Friday 29 May 2020

அசைவப்பதிவு

எச்சரிக்கை : அசைவப்பதிவு….சைவர்கள் மாற்றுப்பாதையில் செல்லவும்….
இன்றைக்குக் காலையில் கோழிக்குழம்பு வைத்து தோசைக்கு தொட்டுக்கொள்ள தட்டில் போட்டு சாப்பிட உக்கார்ந்ததும் பக்கத்தில் வந்து ’என்ன சாப்பிடுற’ எனக்கேட்ட வெண்பாவிடம் ’சிக்கன்டி..இந்தா சாப்பிடு’ என நீட்ட இரு கைகளையும் முன்னே நீட்டித் தடுத்து உடலைப் பின்னே இழுத்து நகர்ந்தவள் “சிக்கன் பாவம்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.
நானும் இவளுக்கு அசைவத்தைப் பழக்க எவ்வளவோ முயற்சி செய்தும் சாப்பிட மறுக்கிறாள்… தெரியாமல் சாப்பாட்டுக்குள் நன்றாகப் பிசைந்து கொடுத்தாலும் மென்று துப்பி விடுகிறாள்…சரி இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் பழக்கி விடலாம் எனப் பார்த்தால்…நாட்கள் தான் வருடக்கணக்கில் போகிறது…அவள் தின்பாளில்லை.
பேச்சு, பார்வை, கோவம், முறைப்பு எல்லாவற்றிலும் அம்மையைக் கொண்டிருப்பவள் சாப்பாட்டு விஷயத்தில் மட்டும் அவள் அப்பாவைப் போல வந்துவிடுவாளோ எனப் பயமாகவும் இருக்கிறது.
மாமியார் வீட்டுக்கு வந்த புதிதில் ஒரு ஞாயிற்றுக்கிழமை, ஆட்டுக்கறி எடுப்போமா கோழிக்கறி எடுப்போமா என அத்தை என் விருப்பத்தைக்கேட்டபோது (நமக்கு கறியென்றால் ஆட்டுக்கறி தான்…கோழியெல்லாம் வெறும் சிக்கன் என்ற அளவிலேயே முடிந்து விடும்) ஆட்டுக்கறில உங்களுக்கெல்லாம் என்ன பிடிக்குமோ அதே எடுக்கலாம் என்றதும் குழம்பிவிட்டார்…ஆட்டுக்கறில தனியா என்னம்மா எடுக்கறது….கறி எடுத்துட்டு வந்து குழம்போ அல்லது சுக்காவோ வச்சிரலாம் என்றார்….நான் அதன் பிறகும் “இல்ல அத்தை …ஆட்டுக்கறின்னா அதுல தலையா, மூளையா, ரத்தமா, ஈரலா, எலும்பா, குடலா, கொத்துக்கறியா, சுவரொட்டியா, காலா என அடுக்கிக்கொண்டே போகவும் மொத்த வீடும் மிரண்டு போய் என்னைப் பார்த்தது….
உதய் மட்டும் மெதுவாக என்னிடம் ’இ.ந்.த… வாலெல்லாம் சாப்பிட மாட்டீல்ல’ என்று கேட்டு நிம்மதிப்பெருமூச்சு விட்டுக்கொண்டதும் நான் யோசனையுடன் ’அதெல்லாம் எங்க ஊர்ல சாப்பிட்டதில்ல சென்னையில சாப்பிடுவாங்களா? கேள்விப்பட்டிருக்கியா?’ எனக்கேட்டதும் நெஞ்சைப்பிடித்துக்கொண்டு சுவற்றில் சாய்ந்தது இன்னமும் ஞாபகம் இருக்கிறது….
