Tuesday 25 November 2014

முத்துமாரியம்மன் திருக்கோவில்

பக்கத்து தெருவில் இருக்கும் கோவிலுக்குப் போயிருந்தேன். நுழையும் போதே நிறைய வித்தியாசங்கள் தென்பட்டாலும் ஒரு ஆர்வத்திலும் பக்தியிலும்(!!!!!) உள்ளே போய் விட்டேன்.

முதலில் கண்ணில் பட்ட கடவுள் பெயர் ”மோகன் - சுஜாதா , எண்.754’”. அப்படியே அதிர்ச்சியாகி பார்வையைக் கொஞ்சம் கீழே கொண்டு போக “பால கணபதி”என்று போனால் போகுதென்று சிறிய எழுத்தில் எழுதப்பட்டிருந்தது. அய்யோ பாவம் என்றவாறே நகர்ந்தால் அடுத்து இருந்தவர் “பால முருகன்”. ”மோகன் - சுஜாதா” கொடுத்த அதிர்ச்சியில் கொஞ்சம் முன்னேற்பாடாக நாலா பக்கமும் பார்வையை வீசியதன் பலனாக இவர் பேரை முதலில் கண்டுபிடித்ததை எண்ணி மகிழ்ந்தேன்.

அந்த சந்தோஷத்தோடு ஒவ்வொரு சந்நிதானமாகப் போய்ப் பார்த்ததில் ஒரு விஷயம் தெளிவாகத் தெரிந்தது. இந்தக் கோவில் சாதாரண(???) கோவில் இல்ல. பழமையான கோவில்களின் கட்டட அமைப்பும், சிற்பங்களும் எப்படி அந்தக் கால மனிதர்களின் கலை, பண்பாடு,பழக்கவழக்கங்கள நமக்கு தெரியச் செய்ததோ அதே மாதிரி இந்தக் கோவில் தற்கால/ சமகால மனிதர்களின் வாழ்வியலைத் தெளிவாகச் சொன்னது.
இரும்புக் கதவு போட்டுப் பூட்டி வைக்கப்பட்டிருந்த சண்டிகேஸ்வரருக்கு சற்றுப் பின்னால் வலப் பக்கமும் இடப்பக்கமும் தற்கால மனிதன் தண்ணீர் எடுக்கப் பயன்படுத்தும் பிளாஸ்டிக் குடங்கள் சிவப்பு மற்றும் பச்சை வண்ணத்தில் (வாவ்....வாட் எ கலர் காம்பினேஷன்) அருள்பாலித்துக் கொண்டிருப்பது வேறெந்தக் கோவிலிலும் காணக் கிடைக்காத கண்கொள்ளாக் காட்சியாகும்.

சண்டிகேஸ்வரருக்கு சற்றும் சளைத்தவர்களில்லை இவர்கள் என்பது போல நவக்கிரகங்கள் நாலா பக்கமும் இரும்புக் கம்பிகளால் கதவு போட்டுப் பாதுகாப்பாகப் பூட்டப்பட்டிருந்ததன் காரணம் நான்கு மூலையிலும் வைக்கப் பட்டிருந்த அலுமினியம், எவர் சில்வர் போன்ற கோவில் பயன்பாட்டுப் பாத்திரங்கள் தான்.

சின்னதாய் ஒரு மண்டபம். அதன் மேற்கூரையில் இரண்டு ஃபேன்கள் சுழன்று கொண்டிருக்க டைல்ஸ் பதிக்கப்பட்ட தரையின் மீது நான்கு வேட்டித் துணிகள் விரிக்கப்பட்டு சுடுசோறு ஆற வைக்கப்பட்டிருந்தது. அதைச் சுற்றி வந்த சில ஏழைக் குழந்தைகளைக் கையில் உள்ள நீண்ட குச்சியால் விரட்டிக் கொண்டிருந்த பாதுகாவலரின் கடமையுணர்ச்சியைக் கண்டும் காணாமல் நின்று கொண்டிருந்தார் ”உண்ணாமுலை சமேத அண்ணாமலையார்”.

அரசமரத்தடியில் இருந்த புற்றுக்கோவிலைச் சுற்றிச் சிறிதும் பெரிதுமாய் நாக சிற்பங்கள் விதவிதமாய் காணக் கிடைக்க அவற்றோடு சேர்த்து ,கோவில் பயன்பாடு போக எஞ்சியிருந்த இரு முழு டைல்ஸ் கற்களின் பின்பக்கம் மஞ்சள் பூசி மொழுகி குங்குமம் இட்டிருந்த தமிழனின் பக்திக்கு எல்லையே இல்லை.

பிரம்மா,அய்யப்பன், ஆஞ்சநேயர், சீனிவாசப்பெருமாள், கால பைரவர் போன்ற தனி சந்நிதானக் கடவுளர்களின் கருவறைக்குள் சுவற்றின் மேல் அறையப்பட்டிருந்த ஆணிகளில் தினுசு தினுசாய்ப் பைகள். அவற்றில் பளபளப்பான துணிகள் பிதுங்கித் தொங்கிக் கொண்டிருந்தன.

ஆரத்தித் தட்டை ஒரு கையால் சுற்றிக் கொண்டு மறு கையால் மொபைல் பேசிக் கொண்டிருந்த அர்ச்சகரின் லாவகம், நெரிசல் மிகுந்த பரபரப்பான சாலையில் ஒரு கையில் பைக் ஹேண்ட்பாரையும் மறுகையில் செல்ஃபோனில் பேசியபடியும் வண்டியோட்டுபவர்களை நினைவு படுத்தியது.

எல்லாக் கடவுள்களையும் ஒன்று விடாமல் சேர்த்துக் கலவை கட்டிக் கட்டப்பட்டிருந்த கோவிலின் முகப்பில் எழுதப் பட்டிருந்த பெயர் “முத்துமாரியம்மன் திருக்கோவில்”. திருக்கோவிலின் பெயர்க்காரணம் இறுதி வரை தெரியவில்லை.

இதனால் அறியப்படும் நீதி யாதெனில் கோவிலுக்குப் போனோமா சாமியக் கும்புட்டோமோ வந்தோமான்னு இருக்கணும். வேலைவெட்டி இல்லாம ஒவ்வொண்ணா உத்துப் பார்த்துட்டு இருந்தா எல்லாமே இப்டி தான் தெரியும்

No comments:

Post a Comment