Thursday 13 November 2014

அப்பாவின் சைக்கிள்

ஒரு மனுசன் கூடவே இருந்து அவனோட சுக துக்கங்கள்ல பங்கேற்குறதுல சக மனுஷனுக்கு அடுத்து அவனைத் தொடர்ந்து கூடவே வந்து கொண்டிருப்பது அவன் விரும்பி வளர்க்குற கால்நடைகளும் தான். தொழில் சார்ந்த காரணங்களுக்காக வளர்க்கப்படும் ஆடு, மாடு, கோழிகளையும் வீட்டில் ஒரு உறுப்பினராய்ப் பாவிப்பதை நிறைய வீடுகள்ல பார்க்குறோம்....அது போக செல்லப் பிராணியா வளர்க்கப்படுற நாய், பூனை...இன்னும் சிலவிலங்குகள் பறவைகள் கூட வீட்டில் ஒருத்தராய் வளைய வரும்....இந்த ஜீவன்களெல்லாம் அவற்றோட அன்பையும், நன்றியையும் அழகாய் வெளிப்படுத்தமுடியும்.....ஏன்னா அதுக்கெல்லாம் உயிர் இருக்கு, அசைவு இருக்கு....

ஆனா இப்படி எதுவும் இல்லாத ஒரு பொருள் ஒரு மனிதனின் வாழ்க்கையில் இரண்டறக் கலந்து எப்போதும் அவனோடு பயணிக்கக்கூடிய சாத்தியம் இருக்குன்னா அது அந்த மனிதன் பயன்படுத்தும் வாகனம் தான்.... சக மனிதர்களப் போல தங்களோட வாகனங்களை அவர்கள் நேசிப்பதுண்டு....அப்படி என் அப்பாவின் அன்புக்குப் பாத்திரமான நண்பனா அவரோட கடைசி நாள் வரை கூடவே இருந்தது அவரோட சைக்கிள் தான்.....

அப்பா ஒரு வியாபாரி....காலையிலயும் சாயங்காலமும் சைக்கிள்ல ஒரு பெரிய அலுமினிய கேன் நிறைய பால் எடுத்துட்டுப் போய் வீடுகளுக்கு விற்பவர்..... கேரியர் மத்த சைக்கிள்கள விட பெருசா இருக்கும்....அகலமான அந்த கேரியர் மேல நாலாய் மடிச்ச ஒரு கனத்த சாக்குத்துணிய வச்சு அது மேல பால் கேன் வச்சு நைலான் கயிறால நல்லா சுத்தி இறுக்கிக் கட்டி சைக்கிளோட பூட்டு போடும் இடத்துக்கிட்ட ஒரு முடிச்சு போடுவார்....சைக்கிளோட பார்ல ஒரு பித்தளை மணியும் சின்ன நைலான் கயிறால கட்டப்பட்டிருக்கும்....ஒவ்வொரு தெருவுக்குப் போகும் போது அந்த மணிய அடிச்சுட்டே போவார்....அந்த சத்தம் கேட்டு வீட்டுக்காரர்கள் வந்து பால் வாங்கிட்டுப் போவாங்க....சத்தம் போட்டெல்லாம் கூப்பிடுவது ரொம்ப அரிது தான்....

அந்த சைக்கிள் ஓய்வா இருக்கும் நேரமும் அப்பா தூங்கும் நேரமும் ஒண்ணு தான்...எப்பவும் சைக்கிள் பின் டயருக்கு மேல இருக்குற ரிம்ல பால் சிந்திப் படிஞ்சு போயிருக்கும்... மாசத்துக்கு ஒரு தடவ  நாங்க நாலு பிள்ளைகள்ல யாராச்சும் தண்ணி ஊத்திக் கழுவி, துடைச்சு, எண்ணையெல்லாம் விட்டு வைப்போம்....யாரு க்ளீன் பண்றாங்களோ அவங்களுக்கு காசு குடுத்துடுவாரு அப்பா...யாராயிருந்தாலும் தனக்கு உதவியாய் செய்யும் சின்ன சின்ன உழைப்புக்குக் கூட கூலி குடுத்துடும் பழக்கம் அப்பாவுக்கு....ஓசியில கிடைக்கும் எந்த உதவியையும் ஏத்துக்குறதில்ல....கடவுள் ஏனோ அவருக்கு மட்டும் வாழ்நாள் முழுக்க அவர் செஞ்ச வேலைக்கெல்லாம் சரியான கூலியே குடுக்கல.....

ஆயிரம் சைக்கிள்கள்கள் தெருவில போனாலும் அப்பாவின் சைக்கிள் பெல் சத்தம் மட்டும் எங்களுக்கு தனியா தெரிஞ்சுடும்.....அப்பா தெரு முனைக்கு வரும் போதே அவரோட சைக்கிள் பெல் சத்தம் கேட்டு வீட்ல எல்லாரும் அலர்ட் ஆகிடுவோம்...ஹோம் வொர்க் எழுத உக்கார்ரது...வீட்டு வேலைகள் செய்றது...முக்கியமா தெருவில விளையாடிட்டு இருந்தா ஒருத்தருக்கொருவர் சிக்னல் குடுத்து வீட்டுக்குள்ள ஓடிடுவோம். நான் என் அக்காவோட சண்டை போட்டிருக்கும் போதெல்லாம் அவள எச்சரிக்காம நான் மட்டும் நைசா வீட்டுக்குப் போய் நல்ல பிள்ளைன்னு பேர் வாங்கினதெல்லாம் உண்டு. சைக்கிள் பெடல் பண்ணும் போது ஒரு சின்ன சத்தம் கேட்கும்...அது என்னவோ அப்பா அவரோட மனசுக்குள்ள பேசுறதுக்கெல்லாம் தலையாட்டிக் கேக்குற மாதிரியோ இல்ல ஆறுதல் சொல்ற மாதிரியோ இருக்கும்.