அப்புறம் தான் தெரிந்தது…அவர்கள் அசைவமெல்லாம் நாள், கிழமை பார்த்து நறுக்காக, நாசுக்காக சாப்பிடுபவர்கள் …தவிர ஒரு வேளைக்கு மட்டுமே அதை சாப்பிடுபவர்கள் என்பதும்….இதில் உதய்க்கு சிக்கன் மட்டுமே விருப்பம் அதுவும் ரோஸ்ட் செய்தால் மட்டுமே கூடுதலாக ரெண்டு துண்டு தொண்டையில் இறங்கும்…மத்தபடி ஆட்டுக்கறியெல்லாம் விரும்பி சாப்பிடுவது கிடையாது. மீன்குழம்பு என்றால் சமையலறைக்குள் வந்து தண்ணீர் கூடக் குடிக்கிற ஆள் இல்லை என்று மாமியார் பெருமையுடன் சொன்னதும் எனக்குப் பேரதிர்ச்சி…(அடேய்களா….நான்லாம் பக்கத்து வீட்ல மீன்குழம்பு வச்சாகூட அவங்க வீட்டு கிச்சன்ல போய் உக்கார்ந்துருவேன்டா)
பின்னாளில் வெண்பா வயிற்றில் இருந்த போது நான் மட்டும் மீன் குழம்பு வைத்து சாப்பிட்டு விட்டு மசக்கையில் வாந்தியெடுத்துக் கொண்டிருந்த நேரத்தில் மாமியார் ஃபோன் செய்யவும், மீன்குழம்பு வைத்த பாத்திரத்தை உதய் கழுவிக் கொண்டிருப்பதைச் சொன்னவுடன் எதிர்முனையில் சில நிமிடங்கள் பேச்சு மூச்சில்லை… இன்றைக்கும் உதய் மீன் , கருவாடு சாப்பிடுவது கிடையாது..
அம்மா வீட்டில் வாரத்திற்கு மூன்று நாட்கள் அசைவம் தான். கறி, கோழி, மீன், கருவாடு என அசைவம் இல்லாத வாரமே கிடையாது…வீட்டில் எல்லோருமே அசைவம் விரும்பி சாப்பிடுபவர்கள். அப்பா பொதுவாகவே உணவை ரசித்துச் சாப்பிடுகிறவர். எந்தப் பதார்த்தமானாலும் மென்றுகொண்டிருக்கும் நேரத்திலேயே அந்த பதார்த்தத்தின் சேர்மானப்பொருட்களைச் சொல்லி….கூடவே நிறை குறைகளையும் யாராக இருந்தாலும் பொட்டில் அடித்தாற் போலச் சொல்லிவிடுவார்.
வீட்டில் எல்லோரும் ஒன்றாக உக்கார்ந்து சாப்பிடும் போது அப்பா, பிள்ளைகள் எங்களை கவனித்துக் கொண்டே சாப்பிடுவார் சாப்பிடச் சொல்லியும் கொடுப்பார். ’அந்த நல்லிய எடுத்துக்கடி’ ‘தட்டுல ரெண்டு தட்டு தட்டிட்டு ஒரு உறிஞ்சு உறிஞ்சு’ ’ஆங்ங்…அப்படித்தான்’ என்பார்… ’இந்தா இத சாப்பிட்டுப்பாரு கறுக்முறுக்குன்னு இருக்கும்’ என்று கோழி, ஆட்டின் சதைப்பகுதியில் மெல்லிய ஜவ்வு போல ஆனால் எலும்பை விடக் கொஞ்சம் உறுதி குறைந்த பகுதியைக் குழம்பில் தேடி எடுத்துக் கொடுப்பார்….அதை இன்றைக்கும் நாங்கள் கருக்மொறுக் என்றே தான் சொல்கிறோம். அப்பாவைப் பொறுத்தவரை ஆட்டு எலும்பென்றால் மென்று துப்பி விட வேண்டும்…கோழி எலும்பென்றால் மென்று சாப்பிட்டு விட வேண்டும்…அவ்வளவு தான் …சத்தெல்லாம் எலும்பிலே தானிருக்கிறதென்பார்.
குழம்பில் கிடக்கும் கெளுத்திமீனின் சினைப்பை ரவை போலப் பக்குவமாய் வெந்திருக்கும். அதைத் தனியே எடுத்துத் தின்னக்கொடுப்பார்…. அதுவொரு தனி ருசி… அதை செனப்பு என்போம். குழம்போ வறுவலோ மீனின் ஜவ்வரிசி அளவிலான வெந்த கண்களை எப்போதும் எங்கள் கண்கள் தேடும். வறுவலில் மீனின் தலையோடு ஒட்டியிருக்கும் அது குழம்பில் சில நேரம் தனியே மிதந்து கிடக்கும்…ஒவ்வொருவரின் தனிப்பங்கு கணக்கில் வராமல் அதை எடுத்துப் பதுக்குவதற்கு எப்போதும் எங்களிடையே போட்டியிருக்கும்.
