Monday 23 December 2019

பாரிஜாதப்பூவே

பாரிஜாதப்பூவே……
போன வருடம் டிஸம்பர் மாதத்தில் ஒருநாள் தெருவில் பூச்செடிகள் விற்றுக் கொண்டிருந்தவரின் வண்டியைப் பார்த்ததும் ஆர்வக்கோளாறில் வண்டியை நிறுத்தி ஒவ்வொரு செடியாகப் பார்த்து விலை கேட்டு அவரின் பொறுமையை சோதித்துக் கொண்டிருந்தேன்…. தொட்டியோடு சேர்த்து ஒரு விலை….தொட்டியில்லாமல் இந்த விலை என்று அவரும் ஒவ்வொன்றாக சொல்லிக்கொண்டிருந்தார்…..
எனக்கு எப்பவும் வளர்ப்பதற்கு அதிகம் பராமரிப்பு தேவைப்படாத செடிகள் மீது தான் விருப்பம்….ஏற்கனவே வீட்டு பால்கனியில் கற்பூரவல்லி, கற்றாழை, துளசி, டேபிள் ரோஸோடு இரண்டடி உயரத்திற்கு வேப்பஞ்செடியும் இருக்கிறது…. இதில் டேபிள் ரோஸில் மட்டும் பத்து நிறச் செடிகளை ஃபேஸ்புக் மார்கெட் ப்ளேஸின் மூலம் வாங்கி வைத்திருந்தேன்…..அவையும் வஞ்சனையில்லாமல் பூத்துக்கொண்டிருந்தது…..
தோட்டம் என்கிற வகைக்கு இல்லாவிட்டாலும் வீட்டுக்கு முன்னே பச்சையாய் நாலு செடிகள் வைத்திருப்பதில் கொஞ்சம் சந்தோஷம் தான்…..அதிலும் வேம்பு, கற்பூரவல்லி, கற்றாழை, துளசி எல்லாமே வெண்பாவுக்கு மருந்துக்கு ஆகுமென வைத்த செடிகள்….அம்மணிக்கு தடுமம், காய்ச்சல், வயித்துவலி எதுவென்றாலும் இந்த செடிகள் தான் எப்போதும் கை கொடுக்கும்….அவளும் ஆறாம் மாதத்திலிருந்தே இதெல்லாம் கஷாயமாகக் குடித்துப் பழகிவிட்டதால் இன்றைக்கும் கசப்பு, துவர்ப்பு என்று சொல்லாமல் காய்ச்சிக்கொடுத்த சூட்டில் குடித்து விடுவாள்…..
இந்த நாலு செடிகளை வளர்ப்பதே ஹவுஸ் ஓனருக்கு கண்ணை உறுத்தும்…தண்ணி ஊற்றும்போது தெறித்து தெறித்து சுவர் பாழாகிறது என்று வருஷத்துக்கொருமுறை புத்தாண்டு அல்லது தைப்பொங்கல் சமயத்தில் வீட்டுப்பக்கம் தலை காட்டும் போது மூஞ்சியையும் காட்டிவிட்டுப் போவார்….இரண்டு முறை தன்மையாய் சொல்லிப் பார்த்துவிட்டு மூன்றாம் முறை கேட்டபோது ”இதெல்லாம் எங்கள் ஊர் கோவில்ல சாமி கும்பிட வர்றவங்களுக்கு கொடுத்த செடிகள் , வேணும்னா உங்க வீட்டுக்கு எடுத்துட்டுப் போறீங்களா சார்” என்றதும் அமைதியாய் அதற்கு மேல் எதுவும் சொல்லாமல் போய் விட்டார்.
அதனால்…கொஞ்சம் பயம் விட்டுப்போன ஜோரில் புதிதாய் நாலு செடிகள் வாங்கலாம் என்று தான் செடி விற்பவரிடம் அத்தனை கேள்வி கேட்டுக்கொண்டிருந்தேன்….அவர் கொஞ்சம் உற்சாகமாக மா, பலா, வாழை என்றெல்லாம் போக…..லேசாக சுதாரித்து பால்கனியைக் காட்டி இந்த இடத்துக்குள்ள வைக்கிற மாதிரி…அதாவது வெளிச்சமும் காத்தும் படுற இடத்துல வைக்குற மாதிரி செடி சொல்லுங்க என்றதும் நிமிர்ந்து உயரே பார்த்து விட்டு ”இந்த இடத்துல செடி வச்சிட்டா நீங்க எங்க நிப்பீங்க” என்று கேட்டு விடுவாரோ என்று பயந்து கொண்டிருக்கையில் அவர் செடிகளுக்குள் தலையை விட்டு நாலு செடிகளைக் கையில் எடுத்தார்….
”இது பாரிஜாதம் இத வாங்கிக்குறீங்களா” என்று கேட்டவரிடம் ”எது பாரிஜாதமா…..இந்த…தேவலோகத்துல பூக்கும்னு சொல்வாங்களே அதுவா” என்று வானத்தைப் பார்த்தபடியே நான் கேட்க ….அவரோ ”அதெல்லாம் தெரியாதும்மா….தோ தெருமுக்குல மளியக்கடய ஒட்னாப்புல ஒரு கேட்டு போட்ட வீடு இருக்கு பாருங்க…அவங்க வீட்டு வாசல்ல வச்சிருக்காங்க…அங்க பூத்துருக்கும் பாத்திருக்கீங்களா” என்றார்….
”அந்ந்ந்த வீடா” என்று கண்களைச் சுருக்கியதில் ஃப்ளாஷ்பேக் ஒன்று உள்ளுக்குள் ஓடியது….தெருவிலேயே செழிப்பான மணிப்ளாண்ட் செடி/கொடி அந்த வீட்டில் தான் இருந்தது….அந்த வீட்டைத் தாண்டித் தான் வழக்கமாக தோசை மாவு வாங்கும் கடைக்குப் போக வேண்டும்…. வீட்டு வாசலில் எந்நேரமும் யாராவது இருப்பார்கள்….
அன்றைக்கு மாவு வாங்கப் போகையில் வாசலில் விளக்கே எரியவில்லை….தெருவிலும் ஆள் நடமாட்டம் இல்லை. ஒரு கையில் மாவுப்பாக்கெட்டை பிடித்துக்கொண்டு (அப்போதெல்லாம் ப்ளாஸ்டிக்கை தடை செய்யவில்லை) மறுகையில் மிச்சக்காசுக்கு வாங்கிய முறுக்கை வாயில் போட்டு மென்று கொண்டே வீட்டு காம்பவுண்ட் சுவற்றை ஒட்டித் தொங்கிக்கொண்டிருந்த மணிப்ளாண்ட் செடியை ஒரு இழு இழுக்கவும் உள்ளேயிருந்து வள்ள்ள்ள்ளென்று ஒரு சத்தம் கேட்டதும் கையிலிருந்த மாவுப்பாக்கெட்டைப் போட்டு விட்டு ஓடியவள் நாலு வீடு தாண்டியதும் தான் கால்கள் நின்றது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்….

