Wednesday 12 June 2019

வேதம் அல்லது போதை


கொஞ்ச நாட்களாகவே ஒரு ஹாக்கி ஸ்டிக் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டுமென்ற ஆசை மனதிற்குள் பேயாட்டம் ஆடிக் கொண்டிருக்கிறது…. சென்னைக்கு வந்து வேலைக்குப் போக ஆரம்பித்த பொழுது முதல் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வந்து போன ஆசை தான் என்றாலும் கூட இப்போது ஏனோ அதை உடனே வாங்கி விட வேண்டுமென்று ஒரு பரபரப்பு…
பள்ளி நாட்களில் விளையாடிய ஹாக்கி ஸ்டிக்குகளின் இந்நாளைய பிராண்ட் மற்றும் விலை விபரமெல்லாம் அறிந்து கொள்ளும் பொருட்டு இரண்டு நாட்களாக ஆன்லைனில் தேடிக் கொண்டிருந்தேன். நாங்கள் விளையாடிய போது பயன்படுத்திய ஸ்டிக்குகளின் பெயர் “Vampire” “Punjab Tiger” என்றளவில் மட்டுமே நினைவில் உள்ளது….அந்த வகை ஸ்டிக்குகளின் விலையைப் பார்த்து விட்டு மனம் சற்று பின்வாங்கிக் கொண்டதென்னவோ உண்மை தான்.
இங்கே பிரச்சனை, வாங்குவதில் மட்டும் இல்லை…வாங்கிய பின் என்ன செய்வது என்று தான்…..மொட்டை மாடியில் wall practice செய்யலாம் என்றால் எங்கள் வீடோடு சேர்ந்து இரு பக்க வீடுகளும் பொதுச்சுவர்…..வீட்டு உரிமையாளரும் மாசாமாசம் வாடகை கேட்பது தவிர வேறு வகையில் மோசமில்லை என்பதால் சுவரை சேதப்படுத்தும் எண்ணமும் ”இப்போதைக்கு” இல்லை.
ஹாக்கி ஸ்டிக்கை எப்படிக் கையில் பிடித்துக் கொள்ளவேண்டும் என்பது தான் முதல் பாடமே.  ஸ்டிக்கை தலைகீழாகப் பிடிப்பதோ …முற்றாகத் தூக்கி எறிவதோ (கோவத்திலோ அல்லது மகிழ்ச்சியிலோ) கிடைமட்டமாய் தரையில் கிடத்துவதோ அல்லது கீழே கிடக்கும் ஸ்டிக்கை தாண்டுவதோ மிதிப்பதோ ஹாக்கி ஸ்டிக்கிற்குத் தரும் அவமரியாதை என எங்களுக்கு சொல்லித்தரப்பட்டது….
இயல்பிலேயே தோற்றம் குறித்த தாழ்வு மனப்பான்மையில் நிறையவே சுருண்டு கிடந்தவளை நிமிர்ந்து நிற்க வைத்த இடம் ஹாக்கி மைதானங்கள் மட்டுமே…. கக்கத்தில் கைப்பையை இறுக்கிக் கொண்டு தூக்கிக் கட்டிய கொண்டையும் நெடு நெடுவென்ற உயரமுமாய் இருந்த பாளையங்கோட்டை டீச்சர் “எடீ அந்த அஞ்சாம் நெம்பர்க்காரிய பிடி “என கத்திக் கொண்டே மைதானத்தைச் சுற்றி ஓடிக்கொண்டிருந்த தருணங்கள் இன்றளவும் என் வாழ்நாளின் நிறைபோதைக் கணங்கள்….ஆறு வருடங்கள் ஆடிக் களித்த அந்த விளையாட்டின் போது எனக்குக் கொடுக்கப்பட்ட சட்டையின் எண் 5…என்னுடைய பிறந்த தேதியும் 5 தான் என்பதில் கூடுதல் பெருமை…
எனக்கு எப்போதும் ஹாக்கி ஸ்டிக்கும் அய்யனார் கையில் உள்ள அரிவாளும் ஒன்று போலத் தான் தெரியும்…..எந்த அய்யனாரும் அரிவாளை தலைகீழாகப் பிடித்தோ காலுக்குக் கீழே போட்டோ பார்த்திருக்க மாட்டோம் தானே…..இறுகப் பற்றிய பின் மேலே உயர்த்தி இறக்கினால் இரண்டிலும் பலி அல்லது கோல் விழ வேண்டும்…இல்லையா…
அடிக்கடி வந்து போகும் ஹாக்கி கனவுகளில் மைதானமோ கோல் போஸ்ட்டோ எதுவுமே தெரியாத வெட்ட வெளியில் ஓடிக்கொண்டிருக்கையில் கையில் உள்ள ஹாக்கி ஸ்டிக்கின் முன்னால் இந்த வாழ்க்கை தான் பந்தாக உருண்டு சென்றுகொண்டிருக்கும்…அந்தப் பந்தை எந்த கோல் போஸ்டில் கொண்டு சேர்ப்பது என்ற தெளிவே இன்னும் இல்லை என்ற போதும் இப்போதைக்கு விளையாடுவதை நிறுத்துவதாய் இல்லை……  
இங்கே கிரிக்கெட்டை மதமாகக் கொண்டாடுபவர்கள் உண்டு… என்னளவில் ஹாக்கி நான் கற்று மறந்த வேதம் அல்லது போதை….
பி.கு : சரி இப்போ எதுக்கு இப்டி புலம்பிட்டு இருக்க எனக் கேட்பவர்களுக்கு நாலு நாளைக்கு முன்னாடி தான் ”நட்பே துணை”ங்குற படத்துல ஹிப்ஹாப் ஆதி ஹாக்கி விளையாடுற சீன் பார்த்தேன்….ப்ப்ப்பாஹ் ஒண்ணும் சொல்றதுக்கில்ல……

No comments:

Post a Comment