Monday 22 December 2014

வற்றா நதி

புத்தக வெளியீட்டுக்கு வந்திருங்கக்கான்னு சொன்ன கையோட ....சாரி வாயோட “புத்தகத்தப் பத்தி ரெண்டு வார்த்த பேசுறீங்களக்கா”ன்னு கேட்டான் கார்த்தி.
“இன்ன்ன்னாது ...புத்தகத்தப் பத்தி நான் பேசுறதா? புத்தகம்னா என்னான்னு தெரியாது. புத்தக வெளியீடுன்னா என்னன்னு தெரியாது. என்னப் போய்ய்...பேசச் சொல்றியே”ன்னு கேட்டதும் ,
“வெரி குட் ...யூ ஆர் செலக்டடு”ன்னு சொல்லி அப்போ தான் அச்சிலிருந்து வந்த புத்தம் புதுப் புத்தகத்த ....”வற்றா நதி”யக் கையில குடுத்துட்டுப் போய்ட்டான்.  அட்டைப் படத்தை மட்டுமே அரை மணி நேரம் பார்த்துட்டு உக்கார்ந்திருந்தேன். கால்கள் சில்லிப்பை உணர்ந்தது. அத்தனை அழகு. வாழ்த்துகள் சிவகாசி சுரேஷ்.
காலேஜ்ல படிக்கும் போது 46 பசங்க 6 பொண்ணுங்க (பாவப்பட்ட பசங்க  ) இருந்த எங்க கிளாஸ்ல “கன்ஸ்ட்ரக்‌ஷன் மெட்டீரியல்ஸ்” பத்தி செமினார் எடுத்த தைரியத்துல நானும் புத்தகத்த வாசிக்க ஆரம்பிச்சேன்.
ரெண்டுமூணு கதைகள் வாசிச்சு முடிச்சதுமே ரொம்ப ஆச்சர்யமாச் போச்சு. “நிலைக்கதவு” கதையில வர்ற பெரியாச்சி வீட்டுக்கதவு மாதிரி தான் எங்க லட்சுமி ஆச்சி வீட்டுக் கதவும். மஞ்சள் கலர் பெயிண்ட் அடிச்சு , மூணு குறுக்குக் கட்டைகளோட அழகழகா குமிழ்கள் வச்சு அதுல வளையமும் தொங்க அவ்ளோ பிரம்மாண்டமா கனமா இருக்கும். ரெண்டு கைகளாலயும் அழுத்தித் தள்ளினா தான் கதவைத் திறக்க முடியும்.
கி.ராஜநாராயணன் அவர்கள் எழுதின “கதவு” கதையில வர்ற சின்னப் பசங்க மாதிரி தான் நாங்களும் அந்தக் கதவுல ஏறிக் குறுக்குக் கட்டையில கால ஊனி நின்னுக்கிட்டு ரெண்டு பேர் தள்ளிவிட்டு விளையாடுவோம். கார்த்தி இதையெல்லாம் பார்க்கல. ஆனா எழுதியிருக்கானே . எப்படி!!!!!!
அதே மாதிரி “டெஸி” கதையில வர்ற டெஸி தான் எங்க பக்கத்து வீட்டுக் காம்பவுண்டுல இருந்த கிருஷ்ணவேணி. பத்தாங்கிளாஸ் படிக்கும் போது ஏதோ பிரச்சனையில மண்ணெண்ணெய் ஊத்தித் தீக்குளிச்சு தற்கொலை பண்ணிக்கிட்டா. உடம்புல தீயோட அவ ஓடி வந்து விழுந்தது எங்க தெருவே தண்ணி பிடிக்குற குழாயடியில தான். எப்ப தண்ணி பிடிக்கப் போனாலும் உசுரக் கையில பிடிச்சுட்டுப் போவேன் நான். இப்ப டெஸி கதை வாசிச்சதுல இருந்து ரெண்டு நாளா கிருஷ்ணவேணி ஞாபகம் தான் வருது 

அதுவும் அந்த டெஸி வெள்ளைக்கலர் டிரெஸ்ஸுல கையில பைபிளோட உலாவுறதா கார்த்தி சொல்லும் போது லேசா சிரிப்பு வந்தாலும் மெய்யாலுமே பயமாக்கீது பா 

“லைட்ஸ் ஆஃப்” கதையில வர்ற பாக்கு மண்டி ராமசாமி நாடாரெல்லாம் அப்படியே எங்க ”கருப்பட்டிக்கடை வெள்ளைசாமி நாடார்” தாத்தா தான். தலைப்பாக்கட்டும் மீசையும் அப்படியே. அவர் ஃபோட்டோ ஃப்ரேமுக்கு முன்னாடி ஏத்தி வச்ச “சர்வோதயா ஊதுபத்தி” ரைட்டர் டச்.... 