ஒரு கிலோ மாவுப்பாக்கெட்டை கீழே போட்டதை விட முக்கால்வாசி முறுக்கை முழுசாய் முழுங்கியது தான் இன்று வரை அவமானமாகத் தெரிகிறது….
அதற்குப்பிறகு மாவு வாங்கப் போவதில்லை என்று முடிவெடுத்து மாவுக்கடையையே மாற்றியாகிவிட்டது…..முறுக்கு திங்கும் போதுமட்டும் அவ்வப்போது தொண்டை அடைக்கும்…. மணிப்ளாண்ட் கண்ணை மட்டுமல்ல நாயையும் மறைத்த கதையை கடைசி வரை யாருக்கும் சொல்லவே இல்லை….
.
ஆக…. கடைசியாய் அன்றைக்கு அவரிடம் இருந்து ரத்த நிறத்தில் பூத்திருந்த ரோஜா செடியையும், பாரிஜாத செடியையும் வாங்கி விட்டேன். ரோஜாச் செடி நூற்றைம்பது ரூபாய்.... பாரிஜாதம் அறுபது ரூபாய். உரம் ஒரு பாக்கெட் இருபது ரூபாய்…. ஏற்கனவே இருந்த செடிகளோடு புதிதாய் வாங்கிய செடிகளையும் சேர்த்து மொத்தம் ஆறு தொட்டிகளுக்கு தொட்டிக்கு இரண்டு உரப்பாக்கெட்டுகள் வீதம் என்று மொத்தம் இருநூற்று நாற்பது ரூபாய்....இரண்டு தொட்டிக்கு மண்ணும் உரமும் கலந்து...எல்லாவற்றையும் செட் செய்து கொடுத்ததற்கு சேர்த்து மொத்தமாய் அறுநூறு ரூபாய் மொய் வைத்திருந்தேன்.....(மொத்த ரூபாயை எண்ணால் எழுதாமல் எழுத்தால் எழுதியதும் ஒரு தந்திரம் தான்....நிச்சயம் உதய் இதை முழுசாய் படிக்கப்போவதில்லை என்று தெரியும்)

