Friday 29 May 2020

காய்கறி விற்கும் பெரியவர்

வேளச்சேரிக்குக் குடி வந்த புதிதில் வீட்டுக்குத் தேவையான காய்கறிகளையெல்லாம் ஆதம்பாக்கம் மார்கெட்டிலேயே தான் வாங்கிக் கொண்டிருந்தோம். வீட்டுக்குப் பக்கத்தில் கடைகள் இல்லாமலில்லை.ஆனால் குறிப்பிட்ட காய்கறிகள் மட்டுமே இருக்கும்..தவிர சென்னையில் பரவலாகக் கிடைக்கும் கோவைக்காய், சுரைக்காய், சௌ சௌ, புடலங்காய் அளவிலான பாகற்காயெல்லாம் எனக்குப் பிடித்தமானதாக இல்லை. அதனால் மொத்தக்கடையில் வாங்கலாமென்று தான் ஆதம்பாக்கத்துக்குப் போய் வாங்கி வந்து கொண்டிருந்தோம்…
அங்கே எனக்குப்பிடித்த சேனைக்கிழங்கு, மிதி பாகற்காய், சேப்பங்கிழங்கு தவிர சீசனில் கிடைக்கும் சிறுகிழங்கு,சீனிக்கிழங்கு, பழங்கள் என எல்லாவற்றையும் ஒரே கடையில் வாங்க முடிந்தது….அப்போதும் வாரம் ஒருமுறை தான் காய்கறி வாங்கி வந்து வைப்போம்..
வெண்பா பிறக்கும் வரையிலும் வீட்டில் ஃப்ரிட்ஜ் வாங்கவில்லை…தவிர்த்திருந்தோம்..எனக்கு பால், தயிர், முட்டை எல்லாவற்றையும் ஃப்ரிஜ்ஜில் வைத்து உபயோகப்படுத்துவது பிடிக்காத ஒன்று. அவ்வப்போது தேவைப்படுவதை அப்போது ஃப்ரெஷ்ஷாக வாங்க வேண்டும். அப்போதைய சமையலை அப்போதே சமைத்து சாப்பிட வேண்டும் என்பதே அதன் காரணம். இந்த லாக்டவுன் காலம் ஆரம்பிக்கும் முன்பு வரை கூட ஃப்ரிஜ்ஜில் அதிகக் காய்களை வாங்கி வைத்துப் பழக்கமே இல்லை…பெரும்பாலும் வெண்ணெய், சீஸ், பனீர், மாவு போன்றவை தான் ஃப்ரிஜ்ஜில் கிடக்கும்.
இந்த வீட்டுக்குக் குடி வந்த பின் ஆரம்பத்தில் எதிரில் உள்ள கடையிலும் பிறகு அருகில் உள்ள மார்கெட்டிலுமாக காய்கறிகள் வாங்கி வந்தாலும் ஆதம்பாக்கத்துக்கும் நேரம் கிடைக்கும் போது போய் வருவோம். அதன் பிறகு ஃபீனிக்ஸ் மாலுக்கு வெண்பாவுக்காக வாரம் ஒருமுறை போக வேண்டி இருந்ததால் அங்கே பிக் பஜாரில் கொஞ்ச காலம் காய்கள் வாங்கி வந்து கொண்டிருந்தோம்…அதில் அதிக வெயிட்டைத் தூக்கிக் கொண்டு வாசல் வரை நடந்து வந்து பின்பு பக்கத்து தெருவில் பைக்கை பார்க் பண்ணியிருக்கும் இடம் வரை உதய் தூக்கிக் கொண்டு நடக்க வேண்டியிருந்த சிரமத்தால் அதையும் நிறுத்தினோம்.
அதன் பிறகு தினமும் தள்ளு வண்டியில் தெருவில் காய்கள் கொண்டு வருபவர்களிடம் வாங்கத் தொடங்கினேன். அதில் பக்கத்து வீட்டு அக்கா ரெகுலராக ஒரு பெரியவரிடம் காய்கள் வாங்குவார். வீட்டின் பால்கனியில் இருந்து ஒரு கயிறில் பையைத் தூக்கிப் போட்டு அதில் தேவைப்படும் காய்களின் அளவை சொல்லி வாங்கி விட்டு மேலே இழுத்துக் கொள்வார்…பின் அந்தப் பையிலேயே காசையும் போட்டு மீதத்தை வாங்கிக் கொள்வார். ஆரம்பத்தில் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பேன். கீழேயிருந்து அவர் ஒரு விலை சொல்வதும் அந்த அக்கா இங்கிருந்து கேள்வி கேட்பதும் பல நேரங்களில் வேடிக்கையாக இருக்கும்.
ஒரு நாள் எங்கள் வீட்டுக்கு முன்னேயிருந்த வீட்டில் வியாபாரத்தை முடித்து விட்டு சில்லறை கொடுக்கப் பையைத் தேடியவர் அப்போது தான் காசுப் பை இல்லாததைக் கவனித்திருக்கிறார். பதட்டத்தோடு தெருவின் முனை வரைக்கும் ஓடி அங்குமிங்கும் தேடிக் கொண்டிருந்தார். காய்கறி வாங்கிக் கொண்டிருந்தவர்களும் பரபரப்பாக அவரோடு சேர்ந்து தேடினார்கள். ஆனால் அந்தப் பை கிடைக்கவில்லை. சுற்றி நின்ற எல்லோரும் ஒவ்வொரு கேள்வியாய் அவரைக் கேட்டுக் குடைந்து கொண்டிருக்க, அவரோ கூண்டுக்குள் சிக்கிய எலி போல பதட்டத்துடன் இங்குமங்கும் பார்த்தபடி தவித்துக் கொண்டிருந்தார்.
