Friday 2 January 2015

புத்தாண்டுப் பயணம் - பகுதி 1

எந்தப்புது வருடத்தின் மீதும் பெரிதாய் ஏதும் ஆர்வமோ எதிர்பார்ப்போ இருந்ததில்லை. ”நாளை மற்றுமொரு நாளே” என்பதே என்னுடைய கருத்தும். மற்றபடி லீவுநாள் என்றளவில் சந்தோசம் தரக்கூடியது தான் இந்தப் புத்தாண்டு நாட்களெல்லாம்.
ஆனால் இந்த முறை உதயசங்கர் போட்டு வைத்திருந்த திட்டத்தின் படி நேற்று காலையிலேயே வீட்டை விட்டுக் கிளம்பினோம். குறைந்தது 12 மணி நேரப் பயணம் என்பதால் முதுகில் சுமந்து செல்லும் பயணப் பையில் “நந்தினி” (உதயனின் கேமரா), சில நொறுக்குத் தீனிகள், ஒரு ஆப்பிள், மாதுளை கூடவே ஒரு சிறு கத்தி, துண்டு, தண்ணீர் எடுத்துக் கொண்டு கிளம்பினோம். வெயில் என்று சொல்ல முடியாத அளவுக்கு வெறுமனே வெளிச்சத்தோடு இருந்த இதமான காலைப் பொழுது பயணத்தைத் தொடங்க பச்சைக்கொடி அசைத்து உற்சாகத்தைக் கொடுத்தது.
முதலில் குன்றத்தூர். முழுமுதற் கடவுள் என்று அழைக்கப்படுவதாலேயோ என்னவோ முருகனைக் காணக் குன்றத்தூரில் மக்கள் கூட்டம் அலை மோதியது. முன்னமே எதிர்பார்த்திருந்ததால் அருகில் இருந்த கடையொன்றில் சிவப்பு, கருப்பு நிறக்கயிறுகளின் டாலர்களில் காற்றாடிக்கொண்டிருந்த முருகனை தரிசித்து விட்டு வசந்த பவனில் காலை டிஃபனை முடித்தோம்.  
அங்கிருந்து சில நிமிடப்பயணங்களில் ”செம்பரப்பாக்கம் ஏரி”யை அடைந்தோம். ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண், ஒரே பைக்கில் ஐந்து பேராக வந்திருந்த ஒரு குடும்பம், சத்தமாக அரசியல் பேசிக்கொண்டு இரு ஆண்கள், போலீஸ் ரோந்து வண்டியைக் கண்டதும் திசைக்கொரு பைக்காக சிதறிய ”பாட்டில் பார்ட்டி மூட்” இளைஞர்கள், சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டே தூண்டில் போட்டுக் கொண்டிருந்த சின்னப் பையன்கள், மடியில் அமர்ந்திருந்த குழந்தையிடம் சற்று தள்ளி சுள்ளி பொறுக்கிக் கொண்டிருந்த அதன் தந்தையைப் பார்த்து ஏதோ சொல்லிக் கொஞ்சிக்கொண்டிருந்த இளம் நரிக்குறவப் பெண்ணொருத்தி , சோம்பலுடன் படுத்திருந்த கருப்பு நாய் என ஏரி வெகுவாக வசீகரித்தது.
பறவைகளைப் படம் பிடிக்கவே இந்த இடத்திற்கு அழைத்து வந்திருந்தார் உதயசங்கர். வந்தியத்தேவனை (உதயனின் பைக்) ஓரமாக இளைப்பாற வைத்து விட்டு இருவருமாகக் கொஞ்ச நேரம் ஏரியைக் கண் நிறைய ரசித்துக் கொண்டிருந்தோம். ஏரியில் அதிகமாகத் தண்ணீர் இல்லை. தூரத்தில் எங்கோ பெரிதாய்ப் புகைந்து கொண்டிருந்த கரும்புகையின் காரணம் என்னாவாயிருக்குமென விவாதித்துக்கொண்டே அதைப் புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.