டிஸம்பரிலிருந்து மார்ச் வரை உயிரைக் கொடுத்து ரோஜாச்செடியை வளர்த்து நாலு பூக்கள் பூக்கவும் செய்தது....மார்ச் இறுதியில் ஊருக்குப் போனபோது தண்ணீர் சரியாக ஊற்ற ஆளில்லாமல் கிடந்து , நான் சென்னைக்குத் திரும்பி வந்த போது ரோஜாத் தொட்டியில் ஒரு குச்சி மட்டுமே கருகிய நிலையில் அக்னி நட்சத்திர வெயிலுக்கு சாட்சியாக நின்றிருந்தது....
அதன் பிறகு மற்ற செடிகளை கவனித்துப் பார்த்து வளர்த்ததில் இதோ அதோ என்று பாரிஜாதச் செடியும் இரண்டடி உயரத்திற்கு மூன்று கிளைகள் விட்டு நன்றாக வளர்ந்தும் விட்டது….தினமும் தண்ணீர் ஊற்றுவதோடு வாரம் ஒருமுறை மண்ணைக்கிளறி விட்டு வைப்பதோடு பராமரிப்பு வேலையும் எளிதானது…..
ஆறு மாதத்திற்கு முன்பிருந்தே மொட்டுக்கள் விட ஆரம்பித்திருந்தது….ஒரே சமயத்தில் நாலைந்து மொட்டுக்கள் வரைக்கும் வரும்…ஆனாலும் பூக்காமல் காம்போடு அப்படியே தொட்டியில் விழுந்து கிடக்கும்…..ஆசையாய் வெண்பாவிடம் காட்டி “பாப்பா….பாரேன்…இந்த மொட்டு இன்னும் கொஞ்ச நாள்ல பெரிய பூவா பூத்திரும்” என்றதும் “இதுல எப்டிண்ணே லைட் எரியும்” என்று செந்தில் கணக்காய் “இந்த மொத்தாம்மா” என்று பெட்ரோமாக்ஸ் மாண்டிலை செந்தில் பிடிப்பது போல பிடித்துப் பிய்த்து துண்டாக்கி விட்டாள்…
அன்றிலிருந்து அவள் கண்களில் மொட்டு தெரியாதபடிக்குப் பார்த்துக் கொள்ள வேண்டியிருந்தது. மொட்டுகளும் இலை போலவே பச்சை நிறத்தில் சுருள் சுருளாய் சுருண்டிருந்ததால் அவளும் அதன்பிறகு அதை கண்டுகொள்ளவில்லை. ஆரம்பத்தில் ரொம்பவும் எதிர்பார்த்துப் பின் தொடர்ந்து மொட்டுக்கள் வருவதும் உதிர்வதுமாய் இருக்க நானே அது பூ பூக்கும் செடி என்பதை மறந்து போனேன்….
போன வாரம் பக்கத்து வீட்டு அக்கா….அவர்கள் வீட்டு பால்கனியில் நின்று தலையைத் துவட்டியபடி எட்டிப்பார்த்தவாறே….செடி நல்லா வளர்ந்திருக்கு ஆனா ஏன் பூக்க மாட்டேங்குது என்று கேட்டு விட்டுப்போனார்….