அப்பாவோட ஸ்கூலுக்குப் போனது கொஞ்ச நாட்கள் தான்னாலும் இன்னும் கூட நல்லா ஞாபகம் இருக்கு. ஒரு தடவை ஸ்கூலுக்கு சாப்பாடு எடுத்துட்டுப் போகல. அன்னைக்கு வீட்டுல ஆட்டுக்காலும் மொச்சைப்பயிறும் போட்டு குழம்பு ....அப்பா அதை அடுக்கு கேரியர்ல எடுத்துட்டு வந்து எனக்கும் அக்காவுக்கும் ஊட்டி விட்டுட்டுப் போனாரு. 

வட்ட வடிவத்துல லட்சுமி டாலர் போட்ட ஒரு கனத்த கீ செயின் சாவியோட மாட்டி இருக்கும்...சைக்கிள் போகும் வேகத்துக்கு ஆடி ஆடி உரசி அந்த கீ செயின் மாட்டும் இடத்துல ஒரு அரை வட்டம் மாதிரி தேய்ஞ்சு போயிருக்கும். ...மழை வெயில் பார்க்காம உழைச்சதுக்கு அடையாளமா முன் சக்கரம் பக்கத்துல இருக்க மட்கார்டுல எப்பவும் சேறும் சகதியும் காய்ஞ்சு போயிருக்கும். 

ஒருநாள் சாயங்காலம் 6 மணிக்கு வழக்கம் போல எல்லா வீடுகளுக்கும் பால் ஊத்திட்டு எங்க வீட்டுக்குள்ள வரும் போதே ஒரு படபடப்போட தான் வந்திருக்கார்...அந்த வலி மாரடைப்புக்கானதுன்னு அவருக்குத் தெரியல...முதல் அட்டாக் வரும் போது கூட அவரோட இருந்தது அந்த சைக்கிள் தான். ஒரு வேள அதுக்குப் பேசத்தெரிஞ்சிருந்தா எங்க கிட்ட அலறி அடிச்சுட்டு வந்து சொல்லியிருக்குமோ என்னவோ. கொஞ்ச நேரத்துலயே எல்லாம் முடிஞ்சு போச்சு. அப்பாவோட அதிகபட்ச ஸ்பரிசம் பட்டது அவரோட சைக்கிள் மேல தான். அவரோட உழைப்பையும், மன வேதனைகளையும் ஒரு மவுன சாட்சியா கூடவே இருந்து பார்த்தது அந்த சைக்கிள் தான். அந்த சைக்கிள் பண்ண புண்ணியம் கூட எனக்குக் கெடைக்கல.

எல்லாம் முடிஞ்சு போய் அப்பாவின் சைக்கிளை மட்டும் வீட்டுக்குள்ள உள்ரூம்லயே வச்சிட்டோம். கொஞ்ச நாள் கழிச்சு ஒரு ராத்திரியில விடாம பெய்ஞ்ச மழைக்குத் தாங்காம வீட்டோட மேற்குப்பக்கச் சுவர் இடிஞ்சு அப்படியே அப்பாவின் சைக்கிள் மேல விழுந்திருச்சு. அந்த சைக்கிள் தான் விழுந்த சுவரைத் தாங்கிப் பிடிச்சு கீழ படுத்திருந்த எங்க மேல சுவர் விழாம தடுத்த மாதிரி சரிஞ்சு கிடந்தது. அந்த சத்தத்துல எழுந்து உடனே வீட்டை விட்டு வெளிய போனதால தான் அன்னைக்கு ஏதும் காயமோ உயிர் சேதமோ  ஆகல.எங்க குல தெய்வம் எங்க அப்பான்னா அவரோட வாகனமா இருக்கது அந்த சைக்கிள் தான்.......இன்னும் அந்த சைக்கிளைத் தொடும் போதெல்லாம் அப்பாவின் ஸ்பரிசம் உணர முடியுது....அப்பா இருக்கார்.....

2 comments:

  1. வாழ்த்துகள் அக்கா, உங்களோட இந்த போஸ்ட் வலைச்சரத்துல அறிமுகப்படுத்தப் பட்டுருக்கு...

    http://blogintamil.blogspot.in/2015/03/blog-post_10.html

    ReplyDelete
  2. //ஆயிரம் சைக்கிள்கள்கள் தெருவில போனாலும் அப்பாவின் சைக்கிள் பெல் சத்தம் மட்டும் எங்களுக்கு தனியா தெரிஞ்சுடும்!..//

    நான் - என் தந்தையை நினைவு கூர்ந்தேன்!..

    ReplyDelete