நிறையப் பறவைகளைப் பார்க்க முடிந்தது. சர் சர்ரென இங்குமங்கும் வெகு விரைவாகப் பறந்து கொண்டிருந்தன பெயர் தெரியாத சிறு சிறு பறவைகள். வெகு நிதானமாக நீந்திக் கொண்டிருந்தது ஒற்றை ஃப்ளெமிங்கோ. நாரையொன்று தன் அலகினால் சிறு மீனைக் கொத்தியபடிப் பசியாறிக் கொண்டிருந்தது. ஒன்றையொன்று துரத்தியவாறு பறந்து கொண்டிருந்தன இரு கிளிகள். மின்சார வயர்களில் ஆங்காங்கே ஒற்றையாகவும் ஒற்றுமையாகவும் அமர்ந்திருந்தன கருகரு ரெட்டைவால் குருவிகள். அந்தப் பகுதி ஆட்கள் சிலர் துணி துவைத்துக் கொண்டிருந்தனர்.    
வேண்டிய அளவு புகைப்படங்களை அவரவர் கேமிராவில் எடுத்துக் கொண்ட பின், தொடந்த பயணத்தினிடையில் நத்தம்பாக்கம் என்ற ஊரைக் கடந்து செல்லும் போது உதயன் சடாரென பைக்கை நிறுத்தி விட்டு சட்டைப் பையிலிருந்து மொபைலை எடுத்தவாறே என்னிடம் “இப்போ கடந்து போன வண்டியக் கவனிச்சியா. அதுல என்ன எழுதியிருந்தது?”ன்னு கேட்க நான் திரும்பிப் பார்ப்பதற்குள் அந்த வாகனம் கண் மறைவு தூரம் சென்று விட்டது.  
உதயன் ஃபோனில் “ஐயா….. எங்கேயிருக்கீங்க? அதே இடத்தில வண்டியக் கொஞ்சம் நிறுத்துங்க. இதோ வரேன்” என்று சொல்லிவிட்டு வண்டியைத் திருப்ப இரண்டு நிமிடத்தில் அந்த இளஞ்சிவப்பு நிற சுமோவைக் கண்டோம். வண்டியினின்று சிரித்தபடி இறங்கிய அந்த உயர்ந்த, கடாமீசைக்கார மனிதர் மதிப்பிற்குரிய “துரை ஐயா”. பின்னாலே புன்சிரிப்போடு வந்திணைந்தார் அவரின் திருமதி. துரையம்மா. வணக்கம் கூறிய கைகளில் இரண்டு பெருநெல்லிக்காய்களைக் கனிவோடு கொடுத்து நலம் விசாரித்தார். எதிர்பாரா சந்திப்பில் மகிழ்வோடு சில நிமிடங்கள் பேசிவிட்டு விடைபெற்றுக் கொண்டோம்.
அங்கிருந்து கிளம்பி ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலையில் வழிமறித்த “அமரம் பேடு” என்ற ஊரில் இறங்கி சாலையோரமாய் எதிர்ப்புறம் இருந்த வழிப்போக்கர் மண்டபத்தைச் சென்றடந்தோம். சுற்றிலும் மரஞ்செடிகொடிகள் சூழ, சிதிலமடைந்து போயிருந்த மண்டபத்தின் கல் தரைகளில் ஆங்காங்கே காலி மது புட்டிகளும் இன்ன பிற குப்பைகளும் நிறைந்து கிடந்தன. மண்டபத்தூண்களில் கொடி கட்டி துணிகளைக் காயப்போட்டிருந்தனர் அப்பகுதி மக்கள்.

பத்துப் பன்னிரெண்டு தூண்களில் அழகழகான சிற்பங்கள். மேற்கூரையில் மீன்கள், அரவம், அரணை, தவளை போன்ற உயிரினங்கள் செதுக்கப்பட்டிருந்தன. இங்கிருக்கும் ”கடல்யானை” சிற்பம் அரிதாகக் காணக்கூடிய ஒன்றாகும். மண்டபத்திற்கு எதிரே இருந்த குடியிருப்பில் வாசலில் வரைந்திருந்த கோலங்களின் பிண்ணணியில் ஒரு கூரை வீடே ஓவியம் போல் காட்சியளித்தது. வீடுகளின் பின்னால் அழகிய அல்லிக்குளமொன்று நிறையப் பூக்களோடிருந்தது.

2 comments: