Saturday 25 April 2015

டிராஃபிக் “ஆட்டோக்காரர்”

இன்று சனிக்கிழமையாதலால் வேளச்சேரி 100 அடி ரோடில் அளவுக்கதிகமான டிராஃபிக். எந்த நிமிடமும் பறக்கத் தயாராய் ஆக்ஸிலேட்டரை முறுக்கியபடி பரபரத்துக் கொண்டிருந்த இளைஞர் பட்டாளம், குறைந்தபட்சம் நான்கு பேரைக் கொண்ட மிடில்கிளாஸ் ஃபேமிலியைச் சுமந்தபடி  நிறைமாத கர்ப்பிணி போல திணறிக்கொண்டிருந்த டூவீலர்கள்  , வீக் எண்ட் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளக் கிளம்பிய பார்ட்டி மூட் பார்ட்டிகளை சவாரிகளாகக் கொண்ட ஆட்டோக்கள், பஸ்கள், கார்கள் என ஆளாளுக்குத் தெரிந்த மொழியில் அவரவர் இருந்த இடத்திலிருந்தே அவர்களுக்கு முன்னால் இருந்த டூவீலர், கார், ஆட்டோக்காரர்களைத் திட்டிக் கொண்டும் ஹாரன் அடித்துக்கொண்டும் ஒரு பெரும் யுத்தபூமி போலக் காட்சியளித்த அந்த இடத்தை விட்டு யாரும் ஒரு அடி கூட அசைய முடியாதபடி எல்லா வழிகளும் அடைபட்டுக் கிடக்க யாரும் எதிர்பாராமல் சட்டென்று ஒரு பக்கத்தில் வாகனங்கள் அனைத்தும் ஒழுங்குபடுத்தப்பட்டு விரைவாக நகரத்தொடங்கின.

அத்தனை நேரம் எங்கேயோ போயிருந்த டிராஃபிக் போலீஸ் தான் கடைசியில் வந்துவிட்டார் போல எனப் பெருமூச்சு விட்டபடி நாங்கள் வாகனங்கள் நகர்வதை கவனித்துக் கொண்டிருக்கும் போது தான் சாலையில் ஒரு ஓரத்தில் நின்றபடி வாகனங்களை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்த அந்த மனிதர் தென்பட்டார். 

உள்சட்டைக்கு மேல் பட்டன்கள் போடாத காக்கிச்சட்டை அணிந்து சாலையின் ஒருபக்கம் நின்றபடி கணீரென்ற குரலில் மறுபக்க வாகனங்கள் அனைத்தையும் ஒரு தேர்ந்த  டிராஃபிக்போலீஸின் லாவகத்தோடும் சைகையோடும் விரைவாகக் கடந்து போகும்படி ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்த அந்த மனிதர் ஒரு ஆட்டோக்காரர். ஆட்டுமந்தைகள் போல அத்தனை பேரும் அவரவர் இடத்தில் நின்றபடியே கத்திக்கொண்டிருக்க சாலையின் ஓரத்தில் சவாரிக்காக காத்துக்கொண்டிருந்த நேரத்தில் தான் அவர் இப்படி களத்தில் இறங்கியிருக்கிறார். யார் எப்படிப் போனால் என்ன என்று அவரும் கூட வேடிக்கை பார்த்துக்கொண்டோ அல்லது சவாரி ஏதும் கிடைத்தால் தானும் அந்த மந்தையில் ஒருவனாக வெறுமனே நின்றுகொண்டோ கூட இருந்திருக்க முடியும். ஆனால் அத்தனையையும் மீறி பொதுநலத்தோடு அவர் செய்த காரியத்தை நிச்சயம் வெறும் வார்த்தைகளால் மட்டுமே பாராட்டிவிட முடியாது.


எங்கள் பக்கம் வாகனங்கள் நகரத் தொடங்க நாங்களும் முன்னோக்கி அவரைக் கடந்த கணத்தில் ”தேங்க்ஸ் அண்ணா …சூப்பர்” என்று சத்தமாக நானும் உதயசங்கரும் கத்தியது கூட அவர் காதுகளில் விழுந்திருக்கவில்லை. 

பூனைக்கு மணி

இந்த தடவ ஊருக்குப் போனப்ப நான் படிச்ச பாலிடெக்னிக்ல வேலை பாக்குற ஒருத்தர்கிட்ட (எங்க பேட்ச் லேப் அட்டெண்டர்) இருந்து சில தகவல்கள் தேவைப்பட்டதால அவரை நேர்ல பார்க்கப் போயிருந்தேன். பாலிடெக்னிக்ல இப்போ எக்ஸாம் நடந்துட்டு இருக்கதால என்னை ஆஃபீஸ் ரூம் வெளியில வெயிட் பண்ணச் சொல்லியிருந்தார்.