கொஞ்சம் கோவமாய் “உனக்கு நாள் தவறாம தண்ணீர் விட்டு வளர்க்குறேன்….மொட்டு நிறைய விடுற….ஆனா ஏன் பூக்க மாட்டேங்குற ரேஸ்கல்ல்ல்ல்…சொந்த வீடு வச்சிருக்க அந்தக்கா வீட்ல மருந்துக்கு கூட ஒரு செடி இல்ல… பாரு அவங்கல்லாம் என்னைய கேள்வி கேட்டுட்டுப் போறாங்க” என்று கவுண்டமணி ஒரு படத்தில் கழுதைகளிடம் கேட்பது போலக் கேட்டு விட்டு வந்து விட்டேன்….அப்போதும் இரண்டு மொட்டுக்கள் விட்டிருந்தது…..
நேற்றைக்குக் காலையில் பால்கனியில் நின்று பல் தேய்த்துக்கொண்டிருக்கும் போது செடிகள் பக்கம் அசட்டையாய் ஒரு பார்வை பார்க்கையில் ஒரு பக்கத்தில் வெள்ளையாய் ஏதோ தெரிந்தது…பக்கத்து வீட்டுப்பையன்கள் அடிக்கடி நோட்டுப்புத்தகத்தில் பேப்பரைக் கிழித்து சுருட்டி சின்னப் பந்து போலத் தூக்கிப் போட்டு விளையாடிக் கொண்டிருப்பார்கள்… அடிக்கடி வீட்டு பால்கனியில் வந்து விழுந்து கிடக்கும் “இவனுகளுக்கு வேற வேலை இல்ல” என்று நினைத்தபடி உள்ளே சென்று விட்டேன்…
மறுபடி வந்து ஒவ்வொரு செடிக்காய் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருக்கையில் தான் இன்னும் கொஞ்சம் நெருங்கிப் பார்க்க முடிந்தது….அது பேப்பர் பந்து இல்லை….பக்கத்து வீட்டு அக்கா பல்தேய்த்து விட்டு துப்பியிருப்பார்களோ என்ற சந்தேகம் முதலில் வந்தது. ஆனாலும் அவரே ஒருமுறை காலையில் எழுந்ததும் காபி போட்டுக்குடித்து வீட்டு வேலை செய்து டிபன் சாப்பிட்டு விட்டு வீட்டு ஆண்கள் வேலைக்கு சென்றதும் குளிக்கப் போகும் போது தான் பல்தேய்ப்பது வழக்கம் என்று ஆச்சாரத்துடன் சொன்னது நன்றாக நினைவில் இருந்ததால் அவரை சந்தேகிக்கமுடியவில்லை….
கால் வைக்க முடியாமல் நடுவிலிருந்த இரண்டு தொட்டிகளை நகர்த்திவிட்டுப் பக்கத்தில் போய்ப் பார்க்கையில் தான் தெரிந்தது…..ஆகக் கடைசியாய் பாரிஜாதம் பூத்திருந்தது…..ஒரு மீடியம் சைஸ் வெள்ளை ரோஜா அளவில் அடுக்கடுக்காய் இதழ்களோடு பூத்திருந்தது. கிட்டத்தட்ட ஒருவருடக் காத்திருப்பின் பலனாய் ஒரேயொரு…இல்லையில்லை முதல் பூ பூத்திருக்கிறது….
ஏம்புள்ள….உன் வீட்டுல வச்சிருக்க செடியில ஒரு பூ பூத்திருக்கு ….அதுக்கு இம்புட்டு பில்டப்பா என்று கேட்பவர்களுக்கு இந்தச் செடிக்குப் பின்னாலுள்ள வரலாற்றை இந்த உலகம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பியே இந்தப் பதிவு…அத்தோடு இன்னும் மிச்சமிருக்கும் மொட்டுகளும் பூக்கும் என்றே நம்புகிறேன்….

Wednesday 11 September 2019

அன்னப்பறவையும், அருந்தும் பாலும்


அன்னப்பறவையும், அருந்தும் பாலும்.......



