Monday 23 December 2019

பாரிஜாதப்பூவே

பாரிஜாதப்பூவே……
போன வருடம் டிஸம்பர் மாதத்தில் ஒருநாள் தெருவில் பூச்செடிகள் விற்றுக் கொண்டிருந்தவரின் வண்டியைப் பார்த்ததும் ஆர்வக்கோளாறில் வண்டியை நிறுத்தி ஒவ்வொரு செடியாகப் பார்த்து விலை கேட்டு அவரின் பொறுமையை சோதித்துக் கொண்டிருந்தேன்…. தொட்டியோடு சேர்த்து ஒரு விலை….தொட்டியில்லாமல் இந்த விலை என்று அவரும் ஒவ்வொன்றாக சொல்லிக்கொண்டிருந்தார்…..
எனக்கு எப்பவும் வளர்ப்பதற்கு அதிகம் பராமரிப்பு தேவைப்படாத செடிகள் மீது தான் விருப்பம்….ஏற்கனவே வீட்டு பால்கனியில் கற்பூரவல்லி, கற்றாழை, துளசி, டேபிள் ரோஸோடு இரண்டடி உயரத்திற்கு வேப்பஞ்செடியும் இருக்கிறது…. இதில் டேபிள் ரோஸில் மட்டும் பத்து நிறச் செடிகளை ஃபேஸ்புக் மார்கெட் ப்ளேஸின் மூலம் வாங்கி வைத்திருந்தேன்…..அவையும் வஞ்சனையில்லாமல் பூத்துக்கொண்டிருந்தது…..
தோட்டம் என்கிற வகைக்கு இல்லாவிட்டாலும் வீட்டுக்கு முன்னே பச்சையாய் நாலு செடிகள் வைத்திருப்பதில் கொஞ்சம் சந்தோஷம் தான்…..அதிலும் வேம்பு, கற்பூரவல்லி, கற்றாழை, துளசி எல்லாமே வெண்பாவுக்கு மருந்துக்கு ஆகுமென வைத்த செடிகள்….அம்மணிக்கு தடுமம், காய்ச்சல், வயித்துவலி எதுவென்றாலும் இந்த செடிகள் தான் எப்போதும் கை கொடுக்கும்….அவளும் ஆறாம் மாதத்திலிருந்தே இதெல்லாம் கஷாயமாகக் குடித்துப் பழகிவிட்டதால் இன்றைக்கும் கசப்பு, துவர்ப்பு என்று சொல்லாமல் காய்ச்சிக்கொடுத்த சூட்டில் குடித்து விடுவாள்…..
இந்த நாலு செடிகளை வளர்ப்பதே ஹவுஸ் ஓனருக்கு கண்ணை உறுத்தும்…தண்ணி ஊற்றும்போது தெறித்து தெறித்து சுவர் பாழாகிறது என்று வருஷத்துக்கொருமுறை புத்தாண்டு அல்லது தைப்பொங்கல் சமயத்தில் வீட்டுப்பக்கம் தலை காட்டும் போது மூஞ்சியையும் காட்டிவிட்டுப் போவார்….இரண்டு முறை தன்மையாய் சொல்லிப் பார்த்துவிட்டு மூன்றாம் முறை கேட்டபோது ”இதெல்லாம் எங்கள் ஊர் கோவில்ல சாமி கும்பிட வர்றவங்களுக்கு கொடுத்த செடிகள் , வேணும்னா உங்க வீட்டுக்கு எடுத்துட்டுப் போறீங்களா சார்” என்றதும் அமைதியாய் அதற்கு மேல் எதுவும் சொல்லாமல் போய் விட்டார்.