கிட்டத்தட்ட பத்து வருஷம் கழிச்சு நான் படிக்குற பாலிடெக்னிக்கப் பார்த்தேன். நுழைவாயில் கிட்ட ஒரு ஓடை இருக்கும். அதுக்கு குறுக்க சின்னதா பாலம் கட்டியிருப்பாங்க அது மேல நடந்து/சைக்கிள்ள/பைக்குல/கார்ல தான் உள்ள போக முடியும்.  (கிட்டத்தட்ட அகழி மாதிரி) முன்வாசல் நுழைவுல பெரிய ஆர்ச்ல காலேஜ் பேர் எழுதியிருந்தாங்க. வாசல்லயே செக்யூரிட்டி ரூம். மெயின் கேட் பூட்டியிருக்க சைட்ல இருந்த சின்ன இடைவெளி வழியா என் வண்டியில உள்ள வந்தேன். 

செக்யூரிட்டி நிறுத்தி “மேடம்….எக்ஸாமைனரா”ன்னு கேட்க வண்டி ஸ்பீடை இன்னும் குறைச்சு “இல்ல ஓல்டு ஸ்டூடண்ட்டு”ன்னு பெருமையா(!!) சொல்லிட்டு ஆக்ஸிலேட்டரை முறுக்கி விட்டுப் பறந்தேன்.

மெயின் கேட்டுக்கும் பாலிடெக்னிக் நிறுவனர் சிலைக்கும் கிட்டத்தட்ட ரெண்டு கிலோ மீட்டர் தூரம் இருக்கலாம். ரெண்டு பக்கமும் காட்டுச் செடிகளா இருக்கும்/ இருந்தது. கொஞ்ச தூரத்துல ஒரு பெரிய கல்லு மேல மயில் உக்கார்ந்திருந்தது. வண்டிய நிறுத்தி ஃபோட்டோ எடுத்துக்கிட்டேன்.
நிறுவனர் சிலைக்கு இடது பக்கம் சுத்தி தான் காலேஜுக்குள்ள போகணும். வழியில ஃபர்ஸ்ட் இயர் லேப், மெக்கானிக்கல் லேப் அடுத்து சிவில் லேப் எல்லாம் கடந்து பசங்க சைக்கிள் ஸ்டாண்ட். எதிர்ல காலேஜ் லைப்ரரி. அதுக்கு அடுத்து தான் ஆஃபீஸ் இருக்கும்.  இப்போ சிலைக்கு வலது பக்கம் புதுசா ஆஃபீஸ் கட்டியிருக்காங்க. ஷெட் போட்டிருந்த இருந்த டூவீலர் ஸ்டாண்ட்ல வண்டிய நிறுத்திட்டு உள்ள போனேன். நான் பார்க்க வந்தவரின் பேரைச் சொல்லி விசாரிக்க அவர் இன்னும் அரை மணி நேரத்தில் வந்துடுவார்னு தகவல் சொன்னதும் வெளியே கிடந்த பெஞ்ச்சில் உக்கார்ந்து வெயிட் பண்ண ஆரம்பிச்சேன்.

உள்ளேயிருந்து மணி சாரின் குரல் கேட்டுச்சு. மணி சார் தான் எக்ஸாம்க்கு பணம் கட்டின ரசீது/ஹால் டிக்கெட் எல்லாத்துக்கும் இன்சார்ஜ். ரொம்ப நக்கல் பிடிச்ச ஆளு. எல்லா ஸ்டூடெண்ட்டும் அவர் கிட்ட பேசவே பயப்படுவோம். அவர்கிட்ட ஹால் டிக்கெட் வாங்குறதுக்குள்ள கிட்டத்தட்ட எக்ஸாம் எழுதுற அளவுக்கு டென்ஷன் ஆக்கி விட்ருவாரு. எத்தனையோ முறை அவரைப் பத்தி கம்ப்ளெயிண்ட் பண்ணினாலும் அந்த மணிக்குப் பூனை கட்டுற….ச்சே அந்தப் பூனைக்கு மணி கட்டுறதுக்கு ஆளே இல்லாமப் போச்சு.

மாறாத அதே நக்கல் குரலில் மணி சார் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தார்.

