Sunday 22 March 2015

ரீவைண்ட் பார்ட் 1

பல வருஷங்களுக்கு முன்ன பாலிடெக்னிக்ல எங்கூடப் படிச்ச நர்மதாகிட்ட இருந்து ஃபோன். அவ குரல்ல அவ்ளோ உற்சாகம்.

“சொல்லு நர்மதா எப்டி இருக்க?”
“நல்லாருக்கேன்டீ இன்னைக்கு நம்ம சார் ஒருத்தர பஸ்ல பார்த்தேண்டி”
“அப்டியா? எந்த சார் டீ? பேசுனியா?”
“பேசலடி… ஆனா முகம் நல்லா ஞாபகம் இருக்கு. பேரு தான் சட்டுன்னு வர மாட்டேங்குது”
“ம்ம் வி.டி.ஆரா?” (ஃபர்ஸ்ட் இயர் இங்கிலீஷ் வாத்தியார்)
“ஃபர்ஸ்ட் இயர் இல்லடி. நம்ம சிவில் டிபார்ட்மெண்ட்”
“ஓ … ம்ம்ம் அப்போ ராஜசேகரா?” (நாலு வரி பாடம் எடுக்குறதுக்குள்ள மூணு தடவை ஜன்னல் பக்கம் போய் எச்சி துப்பிட்டு வருவாரு)
“இல்ல”
“பொன்னுக்குட்டியா?” (பொன்ராம்ங்குற அவர் பேரச் சுருக்கி செல்லமாக பொன்னுக்குட்டின்னு கூப்பிடுவோம்)
(பழைய ஞாபகம் வந்திருக்கும் போல ) அவ சிரிச்சுட்டே “இல்லடி”
“குவார்ட்டர் மாணிக்கமா?” (சரியான தண்ணி வண்டி ராஜமாணிக்கம் சார்)
“ஹா ஹா இல்லடி”
“பின்ன …ஆனந்தன் சாரா இல்ல ஹெச்.ஓ.டி தாத்தாவா?” (ஸ்ட்ரிக்ட் ஆப்பீஸர்ஸ்)
“அய்யோ …நடுவுல யாரோ மிஸ்ஸாகுறாங்களே”
“ஆங்ங்ங்ங் அப்போ நம்ம குட்டியான மகாலிங்கமா?”
“ஹேய்ய்ய் ஆமாடி ஆமாடி மாகாலிங்கம் சார் தான் …ஹா ஹா குட்டியானை மகாலிங்கமே தான் …எப்டி டி இன்னும் நல்லா ஞாபகம் வச்சிருக்க?”

”ம்ம்ம் ஏன் சொல்ல மாட்ட? பாலிடெக்னிக் முடிச்ச நாலாம் மாசம் சொந்தத்திலயே மாப்பிள்ளை அமைஞ்சு கல்யாணம் பண்ணி செட்டில் ஆனவ நீ …… இத்தன வருஷம் கழிச்சு உனக்கு இதெல்லாம் எங்க ஞாபகம் இருக்கும்?”

”ம்ம் அதுவும் சரி தான். இப்ப பசங்க ரெண்டு பேரும் ஸ்கூலுக்குப் போக ஆரம்பிச்ச பின்னாடி தான் டி பகல்ல ஃப்ரீயா இருக்கேன். நம்ம பாலிடெக்னிக் க்ரூப் ஃபோட்டோ எடுத்துப் பார்த்தேன். முக்கால்வாசிப்பேர தெரியல”ன்னு அலுத்துக்கிட்டவளுக்கு மொபைல்ல நான் அப்லோட் செஞ்சு வச்சிருக்க எங்க க்ரூப் ஃபோட்டோவ சூம் பண்ணிப் பார்த்து வரிசையா ஒவ்வொருத்தர் பேரையும் அவங்க சம்மந்தப்பட்ட சில விஷயங்களையும் சொல்லச் சொல்ல அவளுக்கு ஏகப்பட்ட சந்தோஷம்ங்கிறது அவ குரல்லயே தெரிஞ்சது. அவகூட ஃபோன் பேசி முடிச்ச பிறகும் கூட மண்டைக்குள்ள ஃப்ளாஷ்பேக் கொசுவர்த்திச் சுருள் சுத்திட்டே இருந்தது.

எங்க ஊர்ல கண்டிப்புக்குப் பேர் போன பாலிடெக்னிக் அது. பசங்களும் பொண்ணுங்களும் பேசிக்கக்கூடாது. அந்தந்த டிப்பார்ட்மெண்ட் ஹெச்.ஓ.டில இருந்து லேப் அட்டெண்டர், ஆஃபீஸ் ப்யூன் வரைக்கும் அத்தன பேரும் ஸ்டூடெண்ட்ஸ கவனிச்சுட்டே இருப்பாங்க.

