Thursday 8 January 2015

பக்கத்து வீட்டுப் பாட்டி

பக்கத்து வீட்டுப் பாட்டி வந்திருந்தாங்க. முகம் ரொம்ப வாடிப் போய் இருந்தது.
“என்ன பாட்டி ரொம்ப டல்லா இருக்கீங்க”
“ஒண்ணுமில்லம்மா”
“சரி .காலையில என்ன டிஃபன் சாப்பிட்டீங்க”
“ஒண்ணும் சாப்பிடல கண்ணு”
“ஏன் பாட்டி. இவ்ளோ நேரமாச்சு. இன்னுமா சாப்பிடல”
“காலையில மருமவளோட ஒரே சண்ட . நான் சமைக்குறது பிடிக்கலியாம். உப்பு ,ஒறப்பு சரியில்லேன்னு சொல்றா. அப்போ நீயே சமைச்சுக்கோன்னு சொல்லிட்டேன். அந்தக் கோவத்துல அவளும் சமைக்காம கெளம்பிப் போய்ட்டா. நானும் கெடக்கட்டும்னு ஒண்ணும் செய்யல”
“ம்ம் ..சரி பாட்டி. என் வீட்ல சமைச்சுட்டேன். இருங்க கொஞ்சம் சாப்பாடும் கொழம்பும் தரேன் சாப்பிடுங்க”
“அய்ய வேணாங்கண்ணு. எனக்குப் பசிக்கல”
“அதெப்படி பசிக்காம இருக்கும். இருங்க வரேன்”ன்னுட்டு சாப்பாடு எடுத்துட்டு வந்து கட்டாயப்படுத்தி சாப்பிட வச்சேன்.
அவங்க கண்ணெல்லாம் கலங்கிருச்சு.
சாப்பிட்டு முடிச்சு கை கழுவிட்டு “எனக்குக் கொஞ்சம் கொழம்பு மட்டும் தறியாம்மா”
“தரேன் பாட்டி. கொழம்பு நல்லா இருக்கா ?”
“சாயங்காலம் என் மருமவ வந்ததும் சாப்பிடச் சொல்றேன் கண்ணு. அதுவே முடிவு பண்ணிக்கட்டும் நான் நல்லா சமைக்குறேனா இல்லையான்னுட்டு”
அடங்கொக்காமக்கா   

