Friday 29 May 2020

வேம்பும் பல்லும்....

பக்கத்து வீட்டில் பெரிய வேப்பமரம் இருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன் கொஞ்சம் வேப்பிலைக்கொத்து கேட்டிருந்தேன்…..மாடிக்குப் போகும் போது பறித்துத் தருகிறேன் எனச் சொல்லியிருந்தார் அந்த அக்கா. காலையில் பறித்துக்கொண்டு வந்து பால்கனியில் நின்று இந்தா என்று இரு கைகள் சேர்த்துப்பிடிக்குமளவு வேப்பிலைக் கொத்தைக் கொடுத்தார்…..
“தண்ணில ஊறப்போட்டு வீடு துடைக்கவா” என்றார்….
“இல்லக்கா”
“அப்பறம் என்ன செய்வ?”
“நான் ஆவி பிடிக்க வெந்நீர் போட்டுக் குளிக்கக் கேட்டேன்”
”அப்டிக் குளிச்சா நல்லதா”
“நான் உடம்பு வலிக்கு இப்டிப் பண்ணி குளிப்பேங்க்கா….வேப்பிலைன்னு இல்ல…புளிய எல, நொச்சி எல, யூக்கலிப்டஸ் எலன்னு நிறைய இருக்கு….”
“ஆங்ங்ங் …உங்கள மாதிரி ஊர்க்காரங்களுக்கு தான் இதெல்லாம் தெரிது…நாங்கல்லாம் மெடிக்கல்ல மாத்திரய வாங்கிப்போட்டு கம்னு போய் படுத்துக்குவோம்” என்றார்
சிரித்துக்கொண்டே வேப்பிலையை வாங்கி வந்தேன்….
அதில் பாதிக்குப்பாதி பூக்கள்….
சின்ன வயதிலிருந்தே வேப்பம்பூக்கள் மீது ஒரு ஈர்ப்பு…. மல்லி, பிச்சி போல இல்லையென்றாலும் வேப்பம்பூக்களுக்கு ஒருபிரத்யேக மணம் உண்டு… சிறுவயதில் வேப்பிலை, வேப்பம்பூக்கள் சார்ந்த ஞாபகங்கள் அதன் வாசனையோடே இன்னும் நினைவில் மிச்சமிருக்கிறது…
அப்போதெல்லாம் மாதம் ஒருமுறையாச்சும் வேப்பிலைக்கொழுந்தை அம்மியில் மையாக அரைத்து அரை நெல்லியளவு உருண்டை பிடித்து அப்பாவும் அம்மாவும் சாப்பிட வைப்பார்கள்….தொண்டைக்குழி தாண்டுவதற்குள் உள்ளங்கையில் கடலைமிட்டாயோ, வெல்லமோ அல்லது தேன்மிட்டாயோ வைக்கப்படும்….
பள்ளி விடுமுறைக் காலங்களில் உதிர்ந்து கிடக்கும் வேப்பங்கொட்டைகளை பொறுக்கி எடுத்துப் பையில் கொண்டு போய்க்கொடுத்தால் உள்மார்க்கெட்டில் நாட்டுமருந்துக்கடை வைத்திருக்கும் அண்ணாச்சி தராசில் எடை போட்டு கிலோவுக்கு இவ்வளவு என்று காசு கொடுப்பார்….
ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் போது முன் பற்களில் இடப்பக்கம் இரண்டாவது பல்லொன்று நான்கு நாட்களாகவே லேசாக ஆடுவது போலிருந்தது….நுனி நாக்கால் பல்லை வாயின் உள்ளிருந்து தள்ளிப்பார்த்து ஆடுவதை உறுதி செய்துகொண்டேன். மதிய உணவு இடைவேளையில் வேப்பமரத்தடியில் சாப்பிட்டு முடித்து உக்கார்ந்திருந்தபோது வெற்றிச்செல்வி தான் ”நான் வேணா பல்லை பிடுங்கி விடட்டா” எனக் கேட்டாள்….