எனக்கு அப்பாவின் ஞாபகம் வந்தது. அவர் ஒருமுறை தள்ளுவண்டியில் பழங்கள் விற்று வியாபாரம் முடித்து வீட்டுக்கு வந்த பிறகு தான் துட்டுப்பை(அப்படித்தான் நாங்கள் சொல்லுவோம்) இல்லாததைக் கவனித்தார். அப்பாவுக்கு சட்டை தைக்கும் டெய்லர் அப்பாவின் கால்சட்டைத்துணியில் மீந்திருக்கும் துணியில் துட்டுப்பைகளை தைத்துக்கொடுப்பார்…நாலைந்து நிறங்களில் வீட்டில் துட்டுப்பைகள் இருக்கும். இரண்டு பிரிவாக தைக்கப்பட்டிருக்கும் ..ஒன்றில் ரூபாய் நோட்டுகளும் மற்றொரு பக்கம் சில்லறைகளும் போடுவதற்கு வசதியாய்.. அதில் எப்போதும் சில்லறைகள் போடும் பக்கம் தான் எடை கூடிக்கிடக்கும்….இன்னும் கூட தொலைந்து போன அந்த சிமிண்ட் நிற துட்டுப்பை கண்ணிலேயே இருக்கிறது. இன்னும் மீதமிருக்கும் துட்டுப்பைகளை அப்பாவின் நினைவாக அப்படியே வைத்திருக்கிறோம்…
பெரியவர் எப்போதும் சாயம் போன ஒரு மஞ்சள் பையிலே தான் காசைப் போடுவதைப் பார்த்திருக்கிறேன்…அப்பாவின் கைகளில் துட்டுப்பையின் கைப்பிடி ஒரு பாம்பைப் போல லாவகமாக சுற்றியிருக்கும். இவர் தள்ளுவண்டியில் தராசு பக்கத்தில் வைத்திருப்பார் போல. கடைசிவரை அதைக் காணவேயில்லை. பக்கத்து வீட்டு வாசலில் தன் வழுக்கைத் தலையில் கை வைத்து அவர் சோகமாக உக்கார்ந்ததும் அதற்கு மேல் வேடிக்கை பார்க்க முடியாமல் அன்றைக்கு உள்ளே வந்து விட்டேன்.
மறுநாள் அவர் குரல் எப்போது கேட்கும் எனக் காத்திருந்து அன்றைக்கு கொஞ்சம் காய்கள் வாங்கிக் கொண்டேன்…அன்றைக்கு அக்கம் பக்கத்தில் ஒருவரும் வாங்கவில்லை. எனக்கோ அவருடைய காசுப்பை கிடைத்ததா எனக்கேட்க சங்கடமாக இருந்தது. ஆனால் அவர் எப்போதும் போல வியாபாரம் செய்து கொண்டிருந்ததால் பேசாமல் வீட்டுக்கு வந்து விட்டேன். அதன் பிறகு பக்கத்து வீடுகளில் பலரிடம் கேட்டுப் பார்த்தும் யாரும் அவரிடம் அதைப் பற்றிக் கேட்கவில்லை என்று தெரிந்து அதோடு அந்த சம்பவத்தை மறக்கடித்தேன்.
இன்றைக்குக் காலையில் வேளச்சேரியில் தள்ளுவண்டியில் காய்கறிகள் விற்பவருக்குக் கொரோனா பாதிப்பு என்று செய்தியில் பார்த்தபோது ஒரு வேளை இவராக இருக்குமோ என்று வருத்தமாக இருந்தது. அக்கம்பக்கத்திலும் அவர் தான் பாதிக்கப்பட்டிருக்கிறார் எனச் சொல்கிறார்கள். அவரோடு சேர்ந்து அவருடைய குடும்பத்தினர் 11 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்று.
பெரியவர், ஆள் கட்டையாக இருப்பார். கணீர் குரல்…வழுக்கை தலையும், வட்ட முகமும் நெற்றியில் குங்குமக்கீற்றுமாக வேட்டி சட்டையில் கலகலவென்று வியாபாரம் செய்கிற ஆள். இந்த முறை ஊருக்குப் போய் வரும் போது அப்பாவின் துட்டுப்பையில் ஒன்றை எடுத்து வந்து அவருக்குக் கொடுக்க வேண்டும் என நினைத்திருந்தேன். இப்போது நான் போக முடியாவிட்டாலும் ஊரிலிருந்து தம்பி வரும் போது எடுத்து வரச் சொல்லிவிடுவேன்.
பெருசு காய்கறி வண்டியோடு என்றைக்குத் திரும்பி வருகிறதோ அன்றைக்கு அப்பாவின் துட்டுப்பையைக் கையில் கொடுத்து எப்படி லாவகமாக சுற்றிக்கொள்ள வேண்டுமென சொல்லிக்கொடுக்க வேண்டும்…பத்திரமா திரும்பி வா பெருசு … அயம் வெய்ட்டிங்

No comments:

Post a Comment