Saturday, 6 June 2015

சரக்கொன்றை

எக்மோர் மாண்டியத் ரோடில் உள்ள அலுவலகத்தில் வேலை பார்த்த போது தினமும் காசா மேஜர் ரோட்டிலுள்ள டான் பாஸ்கோ ஸ்கூலைக் கடந்து செல்வது வழக்கம்.
முதல்நாள் இரவு மழையில் கழுவி விடப்பட்டு பளிச்சென்றிருந்த கருநிறத் தார்ரோட்டில் டான் பாஸ்கோ ஸ்கூல் காம்பவுண்டுக்குள் இருந்த மரத்தின் மேலிருந்து அன்றைக்கு மலர்கள் உதிர்ந்து கிடந்தது அழகான நிறக்கலவையோடு வரையப்பட்ட ஓவியம் போலிருந்தது.
அத்தனை அழகான மலர்களை அதுவரை நின்று நிதானித்து கவனிக்காத என் ரசனையைச் சபித்தவாறு அண்ணாந்து பார்க்கையில் தங்கம் போன்ற தகதகப்போடு மஞ்சள் நிறத்தில் கொத்துக் கொத்தாய் மேல்வரிசையில் மலர்ந்த பூக்களும் கீழ் வரிசையில் மலராத மொட்டுக்களுமாய் இலைகளேயற்று மரம்முழுக்கப் பூக்களாயிருப்பதை அன்று தான் முதல் முதலாய் அதிசயித்துப் பார்த்தேன்.
அப்போதே ஆர்வம் மேலிட அந்த மரத்தின் பேரைத்தெரிந்து கொள்ள விரும்பினாலும் யாரிடம் சென்று கேட்பதெனத் தெரியவில்லை. அவ்வளவு பரபரப்பான அந்த ரோட்டில் இருபக்கமும் விரைந்து சென்று கொண்டிருந்தவர்கள் யாருமே அந்த மரத்தையோ மலர்களையோ ரசித்துக் கொண்டிருக்கவில்லை என்பதை உணர்ந்தபோது என் ரசனையின் மீது முதன்முதலாக மெல்லிய ஒரு சந்தேகம் எழுந்தது.
மறுபடி அண்ணாந்து பார்க்கையில் சினிமாக் காட்சிகளில் வருவது போல் மேல் நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்த என் முகத்தின் மீதே இரண்டு பூக்கள் விழ எனக்கு தாளாத சந்தோஷம் தொற்றிக் கொண்டது. அப்படியே அந்த மலர்களைப் பற்றி ஒரு கையில் வைத்துக் கொண்டு மறுகையில் ஏற்கனவே வைத்திருந்த செல்ஃபோனையும் கர்ச்சீஃபையும் ஹேண்ட் பேக்கில் போட்டு விட்டு மிகக் கவனமாக அவ்விரு மலர்களும் கசங்காமல் உள்ளங்கைக்குள் பொதிந்து வைத்துக் கொண்டு ஆஃபீசுக்கு விரைந்தேன்.
இந்த மரத்தின் பெயர் எதுவாக இருந்தாலும் அது நிச்சயம் மாதவன் சாருக்குத் தெரிந்திருக்கும் என்ற நம்பிக்கையோடு அவர் வருகைக்காகக் காத்திருந்தேன். மாதவன் சார் எங்கள் அலுவலகத்தின் மேனேஜர்.
மாதவன் சாருக்கு வயது 55க்கும் மேலிருக்கும். பூர்வீகம் திருநெல்வேலி. சிறு வயதிலேயே குடும்பத்துடன் சென்னைக்குக் குடியேறிய அய்யங்கார் குடும்பம். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்கு அருகில் வீடு. இவரோடு சேர்த்து நான்கு தம்பிகளும் இரண்டு தங்கைகளும் கொண்ட அந்தக் குடும்பத்தில் நன்றாகப் படித்து வங்கியில் பொறுப்பான பதிவியிலமர்ந்து ஒவ்வொருவராகக் கரை சேர்த்த கதையை என்னிடம் அவர் சொல்லக் காரணம் குடும்பப் பொருளாதாரச் சூழ்நிலையின் காரணமாய் அத்தனைச் சிறிய தென்மாவட்டத்து ஊரிலிருந்து இந்தப் பெருநகரத்துக்குக் வேலைக்கு வந்தவள் என்பதே. என் மீது எப்போதும் தனிப்பாசம் அவருக்கு.
என் பொறுமையைச் சோதித்தவாறு 11 மணிக்கு மேல் ஆஃபீஸ் வந்து தன்னுடைய சீட்டை அடைந்து அப்போது தான் உக்காரப் போனவரிடம் “சார் ஒரு நிமிஷம்” என்றவாறு அந்தப் பூக்களை அவர் மேசையின் மீது வைத்து “ இந்தப் பூ பூக்குற மரத்தோட பேரு என்னன்னு உங்களுக்குத் தெரியுமா சார்?”
சட்டைப் பைக்குள்ளிருந்த கண்ணாடியைத் தேடி எடுத்து மாட்டிக் கொண்டு மேசை மேலிருந்த பூக்களை உற்றுப் பார்த்துக் கொண்டு.... ஒரு நிமிடம் கழித்து அதைக் கையில் எடுத்து திருப்பித் திருப்பிப் பார்த்துப் பின் மெதுவாக முகர்ந்து “இது எங்க இருந்து எடுத்துட்டு வந்தேம்மா” எனக் கேட்டார்.
“சார் டான் பாஸ்கோ ஸ்கூல் காம்பவுண்டுக்குள்ள இருக்கு சார் இந்த மரம். அதை ஒட்டியிருக்க ப்ளாட்ஃபார்ம்ல நான் நடந்து போய்ட்டு இருக்கும் போது தான் இந்தப் பூவைப் பார்த்தேன். அப்புறம் அந்த மரத்தைப் பார்த்தா மரம் ஃபுல்லா கொத்துக் கொத்தா மஞ்ச மஞ்சேன்னு பூவாப் பூத்திருக்கு சார்....அவ்ளோ அழகாருக்கு. ஆனா இந்த மாதிரி ஒரு மரத்த நான் எங்கேயுமே இதுவரைக்கும் பார்த்ததில்ல. அதான் பேர் தெரிஞ்சுக்கலாம்னு கேக்குறேன்”
“ம்ம்ம் இதுக்குப் பேரு சரக்கொன்றை மரம்”
“சரக்கொன்றையா”
“ஆமா. கொன்றை மரத்தோட ஒரு பிரிவு. சரம் சரமா பூத்துக் குலுங்குறதால சரக்கொன்றைன்னு பேரு. பூவப் பார்த்து எனக்குக் கண்டுபிடிக்க முடியல. ஆனா டான் பாஸ்கோ ஸ்கூல் காம்பவுண்ட்ல சரக்கொன்றை மரம் இருக்கது எனக்குத் தெரியும்மா”
“அட....பேரே அழகாருக்குல்ல சார்...”சரக்கொன்றை” “சரக்கொன்றை”
என்னுடைய சந்தோஷம் அவருக்கு வியப்பாக இருந்திருக்க வேண்டும். ஒரே ஒரு ஆண் பிள்ளையைப் பெற்று வளர்த்து தற்போது அவரும் வெளிநாட்டில் பணிபுரிவதால் ஒரு சாராசரி இந்தியத் தகப்பனைப் போல பெண் பிள்ளை இல்லையென்ற ஏக்கம் அவருக்கு எப்போதும் உண்டு. அதனாலேயே என் மீது மிகுந்த அன்பும் அக்கறையும் கொண்டவர். ஆரம்ப காலத்து சென்னை வாழ்வின் மோசமான பொருளாதாரத் தருணங்களைக் கடக்கப் பெரு உதவியாய் இருந்தவர்.
தற்போது மகனுக்குத் திருமணம் முடிந்து அவர் வெளிநாட்டிலிருந்து பெங்களூருக்கு பணி மாற்றுதல் வாங்கி விட மாதவன் சாரும் அவர் மனைவி காந்திமதி அம்மாளும் சென்னை வீட்டை விற்று விட்டு மகன் மருமகளுடன் வசித்து வருகின்றனர். அவ்வப்போது ஃபோன் பண்ணி என் நலம் விசாரித்துக் கொள்வார்.
இரண்டு நாட்களுக்கு முன் வேளச்சேரி 100 அடி ரோட்டில் உதய்யுடன் பைக்கில் போகும் போது தான் கவனித்தேன்.....நீல்கிரீஸ்க்கு முன்னால் நலைந்து கட்டிடங்களுக்கு முன்னாலுள்ள ஒரு வீட்டில் சற்று வெளிர் மஞ்சள் நிறத்தில் சரம்சரமாய் பூத்துக் கிடந்த சரக்கொன்றை மரத்தை... கண்களை விட்டு மறையும் வரை பார்த்துக் கொண்டே வந்தேன். காட்சி மறந்ததும் இறுகக் கண்களை மூடிய போது மூடிய இமைகளுக்குள் மஞ்சள் நிறமும் மாதவன் சாரும் வந்து நின்றனர்.