அதனால்…கொஞ்சம் பயம் விட்டுப்போன ஜோரில் புதிதாய் நாலு செடிகள் வாங்கலாம் என்று தான் செடி விற்பவரிடம் அத்தனை கேள்வி கேட்டுக்கொண்டிருந்தேன்….அவர் கொஞ்சம் உற்சாகமாக மா, பலா, வாழை என்றெல்லாம் போக…..லேசாக சுதாரித்து பால்கனியைக் காட்டி இந்த இடத்துக்குள்ள வைக்கிற மாதிரி…அதாவது வெளிச்சமும் காத்தும் படுற இடத்துல வைக்குற மாதிரி செடி சொல்லுங்க என்றதும் நிமிர்ந்து உயரே பார்த்து விட்டு ”இந்த இடத்துல செடி வச்சிட்டா நீங்க எங்க நிப்பீங்க” என்று கேட்டு விடுவாரோ என்று பயந்து கொண்டிருக்கையில் அவர் செடிகளுக்குள் தலையை விட்டு நாலு செடிகளைக் கையில் எடுத்தார்….
”இது பாரிஜாதம் இத வாங்கிக்குறீங்களா” என்று கேட்டவரிடம் ”எது பாரிஜாதமா…..இந்த…தேவலோகத்துல பூக்கும்னு சொல்வாங்களே அதுவா” என்று வானத்தைப் பார்த்தபடியே நான் கேட்க ….அவரோ ”அதெல்லாம் தெரியாதும்மா….தோ தெருமுக்குல மளியக்கடய ஒட்னாப்புல ஒரு கேட்டு போட்ட வீடு இருக்கு பாருங்க…அவங்க வீட்டு வாசல்ல வச்சிருக்காங்க…அங்க பூத்துருக்கும் பாத்திருக்கீங்களா” என்றார்….
”அந்ந்ந்த வீடா” என்று கண்களைச் சுருக்கியதில் ஃப்ளாஷ்பேக் ஒன்று உள்ளுக்குள் ஓடியது….தெருவிலேயே செழிப்பான மணிப்ளாண்ட் செடி/கொடி அந்த வீட்டில் தான் இருந்தது….அந்த வீட்டைத் தாண்டித் தான் வழக்கமாக தோசை மாவு வாங்கும் கடைக்குப் போக வேண்டும்…. வீட்டு வாசலில் எந்நேரமும் யாராவது இருப்பார்கள்….
அன்றைக்கு மாவு வாங்கப் போகையில் வாசலில் விளக்கே எரியவில்லை….தெருவிலும் ஆள் நடமாட்டம் இல்லை. ஒரு கையில் மாவுப்பாக்கெட்டை பிடித்துக்கொண்டு (அப்போதெல்லாம் ப்ளாஸ்டிக்கை தடை செய்யவில்லை) மறுகையில் மிச்சக்காசுக்கு வாங்கிய முறுக்கை வாயில் போட்டு மென்று கொண்டே வீட்டு காம்பவுண்ட் சுவற்றை ஒட்டித் தொங்கிக்கொண்டிருந்த மணிப்ளாண்ட் செடியை ஒரு இழு இழுக்கவும் உள்ளேயிருந்து வள்ள்ள்ள்ளென்று ஒரு சத்தம் கேட்டதும் கையிலிருந்த மாவுப்பாக்கெட்டைப் போட்டு விட்டு ஓடியவள் நாலு வீடு தாண்டியதும் தான் கால்கள் நின்றது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்….

ஒரு கிலோ மாவுப்பாக்கெட்டை கீழே போட்டதை விட முக்கால்வாசி முறுக்கை முழுசாய் முழுங்கியது தான் இன்று வரை அவமானமாகத் தெரிகிறது….
அதற்குப்பிறகு மாவு வாங்கப் போவதில்லை என்று முடிவெடுத்து மாவுக்கடையையே மாற்றியாகிவிட்டது…..முறுக்கு திங்கும் போதுமட்டும் அவ்வப்போது தொண்டை அடைக்கும்…. மணிப்ளாண்ட் கண்ணை மட்டுமல்ல நாயையும் மறைத்த கதையை கடைசி வரை யாருக்கும் சொல்லவே இல்லை….
.