கடந்தவாரம் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ”சித்தன்னவாசல்” சென்றிருந்தோம்….அங்குள்ள தியான மண்டபத்தைப் பற்றியும் மேற்கூரையில் இயற்கை வண்ணங்களால் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் குறித்தும் அங்கே காவலுக்கு நியமிக்கப்பட்டிருக்கும் பணியாளர் ஆர்வத்துடன் விளக்கிச் சொன்னதில் மிகவும் ஆச்சர்யமான ஒரு விஷயமும் இருந்தது…..அது அன்னப்பறவையானது பாலும் தண்ணீரும் கலந்து இருந்தால் கூட அதில் தண்ணீரைப் பிரித்து பாலை மட்டும் உண்ணும் என்ற செய்தி… இந்த செய்தி சிறு வயது முதலே கேள்விப்பட்ட ஒன்றுதான் என்றாலும் கூட அதற்கு அவர் அளித்த விளக்கம் முற்றிலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் உண்மையாக இருக்கக்கூடும் என்று நம்பும்படியும் இருந்தது.

அவர் சொன்ன விளக்கம் “தாமரைப்பூக்கள் நிரம்பியுள்ள இந்தக்குளத்தில் அன்னப்பறவைகள் நீந்திக் கொண்டிருக்கும் போதும், நீரில் உள்ள் மீன்கள் மற்றும் சிறு பூச்சிகளைப் பிடித்து இரையாக உட்கொள்ளும் போதும் அவற்றின் கூரிய கால் நகங்கள் மற்றும் கூரிய அலகு, தாமரைத்தண்டின் மீது பட்டு அவை வெட்டுப்படும் போது அந்தத் தாமரைத் தண்டின் வெட்டப்பட்ட பகுதியில் இருந்து வரும் பாலானது தண்ணீருடன் கலக்காமல் நீரில் மிதந்து கொண்டிருக்கும்…அந்தப் பாலையே அன்னப்பறவையானது உண்ணும்….

தண்ணீரிலேயே இருந்தாலும் கூட தாமரை இலைகளிலோ பூவிலோ நீர் ஒட்டாது என்பது நாம் அறிந்ததே. அது போல தாமரைத்தண்டின் பாலும் தண்ணீரில் ஒட்டாமல் மிதந்து கொண்டிருக்க, அதை அன்னப்பறவை உண்ணும் என்று விளக்கினார். இந்த விளக்கம் மிக எளிதாகவும் உண்மையாய் இருக்கக்கூடியதாகவும் இருக்கிறது….

நேற்றைக்கு மகள் எப்போதும் விரும்பிப் பார்க்கும் சுட்டி டீவியில் “பொம்மியும் திருக்குறளும்” என்கிற நிகழ்ச்சியில் முனைவர் கு.ஞானசம்பந்தன் அவர்கள் குழந்தைகளுக்கு எளிதாகப்புரியும் வகையில் திருக்குறளைப் பற்றி சிறு சிறு கதைகளாகச் சொல்லும் தொடரின் ஒரு பகுதியைப் பார்க்க நேர்ந்தது….

அதில் அன்னப்பறவையைப் பற்றி அவர் குழந்தைகளுக்குக் கொடுத்த விளக்கம் “அன்னப்பறவையின் அலகில் ஒரு ஸ்ப்ரே இருக்கும்….அதைத் தண்ணீரில் தெளித்தவுடன் தண்ணீரும் பாலும் தனியாகப் பிரிந்துவிடும்…அதன் பின்னர் அன்னப்பறவை அந்தப்பாலை மட்டும் அருந்தும்” எத்தனை அபத்தமான விளக்கம்….