Tuesday 6 January 2015

புத்தாண்டுப் பயணம் - பகுதி 2

அடுத்து ஸ்ரீபெரும்புதூர் நோக்கிப் பயணம். நிறைய மூங்கில் மரங்களையும் அவற்றினுள்ளே கீச் கீச்சென கத்திக்கொண்டிருந்த குருவிகளின் சத்தத்தையும் ரெட்டைவால் குருவிகள் அலகோடு அலகு உரசிக் கொண்டிருந்த காட்சியையும் வழியெங்கும் அல்லிப் பூத்திருந்த சிறு சிறு குளங்களையும், அசுரத்தனத்தில் பெருகி வரும் புதுக்கட்டிடங்களையும் , அதனால் பாதிக்கப்பட்டு பரப்பளவில் சுருங்கி வரும் நீர் நிலைகளையும்,  நிறைய தொழிற்சாலைகளையும் அவற்றின் குப்பைகள் சாலையோரம் கொட்டப்பட்டிருப்பதையும்,  எஞ்சியிருக்கும் நீர்நிலைகளில் அவற்றின் கழிவுநீர் கலக்கப்படுவதையும் பெருமூச்சோடு பார்த்துக் கொண்டே ஸ்ரீபெரும்புதூரை அடைந்தோம்.
வாசலில் நின்றிருந்த காவலாளர்களிடம் கேமிரா, செல்ஃபோன் தவிர்த்து மற்ற பொருட்கள் அடங்கிய பையை ஒப்படைத்து விட்டு ராஜீவ்காந்தி நினைவிடத்தினுள் நுழைந்தோம். அழகாகப் பராமரிக்கப்பட்ட நடைபாதை, புல்வெளி, செடிகளினூடே வரலாற்றுக் கொலையின் மவுன சாட்சியாய்ப் பரந்து விரிந்திருந்த மைதானத்தைச் சுற்றிலும் வெகு கம்பீரமாய் ஏழு தூண்கள். நடுவில் ஒரு பீடம். அதில் திரு “ராஜீவ் காந்தி” அவர்களின் நினைவுப் புகைப்படம். பீடத்தின் நடுவில் குருதி தோய்ந்தாற் போல ஒரு நினைவுச் செந்நிறக்கல். அதைப் பார்க்கையில் கனத்துத் தான் போகிறது மனம். பீடத்தின் பின்னால் சுற்றுச்சுவர்நெடுக அழகாய் விதம்விதமான சிற்பங்கள். நினைவிடத்தை விட்டு வெளியேறும் இடத்தில் ஆண்/பெண் கழிப்பறைகள் வெகுசுத்தமாய் இருந்தன. வெளியே வந்து ஒரு இளநீர் குடித்து விட்டு “மணி மங்கலம்” நோக்கிப் பயணித்தோம்.  
”மணி மங்கலம்” செல்லும் வழியில் ஓரிடத்தில் ஒன்றரை அடி உயரமே உள்ள நாற்புறமும் கற்கள் அமைக்கப்பட்டு நடுவில் ஒரு சாமி சிலை இருப்பதைக் கவனித்து வண்டியை விட்டிறங்கி அருகில் சென்று பார்த்தோம். சின்னஞ்சிறிய குகை போன்ற அமைப்பினுள்ளே ஓரடி உயரத்தில் இடுப்பளவு கொண்ட ஒரு சாமி சிலை சார்த்தி வைக்கப்பட்டு இருந்தது.  அணைந்த நிலையில் ஒன்றிரண்டு அகல் விளக்குகள் தென்பட்டன. நான்கடி தொலைவில் இடுப்புக்குக் கீழுள்ள சாமி சிலையின் மிச்சப்பகுதி கேட்பாரற்றுக் கிடந்தது. பக்கத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த முதியவர் ஒருவர் அந்த அம்மன் பெயர் “தீப்பாய்ந்தம்மன்” என்றும் வேண்டுதல்களை நிறைவேற்றும் சக்திவாய்ந்த தெய்வம் என்றும் கூறினார். அம்மனின் பெயர்க்காரணம் குறித்துக் கேட்டதற்கு தனக்கு எதுவும் தெரியாது எனவும் தனக்கு நினைவு தெரிந்த நாள் முதற்கொண்டு இந்த இடம் இப்படித்தான் இருப்பதாகவும் கூறினார். நன்றி சொல்லிக் கிளம்ப முற்படுகையில் அடுத்த வருடம் உங்களுக்கு அழகாய்க் குழந்தை பிறக்கும் என்று ஆரூடம் கூறியவரிடம் புன்னகையுடன் விடை பெற்றோம்.   
சில நிமிட பைக் பயணத்தில் சாலையோரத்தில் சத்தமாய் பாடிக்கொண்டிருந்த ஒலிப்பெருக்கியின் பக்திப்பாடல் வந்த திசையில் ஒரு ஆஞ்சநேயர் கோவில் தெரிந்தது., நிறைய பைக்குகளும் கார்களும் அணிவகுத்து நிற்க அவற்றினூடே பள பள ஆடைகள் அணிந்த மனிதர்கள் கூட்டமாக நின்றிருந்தனர். ஆர்வமும் வியப்பும் மேலிட பைக்கை அந்த இடத்தில் நிறுத்திவிட்டு நான்கடி தூரத்தில் இருந்த ஆஞ்சநேயர் கோவிலைத்தாண்டி உயரத்தில் தெரிந்த பெருமாள் கோவில் கோபுரத்தைப் பார்த்து விரைவாக நடை போட்டோம். காரணம் அப்போது மணி பகல் 12:00 ஐ நெருங்கிவிட்டிருந்தது. கோவில் நடை சார்த்துவதற்குள் உள்ளே சென்றுவிட எடுத்த முயற்சி தோல்வியடையும் படி கோவில் குருக்கள் அகலமான அந்தப் பழைய கதவைச் சிரமத்துடன் தாளிட்டுக் கொண்டிருந்தார். ஏமாற்றத்தோடு ஒருவரையொருவர் பார்க்கையில் நாசியில் அறைந்ததொரு தெய்வீகப் “புளியோதரை மணம்”.
பசியுடன் பின்னால் திரும்ப , என்னைக் காணாமல் தாண்டிச் சென்று பெருமாளைத் தரிசிக்க முடியுமாவென ஏளனமாய்க் கேட்டபடி ஆஞ்சநேயர் தான் அருள்பாலித்துக் கொண்டிருந்தார். தாராளமாய் வெண்ணெய் சார்த்தப்பட்டிருந்த ஆஞ்சநேயரிடம் மன்னிப்பு கேட்டபடி கும்பிட்டு முடித்த கைகளில் சுடச்சுட சர்க்கரைப் பொங்கலும் புளியோதரையும் தாராளமாய்த் தந்தனர் கோவில் நிர்வாகத்தினர். நின்ற நிலையிலேயே சற்று தள்ளிச் சென்று சாப்பிட ஆரம்பித்தோம். பசியும் ருசியும் போட்டி போட்டுக் கொள்ள இலை வெகு விரைவில் காலியானது. நல்லெண்ணெய் கமகமத்த கைகளை வீதியோர குழாயடியில் கழுவியபடி சுற்றுமுற்றும் வேடிக்கை பார்த்தோம்.
இரு பக்கமும் பழமை மாறாத கூரைஓட்டு வீடுகள். உறுதியான தூண்கள் கூரையைத் தாங்கியபடி கம்பீரமாய் நிற்க, பரந்து விரிந்த திண்ணையொன்றில் கருநீலப் பட்டுச்சேலை அணிந்தபடி பாட்டியொருத்தியும் பேத்தியொருத்தியுமாய்க் கதை பேசிக் கொண்டிருந்தது கவிதைக் காட்சி. அனுமதி கேட்டுப் புகைப்படம் எடுத்துக் கொண்டோம். பின் அங்கிருந்து கிளம்பி அருகிலிருந்த சிவன் கோவிலுக்குப் புறப்பட்டோம்.