“நாளைக்கு எக்ஸாம வச்சிட்டு இன்னைக்கு ஹால் டிக்கெட் வாங்க வந்திருக்க…. அதுவும் உடனே பிரின்ஸ்பால் கையெழுத்து வேணும்னா எப்டி…அவர் ஊருக்குப் போயிருக்கார்….வர்றதுக்கு எப்படியும் 5 இல்லேன்னா 6 மணியாகிடும்”

”சார் …நான் ஃபோன் பண்ணிக் கேட்டுட்டு தான் வந்தேன். பிரின்ஸ்பால் 4 மணிக்கு வந்திடுவார்ன்னு சொன்னாங்க சார்”

“அப்டின்னு யாரு சொன்னா?” 

“ஆஃபீஸ்ல இருக்க லேண்ட் லைனுக்கு தான் சார் ஃபோன் பண்ணிக் கேட்டேன். யாரு பேசுனாங்கன்னு பேர் தெரியல சார்”

“யார் சொன்னாங்களோ அவங்க கிட்டயே போய் கேளு….”

”சார்…”

“நீ காலேஜ் முடிச்சுப் பத்து வருஷமாச்சு ….இன்னும் பாஸ் பண்ணாம இருந்துட்டு இங்க வந்து ஏம்மா எங்க உயிர வாங்கிட்டு இருக்க? இங்க வாய் பேசுறதெல்லாம் அரியர் க்ளியர் பண்றதுல காட்டு”

“ஆமா சார்…நான் ஃபர்ஸ்ட் இயர் கணக்குப் பாடத்துல ஃபெயிலாகி அரியர் வச்சிருக்கேன் தான். அதுக்கென்ன இப்போ?? இந்தப் பத்து வருஷத்துல நான் கரஸ்ல படிச்சு ரெண்டு டிகிரி வாங்கிட்டேன். சொந்தமா கம்பெனி வச்சி நடத்துறேன். மாசம் 40,000 சம்பாதிக்குறேன். ஆஃபீசுல என்கிட்ட 20 பேர் வேலை செய்றாங்க. இங்க ஃபெயிலான கணக்குப் பாடத்துல வர்ற ஒரு கணக்கு கூட எனக்கு இந்தப் பத்து வருஷத்து வாழ்க்கையில ஒரு தடவை கூட யூஸ் ஆகல….பிரின்ஸ்பால் கையெழுத்து இல்லேன்னா அஸிஸ்டென்ட் பிரின்ஸ்பால் கிட்ட கையெழுத்து வங்கிக்கலாம்ல…நான் அவர்கிட்டயே வங்கிக்குறேன் சார்”

உறுதியா தெளிவாப் பேசுன அந்தப் பெண் குரல் எனக்குப் பரிச்சயமான குரல்னு மண்டைக்குள்ள மணி அடிக்க சட்டுன்னு எழுந்து நிக்கவும் அந்தப் பெண் உள்ளே இருந்து வெளியே வரவும் சரியா இருந்தது. நேராக முகத்தைப் பார்த்து அடையாளம் தெரிஞ்சதும் பேர் என்னன்னு ரெண்டு நிமிஷம் குழம்பி என்னையும் அறியாம “ஹேய்ய்ய் உமா”ன்னு நான் சந்தோஷமாய்க் கத்த முன்னாடி நடந்துட்டு இருந்தவ திரும்பிப் பார்த்து புருவத்தை சுருக்கி கண்ணுக்குள்ள என்னை உள்வாங்கி அதே சந்தோஷக் குரலில் கூப்பிட்டா “ஏய்ய்ய் ஸ்ரீ”

”ஹேய்ய்ய் என்னடி …எப்டியிருக்க? எங்கேயிருக்க? லைஃப் எப்டிப் போகுது என்ன ஒரு சர்ப்ரஸ்ல….நம்பவே முடியலடி”ன்னு நான் சொல்லிட்டே போக அவள் பதிலுக்கு “நல்லாருக்கேண்டி…. இப்போ மதுரையில இருக்கேன். ரெண்டு பசங்க. சொந்தமா கடை வச்சிருக்கோம். லைஃப் சூப்பரா போகுது. நீ என்கேயிருக்க? ஆள் அடையாளமே தெரிலடி”

“ம்ம் நான் நல்லாருக்கேன்டி. சென்னைல இருக்கேன். இங்க ஒரு வேலையா மூர்த்தி சாரைப் பார்க்க வந்தேன்”

அவ அடுத்த கேள்வி கேக்குறதுக்கு முன்னாடி வைஸ் பிரின்ஸ்பால் பைக்ல லேப் பக்கம் போகவும் “ஏய்…இருடி …ரெண்டு நிமிஷத்துல வரேன்”ன்னு அவரைப் பார்த்து ஹால் டிக்கெட்ல கையெழுத்து வங்கிட்டு வரப் போனா.

