட்டா சூப்பரா இருக்கும்னு கேள்விப்பட்டதால அதையே ஆர்டர் பண்ணலாம்னு முடிவு பண்ணியிருந்தேன். "வயிறு வேற பசிக்குது. ஆர்டர் வாங்க ஆளைக் காணோமே"ன்னு சத்தமா சொல்லிட்டு இருந்தேன்.

எதிர் சீட்ல இருந்த லேடி நான் பேசுறதக் கேட்டு லேசா சிரிச்சாங்க. நானும் பதிலுக்கு சிரிச்சதும் "இந்த ஹோட்டல்ல ஆர்டர் குடுக்குறது தான் கொஞ்சம் கஷ்டம். மத்தபடி சாப்பாடு எல்லாம் சூப்பரா இருக்கும்"னு சொல்லிட்டே சாப்பிட்டுட்டு இருந்தாங்க.

ஒரு வழியா ஆர்டர் வாங்குறவரைக் கூப்பிட்டு சிக்கன் கொத்து பரோட்டா ஆர்டர் சொன்னா அது இல்லைன்னுட்டார். சரின்னு அரை மனசோட வேற ஆர்டர் பண்ணிட்டு வெயிட் பண்ணிட்டு இருந்தோம்.

"நான்ஆசைப்பட்டு சாப்பிடலாம்னு நெனைச்சு வந்தேன் .......சிக்கன் கொத்து பரோட்டா இல்லையே. இப்போ ஆர்டர் எடுத்துட்டு போய் எப்ப கொண்டு வருவாய்ங்களோ"ன்னு இவர் கிட்ட பொலம்பிட்டு இருந்தேன்.

எதிர்ல உக்கார்ந்திருந்த லேடி அவங்க ஆர்டர் பண்ணி வாங்கி வச்சிருந்த சில்லி பரோட்டாவை அப்போ தான் சாப்பிட ஆரம்பிச்சவங்க ,அந்த பிளேட்டை என் பக்கம் லேசா நகர்த்தி இதை சாப்பிடுங்க. நல்ல டேஸ்ட்டா இருக்குன்னு சொல்ல,

நான் ரொம்பப் பெருந்தன்மையா "அய்யய்யோ பரவால்ல மேடம். நீங்க ஆசைப்பட்டு ஆர்டர் பண்ணிருப்பீங்க. நீங்களே சாப்பிடுங்க"ன்னு சொல்லவும் ஒரு செகண்ட் முழிச்சுட்டு அப்புறம் "இல்லங்க இதை ஆர்டர் பண்ணி சாப்பிடுங்கன்னு சொன்னேன்"னு சொல்லிட்டு கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக்கிட்டாங்க. நான் அசடு வழிஞ்சுட்டே

"ஹிஹி"

### என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா

பக்கத்து வீட்டு கிசு கிசு

மாடியில காயப் போட்ட துணிகள எடுக்கப் போகும் போது பக்கத்து வீட்டுல இருக்க காலேஜ் படிக்குற பொண்ணும் அவ ஃபிரண்டும் அங்கே நின்னு பேசிட்டு இருந்தாங்க.

"அனிதாவப் பார்த்தியாடி. எவ்ளோ ஸ்லிம் ஆகிட்டால்ல. . . நானும் வெயிட் குறைக்க டிரை பண்ணப் போறேன்டி. ஸ்விம்மிங் போலாமா?"

"ஹேய். . . . ஸ்கின் கருத்துடும்டி"

"அப்ப ஜிம் போகலாமா?"

"அது பாதியில நிறுத்திட்டா இன்னும் வெயிட் போடும்"

"தினமும் கொள்ளு சாப்பிடலாமா?"

"முதல் நாள் ஊற வச்சு மறுநாள் வேக வச்சு சாப்பிடலாம். ஆனா அந்த தண்ணீ சகதி மாதிரி இருக்கும். உனக்கு டேஸ்ட் பிடிச்சா கண்டின்யூ பண்ணு"

"சகதி மாதிரியா. ...... அய்யிய்ய வேண்டாம். சொல்லும் போதே என்னவோ போல இருக்கு"

"வேற டிரை பண்ணு"

" ம்ம்ம்...... கெல்லாக்ஸ் சாக்கோஸ் சாப்பிட்டுப் பார்க்கட்டுமா?"