பக்கத்தில் மண்ணில் கிடந்த புளியமுத்தை எடுத்துப் பாவாடையில் துடைத்து விட்டு இடப்பக்கம் தானே வலிக்கிறது என வலப்பக்கக் கடைவாயில் வைத்து ஒதுக்கி அப்போது தான் கடிக்கத் தொடங்கியிருந்தேன்….புளியமுத்தின் மேல்தோல் கடினமாக இருக்கும்….கடைவாய்ப்பல்லில் வைத்துக் கொஞ்சம் கொஞ்சமாய்க் கடித்துத் திங்கும் போது மேல்த்தோலின் துவர்ப்பு ருசி மெல்ல நாவைத் தொடும்…பிறகு புளிய முத்தை நீள்வாக்கில் வைத்து அழுந்தக்கடித்தால் வாய்க்குள்ளேயே ரெண்டாய் உடையும்…பிறகு பொறுமையாய் மென்று திங்கலாம்…. கடுக்கென்று கடித்ததில் கடைவாய்ப்பல்லே உடைந்து போய் புளிய முத்தோடு பல்லையும் சேர்த்து ரத்தத்தோடு துப்பியவள்களும் இருந்தாள்கள்…. பாடவேளையின் போது கூட டீச்சரையும் பாடத்தைப் பற்றியும் கவலைப்படாமல் சாப்பிட்ட ஸ்நாக்ஸ் அது.
பல் பிடுங்கும் சடங்கில் வெற்றிச்செல்வியின் மீது நிறையவே நம்பிக்கை இருந்தது… தமிழரசிக்கும் அவள் தான் பல்லைப்பிடுங்கி விட்டிருந்தாள். ஆனால் அது கடைவாய்ப்பல்….வெற்றிச்செல்வியின் பற்களே கூட நவகிரகங்கள் போல ஒன்றுக்கொன்று முறைத்தபடி முகத்தைத் திருப்பிக் கொண்டிருக்கும்…அவள் சிரிக்கும் போது ஒவ்வொரு பல்லும் தனியாய் சிரிப்பது போலிருக்கும்… பின்னாளில் அவளொரு வல்லிய பல்டாக்டராய் வருவாள் என சத்தியமாய் நம்பியிருந்தேன்….ஆனாலும் தின்று கொண்டிருக்கும் புளியமுத்தைப் பாதியில் துப்ப மனமில்லை…இன்னும் பத்து நிமிடங்களாவது ஆகும் தின்று முடிக்க…. “இப்ப வேண்டாம் ரீசஸ் விடும்போது பிடிங்கிரலாமா?” எனக்கேட்டதற்கு சரியென்றாள்..
மதியம் முதல் இரண்டு பீரியட் முடியும் வரை பெஞ்ச்சின் நுனியிலேயே பரபரப்பாய் உக்கார்ந்திருந்தேன்….ரீசஸ் மணி அடித்ததும் வெற்றிச்செல்வியும் நானும் ஒன்றாய் வெளியே வந்தோம்….வேப்பமரத்தடி…மண்ணுக்குள் அங்குமிங்கும் தேடிப்பார்த்து ஒரு கனத்த குச்சியைக் கையில் எடுத்திருந்தாள் வெற்றிச்செல்வி…அது தான் அவளது பல் பிடுங்கும் ஆயுதம்…. வேப்பமரக்கிளையின் உடைந்த ஒரு பகுதியின் சிறு குச்சி தான் அது…
குச்சியின் மீதிருந்த மண்ணைத் தட்டி விட்டுப் பாவாடையில் ஒருமுறை துடைத்து விட்டுக் கையில் வாட்டமாகப் பிடித்துக்கொண்டாள்… “ஆ காட்டு” முதலில் அவள் கட்டைவிரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் நடுவில் பல்லைப் பிடித்து மேலும் கீழும் ஆட்டிப்பார்த்துக்கொண்டாள்….எனக்குப் பல் ஆடுவது போலவே தெரியவில்லை….அவள் விரல்கள் தான் மேலும் கீழுமாக அசைந்து கொண்டிருந்தது இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது… அவள் மேலும் மேலும் சக்தியனைத்தையும் விரலுக்குக் கொண்டு வந்து பல்லை அசைத்துக்கொண்டிருந்தாள்…
வலி கூடிக்கொண்டேயிருந்தது….அப்போது தான் நற நறவென்று மெல்ல மெல்ல பல் ஈறை விட்டு விலகுவது தெரிந்தது….அப்படீன்னா பல் இத்தனை நாளா ஆடல….நான் நாக்க வச்சுத் தள்ளுறதால அது ஆடுறது போலத் தெரிஞ்சிருக்கோ என குழம்பிக்கொண்டிருந்த நேரத்தில் வெற்றிச்செல்வி பல்லைப் பாதி சாய்த்துவிட்டாள்…..