தூரத்தில் தென்பட்ட கோவில் கோபுரத்தை அடையாளமாகக் கொண்டு சில நிமிடங்களில் கோவிலை அடைந்தோம். வண்டியை நிறுத்திவிட்டு ஐம்பதடி தூரம் நடந்து சென்றே கோவில் முகப்பை அடைய முடியும். வாசலை அடையும் முன் வழிமறித்து நின்றதொரு ராட்சத ஆலமரம். அண்ணாந்து பார்த்துப் பிரமித்தபடி கோவிலினுள் நுழைந்தோம்.  
பயணம் தொடரும் .....    

Monday 5 January 2015

சட்டை

காலையில கீழ்வீட்டுக்காரம்மா எங்க வீட்டுக்கு வந்திருந்தாங்க. அவங்களப் பார்த்தாலே ஒரு பயம் வரும் .ஆள் அந்த அளவுக்கு பல்க்கா இருப்பாங்க. (எப்பப் பார்த்தாலும் மருமக கூட சண்டை போட்டுட்டே இருப்பாங்க)

“வாங்க ஆண்ட்டி. உள்ள வாங்க”

“ இருக்கட்டும்மா. இது உங்க வீட்டுக்காரர் சட்டையா?”

வாங்கிப் பார்த்துட்டு, “ஆமா ஆண்ட்டி”

“நேத்து காயப் போட்ட துணியெல்லாம் எடுக்கும் போது மாத்தி எடுத்துட்டு வந்துட்டேன். என் பையன்கிட்டயும் இதே மாதிரி சட்டை இருக்கு. அதான்”

“ஓ.. அப்டியா ...பரவால்ல ஆண்ட்டி. நானும் மிஸ்ஸானத கவனிக்கல”

“ம்ம் சட்டை காலர்ல பாரும்மா. அழுக்கு சரியாப் போகல”

“ஆமால்ல. .சரியா பிரஷ் போடல போல”

“ஏதோ தனிக்குடித்தனம் இருக்கதால தப்பிச்சம்மா. இல்லேன்னா உங்க அம்மா துணி துவைக்கக் கத்துக்குடுக்கலையான்னு உங்க மாமியார் திட்டியிருப்பாங்க”

“அப்டி திட்டுறதுன்னா எங்க வீட்டுக்காரரத் தான் திட்டணும் ஆண்ட்டி. ஏன்னா இந்த சட்டையத் துவைச்சது அவரு தான்”

“ஆங்ங்”

“ஆமா ஆண்ட்டி ..உங்க வீட்டுலயெல்லாம்  உங்க மருமகளா துவைக்குறாங்க.அய்யோ பாவம்”

“நான் வரேன்”னுட்டு திரும்பிப் பார்க்காம போய்ட்டாங்க..