"அது வேக வச்ச நாய்த்தோல வெட்டி வச்ச மாதிரில்ல இருக்கும் "

என்னாது. . . . .நாய்த் தோலா. , . "உவ்வே''

ரெண்டு பேரும் என் பக்கம் திரும்பி 
"என்னாச்சுக்கா"

"ஒண்ணுமில்லப்பா"

"ஹூம். . . .வேற என்ன தான் டி பண்றது"

"ம்ம்ம்ம். . . . நீ முதல்ல இவ ஃபிரண்ட்ஷிப்ப கட் பண்ணு"ன்னு மனசுக்குள்ளயே நினைச்சுக்கிட்டேன்.

பின்ன. . . . . . ஏதாச்சும் உருப்படியா யோசனை சொன்னா நாமளும் ஃபாலோ பண்ணலாமேன்னு பார்த்தா. . . , . . வெட்டி நாயம் பேசிட்டு இருக்குதுக பக்கிகன்னுட்டு விறுவிறுன்னு இறங்கி வந்துட்டேன்

உடல் பருமன்


தி.நகர் போயிருந்தோம். தவிர்க்க முடியாம ரங்கநாதன் தெருவைக் கடந்து போக வேண்டியிருந்தது. அவ்வளவு கூட்டத்துலயும் கொஞ்ச தூரம் முன்னாடி நின்னு ஏதோ நோட்டீஸ் குடுத்துட்டு இருந்த ஒருத்தர் வேகவேகமா முன்னாடி வந்து என்கிட்ட நோட்டீஸ் குடுக்க முண்டியடிச்சுட்டு வந்தார்.

எனக்கு நோட்டீஸ் வாங்க விருப்பம் இல்லாததாலயும் ரெண்டு கையிலயும் பைகள் வச்சிருந்ததாலயும் எட்டி வாங்க முடியல. அவரோ விடாப்பிடியா நீட்டிக்கிட்டே நடந்து வந்துட்டு இருக்க எனக்கு எரிச்சலாகவும் அதே சமயம் பாவமாவும் இருந்தது.

"ஏதாச்சும் கம்ப்யூட்டர் கோர்ஸ்சுக்கான டீட்டெய்ல்ஸ் இல்லேன்னா ஜவுளிக் கடை, நகைக்கடைகளோட தீபாவளி ஆஃபர் பத்தி இருக்கும். என்னையப் பார்த்தா காலேஜ் ஸ்டூடண்ட் (!!!!!!!) மாதிரி தெரியுதோ இல்ல நெறைய பர்ச்சேஸ் பண்ற மாதிரி தெரியுதோ இவ்ளோ கூட்டத்துலயும் தேடி வந்து என்கிட்ட நோட்டீஸ் குடுக்குறாரு பாருங்க"ன்னு கொஞ்சம் பெருமையா இவர் கிட்ட அலுத்துக்கிட்டே "சரி வாங்கிக்கோங்க"ன்னு சொன்னதும் இவரும் வாங்கிக்கிட்டாரு.

வாங்கிப் படிச்சதும் ஒரு மாதிரி சிரிச்சுக்கிட்டே தலையைத் திருப்பிட்டாரு. "குடுங்க அந்த நோட்டீச பார்ப்போம்"னு சொன்னேன். இவர் மறுபடியும் சிரிச்சுக்கிட்டே "வீட்டுக்குப் போய் பொறுமையா பார்க்கலாம் வா"ன்னு சொன்னாரு.

"அப்டீன்னா ஏதோ ஜவுளிக்கடை நகைக்கடை ஆஃபர் தான் போல.நான் பார்த்தா அங்க போகணும்னு சொல்லுவேன்னு தான நோட்டீச குடுக்க மாட்டேங்குறீங்க. எனக்குத் தெரியும்"னு நான் கண்டுபிடிச்சதைச்(???) சொன்னேன்.

அவர் சிரிச்சுட்டே நோட்டீசை கசக்கிய எறியப் போக, நான் வலுக்கட்டாயமா அவரை நிறுத்தி கையில இருந்த பைகளையெல்லாம் இறக்கி வச்சுட்டு நோட்டீசைப் பிடிங்கிப் படிச்சுப் பார்த்தா 



"ஙே" 

"உடல் பருமன். . . . குறைப்பது எப்படி?"