வலியில் உயிர் போக ஆரம்பித்துவிட்டது… வேணாம்… என அவளிடம் சைகையில் சொன்னதை அவள் கவனிக்கவேயில்லை அல்லது கவனித்தது போலக்காட்டிக்கொள்ளவேயில்லை…. ஏகலைவன் புறாக்கண்ணின் மீது கொண்ட இலக்காய் அவள் சுற்றுப்புறம் அத்தனையும் மறந்து என் பல்லையே குறி வைத்து குச்சியால் அழுத்திக்கொண்டிருந்தாள்…
இப்போது எல்லாப்பல்லுமே வலிப்பது போலிருந்தது….நான் பேச வாயெடுத்தால் அவள் வைத்திருக்கும் குச்சி இடம் மாறி நாக்கிலோ அல்லது கன்னத்தின் உள்பகுதியிலோ நிச்சயம் காயப்படுத்திவிடக்கூடும் என்று தெரிந்தது….அவளோ நான் பிறந்ததே உன் பல்லைப்பேர்த்து எடுக்கத்தான் என்பது போல பல்லும் கருத்துமாய் அவள் காரியத்தில் ஆழ்ந்திருந்தாள்….
இடைவேளை முடிந்து மணியடிக்கத் தொடங்கியது….திடீரென்ற மணிச்சத்தத்தில் ஒரு நொடி அதிர்ந்தவள் இன்னும் பல்லைப்பிடுங்க முடியவில்லை என்ற ஆத்திரத்தில் கடைசிக்கடைசியாக மொத்த வலுவையும் சேர்த்து அழுத்தியதில் முன்னம்பல் உடைந்து ரத்தம் வழியத்தொடங்கியது…..
வெற்றிச்செல்வி வெற்றி பெற்றேவிட்டாள்…..
வேகவேகமாய் குழாயடிக்கு ஓடி வாயைக்கழுவும்போதே “ஏல....பல்ல எடுத்து பத்திரமா வச்சிக்கோல….சாணிக்குள்ள போட்டு உருண்ட பிடிச்சு வீட்டுக்கூர மேல போட்ரு” என்றாள்…. உள்ளங்கைக்குள் உடைந்த பல்லைப்பத்திரப்படுத்தி பேப்பருக்குள் மடித்து வைத்தேன்….
வீட்டுக்குப்போவதற்குள் பல்லிலிருந்து வலி உச்சி மண்டைக்கு ஏறியிருந்தது….வாயின் முன்பக்கம் வீங்கிப்போய் குழந்தை ஹனுமான் போல இருந்தேன்….அந்த வீக்கம் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் அன்றைக்கு அப்பா அடி வெளுத்திருப்பார்…
வலியில் அழுது கண்கள் முகம் என எல்லாமும் வீங்கி மறுநாள் காய்ச்சல் கண்டிருந்தேன்….வேப்பங்குச்சியினாலோ அல்லது காய்ச்சலுக்குக்கொடுத்த மருந்தாலோ மூன்று நாட்கள் வரை வாய்க்குள் ஒரே வேம்பின் கசப்பு…..
அதற்குப்பிறகு ரொம்பவே சோதித்து தான் பல் முளைத்தது….அதுவும் நான் முளைக்குமோ இல்லை காலம் பூராவும் ஓட்டைப்பல்லியாக இருந்து விடுவோமோ என்று பயந்து போய் அடிக்கடி நுனிநாவால் நிரடிவிட்டுக்கொண்டே இருந்ததில் அந்தப்பல் தெற்றுப்பல்லாகவே போய்விட்டது….காலேஜ் முடியும் வரை கூட சிரிக்கும் போது வாயை மூடிக்கொண்டு தான் சிரிப்பேன்….ஒரு கட்டம் வரை மிகுந்த தாழ்வுணர்ச்சி கொள்ள வைத்திருந்தது அந்தப்பல்…..
ஊரில் போன வருடம் திருவிழா சமயத்தில் மாரியம்மன் கோவிலுக்கு தண்ணீர் ஊற்றப் போயிருந்தபோது வெற்றிச்செல்வியைப் பார்த்தேன்…என்னைப்போலவே நிறைகுடத்தில் மஞ்சளும் வேப்பிலையும் தளும்பத் தளும்ப தண்ணீர் எடுத்து வந்து கொடிக்கம்பத்தில் ஊற்றிக்கொண்டிருந்தாள் ….அவளுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை….நெருங்கிப்போய் நான் யாரெனச் சொல்லிவிட்டு இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறாள் எனக்கேட்க வேண்டும்போல் இருந்தது…ஒரு வேளை அவள் பல்டாக்டராகவே இருந்தாலும் இனி ஜென்மத்துக்கும் அவளிடம் போய்ப் பல்லைக்காட்டுவதாய் இல்லை….

No comments:

Post a Comment