ஆக…. கடைசியாய் அன்றைக்கு அவரிடம் இருந்து ரத்த நிறத்தில் பூத்திருந்த ரோஜா செடியையும், பாரிஜாத செடியையும் வாங்கி விட்டேன். ரோஜாச் செடி நூற்றைம்பது ரூபாய்.... பாரிஜாதம் அறுபது ரூபாய். உரம் ஒரு பாக்கெட் இருபது ரூபாய்…. ஏற்கனவே இருந்த செடிகளோடு புதிதாய் வாங்கிய செடிகளையும் சேர்த்து மொத்தம் ஆறு தொட்டிகளுக்கு தொட்டிக்கு இரண்டு உரப்பாக்கெட்டுகள் வீதம் என்று மொத்தம் இருநூற்று நாற்பது ரூபாய்....இரண்டு தொட்டிக்கு மண்ணும் உரமும் கலந்து...எல்லாவற்றையும் செட் செய்து கொடுத்ததற்கு சேர்த்து மொத்தமாய் அறுநூறு ரூபாய் மொய் வைத்திருந்தேன்.....(மொத்த ரூபாயை எண்ணால் எழுதாமல் எழுத்தால் எழுதியதும் ஒரு தந்திரம் தான்....நிச்சயம் உதய் இதை முழுசாய் படிக்கப்போவதில்லை என்று தெரியும்)

டிஸம்பரிலிருந்து மார்ச் வரை உயிரைக் கொடுத்து ரோஜாச்செடியை வளர்த்து நாலு பூக்கள் பூக்கவும் செய்தது....மார்ச் இறுதியில் ஊருக்குப் போனபோது தண்ணீர் சரியாக ஊற்ற ஆளில்லாமல் கிடந்து , நான் சென்னைக்குத் திரும்பி வந்த போது ரோஜாத் தொட்டியில் ஒரு குச்சி மட்டுமே கருகிய நிலையில் அக்னி நட்சத்திர வெயிலுக்கு சாட்சியாக நின்றிருந்தது....
அதன் பிறகு மற்ற செடிகளை கவனித்துப் பார்த்து வளர்த்ததில் இதோ அதோ என்று பாரிஜாதச் செடியும் இரண்டடி உயரத்திற்கு மூன்று கிளைகள் விட்டு நன்றாக வளர்ந்தும் விட்டது….தினமும் தண்ணீர் ஊற்றுவதோடு வாரம் ஒருமுறை மண்ணைக்கிளறி விட்டு வைப்பதோடு பராமரிப்பு வேலையும் எளிதானது…..
ஆறு மாதத்திற்கு முன்பிருந்தே மொட்டுக்கள் விட ஆரம்பித்திருந்தது….ஒரே சமயத்தில் நாலைந்து மொட்டுக்கள் வரைக்கும் வரும்…ஆனாலும் பூக்காமல் காம்போடு அப்படியே தொட்டியில் விழுந்து கிடக்கும்…..ஆசையாய் வெண்பாவிடம் காட்டி “பாப்பா….பாரேன்…இந்த மொட்டு இன்னும் கொஞ்ச நாள்ல பெரிய பூவா பூத்திரும்” என்றதும் “இதுல எப்டிண்ணே லைட் எரியும்” என்று செந்தில் கணக்காய் “இந்த மொத்தாம்மா” என்று பெட்ரோமாக்ஸ் மாண்டிலை செந்தில் பிடிப்பது போல பிடித்துப் பிய்த்து துண்டாக்கி விட்டாள்…
அன்றிலிருந்து அவள் கண்களில் மொட்டு தெரியாதபடிக்குப் பார்த்துக் கொள்ள வேண்டியிருந்தது. மொட்டுகளும் இலை போலவே பச்சை நிறத்தில் சுருள் சுருளாய் சுருண்டிருந்ததால் அவளும் அதன்பிறகு அதை கண்டுகொள்ளவில்லை. ஆரம்பத்தில் ரொம்பவும் எதிர்பார்த்துப் பின் தொடர்ந்து மொட்டுக்கள் வருவதும் உதிர்வதுமாய் இருக்க நானே அது பூ பூக்கும் செடி என்பதை மறந்து போனேன்….