இதுக்குத்தான் கூட்டத்துல தேடி வந்து நோட்டீஸ் குடுத்தாய்ங்களா  அடிங்ங்ங்ங்ங்ங்ங்

முத்துமாரியம்மன் திருக்கோவில்

பக்கத்து தெருவில் இருக்கும் கோவிலுக்குப் போயிருந்தேன். நுழையும் போதே நிறைய வித்தியாசங்கள் தென்பட்டாலும் ஒரு ஆர்வத்திலும் பக்தியிலும்(!!!!!) உள்ளே போய் விட்டேன்.

முதலில் கண்ணில் பட்ட கடவுள் பெயர் ”மோகன் - சுஜாதா , எண்.754’”. அப்படியே அதிர்ச்சியாகி பார்வையைக் கொஞ்சம் கீழே கொண்டு போக “பால கணபதி”என்று போனால் போகுதென்று சிறிய எழுத்தில் எழுதப்பட்டிருந்தது. அய்யோ பாவம் என்றவாறே நகர்ந்தால் அடுத்து இருந்தவர் “பால முருகன்”. ”மோகன் - சுஜாதா” கொடுத்த அதிர்ச்சியில் கொஞ்சம் முன்னேற்பாடாக நாலா பக்கமும் பார்வையை வீசியதன் பலனாக இவர் பேரை முதலில் கண்டுபிடித்ததை எண்ணி மகிழ்ந்தேன்.

அந்த சந்தோஷத்தோடு ஒவ்வொரு சந்நிதானமாகப் போய்ப் பார்த்ததில் ஒரு விஷயம் தெளிவாகத் தெரிந்தது. இந்தக் கோவில் சாதாரண(???) கோவில் இல்ல. பழமையான கோவில்களின் கட்டட அமைப்பும், சிற்பங்களும் எப்படி அந்தக் கால மனிதர்களின் கலை, பண்பாடு,பழக்கவழக்கங்கள நமக்கு தெரியச் செய்ததோ அதே மாதிரி இந்தக் கோவில் தற்கால/ சமகால மனிதர்களின் வாழ்வியலைத் தெளிவாகச் சொன்னது.
இரும்புக் கதவு போட்டுப் பூட்டி வைக்கப்பட்டிருந்த சண்டிகேஸ்வரருக்கு சற்றுப் பின்னால் வலப் பக்கமும் இடப்பக்கமும் தற்கால மனிதன் தண்ணீர் எடுக்கப் பயன்படுத்தும் பிளாஸ்டிக் குடங்கள் சிவப்பு மற்றும் பச்சை வண்ணத்தில் (வாவ்....வாட் எ கலர் காம்பினேஷன்) அருள்பாலித்துக் கொண்டிருப்பது வேறெந்தக் கோவிலிலும் காணக் கிடைக்காத கண்கொள்ளாக் காட்சியாகும்.

சண்டிகேஸ்வரருக்கு சற்றும் சளைத்தவர்களில்லை இவர்கள் என்பது போல நவக்கிரகங்கள் நாலா பக்கமும் இரும்புக் கம்பிகளால் கதவு போட்டுப் பாதுகாப்பாகப் பூட்டப்பட்டிருந்ததன் காரணம் நான்கு மூலையிலும் வைக்கப் பட்டிருந்த அலுமினியம், எவர் சில்வர் போன்ற கோவில் பயன்பாட்டுப் பாத்திரங்கள் தான்.

சின்னதாய் ஒரு மண்டபம். அதன் மேற்கூரையில் இரண்டு ஃபேன்கள் சுழன்று கொண்டிருக்க டைல்ஸ் பதிக்கப்பட்ட தரையின் மீது நான்கு வேட்டித் துணிகள் விரிக்கப்பட்டு சுடுசோறு ஆற வைக்கப்பட்டிருந்தது. அதைச் சுற்றி வந்த சில ஏழைக் குழந்தைகளைக் கையில் உள்ள நீண்ட குச்சியால் விரட்டிக் கொண்டிருந்த பாதுகாவலரின் கடமையுணர்ச்சியைக் கண்டும் காணாமல் நின்று கொண்டிருந்தார் ”உண்ணாமுலை சமேத அண்ணாமலையார்”.