நான் திரும்பவும் வெயிட் பண்ணுன இடத்துக்கே போகவும் நான் பார்க்க வந்தவர் எதிரே வரவும் சரியா இருக்க, நான் தேடி வந்த தகவல்களின் பிரிண்ட் அவுட்டை வாங்கிட்டு அவருக்கு தேங்க்ஸ் சொல்லிட்டு உமா போன பக்கமே பார்த்தபடி வண்டி நிறுத்தியிருந்த இடத்துக்குப் போய் அவளுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.   

கையெழுத்து வாங்கின ஹால் டிக்கெட்டை ஹேண்ட்பேக்குல போட்டபடி எங்கிட்ட வந்தவ ” வண்டியில வந்தியா? நான் ரெயில்வே ஸ்டேஷன் போய் டிரெயின பிடிக்கணும்டி. கிளம்பட்டுமா”ன்னு கேக்க “எரும….வண்டில ஏறு …ஸ்டேஷன்ல விடுறேன்”

 “நீ எப்ப டி டூவீலர் ஓட்டக் கத்துக்கிட்ட……லைசன்ஸ் இருக்கான்னு” கேட்டவள்ட்ட “ம்க்கும் லைசன்ஸ் வாங்கி எட்டு வருசம் கழிச்சு தாண்டி வண்டியே வாங்கிருக்கு”ன்னு சொல்லிட்டே வண்டியை நிறுத்தி “ஏய் இருடி …ஒரு ஃபோட்டோ எடுக்கலாம்னு” அவள் மொபைல்லயும் என்னோட கேமராவுலயும் எடுத்துக்கிட்டோம். சத்தமா பேசிக்கிட்டும் சிரிச்சுக்கிட்டும் மெயின் கேட்டைத் தாண்டினோம்.

பாலிடெக்னிக்கை விட்டு வெளியே வந்து மெயின் ரோட்டத் தொட்டு கொஞ்ச தூரத்தில் தள்ளு வண்டியில் நுங்கும் பதனியும் விற்குறதப் பார்த்து வண்டியை ஓரங்கட்டி ஆளுக்கொரு தொன்னையில பதனி குடிச்சு ரெண்டு பார்சல் நுங்கும் வாங்கியாச்சு. ராஜலட்சுமி தியேட்டர் பக்கத்துல ரயில்வே சிக்னல்ல போடாம இருந்த நல்ல நேரத்துல போனதால ஸ்டேஷனுக்கு சரியான டைமுக்கு போயாச்சு.  

எனக்கொரு பிளாட்ஃபார்ம் டிக்கெட்டும் அவளுக்கு மதுரைக்கு டிக்கெட்டும் எடுத்துட்டு டிரெயினுக்காகக் காத்திருந்த நேரத்துல அவ கிட்ட சொன்னேன் “உன்ன நெனைச்சா ரொம்பப் பெருமையாவும் சந்தோசமாவும் இருக்குடி. இந்தப் பத்து வருசத்துல கல்யாணம் பண்ணிக்கிட்டு குழந்தை பெத்து ரெண்டு டிகிரி முடிச்சு சொந்தமா பிஸினெசும் நடத்திட்டு இருக்க பாரு…யூ ஆர் ரியலி கிரேட் டி. படிக்கும் போது பார்த்த உமாவா இதுன்னு ஆச்சரியமா இருக்கு…. என்னப் போல நிறைய பேருக்கு நீ ஒரு முன்னுதாரணம்”