Wednesday 12 June 2019

வேதம் அல்லது போதை


கொஞ்ச நாட்களாகவே ஒரு ஹாக்கி ஸ்டிக் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டுமென்ற ஆசை மனதிற்குள் பேயாட்டம் ஆடிக் கொண்டிருக்கிறது…. சென்னைக்கு வந்து வேலைக்குப் போக ஆரம்பித்த பொழுது முதல் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வந்து போன ஆசை தான் என்றாலும் கூட இப்போது ஏனோ அதை உடனே வாங்கி விட வேண்டுமென்று ஒரு பரபரப்பு…
பள்ளி நாட்களில் விளையாடிய ஹாக்கி ஸ்டிக்குகளின் இந்நாளைய பிராண்ட் மற்றும் விலை விபரமெல்லாம் அறிந்து கொள்ளும் பொருட்டு இரண்டு நாட்களாக ஆன்லைனில் தேடிக் கொண்டிருந்தேன். நாங்கள் விளையாடிய போது பயன்படுத்திய ஸ்டிக்குகளின் பெயர் “Vampire” “Punjab Tiger” என்றளவில் மட்டுமே நினைவில் உள்ளது….அந்த வகை ஸ்டிக்குகளின் விலையைப் பார்த்து விட்டு மனம் சற்று பின்வாங்கிக் கொண்டதென்னவோ உண்மை தான்.
இங்கே பிரச்சனை, வாங்குவதில் மட்டும் இல்லை…வாங்கிய பின் என்ன செய்வது என்று தான்…..மொட்டை மாடியில் wall practice செய்யலாம் என்றால் எங்கள் வீடோடு சேர்ந்து இரு பக்க வீடுகளும் பொதுச்சுவர்…..வீட்டு உரிமையாளரும் மாசாமாசம் வாடகை கேட்பது தவிர வேறு வகையில் மோசமில்லை என்பதால் சுவரை சேதப்படுத்தும் எண்ணமும் ”இப்போதைக்கு” இல்லை.
ஹாக்கி ஸ்டிக்கை எப்படிக் கையில் பிடித்துக் கொள்ளவேண்டும் என்பது தான் முதல் பாடமே.  ஸ்டிக்கை தலைகீழாகப் பிடிப்பதோ …முற்றாகத் தூக்கி எறிவதோ (கோவத்திலோ அல்லது மகிழ்ச்சியிலோ) கிடைமட்டமாய் தரையில் கிடத்துவதோ அல்லது கீழே கிடக்கும் ஸ்டிக்கை தாண்டுவதோ மிதிப்பதோ ஹாக்கி ஸ்டிக்கிற்குத் தரும் அவமரியாதை என எங்களுக்கு சொல்லித்தரப்பட்டது….
இயல்பிலேயே தோற்றம் குறித்த தாழ்வு மனப்பான்மையில் நிறையவே சுருண்டு கிடந்தவளை நிமிர்ந்து நிற்க வைத்த இடம் ஹாக்கி மைதானங்கள் மட்டுமே…. கக்கத்தில் கைப்பையை இறுக்கிக் கொண்டு தூக்கிக் கட்டிய கொண்டையும் நெடு நெடுவென்ற உயரமுமாய் இருந்த பாளையங்கோட்டை டீச்சர் “எடீ அந்த அஞ்சாம் நெம்பர்க்காரிய பிடி “என கத்திக் கொண்டே மைதானத்தைச் சுற்றி ஓடிக்கொண்டிருந்த தருணங்கள் இன்றளவும் என் வாழ்நாளின் நிறைபோதைக் கணங்கள்….ஆறு வருடங்கள் ஆடிக் களித்த அந்த விளையாட்டின் போது எனக்குக் கொடுக்கப்பட்ட சட்டையின் எண் 5…என்னுடைய பிறந்த தேதியும் 5 தான் என்பதில் கூடுதல் பெருமை…
எனக்கு எப்போதும் ஹாக்கி ஸ்டிக்கும் அய்யனார் கையில் உள்ள அரிவாளும் ஒன்று போலத் தான் தெரியும்…..எந்த அய்யனாரும் அரிவாளை தலைகீழாகப் பிடித்தோ காலுக்குக் கீழே போட்டோ பார்த்திருக்க மாட்டோம் தானே…..இறுகப் பற்றிய பின் மேலே உயர்த்தி இறக்கினால் இரண்டிலும் பலி அல்லது கோல் விழ வேண்டும்…இல்லையா…
அடிக்கடி வந்து போகும் ஹாக்கி கனவுகளில் மைதானமோ கோல் போஸ்ட்டோ எதுவுமே தெரியாத வெட்ட வெளியில் ஓடிக்கொண்டிருக்கையில் கையில் உள்ள ஹாக்கி ஸ்டிக்கின் முன்னால் இந்த வாழ்க்கை தான் பந்தாக உருண்டு சென்றுகொண்டிருக்கும்…அந்தப் பந்தை எந்த கோல் போஸ்டில் கொண்டு சேர்ப்பது என்ற தெளிவே இன்னும் இல்லை என்ற போதும் இப்போதைக்கு விளையாடுவதை நிறுத்துவதாய் இல்லை……  
இங்கே கிரிக்கெட்டை மதமாகக் கொண்டாடுபவர்கள் உண்டு… என்னளவில் ஹாக்கி நான் கற்று மறந்த வேதம் அல்லது போதை….
பி.கு : சரி இப்போ எதுக்கு இப்டி புலம்பிட்டு இருக்க எனக் கேட்பவர்களுக்கு நாலு நாளைக்கு முன்னாடி தான் ”நட்பே துணை”ங்குற படத்துல ஹிப்ஹாப் ஆதி ஹாக்கி விளையாடுற சீன் பார்த்தேன்….ப்ப்ப்பாஹ் ஒண்ணும் சொல்றதுக்கில்ல……