அரசமரத்தடியில் இருந்த புற்றுக்கோவிலைச் சுற்றிச் சிறிதும் பெரிதுமாய் நாக சிற்பங்கள் விதவிதமாய் காணக் கிடைக்க அவற்றோடு சேர்த்து ,கோவில் பயன்பாடு போக எஞ்சியிருந்த இரு முழு டைல்ஸ் கற்களின் பின்பக்கம் மஞ்சள் பூசி மொழுகி குங்குமம் இட்டிருந்த தமிழனின் பக்திக்கு எல்லையே இல்லை.

பிரம்மா,அய்யப்பன், ஆஞ்சநேயர், சீனிவாசப்பெருமாள், கால பைரவர் போன்ற தனி சந்நிதானக் கடவுளர்களின் கருவறைக்குள் சுவற்றின் மேல் அறையப்பட்டிருந்த ஆணிகளில் தினுசு தினுசாய்ப் பைகள். அவற்றில் பளபளப்பான துணிகள் பிதுங்கித் தொங்கிக் கொண்டிருந்தன.

ஆரத்தித் தட்டை ஒரு கையால் சுற்றிக் கொண்டு மறு கையால் மொபைல் பேசிக் கொண்டிருந்த அர்ச்சகரின் லாவகம், நெரிசல் மிகுந்த பரபரப்பான சாலையில் ஒரு கையில் பைக் ஹேண்ட்பாரையும் மறுகையில் செல்ஃபோனில் பேசியபடியும் வண்டியோட்டுபவர்களை நினைவு படுத்தியது.

எல்லாக் கடவுள்களையும் ஒன்று விடாமல் சேர்த்துக் கலவை கட்டிக் கட்டப்பட்டிருந்த கோவிலின் முகப்பில் எழுதப் பட்டிருந்த பெயர் “முத்துமாரியம்மன் திருக்கோவில்”. திருக்கோவிலின் பெயர்க்காரணம் இறுதி வரை தெரியவில்லை.

இதனால் அறியப்படும் நீதி யாதெனில் கோவிலுக்குப் போனோமா சாமியக் கும்புட்டோமோ வந்தோமான்னு இருக்கணும். வேலைவெட்டி இல்லாம ஒவ்வொண்ணா உத்துப் பார்த்துட்டு இருந்தா எல்லாமே இப்டி தான் தெரியும்

கையெழுத்து

கையெழுத்து .....

ஒரு கையெழுத்துப்போட்டியின் அறிவிப்பை நாளிதழ் ஒன்றில் காண நேர்ந்தபோது மனதில் தோன்றியவற்றை இங்கே எழுதி இருக்கிறேன். சிலேட்டுக்களில் குச்சிவைத்து அப்பா என் கை பிடித்து எழுதப்பழக்கிய ஆரம்ப நாட்களில்  இன்னும் மங்காமல் நினைவில் இருக்கிறது. அப்பாவின் கையெழுத்து அழகாக இருக்கும்.அவர் பயிற்சியினாலோ என்னவோ எனக்கும் அழகான கையெழுத்து வாய்த்தது வரமன்றி வேறில்லை.குச்சி, பென்சிலில் ஆரம்பித்து மை பேனா, பால்பாயிண்ட் பேனா, ஜெல் பேனா என எழுதுகோள்கள் எவ்வளவோ மாறிவிட்டன. தற்போது மறுபடி தொன்று தொட்ட எழுத்து முறையான ஆற்றுமணலில் கைலிரலால் எழுதிய பழக்கம் போல தொடுதிரை மூலம் எழுதும் வசதிகள் வந்துவிட்டாலும் கையெழுத்து என்பது இன்னும் தனித்தன்மை வாய்ந்த விஷயமாகவே உள்ளது. 

பள்ளிக்காலங்களில் பேனாக்கள் கையெழுத்துக்கு பெரும்பங்கு வகித்ததையும், விதவிதமான பேனாக்கள் உபயோகிப்பதே அந்த காலகட்டங்களில் மனதுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும்உற்சாகத்தையும் பெருமையையும் தந்ததை யாரும் மறுக்க முடியாது. பேனாக்களில் எழுதும்போது எழுத்து தடிமனாக இருக்க பேனா முனைகளை அவ்வப்போது தரையிலோ, மேசையிலோ சற்றுஅழுத்தி மிக லேசான ஒரு வளைவை ஏற்படுத்தி அதன்பின் எழுதுவது என் பழக்கம். அப்படிவளைக்க முயலும் பொது சில சமயம் பேனா முனை உடைந்து அப்பாவிடம் அடி வாங்கியஅனுபவமும் நிறையவே உண்டு. பள்ளித்தேர்வு காலங்களில் பலமுறை தேர்வு எழுதிக்கொண்டுஇருக்கும்போதே பேனா முனை உடைந்து மாற்றுப்பேனா இன்றி அழுது, பின் வேறு யாரிடமாவதுஇருந்து தேர்வு எழுதிய நாட்களும் மறக்க முடியாதவையே. 