போன வாரம் பக்கத்து வீட்டு அக்கா….அவர்கள் வீட்டு பால்கனியில் நின்று தலையைத் துவட்டியபடி எட்டிப்பார்த்தவாறே….செடி நல்லா வளர்ந்திருக்கு ஆனா ஏன் பூக்க மாட்டேங்குது என்று கேட்டு விட்டுப்போனார்….

கொஞ்சம் கோவமாய் “உனக்கு நாள் தவறாம தண்ணீர் விட்டு வளர்க்குறேன்….மொட்டு நிறைய விடுற….ஆனா ஏன் பூக்க மாட்டேங்குற ரேஸ்கல்ல்ல்ல்…சொந்த வீடு வச்சிருக்க அந்தக்கா வீட்ல மருந்துக்கு கூட ஒரு செடி இல்ல… பாரு அவங்கல்லாம் என்னைய கேள்வி கேட்டுட்டுப் போறாங்க” என்று கவுண்டமணி ஒரு படத்தில் கழுதைகளிடம் கேட்பது போலக் கேட்டு விட்டு வந்து விட்டேன்….அப்போதும் இரண்டு மொட்டுக்கள் விட்டிருந்தது…..
நேற்றைக்குக் காலையில் பால்கனியில் நின்று பல் தேய்த்துக்கொண்டிருக்கும் போது செடிகள் பக்கம் அசட்டையாய் ஒரு பார்வை பார்க்கையில் ஒரு பக்கத்தில் வெள்ளையாய் ஏதோ தெரிந்தது…பக்கத்து வீட்டுப்பையன்கள் அடிக்கடி நோட்டுப்புத்தகத்தில் பேப்பரைக் கிழித்து சுருட்டி சின்னப் பந்து போலத் தூக்கிப் போட்டு விளையாடிக் கொண்டிருப்பார்கள்… அடிக்கடி வீட்டு பால்கனியில் வந்து விழுந்து கிடக்கும் “இவனுகளுக்கு வேற வேலை இல்ல” என்று நினைத்தபடி உள்ளே சென்று விட்டேன்…
மறுபடி வந்து ஒவ்வொரு செடிக்காய் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருக்கையில் தான் இன்னும் கொஞ்சம் நெருங்கிப் பார்க்க முடிந்தது….அது பேப்பர் பந்து இல்லை….பக்கத்து வீட்டு அக்கா பல்தேய்த்து விட்டு துப்பியிருப்பார்களோ என்ற சந்தேகம் முதலில் வந்தது. ஆனாலும் அவரே ஒருமுறை காலையில் எழுந்ததும் காபி போட்டுக்குடித்து வீட்டு வேலை செய்து டிபன் சாப்பிட்டு விட்டு வீட்டு ஆண்கள் வேலைக்கு சென்றதும் குளிக்கப் போகும் போது தான் பல்தேய்ப்பது வழக்கம் என்று ஆச்சாரத்துடன் சொன்னது நன்றாக நினைவில் இருந்ததால் அவரை சந்தேகிக்கமுடியவில்லை….
கால் வைக்க முடியாமல் நடுவிலிருந்த இரண்டு தொட்டிகளை நகர்த்திவிட்டுப் பக்கத்தில் போய்ப் பார்க்கையில் தான் தெரிந்தது…..ஆகக் கடைசியாய் பாரிஜாதம் பூத்திருந்தது…..ஒரு மீடியம் சைஸ் வெள்ளை ரோஜா அளவில் அடுக்கடுக்காய் இதழ்களோடு பூத்திருந்தது. கிட்டத்தட்ட ஒருவருடக் காத்திருப்பின் பலனாய் ஒரேயொரு…இல்லையில்லை முதல் பூ பூத்திருக்கிறது….
ஏம்புள்ள….உன் வீட்டுல வச்சிருக்க செடியில ஒரு பூ பூத்திருக்கு ….அதுக்கு இம்புட்டு பில்டப்பா என்று கேட்பவர்களுக்கு இந்தச் செடிக்குப் பின்னாலுள்ள வரலாற்றை இந்த உலகம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பியே இந்தப் பதிவு…அத்தோடு இன்னும் மிச்சமிருக்கும் மொட்டுகளும் பூக்கும் என்றே நம்புகிறேன்….