இப்ப ஃபோன் பண்ணிப் பேசுன நர்மதா என் பெஸ்ட் ஃப்ரெண்ட். நர்மதா உயரம். நான் குட்டை. அவ சிகப்பு. நான் மாநிறம். அவ அழகு. நான் சுமார். அவ படிப்புல கொஞ்சம் மந்தம். நான் கொஞ்சம் சூட்டிகை. நர்மதா + ஸ்ரீதேவிங்கிற பேரச் சேர்த்து ஸ்ரீநவிதான்னு அவளே புதுசா ஒரு பேரை உருவாக்கி எங்க புக்ஸ், நோட்ஸ்ல எழுதி வச்சிருப்பா. அவ்வளவு பிரியம் என் மேல. அவ தங்கியிருந்தது ஹாஸ்டல்ல. நான் வீட்ல இருந்து தினமும் சைக்கிள்ல வந்து போவேன்.

46 பசங்களும் ஆறே ஆறு பொண்ணுங்களும் இருந்த எங்க சிவில் பேட்ச்சிலயும் ஒட்டு மொத்த இஞ்சினியரிங் டிபார்ட்மெண்ட்லயும் எங்க ரெண்டு பேரையும் தெரியாத ஆளே இல்ல. அப்ப(வும்) சிவில் ஸ்ரீதேவின்னா ரவுடி தான். நெத்தியில வகிடெடுக்காம முடியெல்லாம் வெட்டி விட்டு (ஸ்டைலு) பயங்கர டெரரா இருப்பேன். போதாதைக்கு ஸ்போர்ட்ஸ் + அத்லெட் வேற. (ஹாக்கி தன்ராஜ் பிள்ளைக்கு பொம்பள வேஷம் போட்ட மாதிரி இருப்பேன்).

ஃபர்ஸ்ட் இயர்ல சேர்ந்த முத நாளே பி.டி.வாத்தியார் எங்க க்ளாஸ் ரூம்க்கு வந்து “இங்க ஸ்ரீதேவி யாரு”ன்னு கேக்க நான் கை தூக்கியதும் ”இண்டர்வெல்ல என்னை ஆஃபீஸ் ரூம்ல வந்து பாரு”ன்னு சொல்லிட்டுப் போனாரு. எதுக்குன்னு குழம்பிப் போய் நிற்க “எந்த ஸ்போட்ஸ்ல சேரப் போற. இங்க கோ-கோ, பாட்மிண்டன், வாலிபால், பேஸ்கட்பால், டேபிள் டென்னிஸ்லாம் இருக்கு”ன்னு சொல்ல “சார்…எனக்கு ஸ்போட்ஸ்லல்லாம் இண்ட்ரஸ்டே இல்ல சார்”னு தலைகுனிய “ஓங்கிக் கொட்டுனேன்னா …உள்ள வந்ததே ஸ்போட்ஸ் கோட்டால தான்… இண்ட்ரஸ்ட் இல்லையாம்ல…நான் உன்ன கோ-கோ டீம்ல சேர்த்துட்டேன். இனிமே பிராக்ட்டீஸுக்கு சொல்லி அனுப்பும் போது வரணும்…என்ன”

ஹும். அவருக்கு என்ன தெரியும் ஆறாம் வகுப்புல ஹாக்கி விளையாட ஆரம்பிச்சு பன்னிரெண்டாம் வகுப்பு வரைக்கும் அதைத் தீவிரமா தொடர்ந்து ஸ்போர்ட்ஸ் காலேஜ்ல சேரணும்கிற ஆசையில சுமாரான மார்க் வாங்கி ப்ளஸ் டூ பாஸ் பண்ணி வெளிய வந்தா அதுவரைக்கும் சப்போர்ட்டா இருந்த ஸ்கூல் மேனேஜ்மெண்ட் என்னைக் கண்டுக்கவேயில்ல. சரியான கைடன்ஸ் கிடைக்காம நிறைய காலேஜ்ல சேர்ற வாய்ப்ப கோட்டை விட்டு கடைசியில (வேற வழியில்லாம) பாலிடெக்னிக்ல சேர்ந்ததே ஒரு துன்பியல் சம்பவம் தான்.


எங்க ஊர் லேடீஸ் காலேஜ்ல ஹாக்கி டீம் இல்லைங்குற ஒரே காரணத்துக்காக அப்ளை பண்ணாம விட்ட துரதிஷ்டம் என்னோட ப்ளஸ் டூ பேட்ச்சுல இருந்த நிறைய பொண்ணுங்க ஹாக்கி பிளேயரா இருந்ததால அவங்க ஜாயின் பண்ண முதல் வருஷமே அந்தக் காலேஜ்ல புதுசா “ஹாக்கி டீம்” கொண்டு வந்துட்டாங்கன்னு கேள்விப்பட்டு நொந்து போய் இனி ஸ்போட்ஸ்ஸே வேணாம்கிற மனநிலையில இருந்தேன். அப்புறம் உப்புக்கு சப்பாணியா கோ-கோ விளையாடினதும் கேர்ள்ஸ் அத்லெடிக் சைட்ல “பாலிடெக்னிக் சேம்பியன்” ஆனதும் வரலாறு.