நன்றாக பழக்கப்பட்ட பேனாக்கள் நம் நெருங்கிய நண்பர்கள் போலத்தான்.தொலைந்து போகும் சமயங்களில் நம்மை நிலைகுலைய வைத்துவிடும். புதிய பேனாக்களை செல்லப்பிராணிகள் போல மெல்ல மெல்ல நம் வசப்படுத்தி நம் விருப்பத்திற்கேற்றவாறு எழுதவைத்தல் என் வரையில் ஒரு கலையே. தமிழ்ப்பாடத்தில் நான் எப்போதும் அதிக மதிப்பெண் பெறுவதற்கு முக்கிய காரணம் என் கையெழுத்து தானென்று என் வகுப்பு தோழிகள் என்னிடம் கூறுவதுண்டு. வகுப்பு ஆசிரியர்களின் பாராட்டையும் பெற்ற அக்காலங்கள் நினைக்கும் போதெல்லாம் பெருமை கொள்ள செய்கின்றது.

எப்போதும் என் கைப்பையில் இரண்டுக்கும் மேற்பட்ட பேனாக்கள் இருக்கும்.விதவிதமான பேனாக்கள் எப்போதும் என்னைக் கவர்பவை. தேவையான பேனாக்கள் இருக்கும் பட்சத்தில்கூட அழகான பேனாக்களை எங்கு கண்டாலும் வாங்கி வைத்துக்கொள்ளும் பழக்கம் எனக்கு உண்டு.சட்டைப்பையில் பேனா வைத்திருக்கும் ஆண்கள் எப்போதும் என் மரியாதைக்குரியவர்கள்.

”கையெழுத்து அழகாக இருந்தால் தலையெழுத்து நன்றாக இருக்காது “ என்றுமுன்பெல்லாம் கூறுவார்கள். தற்போது கையெழுத்து அதிகம் பயன்பாடு இல்லாத வேளைகளில் இந்தகூற்றே அர்த்தமற்றது என்று பலர் கூறக் கேட்கிறேன். பக்கம் பக்கமாக தட்டச்சுசெய்ய பழகிக்கொண்ட போதிலும் பேனா பிடித்து எழுத வாய்க்கும் குறைவான சந்தர்ப்பங்கள் மனதுக்கு எப்போதும் நெருக்கமாகின்றன. என் கையெழுத்து எனக்கு தன்னம்பிக்கையையும் பெருமையையும் தந்திருப்பது மறுக்க முடியாத உண்மை.

சாப்பிடலாம் வாங்க

சாப்பிடலாம் வாங்க ....

சாப்பிடுறதப் பத்திப் பேசுறது என்ன அவ்வளவு முக்கியமான விசயமான்னு கேட்டா .....என்னோட பதில் “இல்லையா பின்ன?” தொண்டை தாண்டிப் போனா டேஸ்ட் என்னன்னு உணர முடியாத இந்த சாப்பாட்டுக்குத் தான இவ்வளவு மெனக்கடுறோம். சாப்பாடு எப்படி இருந்தாலும் அதை ரசிச்சு ருசிச்சு சாப்பிடுறோமா இல்ல கடமைக்கேன்னு சாப்பிடுறோமாங்கிறது ஒவ்வொருத்தரைப் பொறுத்தும் மாறுபடும்......
 