Monday 10 June 2019

தேன் குழம்பு

தேன் குழம்பு ......
புதன் கிழமை என்றாலே ஞாயிறுக்கிழமை போல அசைவம் சாப்பிடும் ஆசை வந்துவிடுகிறது….நமக்கு எல்லா நாளும் ஒன்றுதான் என்றாலும் செவ்வாய் வெள்ளிக் கிழமைகளில் தெருவில் கூட யாரும் மீன் விற்றுக்கொண்டு போவதில்லை…… அதனாலேயே ஊருடன் சேர்ந்து சாம்பார் வைப்பதென்றாகிவிட்டது…..
இன்றைக்கு கோழிக்கறியோ, ஆட்டுக்கறியோ அதிர்ஷ்டம் இருந்தால் மீனோ சமைத்துச் சாப்பிட்டு விடவேண்டும் என்ற கனவுடன் தான் நேற்றைக்குத் தூங்கவே போனேன்…
காலையிலேயே மீன் விற்கும் அக்காவின் சத்தம் தான் எழுப்பி விட்டது…பக்கத்து வீட்டில் ஒவ்வொரு புதனும் தவறாமல் மீன் வாங்கி விடுவார்கள்…அதனால் அவர்கள் வீட்டு வாசலிலேயே மீன் விற்கும் அக்கா உக்கார்ந்திருந்தார்கள்….வாங்கும் மீனை அவர்களே சுத்தம் செய்து தருவதால் வேண்டிய மீன்களைத் தேர்வு செய்து பாத்திரம் கொடுத்து போய்விட்டு கொஞ்ச நேரம் கழித்து வந்து வாங்கிக் கொள்ளலாம். அந்த நேரத்தில் மற்ற வீட்டு வேலைகளைப் பார்க்கப் போய்விடலாம்….இது ஒரு வசதி.
அலுமினியக் குண்டான் நிறைய மீன் குவியல்கள்….எந்த மீனுக்கும் பேர் தெரியவில்லை எனக்கு….”என்ன மீனும்மா வேணும்” என அக்கா கேட்க “பாப்பாவுக்கு சாப்பிடக் குடுக்குற மாதிரி முள் அதிகம் இல்லாத மீனா குடுங்கக்கா” என்றேன்…. ஏதேதோ பேர் சொன்னார்….அதில் பாறை…கானாங்கத்தை என்ற பேர்கள் தான் பரிச்சயமாய் இருந்தது…. சென்னை முழுக்க விலை மீன் விலை மீன் என்று சொல்லி விற்கிறார்கள் பேரே அதுதானா எனத் தெரியவில்லை…தவிர விலை கொடுக்காமல் வாங்கும் மீனென்று எதுவும் இருக்கிறதா என்ன ?
ஊர்ப்பக்கமெல்லாம் ஆறு, குளம், அணைக்கட்டு என உயிரோடு மீன்களைப் பார்த்து வாங்கிய காலத்தில் பிறந்துவிட்டு …இப்போது என்னைப் பார் என் கண்ணைப் பார் என மீன்களின் கண்களைப் பார்த்து வாங்கும் காலத்திற்கு வந்தாயிற்று…நல்ல மீன்களைப் பார்த்து வாங்குவது எப்படி என்று இன்னும் புத்தகம் யாரும் எழுதாததே ஆச்சர்யமாய் இருக்கிறது….
அப்பாவுடன் ஊரிலுள்ள ஆற்றுமேட்டுக்கு வெள்ளம் வரும் காலங்களில் போய் வேஷ்டித் துணி விரித்து வெளிச்சி மீன் அல்லது அயிரை மீன் பிடித்திருக்கிறேன்….சேற்றில் ஜிலேபி கெண்டை மீனும் ….