ஆமோதிக்குற மாதிரி ரெக்கார்ட் வாய்ல டிரெயின் பத்தின அறிவிப்பு கேட்டது…… தோள்ல மாட்டியிருந்த ஹேண்ட் பேக்க அட்ஜஸ்ட் பண்ணிட்டே டிரெயின் வரப்போற திசைய ஒரு முறை பார்த்துட்டு “போடி …நானாவது ரெண்டு டிகிரி வாங்குறதாவது….. கல்யாணம் ஆனதுல இருந்து இன்னைக்கு வரைக்கும் ஹவுஸ் வொய்ஃப் தான். இவரு போன மாசம் தான் துபாய்ல வேலைக்கு சேர்ந்துருக்காரு. ஃபேமிலி கஷ்டமெல்லாம் இல்ல….ஆனா பிள்ளைங்க படிப்புக்காக கொஞ்சம் பணம் சேர்க்க வேண்டிருக்கே அதான் போயிருக்காரு…. அப்பா இறந்த பிறகு அம்மா எங்கூட தான் இருக்காங்க. பிள்ளைங்க ரெண்டும் நல்லா படிக்குறாங்க. மாமியாரும் மாமனாரும் இவர் தம்பி வீட்ல இருக்காங்க. நான் சந்தோசமா இருக்கேன்….. கருமம் இந்த எக்ஸாம மட்டும் எழுதித் தொலைச்சு பாஸ் பண்ணிட்டா என் வீட்டுக்காரர் கிண்டல்ல இருந்து தப்பிச்சுடலாமேனு தான் இந்த தடவ எழுத வந்தேன்…. ஆனாலும் அந்த மணிக்கு ரொம்பத் தான் வாயிடி….. காலேஜ்ல படிக்கும் போதே அந்தாளப் பிடிக்காது …இன்னைக்கு தான் சான்ஸ் கெடைச்சது. அதான் ரெண்டு வாங்கு வாங்குனேன்… சரிடி டிரெயின் வந்திருச்சு…நான் வரேன்…மதுரையில இறங்கிட்டு ஃபோன் பண்றேன்”ன்னுட்டுப் போனா….


டிரெயின் என்னைக் கடந்து கடைசிப் பொட்டி கண்ல இருந்து மறையுற வரைக்கும் அவ போன திசையவே பார்த்துட்டு இருந்தேன் ….. தக்காளி இந்த வருஷமாச்சும் நானும் அரியரைக் க்ளியர் பண்ணிடனும் ;) :p 

Thursday 23 April 2015

சுயமரியாதைப் பெண்கள்

கீழ்வீட்டுப் பெண்மணி ஒருவர் இன்று காலையிலேயே உரத்த குரலில் ஃபோனில் பேசிக்கொண்டிருந்தார். எவ்வளவு உரக்க என்றால் கீழ்த்தளத்திலுள்ள அவர் வீட்டின் பால்கனியில் நின்று கொண்டு பேசியது இரண்டாம் தளத்தில் செடிக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த என் காதுகளில் சன்னமாக விழும் அளவிற்கு. அவர் பேசியதின் (!!!) மன்னிக்க ..... கத்திக் கொண்டிருந்ததின் சாராம்சம் இது தான். அவர் வீட்டில் சமையல் மற்றும் இதர வேலைகளைச் செய்ய புதிதாய் வரப்போகும் பெண்மணி விதித்த நிபந்தனைகள் குறித்து ஃபோனில் வேறொருவருடன் அவர் விவாதித்துக் கொண்டிருந்தார்.

1) அன்றைய சமையலுக்கான பட்டியலை முதல் நாளே தெரிவித்து விட வேண்டும்.
2) சமையல் செய்யும் நேரத்தில் வீட்டினர் தொந்திரவு இருக்கக் கூடாது.
3) எக்காரணம் கொண்டும் பட்டியலில் சொல்லப்படாத உணவு கூடுதலாக சமைக்கப்பட மாட்டாது.
4) வீட்டினரின் உள்ளாடைகள் தவிர மற்றவை வாஷிங் மெஷினில் துவைத்து தரப்படும்.
5) சமைக்க  உபயோகிக்கும் பாத்திரங்கள் தவிர எச்சில் பாத்திரங்கள் கழுவப்பட மாட்டாது.
6) ஞாயிற்றுக் கிழமை விடுமுறை.
7) மாத சம்பளம் பிரதி மாதம் 5ம் தேதி கொடுக்கப்பட வேண்டும்.

ஃபோனில் இவர் கத்திக்கொண்டிருந்தது வேலைக்கு வரப்போகும் பெண்மணியைப் பரிந்துரைத்த உறவுக்கார பெண்ணிடம் தான். அதற்கு மேல் நில்லாமல் என் வேலை முடிந்து வீட்டுக்குள் வந்தேன்.

மனதுக்குள் என் அலுவலக நாட்கள் நினைவுக்கு வந்தது. அதுவொரு கட்டுமானக் கம்பெனி. தினமும் பல்வேறு ஆட்கள் வந்து போகக்கூடிய இடம். ஆஃபீஸ் பாயில் இருந்து எம்.டி வரை அனைவரும் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருக்கும் சூழல்.