தனியா உக்கார்ந்து சாப்பிடுறோமோ நாலைஞ்சு பேர் கூட சேர்ந்து உக்கார்ந்து சாப்பிடுறோமோ அது பிரச்சனையில்ல. எப்படி சாப்பிடுறோம்? ரசனையா
சாப்பிடும் சிலரைப் பார்த்தாலே நமக்கும் அந்த உணவை சாப்பிடணும் போல இருக்கும்.....
கோன் ஐஸ்கிரீமை கைகளில் வழிய வழியச் சுவைக்கும் சின்னப் பிள்ளைகள் நம்மளயும் சாப்பிடத் தூண்டுதில்லையா? நறுக்கிப் போட்ட மாங்காய் துண்டுகள்ல உப்பும் மிளகாப் பொடியும் தூவி ஒரு கடி கடிச்சு ஒரு கண்ணை மட்டும் இறுக மூடிச் சப்புக் கொட்டும் காலேஜ் பொண்ணப் பார்க்கும் போது நமக்கும் பல்லு கூசுதா இல்லையா? ஆமா தான.....அதான் விஷயம்....
 
பந்தியிலயோ, ஹோட்டல்லயோ அல்லது வேற ஏதாச்சும் பொது இடத்திலயோ மத்தவங்க கூட சேர்ந்து நாம சாப்பிடும் போது சோத்துல குழம்பை ஊத்தி மொத்தமா கான்க்ரீட் கலவை மாதிரி குழப்பி அடிக்காம கொஞ்சம் கொஞ்சமா பிசைஞ்சு சாப்பிடுறவங்களையும் , ரசம், தயிர், மோர் போட்டு சாப்பிடும் போது மொத்தமா சேர்ந்து பிசைஞ்சு (இப்ப மட்டும் கான்க்ரீட் கலவை இல்ல ஹிஹி) சாப்பிடுறவங்களையும், ரெண்டாவது தடவ கேட்டா கெடைக்காதுன்னு தெரிஞ்சும் சத்தம் (சண்டை!!!!) போட்டு அப்பளம் வாங்கி வேடிக்கை பார்குறவங்களப் பெருமையா/நக்கலா ஒரு பார்வை பார்த்துட்டு முழு அப்பளத்தையும் பாயாசத்துல நொறுக்கிப் போட்டு சாப்பிடுறவங்களையும் பார்த்தா ”என் இனமடா/டி நீ”-ன்னு மனசுக்குள்ள தோணுதுல்ல......”
 
ஆனா சிலர் இருக்காங்க.....பக்கத்துல உக்கார்ந்து அவங்க சாப்பிடுறதப் பார்த்தா நமக்கு எந்திரிச்சு ஓடிரலாமான்னு இருக்கும்....டீ காஃபி குடிப்பாங்க பாருங்க...சர் புர்ருன்னு எரும மாடு ஊறத்தண்ணியக் குடிச்ச மாதிரி.... எங்க ஆஃபீசுல புதுசா சேர்ந்த மேனேஜர் ஒருத்தரோட காஃபி குடிக்க நேர்ந்த போது மனுசன் சர்ன்னு சத்தத்தோட காஃபி குடிக்க, நான் அதை விட சத்தமா
சிரிச்சுட்டேன்.... அன்னையில இருந்து கடைசி வரைக்கும் அவருக்கும் எனக்கும் ஆகவே
ஆகாது. என்னை எப்போ பார்த்தாலும் முறைப்பாரு (பதிலுக்கு நானும் நமுட்டு சிரிப்போட
;) )...
 
கையால பிசைஞ்சு சாப்பிடும் போது சாணி தட்டி சுவத்துல அப்பப் போற மாதிரி அஞ்சு விரல்லயும் சாப்பாடு ஒட்டியிருக்கும் சிலருக்கு. பேனா, பென்சில் பிடிச்சு எழுதும் போது ரெண்டு விரல்ல தான் பிடிச்சு எழுதுறோம். அஞ்சு விரல் இருக்குன்னு மொத்தமாவா பிடிச்சு எழுதுறோம் ??. அதனால சாணி மாதிரி பிசையாம உள்ளங்கையில  ஒட்டாம  விரல்கள்ல மட்டும் படும்படி பிசைஞ்சு சாப்பிடணும்.

இன்னும் சிலர் சாப்பிடும் போது சுவத்துல பல்லி சத்தம் போடுற மாதிரி சப்பக் சப்பக்குன்னு சத்தமா மென்னுட்டு சாப்பிடுவாங்க. நமக்கு சப்புன்னு ஒரு அப்பு அப்பணும் போல இருக்கும். எரும எரும்....நீ சாப்பிடுறது உனக்கு தெரிஞ்சா போதாதா? ஊருக்கே தெரியணுமான்னு கேக்கணும் போல இருக்கும். ஒரு சாக்லேட் விளம்பரத்துல கை வாயெல்லாம் ஒட்டிக்கிட்டு ஒத்தை விரல்ல நக்கி நக்கி (இதான் சுத்த தமிழ் வார்த்தை) சாப்பிடுற அழகைப்(!!!!) பார்த்தா எனக்கென்னமோ அருவெறுப்பு தான் வருது.
 
