Friday, 29 May 2020

கொரோனாவும் இயல்பு வாழ்க்கையும்

கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வரும் வேளையில் தெருவில் ஆட்களின் நடமாட்டமும் அதிகரித்தபடி இருக்கிறது. எங்கள் தெருவைப் பொறுத்தவரையில் காலையில் முதலில் கேட்கும் சத்தம் பக்கத்து வீட்டின் கீழ்த்தளத்தில் அவர்கள் கட்டுமானப்பொருட்கள் வைத்திருக்கும் அறையிலிருந்து வீட்டு வாசலில் நிற்கும் வண்டியில் அவற்றை ஏற்றி வைப்பது. இது காலை 5:30 மணியிலிருந்து 6:00 மணிக்குள் தொடங்கும் அன்றாட நிகழ்வு. இதைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தில் வாசல் தெளிக்கும் சத்தம் கேட்கத்தொடங்கும்.
6:30 மணிக்கு ஒரு புல்லட்டின் சத்தம் கேட்கும். காலையில் எழுந்ததும் அவர் புல்லட்டை வாக்கிங் கூட்டிப்போகும் சத்தம் அது…கொஞ்ச நாட்களாக ஓய்ந்திருந்த இந்த சத்தமும் இப்போது கேட்கத் தொடங்கிவிட்டது.
அடுத்தது புதன், ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் 6:30ல் இருந்து 7:00 மணிக்குள் கேட்கும் மீன் விற்கும் அக்காவின் சத்தம்… இன்றைக்கு புதன் கிழமை என்பதை அவரின் சத்தம் மூலம் தெரிந்து கொண்டேன். பக்கத்து வீட்டில் மோட்டார் போடும் சத்தமும் இந்த நேரத்தில் இணைந்து கொள்ளும்.
7:00 மணிக்கு மேல் கீரைக்காரரின் சத்தம் கேட்கும். அதே நேரத்தில் தெருவின் இந்தக் கோடிக்கும் அந்தக்கோடிக்குமாய் நாலைந்து முறை சென்றபடி இடியாப்பம் விற்பவரின் குரல் மைக்கில் கேட்கும். கிட்டத்தட்ட 9 மணி வரைக்கும் கூட அந்தக்குரல் கேட்டபடியே இருக்கும். அதைத் தொடர்ந்து காய்கறி, பழங்கள் வண்டிகளின் தொடர்ச்சியான சத்தங்கள் மதியம் 12:00 மணி வரைக்கும் தொடரும்.
9:30ல் இருந்து 10:30க்குள் பூக்கார அம்மாவின் சத்தம் கேட்கும்..ம்மா மல்ல்ல்லீய்ய் முல்லேய்ய்ய் என்று பிசிரில்லாமல் ஒரே ராகமாகப் பாடிக்கொண்டு நடந்து வருவார் அந்த அம்மா. கூடையில் சுமந்தபடி பொருட்களை விற்பவர்கள், சைக்கிளில் விற்பவர்கள், வண்டி, தள்ளுவண்டி, வேன் என பெரும்பாலான வியாபாரிகள் இப்போதெல்லாம் மைக்கிலேயே தான் சத்தம் குடுத்துக்கொண்டு வருகிறார்கள். இதில் விதிவிலக்காக இன்னும் தங்கள் குரலை நம்பி இருப்பவர்கள் சென்னை வீதிகளில் ரொம்பவே குறைவு.
பூக்கார அம்மாவைப்போலவே எங்கள் வீட்டுக்குப் பூ கொடுக்கும் பெரியவரும் டிவிஎஸ் 50 இல் ”சாமந்தீஈஈ…..ரோஸ்ஸ்ஸ்ஸ்” எனக் குரல் கொடுத்துக் கொண்டே தான் வருவார். இதற்கு முன் குடியிருந்த வீட்டில் இரண்டாவது மாடிக்கு நடந்து வந்து 30 ரூபாய்க்குப் பூக்களைக் கொடுத்துச் செல்வார்…அப்போது சைக்கிளில் வருவார். ஒரு சாயலில் அப்பாவை நினைவுபடுத்துவதால் அவர் மூச்சிறைக்கப் படியேறி வருவதைப் பார்த்து….” கீழ கேட்லயே கவர்ல வச்சிடுங்கய்யா நான் எடுத்துக்குறேன்” என்றாலும் ”பூ வாடிப்போவும்மா” என்பார்…கொஞ்ச நாட்கள் அவரை வீட்டுப்பக்கம் காணவில்லை….
பிறகு ஒரு நாள் சத்தம் கேட்டு நானே இரண்டு மாடி இறங்கிப் போய் என்னவென்று விசாரிக்கலாம் எனப் போனபோது அவரே கேட்டைத் திறந்து வந்து கொண்டிருந்தார்….கைகளில் பூக்கவரோடு…”என்னங்கய்யா ஆளையே காணோம்” என்றதும் ”கொஞ்சம் நெஞ்சுவலியாச்சுதம்மா….அதான் யாவாரத்துக்குப் போகவேணாம்னு பசங்க சொல்லிட்டாங்க…நமக்கு தான் வீட்ல உக்கார முடியலையே அதான் கொஞ்சம் சரியானதும் வந்தேன்…வாடிக்கையா வாங்குறவங்களுக்கு மட்டும் கொடுக்குறதும்மா” என்றார். பிறகு மெல்ல தயங்கியபடியும் கொஞ்சம் ஆர்வத்துடனும் “எம்மா…எதும் விசேசமா” என்றார்….”ஆமாங்கய்யா அஞ்சு மாசம்” என்றேன்…”அதான பார்த்தேன்…எம்மா இனிமே இப்டிப் படியிறங்கி வராதம்மா…நான் இங்க பைக் பக்கத்துல பூ வச்சிட்டுப் போறேன்..பத்திரம்மா” என்றுவிட்டுப் போனார்…