ஊருக்கு வெளியில் இருந்த கல்கிடங்கில் அப்பா தூண்டில் போட்டு மீன் பிடிக்கையில் கண்கொட்டாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டும் இருந்திருக்கிறேன். தூண்டிலில் மாட்டுவதற்கென மண்புழுக்கள் பிடித்து வைத்திருக்கும் டப்பாவைப் பார்த்துக் கொள்வது தான் என்னுடைய வேலை. வீட்டில் நாங்கள் செய்யும் சேட்டையின் போதெல்லாம் அந்தத் தூண்டில் குச்சி தான் அப்பாவின் நாவாகப் பேசி விளாசும்…..குப்பைமேட்டில் கண்ணாடித் துண்டுகள் பொறுக்கப் போய் வரிவரியாக முதுகில் வாங்கி வீங்கிக் கிடந்திருக்கிறேன்… தூண்டில் நரம்பும் நுனியில் மாட்டும் கொக்கியும் அப்பாவின் நினைவாக வீட்டு அலமாரியில் ஒரு சின்ன டப்பாவில் இன்றைக்கும் பத்திரமாக இருக்கிறது…..
அக்கா மகள் கீதாவை அவள் பள்ளியில் விடுவதற்குப் போகையில் ”அதோ அந்த தண்ணி டேங்குக்குப் பின்னாடி தெரியுது பாரேன்…அது தான் ஆத்து மேடு …அங்க வெள்ளம் வரும்போது தாத்தா கூடப் போய் மீன் பிடிப்போம்….குளிப்போம் துணி துவைப்போம்…செம்மையா ஆட்டம் போடுவோம்” என்று சொன்னதற்கு ”போங்க சித்தி…ஆறு இருந்திச்சாம் …தண்ணி வந்திச்சாம்…ஆட்டம் போட்டாகளாம் …சும்மா ரீல் விடாதீங்க”ன்னு வீடு வரும் வரையில் சிரித்துக் கொண்டே வந்தாள்.
அப்போது வரை கீதாவிடம் சுட்டிக் காட்டுவதற்காவது வற்றிப் போன ஆறும் கல்கிடங்கும் இருந்த இடம் வெற்றிடமாக இருந்தது…இன்றைக்கு அந்த இடங்களில் கட்டிடங்கள் முளைத்து ஊரின் முகமே அடையாளம் மாறிக் கிடக்கிறது…. கல்கிடங்குகள் இருந்த இடத்தில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு பாலங்கள் முளைத்திருக்கின்றன… பள்ளித் தோழி பாரதியும் நானும் அவரவர் வீட்டுக்குப் பிரியும் அந்த இருபக்க சாலையின் வளைவு இன்னும் நினைவில் இருந்து அழியவேயில்லை…..
வெண்பாவிடம் ஊரைப் பற்றிச் சொல்வதற்கோ என் பள்ளிக்காலங்களின் பொக்கிஷங்களைப் பகிர்ந்து கொள்வதற்கோ சான்றாக ஒன்றுமேயில்லை….
குழம்பில் மீன் வெந்து முடிப்பதற்குள் இந்த மனது ஒரு இருபது வருடம் பின்னோக்கி நீந்திப் போய் வந்துவிட்டது……மீன் பொரிப்பதற்கு மசாலா தோய்த்து வைத்த கைகளில் மிளகாய்ப்பொடி எரிச்சலும் எண்ணி ரெண்டே ரெண்டு மிளகாயை நீளவாக்கில் கீறிப்போட்டதன் காரம் நாக்கிலும் இன்னும் மிச்சமிருக்கிறது…. தோழி ஒருத்தி அடிக்கடி பீற்றிக் கொள்வாள்….”எங்கம்மா மீன் குழம்பு வச்சா தேன் குழம்பு மாதிரி இருக்கும்” என்று….அப்போதைக்கு ஏதாவது நக்கலாகச் சொல்லி அவள் வாயை அடைப்பேன்…இன்றைக்குத் தெரிந்தது மீன் குழம்பு தேன் குழம்பாவதன் ருசி ….