Tuesday 25 November 2014

நாலு பேருக்கு நல்லதுன்னா ...


துணிக்கடைக்குப் போயிருந்தேன். சுடிதார் செக்சன்ல ஓரளவு கூட்டமா தான் இருந்தது. நான் விரும்பி எடுக்குற காட்டன் துணிகள் பக்கம் போய் பார்த்துட்டு இருந்தேன்.

எனக்குப் பக்கத்துல ஒரு ஆணும் பெண்ணும் நின்னு ஒவ்வொரு சுடிதார் துணியையும் கவர்ல இருந்து வெளிய எடுத்துப் போட்டு கலர், டிசைன் எல்லாம் பார்த்துட்டு இருந்தாங்க.

அந்தப் பையன் செலக்சன் அந்தப் பொண்ணுக்குப் பிடிக்கல. அந்தப் பொண்ணு செலக்ட் பண்றது அந்தப் பையனுக்குப் பிடிக்கல போல. ரெண்டு பேருக்கும் பக்கத்துல நின்னுட்டு எந்த டிசைனையும் என்னால சரியாப் பார்க்க முடியல. அதனால புடவை செக்சன் போய்ட்டு அப்புறமா வரலாம்னு போய்ட்டேன்.

அங்கே செலக்ட் பண்ணி முடிச்சுட்டு திரும்பி வந்தா அந்த ஜோடி அப்பவும் கிளம்பாம ரெண்டு சுடிதார் செட்டை ஹேங்கர் மேல போட்டுட்டு இதுவா அதுவான்னு குழம்பிட்டு இருந்தாங்க. எனக்கு அதுக்கு மேல வெயிட் பண்ணப் பொறுமை இல்ல.

ஒரு முடிவோட  சட்டுன்னு அந்த ரெண்டு சுடிதார்ல ஒண்ணை எடுத்ததும் அந்தப் பொண்ணு வேகமா "எஸ்க்யூஸ்மீ அதை நான் செலக்ட் பண்ணி வச்சிருக்கேன்"னு சொல்லி எங்கிட்ட இருந்து பிடுங்காத குறையா வாங்கிட்டு "இதையே எடுத்துக்குறேன். வாடா போகலாம்"னு ஒரு வழியா சொன்னதும் அந்தப் பையன் என்னைப் பார்த்து (அந்தப் பொண்ணுக்குத் தெரியாம தான்  ) தேங்க்ஸ் சொல்ற மாதிரி லேசா சிரிச்சுட்டுப் போனான்.

நானும் பதிலுக்கு "பார்த்தியா எப்டி செலக்ட் பண்ண வச்சேன்"னு பெருமிதமா ஒரு பார்வை பார்த்தேன்.
அப்பாடா இனி ஃபிரீயா டிசைன்ஸ் பார்க்கலாம்னு திரும்பினா........

 ரெண்டு கையையும் இடுப்புல வச்சி முறைச்சுப் பார்த்துட்டே நடந்து வந்த அந்த செக்சன் இன்சார்ஜ் லேடி என்கிட்ட வந்து "ஏம்மா துணிய எங்க கிட்ட குடுத்தா நாங்க அழகா பிரிச்சுக் காட்டப் போறோம். அதை விட்டுட்டு நீங்களே இப்டி இஷ்டத்துக்கு எடுத்துப் போட்டா எப்டி"ன்னு கத்தினாங்க.

 நான் ஒண்ணும் பதில் பேச முடியாம அந்த ஜோடியைத் தேடுனா அவங்க பில் கவுண்ட்டர்ல நின்னுட்டு என்னைப் பார்த்தும் பார்க்காத மாதிரி கமுக்கமா சிரிச்சுட்டே திரும்பிக்கிட்டாங்க. (அடப்பாவிங்களா ???????????? )

நீதி : நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல தான். ஆனா அந்த நாலு பேர்ல நாமளும் ஒருத்தரா இருக்கணும்

No comments:

Post a Comment