சாப்பிடும் போது ஃபோன் வந்ததுன்னா எதிர் முனைல இருக்கவங்களுக்கு நீங்க சாப்பிட்டுட்டு இருக்கீங்கன்னு தெரிய வேண்டிய அவசியம் இல்ல. அப்டியே மென்னுட்டு இருக்க வாயோட பேசும் போது கேக்குறவங்களுக்கு எரிச்சலாவும் இருக்கும், சமயத்துல தெளிவாவும் புரியாது. சின்னப் பிள்ளைங்க தானாவே சாப்பிட ஆரம்பிக்கும் போது தட்டுல போட்ட சாப்பாட்டுல பாதி வெளிய சிந்திக் கெடக்கும். பிள்ள  எம்புட்டு அழகா தானாவே சாப்பிடுது பாருன்னு நமக்கு பெருமையா இருக்கும். அதுவே பெரியவங்க சிந்திச் சிதறி சாப்பிட்டா பார்க்க நல்லாவா இருக்கும். யோசிங்க.....யோசிங்க.

உடை உடுத்தியிருக்கும் நேர்த்திக்கு அடுத்து ஒருத்தர் நாகரீகமா சாப்பிடுவது அவங்க மீதான மரியாதையை அதிகரிக்கும். மனதுக்கு நெருக்கமானவங்க கூட இருக்கும் நேரங்கள்ல முக்கியமானது ஒண்ணா உக்கார்ந்து சாப்பிடும் நேரமும் தானே. அதனால  நல்லா ரசிச்சு சாப்பிடுவோம். ருசிச்சு சாப்பிடுவோம். நாகரீகமா சாப்பிடுவோம். நாசூக்கா சாப்பிடுவோம்.

அஹம் பிரம்மாஸ்மி

”அஹம் பிரம்மாஸ்மி”

ஒரு வார்த்தை ...
ஒரு புன்னகை ....
ஒரு மவுனம்.....
ஒரு ஜனனம் 
ஒரு மரணம்.....
வாழ்க்கையில் சில திருப்பங்களை சட்டென நிகழ்த்திச் சென்று விடும்.......

ஒரு பாடல் .......ஒரு குரல்......
ஒரு  மனநிலையை முற்றிலும் மாறுபட்ட இன்னொரு மனநிலைக்கு எடுத்துச் செல்லுமா ?
ஆம் என்று தான் சொல்ல வைத்திருக்கிறது இந்தப் பாடல்...இந்தக் குரல்.....

நாடி நரம்புகளை அதிர வைத்து....குரலால் வசியப் படுத்தி தொண்டை தாண்டியும் இனித்து உயிர் வரை ஊடுவிச்சென்று கண்ணீர் வழிய வைத்திருக்கும் இந்தப் பாடலை கணக்கேயில்லாமல் கேட்டுக் கொண்டேயிருக்கிறேன்......

என்ன சொல்கிறது இந்தப் பாடல்....அர்த்தம் புரியவில்லை ......வார்த்தைகள் வாயில் நுழையவில்லை....ஆனாலும் என்ன ? என்னிடம் சொல்ல ஏதோ ஒன்றிருக்கிறது இந்தப் பாடலில்....உங்களுக்குப் புரியாதிருக்கலாம்......

ஆரம்பமே அமர்க்களமான உடுக்கை சத்தம்.....