நிறையக் கதைகளக் குறும்படமா எடுக்கக் கூடிய காட்சி அமைப்புகள் இந்தக் கதைத் தொகுப்புல இருந்தாலும் என்னோட ஓட்டு “பச்ச” கதைக்குத்தான். ”பொங்கலோ பொங்கல்” “ தீபாவளி” பத்தின கதைகளெல்லாம் அப்படியே பண்டிகை நேரத்துக் காட்சிகளையும் மன உணர்வுகளையும் அப்படியே படம் பிடிச்சுக் காட்டியிருக்கார் கதாசிரியர்.
இப்பல்லாம் மக்கள் ரொம்பத் தெளிவு. மைசூர்பாகுல “மைசூரே” வேணும்னு கேக்குறாங்க. சிமெண்ட்ல உயிர் இருக்கணும்கிறாங்க. அட ....டூத் பேஸ்ட்ல கூட உப்பு இருக்கணும்கிற மாதிரி ரஜினி படத்துல எல்லாம் லாஜிக், கதை வேணும்னு கேக்க ஆரம்பிச்சுட்டாங்க. கலி முத்திடுச்சு .... காசு குடுத்துப் புத்தகம் வாங்குற வாசகன் அதிகபட்சம் எதிர்பார்க்குறது கவிதப் புத்தகத்துல கவிதையையும், கதைப் புத்தகத்துல கதையையும் மட்டும் தான் . நம்ம நூலாசிரியர் அதைச் சரியாப் புரிஞ்சுக்கிட்டு இந்தத் தொகுப்புல மொத்தம் 22 சிறுகதைகள் குடுத்திருக்கார். அத்தனையிலும் ”கதை” இருக்கு 

தீபாவளிப் பட்சணங்கள், பொங்கல் நேரத்து பரபரப்பான வீதிகள், விடலைப் பருவத்தில் அரும்பும் காதல்கள், நட்பு, பாசம், செண்டிமெண்ட், நகரத்து வாழ்க்கையில் தொலைத்திட்ட இயல்புகள், பேருந்துப் பயணம், சாதி வெறி, மரணம், ஏக்கம்னு எல்லா உணர்வுகளுக்கும் இந்தத் தொகுப்பில் இடமுண்டு. “சென்னையில இருக்கதே உத்தியோகஸ்தனம்”னு நெனைக்கிற ஊர்க்காரப் புரிதலை ஒரே வரியில் சொன்ன சாமர்த்தியத்துக்கு 100 லைக்ஸ்.
இல்லாத ஒன்றைக் கற்பனையாகவோ , நடக்காத ஒன்றை நடந்ததாகவோ கதை ஆசிரியர் சொல்லல. புத்தகம் முழுக்க சொல்லப்பட்டிருக்கும் சம்பவங்கள் எல்லாமே உங்களுக்கும் எனக்கும் எங்கோ எப்போதோ நடந்தது தான். நம்ம வீட்டிலேயோ அல்லது அக்கம்பக்கத்து வீடுகள்லயோ நிச்சயம் ஒரு க்ரிஸ்டியோ, மைக்கேலோ, நாதனோ, அபிராமியோ, டெஸியோ, ப்ரீத்தியோ உண்டு. இவங்க தான் இந்தக் கதைத்தொகுப்பின் காரணகர்த்தாக்கள்.
சம்பவங்களையெல்லாம் நேர்த்தியான சம்பாஷைனைகளாக் கோர்த்து நெல்லை மண் மணக்க மணக்க மாலையாக்கித் தொடுத்திருக்கிறார் கதை ஆசிரியர். அத்தனைத் தெளிவான எழுத்து நடை. வட்டார வார்த்தைப் பிரயோகம். வாசிக்கும் போதே நெல்லை மண்ணின் வீதிகளில் நாம் நடந்து கொண்டிருப்பதை உணர முடிகிறது.
நெல்லையப்பரையும் , இருட்டுக்கடை அல்வாவையும் மட்டுமே தெரிந்து வைத்திருக்கும் நாமும் இனி சென்னையில் இருந்து ஊருக்குச் செல்லும் பயணத்தின் போது நெல்லை வட்டார மக்கள் உடனிருந்தால் அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் படிப்பது ”மேரி ஆர்டனா” “மேரி சார்ஜண்ட்டா” இல்ல “கதீட்ரலா”ன்னு கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். கூடவே வீடு எங்கே “பொதிகை நகரா” “என்.ஜி.ஓ. காலனியா” இல்ல “டேனியல் தாமஸ் தெருவா”ன்னு பரிச்சயம் காட்டிக் கொள்ளலாம்.
நீங்களும் ”வற்றா நதி”யை வாசிச்சுப் பாருங்க. புரியும். உங்களுக்கும் பிடிக்கும். வற்றா நதிக்குக் ”காட்டாறு”ன்னு கூடப் பேர் வச்சிருக்கலாம் தான். அப்படி ஒரு பாய்ச்சல் கார்த்தியின் எழுத்து நடையில்.
”வற்றா நதி”யில் வாசகர் வெள்ளம் பெருகி வளம் சேர்க்கட்டும்.
வாழ்த்துகள் கார்த்தி.

1 comment:

  1. கனவுத் திருடி தான் முதல் மதிப்புரை வற்றா நதிக்கு.. கூகுளில் தேடும் போதும் முன்னால் வந்து நிற்பது. உங்கள் வார்த்தைகளே :)

    ReplyDelete