Wednesday 12 November 2014

வடிகால்



நேற்று இருசக்கர வாகனத்தில் வேளச்சேரி 100 அடி சாலையில் பயணித்துக் கொண்டிருந்த போது சாலையோரத்தில் ஒரு பழக்கடையைப் பார்த்தேன். அடுக்கடுக்காக விதவிதமான பழங்கள் அடுக்கி வைத்து நடுவில் ஒரு நாற்காலியில் என் அப்பா வயதையொத்த நபர் உக்கார்ந்திருந்தார். கடையில வேறு யாரும் இல்லை.. நான் வண்டியை விட்டு இறங்கி பழங்கள் வாங்க கடைக்குள் நுழைந்தேன்

பரபரப்பான அந்தச் சாலையில் பறந்து கொண்டிருந்த வண்டிகளோ , அதில் தொற்றிக் கொண்டு சென்ற மனிதர்களோ அவர் கவனத்தை எந்த விதத்திலும் ஈர்க்கவோ , தொந்திரவோ செய்யவில்லை என்பது அவர் கைகளில் வைத்திருந்த அலைபேசியின் மீது அவர் கண்கள் கவனம் சிதறாமல் பார்ப்பதில் இருந்தே தெளிவாகத் தெரிந்தது. பக்கத்தில் போய் “மாதுளம்பழம் கிலோ என்ன விலை அண்ணாச்சின்னு கேட்டதும் சின்னப் புன்னகையோடு நிமிர்ந்தவர் , ”ஒரு நிமிஷம்ம்மா”ன்னு சொல்லிக் கொண்டே அவர் விளையாடிக் கொண்டிருந்த விளையாட்டை நிறுத்தக் குறியிட்டு விட்டு விலையைச் சொன்னார்.

”சரி ஒரு கிலோ கொடுங்க. அப்படியே ஆப்பிள் ஒரு அரைக் கிலோ” என்றவாறே ”வியாபார நேரத்துல மொபைல்ல கேம்லாம் வெளாடிட்டு இருக்கீங்களே …பரவால்ல அண்ணாச்சி”ன்னு சிரித்துக் கொண்டே கேட்டதும் அவர் “வியாபாரம் இல்லாத நேரத்துல வேற என்னம்மா பண்றது. எவ்ளோ நாளைக்கு தான் இந்த ரோட்டையும் மனுசங்களையுமே பார்த்துட்டு இருக்கது? வெறுமனே வேடிக்கை பார்த்துட்டு இருந்தா மனசுல என்னென்னவோ நெனப்பு வருதும்மா. வீட்டுப் பிரச்சனை, கடன், வியாபாரம்னு மனசு எதையாச்சும் யோசிச்சுக் கவலைப் பட்டுட்டே இருக்குது. அதான் என் பேரன் விளையாடுறதப் பார்த்து அவன் கிட்ட இருந்து நானும் இந்த கேம் விளையாடக் கத்துக்கிட்டேம்மா. வியாபாரம் இல்லாத நேரத்துல பொழுதுபோக்காவும் இருக்கு. கடைய மூடிட்டுக் கிளம்புற வரைக்கும் மத்த கவலைகள நெனசிச்சுட்டே கெடக்காம கொஞ்சம் சந்தோஷமாவும் இருக்கேம்மா. நம்ம கவலைய நெனைச்சு கவலைப் பட்டுட்டே இருந்தா மட்டும் சரியாகிடுதா என்ன”ன்னு சிரிச்சுட்டே தெளிவாப் பேசியவரைப் பார்த்ததும் கண்கள் ஆமோதிப்பில் நிறைந்தது.
அப்பாவும் பழ வியாபாரி தான். மார்க்கெட்டில் ஒரு குழாயடியில் பகல் நேரத்தில் ஒரு சாக்கு விரித்து அதன் மீது மரப்பெட்டி வைத்து வியாபாரம் செய்வார். இரவு நேரங்களில் பழ சீஸனுக்குத் தகுந்தபடி தெருக்களில் தள்ளுவண்டியிலோ அல்லது பொட்டலில் (ஊருக்கு நடுவே இருக்கும் திறந்தவெளி) தள்ளுவண்டி நிறுத்தியோ வியாபாரம் செய்வார். அப்போதெல்லாம் பள்ளி முடிந்ததும் அப்பாவுக்கு தண்ணீரோ அல்லது டிஃபனோ எடுத்துக் கொண்டு செல்வது என் வழக்கம். வியாபாரம் ஏதுமற்ற நேரங்களில் வெற்றுப் பார்வையோடும் கவலை தோய்ந்த முகத்தோடும் எந்நேரமும் யோசனையில ஆழ்ந்தபடி உக்கார்ந்திருக்கும் அப்பாவை அடிக்கடி பார்த்திருக்கிறேன்.
தன் மனச்சுமைகளையெல்லாம் அந்த மனிதர் எங்கு தான் வைத்திருந்திருக்கக் கூடும்? பிள்ளைகளிடம் ஒருபோதும் அவர் அது குறித்துப் பேசியதேயில்லை. குடும்ப பாரம், வட்டியோடு சேர்ந்த கடன் சுமைகள், பிள்ளைகள் படிப்பு, திருமணம் என தன் கவலைகளிடம் தன்னையே அடகு வைத்து இறுதி வரை மன அழுத்தத்தில் இருந்து தற்காலிகமாக் கூட வெளியேறி வந்திராத அந்த ஜீவனுக்கு மரணம் ஒன்று மட்டுமே நிரந்தரத் தீர்வாயிருந்திருக்கிறது போலும்.
அப்பாவைப் போலில்லை இந்த மனிதர். பிரச்சனைகளைத் தற்காலிகமாக ஒத்திவைத்துக் கையாளவேனும் தெரிந்திருக்கிறது. தன்னைத் தானே மீட்டெடுத்துக் கொள்ளவும் ஒரு வடிகாலைத் தெரிந்து வைத்திருக்கிறார். குறைந்தபட்சம் இந்த சந்தோஷமேனும் இந்த மனிதருக்கு என்றென்றைக்கும் வாய்த்திருக்கட்டும் என்று அப்பாவை மனதார வேண்டிக் கொண்டு கடையை விட்டு நகர்ந்தேன்.

No comments:

Post a Comment