Tuesday 25 November 2014

கையெழுத்து

கையெழுத்து .....

ஒரு கையெழுத்துப்போட்டியின் அறிவிப்பை நாளிதழ் ஒன்றில் காண நேர்ந்தபோது மனதில் தோன்றியவற்றை இங்கே எழுதி இருக்கிறேன். சிலேட்டுக்களில் குச்சிவைத்து அப்பா என் கை பிடித்து எழுதப்பழக்கிய ஆரம்ப நாட்களில்  இன்னும் மங்காமல் நினைவில் இருக்கிறது. அப்பாவின் கையெழுத்து அழகாக இருக்கும்.அவர் பயிற்சியினாலோ என்னவோ எனக்கும் அழகான கையெழுத்து வாய்த்தது வரமன்றி வேறில்லை.குச்சி, பென்சிலில் ஆரம்பித்து மை பேனா, பால்பாயிண்ட் பேனா, ஜெல் பேனா என எழுதுகோள்கள் எவ்வளவோ மாறிவிட்டன. தற்போது மறுபடி தொன்று தொட்ட எழுத்து முறையான ஆற்றுமணலில் கைலிரலால் எழுதிய பழக்கம் போல தொடுதிரை மூலம் எழுதும் வசதிகள் வந்துவிட்டாலும் கையெழுத்து என்பது இன்னும் தனித்தன்மை வாய்ந்த விஷயமாகவே உள்ளது. 

பள்ளிக்காலங்களில் பேனாக்கள் கையெழுத்துக்கு பெரும்பங்கு வகித்ததையும், விதவிதமான பேனாக்கள் உபயோகிப்பதே அந்த காலகட்டங்களில் மனதுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும்உற்சாகத்தையும் பெருமையையும் தந்ததை யாரும் மறுக்க முடியாது. பேனாக்களில் எழுதும்போது எழுத்து தடிமனாக இருக்க பேனா முனைகளை அவ்வப்போது தரையிலோ, மேசையிலோ சற்றுஅழுத்தி மிக லேசான ஒரு வளைவை ஏற்படுத்தி அதன்பின் எழுதுவது என் பழக்கம். அப்படிவளைக்க முயலும் பொது சில சமயம் பேனா முனை உடைந்து அப்பாவிடம் அடி வாங்கியஅனுபவமும் நிறையவே உண்டு. பள்ளித்தேர்வு காலங்களில் பலமுறை தேர்வு எழுதிக்கொண்டுஇருக்கும்போதே பேனா முனை உடைந்து மாற்றுப்பேனா இன்றி அழுது, பின் வேறு யாரிடமாவதுஇருந்து தேர்வு எழுதிய நாட்களும் மறக்க முடியாதவையே. 

நன்றாக பழக்கப்பட்ட பேனாக்கள் நம் நெருங்கிய நண்பர்கள் போலத்தான்.தொலைந்து போகும் சமயங்களில் நம்மை நிலைகுலைய வைத்துவிடும். புதிய பேனாக்களை செல்லப்பிராணிகள் போல மெல்ல மெல்ல நம் வசப்படுத்தி நம் விருப்பத்திற்கேற்றவாறு எழுதவைத்தல் என் வரையில் ஒரு கலையே. தமிழ்ப்பாடத்தில் நான் எப்போதும் அதிக மதிப்பெண் பெறுவதற்கு முக்கிய காரணம் என் கையெழுத்து தானென்று என் வகுப்பு தோழிகள் என்னிடம் கூறுவதுண்டு. வகுப்பு ஆசிரியர்களின் பாராட்டையும் பெற்ற அக்காலங்கள் நினைக்கும் போதெல்லாம் பெருமை கொள்ள செய்கின்றது.

எப்போதும் என் கைப்பையில் இரண்டுக்கும் மேற்பட்ட பேனாக்கள் இருக்கும்.விதவிதமான பேனாக்கள் எப்போதும் என்னைக் கவர்பவை. தேவையான பேனாக்கள் இருக்கும் பட்சத்தில்கூட அழகான பேனாக்களை எங்கு கண்டாலும் வாங்கி வைத்துக்கொள்ளும் பழக்கம் எனக்கு உண்டு.சட்டைப்பையில் பேனா வைத்திருக்கும் ஆண்கள் எப்போதும் என் மரியாதைக்குரியவர்கள்.

”கையெழுத்து அழகாக இருந்தால் தலையெழுத்து நன்றாக இருக்காது “ என்றுமுன்பெல்லாம் கூறுவார்கள். தற்போது கையெழுத்து அதிகம் பயன்பாடு இல்லாத வேளைகளில் இந்தகூற்றே அர்த்தமற்றது என்று பலர் கூறக் கேட்கிறேன். பக்கம் பக்கமாக தட்டச்சுசெய்ய பழகிக்கொண்ட போதிலும் பேனா பிடித்து எழுத வாய்க்கும் குறைவான சந்தர்ப்பங்கள் மனதுக்கு எப்போதும் நெருக்கமாகின்றன. என் கையெழுத்து எனக்கு தன்னம்பிக்கையையும் பெருமையையும் தந்திருப்பது மறுக்க முடியாத உண்மை.

No comments:

Post a Comment