ஏழாம் மாதத்தில் அந்த வீட்டைக் காலி செய்து விட்டு இப்போதிருக்கும் வீட்டுக்கு மாறி வந்தோம்…அவரிடம் தகவல் சொல்ல முடியவில்லை.
இங்கே வந்து இரண்டு மாதங்கள் கழித்து வளைகாப்புக்கு ஊருக்குப் போனதோடு வெண்பா பிறந்து ஐந்தாம் மாதத்தில் தான் இந்த வீட்டுக்குத் திரும்பி வந்தேன்…அதன் பிறகு பல நாட்கள் கழித்து தெருவில் அவர் சத்தம் கேட்டு ஓடிப் போய் பால்கனியில் நின்று அவரை அழைத்ததும் சந்தோசமாக வீட்டு வாசலில் வந்து நின்றார்…வெண்பாவைக் கொண்டு போய்க் காண்பித்ததும்…”எம்மா குழந்தைய தூக்கிப் பார்க்கட்டுமா” என்று கேட்டார்… “இந்தாங்கய்யா” என்று கொடுத்தேன்…சந்தோஷமாக வாங்கிக் கொண்டவர்…”எம்மா அப்டியே உன்னையாட்டம் இருக்கும்மா….ராஜாத்தீ…தாத்தாவப் பாருடா கண்ணு” என்றபடி “பேர் என்னாம்மா” என்றார்… “வெண்பா” என்றதும் ”இந்தக் காலத்துப் புள்ளைங்க என்னவோ புதுசு புதுசா பேர் வைக்குறீங்க ஆனா மைசூர்பா மாதிரி இதுவும் நல்லா தான் இருக்கு” என்று சிரித்தார்….
வெண்பா வளர்ந்து அவர் சத்தம் தெருவில் கேட்டதும் “ம்மா பூக்காரத்தாத்தா வந்துக்கார் பாரு” என்று என்னை இழுத்துக்கொண்டு பூ வாங்க படியிறங்குவாள்…சில நாட்கள் அவள் கையில் பையையும் காசையும் கொடுத்து விட்டு பால்கனியின் நின்று பார்த்துக் கொண்டிருப்பேன்..கீழே கேட் எப்போதும் தாழ்ப்பாள் போட்டிருக்கும்….அவர் தாழ்ப்பாளைத் திறந்து அவளிடம் பூவைக் கொடுத்து விட்டு அவள் படியேறி மேலே என்னிடம் வந்து சேரும் வரை கீழே நின்று கொண்டிருப்பார்.
வீட்டில் ஏற்கனவே பூக்கள் இருந்தால் வெண்பாவிடம் “பூ இருக்கு தாத்தா நாளைக்கு வாங்கிக்குறோம்னு பால்கனியில் நின்னு சொல்லிட்டு வா” என்று அவளை அனுப்பி விட்டுப் பின்னாலேயே போவேன்…
ஒருநாள் அவர் சத்தம் கேட்டு இப்படியே சொல்லி அனுப்ப நான் பின்னால் வருவதற்குள் அவளே வீட்டுக்குள் திரும்பி வந்து “ம்மா தாத்தா உன்ன கூப்பிடுறாரு” அன்றதும் பால்கனியில் நின்றவாறே “பூ இருக்குங்கப்பா…நாளைக்கு வாங்கிக்குறேன்” என்றவளை “பூ கெடக்கும்மா…இங்க பாரு வண்டி வாங்கிருக்கேன்…பேத்திய கூட்டிட்டு வாம்மா…இதக் காட்டத்தான் கூப்ட்டேன்” என்றார்…அப்போது தான் கவனித்தேன்…முகப்பில் சந்தனம் தெறிக்க மாலையணிந்தபடி ஒளிராத ஹெட்லைட் கண்கள் மின்ன அவரின் டிவிஎஸ்50 நின்று கொண்டிருந்தது. பின்னால் கூடையில் ரோஜாவும் சாமந்தியும். நிஜமாகவே அவரைப் பார்க்க அன்றைக்கு மிக சந்தோஷமாய் இருந்தது. அப்பாவின் கனவுகளில் ஒன்று ஒரு டிவிஎஸ்50 வாங்கிவிட வேண்டுமென்பது. அவரின் கண்களில் அன்றைக்குக் கூடியிருந்த நீர்மையில் அந்தக் கனவு பூர்த்தியாகியிருந்தது.
வழக்கம் போல செயல்படத்துவங்கியிருக்கும் தெருவிற்குள் இன்னும் வந்து சேராமலிருப்பது இடியாப்பக்காரரின் குரலும், பூக்காரப்பெரியவரின் குரலும், காய்கறிக்காரப்பெரியவரின் கட்டைக் குரலும் தான்…இவர்கள் மூவரும் வந்து தெருவின் அன்றாடப் பரபரப்பில் கலந்து விட்டால் நானும் கூட ஃபேஸ்புக்கில் ’லிவ் இன் ரிலேஷன்ஷிப் வித் கொரோனா’ என்று பதிவிட்டுவிடலாம் என நினைத்திருக்கிறேன்….

No comments:

Post a Comment