அதையடுத்து கோரஸான குரல்கள்.....
“ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்
ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்”

”ஓம் பைரவ ருத்ராய
மஹா ருத்ராய
கால ருத்ராய
கல்பாந்த ருத்ராய
வீர ருத்ராய
ருத்ர ருத்ராய
கோர ருத்ராய
அகோர ருத்ராய
மார்த்தாண்ட ருத்ராய
அண்ட ருத்ராய
பிரமாண்ட ருத்ராய
சண்ட ருத்ராய
ப்ரசண்ட ருத்ராய
தண்ட ருத்ராய
சூர ருத்ராய
வீர ருத்ராய
பவ ருத்ராய
பீம ருத்ராய
அதல ருத்ராய
விதல ருத்ராய
சுதல ருத்ராய
மஹாதல ருத்ராய
ரஸாதல ருத்ராய
தலாதல ருத்ராய
பாதாள ருத்ராய
நமோ நமஹா

 ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம்
ருத்ர நாமம் பஜேஹம்
ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம்
ருத்ர நாமம் பஜேஹம்

வீர பத்ராய அக்னி நேத்ராய
கோர சௌகாரஹா

சகல லோகாய சர்வ பூதாய
சத்ய சாஷ்டாத்கரா
சம்போ சம்போ சங்கரா



ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம்
ருத்ர நாமம் பஜேஹம் பஜேஹம்

ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்
ஓம் நமஸ்வாமாயச ருத்ராய
ஜநமஸ்தமரயச ருடாய
ஜனமஷரிங்காயதபஸ்துபதஜே ஜநமஹுக்ராயச
பீமாய ஜனமோ ஹக்ரே வதாய சதுரே வதாய
ஜனமோ
ஹந்த்ரே ஸஹமியதெ தனமோ
வருக்ஷே ப்யோஹரிகேஷே ப்யோநமஸ்தராய
நமஸ்ஷம்பவே தம யோபவேச்ச நமஷங்கராய தபயஷ்கராய தனமஷிவாய தஷிமதவாதச்சா


அண்ட பிரம்மாண்ட கோடி
அகில பரிபாலனா
சூரனா ஜெகத் காரனா
சத்ய தேவ தேவ ப்ரியா
வேத வேதாந்த சாரா
யக்ன யக்யோமையா
நிஷ்டரா துஷ்ட நிக்ரஹா சப்த லோக சௌரசட்சனா

சோம சூர்ய அக்னி லோச்சனா
ஷ்வேத ரிசபவாஹனா
சூலபானி புஜக பூசனா
த்ரிபுலநாஸ ரக்க்ஷனா
யோமகேச மகாசேன ஜனகா
பஞ்சவத்ற பரசுஹஸ்த்த நமஹா

ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம்
ருத்ர நாமம் பஜேஹம் பஜேஹம்

ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம்
ருத்ர நாமம் பஜேஹம் பஜேஹம்

கால த்ரிகால நேத்ர த்ரிநேத்ர சூல திரிசூல காத்ரம்
சத்ய பிரவாக நித்ய பிரகாஸ மந்த்ர ஸ்வரூப மாத்ரம்

நிஷ்ட பஞ்சராதி நிஸ்கலம் கோஹ
நிஜ பூர்ண போத ஹம் ஹம்
சத்ய காத்மாயம் நித்ய பரம்மோஹம்
ஸ்வப்ன ஹாஸ்மோஹம் ஹம் ஹம்

சத்ஷி ப்ரவாஹம் ஓம் ஓம்
மூல பிரவேயம் ஓம் ஓம்
அயம் பிரம்ஹாஸ்மி ஓம் ஓம்
அஹம் பிரம்ஹாஸ்மி ஓம் ஓம்
தனதன தனதன தனதன தனதன தன சஹச ஹத்ரசப்த
விஹரவி
டமடம டமடம டுபடுப டுபடுப சிவடப டுப
நாத விஹரவி

ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம்
ருத்ர நாமம் பஜேஹம் பஜேஹம்
ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம்
ருத்ர நாமம் பஜேஹம் பஜேஹம்

வீர பத்ராய அக்னி நேத்ராய கோர
சௌகாரஹா
சகல லோகாய சர்வ பூதாய சத்ய
சாஷ்டாத்கரா
சம்போ சம்போ சங்கரா

ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம்
ருத்ர நாமம் பஜேஹம் பஜேஹம்

...............................................................................................................................................................

ஒவ்வொரு முறையும் முழுப் பாட்டைக் கேட்டு முடிக்கும் போது மனம் லேசாகி ஒரு உற்சாக மனநிலைக்குப் போய் விடுகிறது.

ஏண்டி இந்தப் பாட்டையே திருப்பி திருப்பி கேட்டுட்டுருக்க.....என்ன
சாமியாராகப் போறியான்னு அம்மா கேக்குறாங்க .......

“அஹம் பிரம்ஹாஸ்மி”