சென்னையில் ஹாஸ்டலில் இருந்த நாட்களில் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு சிவக்க வதக்கிய பின் துண்டு கருவாடு சேர்த்த சட்டியையெல்லாம் தூக்கத்தில் கூட நெஞ்சோடு சேர்த்து அணைத்துப் படுப்பது போல் கனவு வரும் எனக்கு. கறிக்குழம்பில் மிதக்கும் கெட்டிக் கொழுப்பும், அல்வாத்துண்டு பதத்தில் வதக்கிய மூளையும், லச்சகொட்டைகீரை சேர்த்து தேங்காய்ப்பூ தூவிய ரத்தப்பொரியலும், பெரிய பயிறு போட்டு சமைத்த ஆட்டுக்கால் குழம்பும், பஞ்சாய் வெந்திருக்கும் குடல்கறியும் நினைத்த மாத்திரத்தில் நாசிக்குள் ஏற்றும் வாசனையை மூளை எப்போதும் சேமித்து வைத்திருக்கிறது.
எந்த வயதிலிருந்து அசைவம் சாப்பிட ஆரம்பித்திருப்பேனென ஞாபகம் இல்லை. ஆனால் ஐந்தாம் வகுப்பின் மதிய உணவு இடைவேளை முடிந்த சில நிமிடங்களுக்குப் பின் ஒரு மூன்றடுக்கு டிபன் கேரியரில் எனக்கும் அக்காவுக்கும் சேர்த்து இரண்டடுக்கில் சுடு சோறும் மேலடுக்கில் கொதிக்க கொதிக்க ஆட்டுக்கால் குழம்பும் கொண்டு வந்து அப்பா எங்களுக்கு ஊட்டி விட்டது மட்டும் நினைவிலிருக்கிறது. அதுவும் வெற்றிச்செல்வி பல்லைப்பிடுங்கி விட்ட அதே வேப்பமரத்தினடியில் தான். சோறும் குழம்பும் சேர்த்துப் பிசைந்து உள்ளங்கையிலேயே ஆற வைத்து அப்பா ஊட்டி முடிக்கவும் அவர் கொண்டு வந்திருந்த சின்னக் கைத்துண்டில் எங்களுக்கு வாய் துடைத்து விட்ட மாத்திரத்தில் வகுப்பறைக்குத் தெறித்து ஓடி வந்து அமர்ந்த பிறகும் நாடியிலும் மேலுதட்டிலும் காரத்தின் காரணமாய் வியர்த்து வழிந்தது இன்னும் மறக்கவில்லை.
விரும்பிச் சாப்பிடும் எந்த உணவானாலும் அதன் வாசமும், ருசியும் மூளைக்குள் சேகரமாக வேண்டும்…நினைத்த மாத்திரத்தில் வாசனையை நாசிக்கும் ருசியை நாவிற்கும் கடத்திச் செல்லும் உணர்வு வாய்க்க வேண்டும். அந்த உணர்வில் தான் வயிறு மட்டுமல்ல மனமும் நிறையும் என்று நம்புகிறேன்.
அசைவத்தில் தான் இப்படியே தவிர மற்ற உணவுகளை உண்ணும் போது 'அம்மா ரொம்ப டேஸ்ட்டா இருக்கு 'என்பதும் 'இத எப்டி பண்ணுன' எனக்கருத்தாய் கேள்வி கேட்பதுமாக இருக்கிறாள். எந்த உணவானாலும் அதன் நிறைகுறைகளை சொல்லத் தெரிந்திருக்க வேண்டும். அது தான் அந்த உணவுக்கும் அதை சமைத்தவர்களுக்குமான மரியாதை என்பது என் எண்ணம். அந்த வகையில் தாத்தா செல்வராஜனின் பேரைக் காப்பாற்றி விடுவாள் போலத் தான் தெரிகிறது.

No comments:

Post a Comment