ஒருநாள் ஹவுஸ்கீப்பிங் அக்காள் விடுமுறை எடுத்த தினத்தில் ஆஃபீஸில் பெரிய அளவிலான மீட்டிங் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சரியாக மீட்டிங் ஆரம்பித்த நேரத்தில் ஆஃபீஸ் பாய் ஒரு அவசர வேலையாக பக்கத்திலிருக்கும் ஆர்க்கிடெக்ட் ஆஃபீசுக்குச் சென்று விட மீட்டிங்கில் கலந்துகொண்ட அனைவருக்கும் தேநீர் எடுத்துச் செல்ல ஆளில்லாமல் போனது.

இண்டர்காமில் ரிசப்ஷனிஸ்டை அழைத்த எம்.டி அனைவருக்கும் தேநீர் கொண்டு வருமாறு பணிக்க அவரோ ஆளின்றி திணறிப் போய் விட்டார். ரிஸப்ஷனிஸ்ட் எம்.டியிடம் மிகுந்த பயந்த சுபாவம் கொண்டவர். வேலைக்குச் சேர்ந்து வெகு சொற்ப மாதங்களே ஆகியிருந்தது. அத்தோடு அப்போது நிறைமாத கர்ப்பிணி வேறு. அக்கவுண்ட் செக்‌ஷனில் இருந்த அத்தனை பேரும் ஆடிட்டிங் வேலையில் பிஸியாக இருந்ததால் எவரையும் அழைக்க முடியவில்லை போலும். எனக்கு போனில் அழைத்து விஷயத்தைச் சொன்னதோடு வேறு வழியின்றி தேநீர் கோப்பைகளை அவரே எடுத்துச் செல்லப் போவதாகவும் ஏதேனும் தொலைபேசி அழைப்புகள் வந்தால் என்னுடைய கேபினில் இருந்தே அவற்றை அட்டெண்ட் செய்து பேச முடியுமாவெனவும் கேட்டார்.

அவரைச் சற்றுப் பொறுத்திருக்கச் சொல்லிவிட்டு ஆஃபீஸ்பாயின் நம்பருக்குப் போன் செய்து உடனடியாய் அவரை ஆஃபீசுக்கு வரச்சொல்லி பணித்து விட்டு எம்.டியிடம் இண்டர்காமில் காஃபி மெஷினில் சிறு கோளாறு இருப்பதாகவும் வெளியே சென்றிருக்கும் ஆஃபீஸ் பாய் வந்தவுடன் தேநீர் வாங்கி வரச் செய்து அனுப்புவதாகவும் தகவலளிக்கச் சொன்னேன்.

அவரும் அப்படியே செய்துவிட, வெகு சில நிமிடங்களிலேயே விரைந்து வந்த ஆஃபீஸ் பாயிடம் தேநீர் கோப்பைகளை மீட்டிங்கில் வந்தவர்களுக்குக் கொடுக்கச் செய்தோம். பரபரப்பும் பயமும் விலகியவுடன் ஒரு பெருமூச்சை விட்டு ஆசுவாசப்படுத்திக் கொண்ட ரிஸப்ஷனிஸ்ட் என்னிடம் “ரொம்ப தேங்க்ஸ் மேடம்…. நல்ல நேரத்துல வந்து ஹெல்ப் பண்ணீங்க. இல்லேன்னா நாந்தான் எல்லாருக்கும் டீ எடுத்துட்டுப் போக வேண்டியிருந்திருக்கும். ரிஸப்ஷன்ல இருந்தா இந்த வேலையெல்லாம் கூட செய்ய வேண்டியிருக்கு பாருங்க” என்று அலுத்துக் கொண்டார்.

அவரிடம் “ரிசப்ஷன்ல இருந்தா இந்த வேலையெல்லாம் செய்யணும்னு எந்த கட்டாயமும் இல்ல. நீங்க கன்ஸீவா இல்லாம இருந்திருந்தா கூட நான் போக வேண்டாமின்னு தான் சொல்லியிருப்பேன். உங்களுடைய வேலைகள்ல நீங்க தெளிவாகவும் திறமையாவும் இருந்தா போதும். உங்களுக்கு விருப்பமில்லாத இந்த வேலைகளை நீங்க எப்போதும் செய்ய வேண்டியதில்லை”ன்னு சொல்லிட்டு வந்தேன்.  