Friday 2 January 2015

புத்தாண்டுப் பயணம் - பகுதி 1

எந்தப்புது வருடத்தின் மீதும் பெரிதாய் ஏதும் ஆர்வமோ எதிர்பார்ப்போ இருந்ததில்லை. ”நாளை மற்றுமொரு நாளே” என்பதே என்னுடைய கருத்தும். மற்றபடி லீவுநாள் என்றளவில் சந்தோசம் தரக்கூடியது தான் இந்தப் புத்தாண்டு நாட்களெல்லாம்.
ஆனால் இந்த முறை உதயசங்கர் போட்டு வைத்திருந்த திட்டத்தின் படி நேற்று காலையிலேயே வீட்டை விட்டுக் கிளம்பினோம். குறைந்தது 12 மணி நேரப் பயணம் என்பதால் முதுகில் சுமந்து செல்லும் பயணப் பையில் “நந்தினி” (உதயனின் கேமரா), சில நொறுக்குத் தீனிகள், ஒரு ஆப்பிள், மாதுளை கூடவே ஒரு சிறு கத்தி, துண்டு, தண்ணீர் எடுத்துக் கொண்டு கிளம்பினோம். வெயில் என்று சொல்ல முடியாத அளவுக்கு வெறுமனே வெளிச்சத்தோடு இருந்த இதமான காலைப் பொழுது பயணத்தைத் தொடங்க பச்சைக்கொடி அசைத்து உற்சாகத்தைக் கொடுத்தது.
முதலில் குன்றத்தூர். முழுமுதற் கடவுள் என்று அழைக்கப்படுவதாலேயோ என்னவோ முருகனைக் காணக் குன்றத்தூரில் மக்கள் கூட்டம் அலை மோதியது. முன்னமே எதிர்பார்த்திருந்ததால் அருகில் இருந்த கடையொன்றில் சிவப்பு, கருப்பு நிறக்கயிறுகளின் டாலர்களில் காற்றாடிக்கொண்டிருந்த முருகனை தரிசித்து விட்டு வசந்த பவனில் காலை டிஃபனை முடித்தோம்.  
அங்கிருந்து சில நிமிடப்பயணங்களில் ”செம்பரப்பாக்கம் ஏரி”யை அடைந்தோம். ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண், ஒரே பைக்கில் ஐந்து பேராக வந்திருந்த ஒரு குடும்பம், சத்தமாக அரசியல் பேசிக்கொண்டு இரு ஆண்கள், போலீஸ் ரோந்து வண்டியைக் கண்டதும் திசைக்கொரு பைக்காக சிதறிய ”பாட்டில் பார்ட்டி மூட்” இளைஞர்கள், சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டே தூண்டில் போட்டுக் கொண்டிருந்த சின்னப் பையன்கள், மடியில் அமர்ந்திருந்த குழந்தையிடம் சற்று தள்ளி சுள்ளி பொறுக்கிக் கொண்டிருந்த அதன் தந்தையைப் பார்த்து ஏதோ சொல்லிக் கொஞ்சிக்கொண்டிருந்த இளம் நரிக்குறவப் பெண்ணொருத்தி , சோம்பலுடன் படுத்திருந்த கருப்பு நாய் என ஏரி வெகுவாக வசீகரித்தது.
பறவைகளைப் படம் பிடிக்கவே இந்த இடத்திற்கு அழைத்து வந்திருந்தார் உதயசங்கர். வந்தியத்தேவனை (உதயனின் பைக்) ஓரமாக இளைப்பாற வைத்து விட்டு இருவருமாகக் கொஞ்ச நேரம் ஏரியைக் கண் நிறைய ரசித்துக் கொண்டிருந்தோம். ஏரியில் அதிகமாகத் தண்ணீர் இல்லை. தூரத்தில் எங்கோ பெரிதாய்ப் புகைந்து கொண்டிருந்த கரும்புகையின் காரணம் என்னாவாயிருக்குமென விவாதித்துக்கொண்டே அதைப் புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.
