கொரோனாவும் கோல் போஸ்ட்டும்
கிட்டத்தட்ட எண்பதுக்கும் மேற்பட்ட கதவு எண்களும் அதை விட மும்மடங்கு எண்ணிக்கை கொண்ட வீடுகளும் உள்ள எங்கள் தெருவில் மொத்தம் இரண்டு மளிகை+காய்கறிக் கடைகள். இரண்டு கடைகளும் தெரிவின் இரண்டு கோடியில் இருப்பவை...அதில் ஒன்று எங்கள் வீட்டுக்கு எதிரே உள்ள கடை..வீட்டு வாசலில் இருந்து ஒரு லாங் ஜம்ப் செய்தால் கடையின் வாசலில் போய் பொத்தென்று விழுந்து விடக்கூடிய தூரம் தான்.
தினமும் இரண்டு மாநகராட்சி ஊழியர்கள்( இளம் பெண்கள்) தெருவிலுள்ள ஒவ்வொரு வீடாகச் சென்று வீட்டிலுள்ளவர்களின் உடல்நிலை குறித்து குறிப்பெடுத்துக்கொண்டும் காலையிலிருந்து மாலை வரை இந்தக்கடைசிக்கும் அந்தக் கடைசிக்கும் நடந்தவாறே தெருவில் போய்க்கொண்டு இருப்பவர்களிடம் மாஸ்க் அணியுமாறு வலியுறுத்திக் கொண்டும் இருப்பார்கள்.
இன்றைக்கு காலையில் தெருவில் ஒரே பரபரப்பு. அந்தப்பெண்களில் ஒருவர் எங்கள் வீட்டுக்கு எதிரே உள்ள கடையில் இருந்து யாரெல்லாம் பொருட்கள் வாங்கினீர்கள் என்று விசாரித்துக்கொண்டிருந்தார்...நாங்கள் தினமும் காலையில் பால் வாங்குவது எதிர் கடையில் தான்...இந்த கொரோனா தடைக்கால ஆரம்பத்தில் இருந்தே அவர் காய்கறிகள் வாங்கி விற்பதைக் குறைத்து விட்டிருந்தார்...அதனால் காய்கறிகளை பெரும்பாலும் தெருவில் வருகிற தள்ளுவண்டிக்காரர்களிடமே தான் வாங்கி வந்தோம்...அல்லது பக்கத்து தெருவில் உள்ள மார்க்கெட்டில் நிறைய காய்கறிக்கடைகள் இருக்கிறது...ஆனால் அங்கு சென்று வாங்கியது மிக மிகக் குறைவான தடவைகள் தான்...
அந்தப் பெண்கள் பரபரப்பாக விசாரித்ததன் காரணம் மளிகைக்கடைக்காரருக்குக் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டிருப்பது தான்...அக்கம்பக்கம் எல்லா வீடுகளிலும் குறைந்தபட்சம் பாலுக்காகவேணும் தினமும் போகிற கடை.. தெருவில் நின்று கொண்டிருந்த எல்லாருடைய முகத்திலும் பீதி..
கடைக்காரரின் அண்ணனுக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகச் சொல்லி அவருடைய மளிகைக் கடையையும் சீல் வைக்கப்பட்டிருப்பதாகச் சொன்னவுடன் எல்லோருக்கும் குழப்பம்...காரணம் என்னவென்றால் இந்த கடைக்காரரின் அண்ணனும் இவரும் இந்த கடையிலே தான் இரு வேளைகள் மாறி மாறி அமர்ந்து வியாபாரம் செய்பவர்கள்...அவருக்கென்று தனியாகக் கடை ஏதும் இல்லை...இதைத் தெளிவுபடுத்தியதும் பெரும்பாலான முகங்களில் நிம்மதிப் பெருமூச்சு...
ஆக கொரோனா தொற்று வந்தவர் தெருவின் இன்னொரு முனையில் கடை வைத்திருப்பவர் என்று உறுதியானது...அவருடைய அண்ணனுக்கு பக்கத்துத் தெருவில் இன்னொரு காய்கறிக்கடை உள்ளது..இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்...கடைக்கான காய்கறிகள் கோயம்பேட்டிலிருந்து தான் வந்திருக்கிறது...
நாங்கள் பொதுவாகவே அந்தக்கடையில் அன்னம் தண்ணீர் புழங்குவதில்லை என்பதால் இப்போதைக்கு பயம் கொஞ்சம் குறைந்திருக்கிறது என்றாலும் எதிர்கடை, மாவுக்கடை, முட்டைக்கடை, கறிக்கடை என்று பாதிப்புக்குள்ளாக வைக்கும் காரணிகள் இன்னும் நிறையவே இருக்கிறது...
பக்கத்து வீட்டில் குடியிருக்கும் தம்பதிகள் சித்த மருத்துவப் பொருட்களை விற்பவர்கள் என்று தெரிந்தவுடன் 'கபசுரக் குடிநீர், ஒரு பாக்கெட் வாங்கி வைத்திருந்தோம்...நிலவேம்புக்குடிநீர் முன்பு வாங்கியதே பிரிக்கப்படாமல் இருந்தது...விட்டமின் சி மாத்திரைகளை லாக்டவுனுக்கு முன்னேயே வாங்கி வைத்திருந்தோம்...
மாவுக்கடை வைத்திருக்கும் அம்மாவின் மகள் சித்த மருத்துவர் என்பதால் இப்போது அரசு பரிந்துரைத்துள்ள Ars Alb 30 ஒரு குப்பியை காலையில் மாவு வாங்கப் போகும் போது வாங்கி வைத்தாயிற்று...
தெருவின் இரண்டு முனைகளையும் பேரிகார்ட் வைத்து அடைக்கும் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது...நடமாடும் வட்டம் சுருக்கப்பட்டிருக்கிறது....
ஹாக்கி விளையாட்டில் மொத்த ஆடுகளத்தை ஆக்ரமித்து 11 பேர் ஆடுவதைக் காட்டிலும் D top என்கிற கோல் போஸ்ட்டுக்கு அருகில் உள்ள அரை வட்டத்துக்குள் பந்து இருக்கும் போது ஆடும் ஆட்டம் சுவாரஸ்யமானது...தவிர டை பிரேக்கரின் போது கோல்கீப்பரை எதிர்த்து கோல் போட 11 பேரில் இருந்து ஐந்து பேருக்கு ஆளுக்கொரு வாய்ப்பு கொடுக்கப்படும்....நிலவேம்புக்குடிநீர், கபசுரக்குடிநீர், Ars Alb, விட்டமின் சி யோடு ஐந்தாவதாக இத்தனை நாள் பேணி வந்த சுத்தம், சுகாதாரம், ஆரோக்கியம், உடலின் தாங்குதிறனோடு மன வலிமையையும் சேர்த்து ஐந்து பேராக ஆட்டையில் நிற்போம் 😜...D Topக்குள் பந்து சென்று விட்டால் அது கோலில் முடிய வேண்டும் என்பது பொதுவான ஆட்ட விதி....
ஆனால் இந்த முறை கோல்போஸ்ட்டில் நாம் நின்று கொண்டிருக்க டி டாப்பில் கொரோனா நின்று கொண்டிருக்கிறது....பார்க்கலாம்
No comments:
Post a Comment