வீட்டுவேலை செய்யும் பெண்களென்றால் மிகுந்த இளக்காரத்துடனும் அடிமையாகவும் நிறைய வீடுகளில் நடத்தப்படுகின்ற சூழ்நிலையில் தனக்கான வேலைகள் மற்றும் சுதந்திரம் குறித்து தானே தீர்மானித்து சகலமும் வரையறுத்து இதற்கு சம்மதமென்றால் உன் வீட்டில் நான் வேலை செய்யத் தயாரென்று தெள்ளத் தெளிவாகக் கூறியிருக்கும் அந்த முகமறியாப் பெண்மணியிடம் மிகுந்த மரியாதை உண்டாகி இருக்கிறது.   

Saturday 11 April 2015

குற்றம் பார்க்கின் ....

வேளச்சேரியில் நாங்கள் அடிக்கடி செல்லும் ஒரு உணவகத்துக்கு சென்றிருந்தோம். அங்கு பணிபுரியும் கடைநிலை ஊழியர்களில் இருந்து மேலாளர் வரை அனைவரும் பணிவுடனும் துரிதமாகவும் நாம் கேட்கும் உணவுகளை வழங்குவார்கள். உணவகம் சுத்தமாகவும் அமைதியான சூழ்நிலையோடும் இருக்கும். வழக்கம் போல ஆர்டர் செய்து விட்டு பேசிக்கொண்டிருந்தோம்.

அப்போது 40-45 வயது மதிக்கத்தக்க நபர் பக்கத்து மேசையில் வந்தமர்ந்தார். அடுத்த சில நொடிகளிலேயே அவரை நோக்கி வந்த உணவக பணியாளர்  சுத்தமான கண்ணாடி தம்ளரை மேசையில் வைத்து அதில் குடிநீர் ஊற்றிச் சென்றார். அவர் நகர்ந்து சென்ற இரண்டொரு நிமிடங்களில் மற்றொரு பணியாளர் அவரிடம் வந்து மிகப் பணிவாக மெனு கார்டை கொடுத்து அவர் விரும்பும் உணவினை தேர்வு செய்யக் கொடுத்தார்.

மெனுகார்டைப் பார்வையிட்டபடி அந்தப் பணியாளரிடம் அதட்டலான குரலில் அந்தந்த உணவு வகைகள் இருக்கிறதாவென ஒவ்வொன்றாய் மெனுகார்டைக் காட்டிக் கேட்டபடி இருந்த நபர் கடைசியில் ஒரு உணவு வகையினை தேர்வு செய்து ஆர்டர் கொடுத்து விட்டு காத்திருக்கத் தொடங்கினார்.

எங்களுக்கான உணவு வந்ததும் நாங்கள் சாப்பிடத் தொடங்கினோம். திடீரென்று அந்த பக்கத்து மேசை நபர் பெருங்குரலில் உணவகப் பணியாளர்களை நோக்கிக் கத்திக் கொண்டிருந்தார். வேறொரு மூலையில் வாடிக்கையாளர்களைக் கவனித்துக் கொண்டிருந்த மேலாளர் இவரின் கூக்குரல் கேட்டு அவர் மேசையை நோக்கி ஓடி வந்தார்.

“என்னாச்சு சார்”

“ஆர்டர் குடுத்து எவ்ளோ நேரமாச்சு....இன்னும் டேபிளுக்கு வரல”

மேலாளர் , சமையல் அறை நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்த மேசைக்குரிய பணியாளரிடம் சென்று  விசாரித்து விட்டு “சார்....இதோ ரெடியாகிருச்சு சார் ...ரெண்டு நிமிஷத்துல வந்திடும்”

“என்ன ...வந்திடும் ....எவ்ளோ நேரம் தான் வெயிட் பண்றது.... ஆர்டர் வாங்கிட்டுப் போன அந்த ஹிந்திக்காரப் பையனக் கூப்பிடுங்க”

மேலாளர் அந்தப் பணியாளரை வரச் சொல்ல , அவரும் பணிவுடன் வந்து நின்றார்.

அவரிடம் ஹிந்தியில் இந்த நபர் “உங்கிட்ட ஆர்டர் குடுத்து அரைமணி நேரமாச்சு.....இன்னும் என்ன பண்ணிட்டு இருக்க” என எகிற

பணியாளரோ மிகத் தாழ்மையான குரலில் “ சார்.... உள்ள ரெடியாகிருச்சுன்னா  உடனே எடுத்துட்டு வந்திடுறேன்”

“இந்த ஐட்டத்துக்கே இவ்ளோ நேரமா .....நான் வந்து உக்கார்ந்து முக்கால்மணி நேரமாச்சு.... கஸ்டமரை சரியா கவனிக்க மாட்டேங்குற....என்னய்யா வேலை பார்க்குற” என்று அதிகாரமாகக் கேட்டார்.