6 comments:

 1. உங்கள் தளம் வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அறிமுகம் செய்தவர் கார்த்திக் புகழேந்தி. வாழ்த்துக்கள். இலக்கியங்களில் விவரிக்கப்படும் சரக்கொன்றை மரம் சிவாலயங்களிலும் காணப்படும். சிவன் கொன்றைமலர் சூடியவன். எங்கள் ஊர் சிவாலயத்திலும் கொன்றை மரம் உண்டு. இந்த வருடம் சரியாக பூக்காதது எனக்கு வருத்தமாக இருந்தது.

  ReplyDelete
  Replies
  1. எங்கள் ஊர் விருதுநகரின் நான் இது போன்ற மரங்களைக் கண்டதில்லை ....அதனாலேயே முதன்முதலில் இந்த மரத்தின் பூக்களைக் கண்டபோது மிகுந்த ஆச்சர்யமும் ஆவலும் உண்டாயிற்று

   Delete
 2. வலைச்சரத்தில் கார்த்திக் புகழேந்தி தங்களை இன்று அறிமுகப்படுத்தியமையறிந்து வாழ்த்துக்கள். தங்களது தளத்தினைக் கண்டேன்.நன்றி.
  http://drbjambulingam.blogspot.com
  http://ponnibuddha.blogspot.com

  ReplyDelete
 3. சரக்கொன்றை அனுபவம் நன்றாக இருந்தது!

  ReplyDelete
 4. எங்கள் குமரியில் சரக்கொன்றைக்கு பஞ்சமில்லை அம்மா!!
  https://www.scientificjudgment.com/

  ReplyDelete