நிறையப் பறவைகளைப் பார்க்க முடிந்தது. சர் சர்ரென இங்குமங்கும் வெகு விரைவாகப் பறந்து கொண்டிருந்தன பெயர் தெரியாத சிறு சிறு பறவைகள். வெகு நிதானமாக நீந்திக் கொண்டிருந்தது ஒற்றை ஃப்ளெமிங்கோ. நாரையொன்று தன் அலகினால் சிறு மீனைக் கொத்தியபடிப் பசியாறிக் கொண்டிருந்தது. ஒன்றையொன்று துரத்தியவாறு பறந்து கொண்டிருந்தன இரு கிளிகள். மின்சார வயர்களில் ஆங்காங்கே ஒற்றையாகவும் ஒற்றுமையாகவும் அமர்ந்திருந்தன கருகரு ரெட்டைவால் குருவிகள். அந்தப் பகுதி ஆட்கள் சிலர் துணி துவைத்துக் கொண்டிருந்தனர்.    
வேண்டிய அளவு புகைப்படங்களை அவரவர் கேமிராவில் எடுத்துக் கொண்ட பின், தொடந்த பயணத்தினிடையில் நத்தம்பாக்கம் என்ற ஊரைக் கடந்து செல்லும் போது உதயன் சடாரென பைக்கை நிறுத்தி விட்டு சட்டைப் பையிலிருந்து மொபைலை எடுத்தவாறே என்னிடம் “இப்போ கடந்து போன வண்டியக் கவனிச்சியா. அதுல என்ன எழுதியிருந்தது?”ன்னு கேட்க நான் திரும்பிப் பார்ப்பதற்குள் அந்த வாகனம் கண் மறைவு தூரம் சென்று விட்டது.  
உதயன் ஃபோனில் “ஐயா….. எங்கேயிருக்கீங்க? அதே இடத்தில வண்டியக் கொஞ்சம் நிறுத்துங்க. இதோ வரேன்” என்று சொல்லிவிட்டு வண்டியைத் திருப்ப இரண்டு நிமிடத்தில் அந்த இளஞ்சிவப்பு நிற சுமோவைக் கண்டோம். வண்டியினின்று சிரித்தபடி இறங்கிய அந்த உயர்ந்த, கடாமீசைக்கார மனிதர் மதிப்பிற்குரிய “துரை ஐயா”. பின்னாலே புன்சிரிப்போடு வந்திணைந்தார் அவரின் திருமதி. துரையம்மா. வணக்கம் கூறிய கைகளில் இரண்டு பெருநெல்லிக்காய்களைக் கனிவோடு கொடுத்து நலம் விசாரித்தார். எதிர்பாரா சந்திப்பில் மகிழ்வோடு சில நிமிடங்கள் பேசிவிட்டு விடைபெற்றுக் கொண்டோம்.
அங்கிருந்து கிளம்பி ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலையில் வழிமறித்த “அமரம் பேடு” என்ற ஊரில் இறங்கி சாலையோரமாய் எதிர்ப்புறம் இருந்த வழிப்போக்கர் மண்டபத்தைச் சென்றடந்தோம். சுற்றிலும் மரஞ்செடிகொடிகள் சூழ, சிதிலமடைந்து போயிருந்த மண்டபத்தின் கல் தரைகளில் ஆங்காங்கே காலி மது புட்டிகளும் இன்ன பிற குப்பைகளும் நிறைந்து கிடந்தன. மண்டபத்தூண்களில் கொடி கட்டி துணிகளைக் காயப்போட்டிருந்தனர் அப்பகுதி மக்கள்.

பத்துப் பன்னிரெண்டு தூண்களில் அழகழகான சிற்பங்கள். மேற்கூரையில் மீன்கள், அரவம், அரணை, தவளை போன்ற உயிரினங்கள் செதுக்கப்பட்டிருந்தன. இங்கிருக்கும் ”கடல்யானை” சிற்பம் அரிதாகக் காணக்கூடிய ஒன்றாகும். மண்டபத்திற்கு எதிரே இருந்த குடியிருப்பில் வாசலில் வரைந்திருந்த கோலங்களின் பிண்ணணியில் ஒரு கூரை வீடே ஓவியம் போல் காட்சியளித்தது. வீடுகளின் பின்னால் அழகிய அல்லிக்குளமொன்று நிறையப் பூக்களோடிருந்தது.