பணியாளர் அப்போதும் அமைதியாக “ சார் ....நீங்க வந்து உக்கார்ந்து ரெண்டு நிமிஷத்துல தண்ணீர்  கொண்டு வந்து வச்சோம் சார்.... அப்புறம் ஆர்டர் எடுத்து அதுவும் ரெடியாகிருச்சு சார்”

“முட்டாள்.... எதிர்த்து எதிர்த்து பேசுற .....எந்த ஊரு நீ”

“சார் ....ஹைதராபாத் சார்”

“ஹைதராபாத்தா ....ஹிந்தி பேசுற....அப்புறம் ஹைதராபாத்துன்னு சொல்ற....என்ன பொய் சொல்றியா”

“இல்ல சார் நான் ஹைதராபாத் தான்”

இடையில் குறுக்கிட்ட மேலாளர் அந்த வாடிக்கையாளரிடம் “சார்...இங்க கஸ்டமர்  கிட்ட  எப்படி நடந்துக்கணும்னு இவங்களுக்கு கத்துக் கொடுத்திருக்காங்களோ அப்படி தான் சார் அந்தப் பையனும் நடந்துகிட்டான்....என்னோட வேலை இவங்கள கண்காணிக்குறது தான் சார்....உங்களுக்கு சரியான நேர இடைவெளியில தான் சார் ஆர்டர் எடுத்திருக்காங்க. அதுவும் ரெடியாகிருச்சு. இப்போ எடுத்துட்டு வந்துடுவாங்க” என்று பொறுமையாக விளக்கம் கொடுத்தார்.

அப்போதும் கோவம் குறையாத அந்த நபர் பணியாளரிடம் “நீ ஹிந்தி தான பேசுற…பின்ன ஏன் ஹைதராபாத்துன்னு பொய் சொல்ற” என்று ஹிந்தியில் கேட்க அதுவரை அமைதியாக இருந்த அந்தப் பணியாளர் தன் குரலை உயர்த்தி ”ஏன் சார் ஹைதராபாத்ல இருக்கவங்க ஹிந்தி பேசக்கூடாதா இல்ல ஹிந்தி பேசுறவங்க ஹைதராபாத்ல இருக்கக் கூடாதா ? உங்களுக்கு இப்போ என்ன பிரச்சனை நான் வேலை செய்யுறதுலயா இல்ல ஹிந்தி பேசுறதுலயா?” என்று பொட்டில் அடித்தாற் போலக் கேட்க இப்போது அந்த நபர் வாயடைத்துப் போயிருந்தார்.

அந்த ஹோட்டலில் இருந்த யாருமே அந்த நபரின் பேச்சை விரும்பவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. எல்லார் முன்பாகவும் உரக்கக் கேள்வி கேட்ட அந்தப் பணியாளரை நிமிர்ந்து பார்த்து பதில் சொல்ல முடியாத அந்த நபர்  மேலாளரிடம் திரும்பி “இங்க கஸ்டமர் கவனிப்பே சரியில்ல...நீங்களும் பொறுப்பில்லாம உங்க வேலைக்காரங்களை பேச விட்டு வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க....நான் உங்க எல்லார் மேலயும் உங்க மேனேஜ்மெண்ட்ல கம்ப்ளெயிண்ட் பண்ணப் போறேன்” என்றார்.

சரியாக அந்த நிமிடத்தில் மேசைக்கு வந்த உணவினை அந்த நபருக்குப் பரிமாறச் சொல்லியபடி மேலாளர் வெகு சாதாரணமாக “சார்....நீங்க பில் கட்டுற இடத்தில் கம்ப்ளெயிண்ட் குடுத்துட்டு போங்க. அவங்க பார்த்துப்பாங்க” என்று கூறிவிட்டு அந்தப் பணியாளரை அழைத்துப் புன்னகையுடன் தோளைத் தட்டிக்கொடுத்து வேறொரு டேபிளைக் காட்டி “அந்த கஸ்டமரைக் கவனி” என்று பணித்து விட்டு விலகி நடந்தார்.

மேலாளரும் அந்தப் பணியாளரும் வேறு வேறு மேசைகளில் புதிதாய் வந்த வாடிக்கையாளர்களை சிரத்தையோடு கவனித்துக் கொண்டிருந்தனர். பக்கத்து மேசை நபர் அவசர அவசரமாக சாப்பிட்டு முடித்து மேசையிலேயே பில்லுக்கான பணத்தை செலுத்தி வெளியேறும் வரை குனிந்த தலை நிமிரவேயில்லை.