Friday, 20 November 2015

மழை

தொடர்மழை, வெள்ளபாதிப்புப் பதிவுகள் சற்றே குறைந்திருக்கும் இந்த வேளையில் சற்று கவனமாகவும் யோசனையுடனுமே தான் இந்தப் பதிவை எழுதியிருக்கிறேன்.
இந்த கனமழையை எங்களை விட அதிகமாய் ரசித்து அனுபவித்தவர்கள் வேறு யாரும் இருக்க  முடியாது என்றே நினைக்கிறேன். காரணம் இந்த மழையால் எவ்விதத்திலும் நாங்கள் பாதிக்கப்படவில்லை. லேசான குற்றவுணர்ச்சி இருந்தாலும் சராசரி மனித மனம் இந்த மழையையும் அதன் மூலம் கிடைத்த அற்புதமான தருணங்களையும் வெகுவாய் ரசிக்க வைத்திருப்பது தான் உண்மை.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான வேளச்சேரியில் உள்ள பாதுகாப்பான ஒரு கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் தான் எங்கள் வீடு. வேளச்சேரி ஏரிக்கும் எங்கள் வீட்டுச் சுவற்றுக்குமிடையேயான தூரம் நான்கு அடி அகலமான காம்பவுண்டு சுவர் மட்டுமே. மூன்று பக்கமும் ஜன்னல்கள் இருப்பதால் மழையின் தீவிரத்தை வெகுவாக உணரமுடிந்தது. அத்தனை மழையிலும் வீட்டுக்குள் தண்ணீர் ஏதும் வரவில்லை. பால்கனி கைப்பிடி சுவற்றில் சிறு சிறு தொட்டிகளில் வைத்திருக்கும் செடிகள் மழையில் நனைந்து பளிச்சென புத்துணர்ச்சியுடன் அசைந்தாடிக்கொண்டிருந்தது. வாசற்படிகளில் மட்டும் தெறித்துக் கொண்டிருந்த மழைத்துளிகளை அடிக்கடி துடைப்பானால் சுத்தம் செய்ய வேண்டியிருந்தது. வாசலை ஒட்டிய பால்கனியில் பெரிய பாத்திரங்களை வைத்து மழைநீரை சேகரித்தோம். வடிகட்டிய மழைநீரை சமையலுக்குப் பயன்படுத்திக்கொண்டோம்.
தொடர்ந்த மின்வெட்டுக்களால் இணைய மற்றும் தொலைக்காட்சி இணைப்புகள் முற்றாக துண்டிக்கப்பட்டதும் வெளியே நடப்பது ஏதும் தெரியவில்லை. இடையிடையே கொஞ்ச நேரம் கிடைத்த மின்சார இணைப்பில் ஹீட்டர் போட்டு ஆவி பறக்கக் குளித்துக் கொண்டாயிற்று. வீட்டிலிருந்த சிறு சிறு டார்ச்சுகளில் இருந்து செல்ஃபோன், டேப்லட் என எல்லாவற்றுக்கும் கிடைத்த இடைவெளியில் சார்ஜ் போட்டு வைத்துக் கொண்டோம்.
முதல் நாளே சற்று திட்டமிடலுடன் வாங்கி வந்திருந்த காய்கறிகள், பால், பிரெட் பாக்கெட்டுகள், முட்டை போன்றவற்றோடு வேளைக்கு வேளை சுடச்சுட சாப்பாடும் நடுநடுவே இஞ்சி தட்டிப் போட்ட காரமான டீயோடு ரவா கேசரி என சமைத்து ரசித்து ருசித்து சாப்பிட்டோம்.
இருவர் வீடுகளுக்கும் நாளுக்கொரு முறை ஃபோன் செய்து பாதுகாப்புடன் நாங்கள் இருப்பதை சொல்லிக்கொண்டதோடு நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் என முடிந்தவரையில் ஃபோன் செய்து நலத்தையும் வெள்ள நிலவரத்தையும் அறிந்து கொண்டோம்.
மாதக்கணக்கில் செல்ஃபில் தூங்கிக்கொண்டிருந்த சீட்டுக்கட்டுகளைப் பிரித்து விரல்கள் வலிக்க வலிக்க ரம்மி விளையாடிக்கொண்டோம். மழை குறைந்த வேளையில் அவரவர் கேமராக்களோடு மொட்டை மாடிக்குச் சென்று ததும்பி வழிந்த ஏரியை சந்தோஷத்தோடும், வெள்ளம் சூழ்ந்த தெருக்களை வருத்தத்தோடும் ஃபோட்டோக்கள் எடுத்துக் கொண்டோம்.
உதய்யும் ஓம்ஸ்ரீயும் இரண்டு மணிநேரத்திற்கொரு முறை வீட்டை விட்டு வெளியே சென்று சாலையில் போக்குவரத்து ஒழுங்குபடுத்த உதவி செய்து கொண்டிருந்தனர். எனக்கும் கூட ஆசை இருந்தாலும் சேலை/சுடிதார்/லெக்கின்ஸ்/நைட்டியில் மழையில் நனைந்தபடி ரோட்டில் திரிந்து கொண்டிருந்த இளம்பெண் என்றபடி குமுதம் ரிப்போர்ட்டரில் தலைப்புச் செய்தியாக வர விருப்பமில்லாததால் அமைதி காத்தபடி வீட்டிலேயே இருந்துகொண்டேன். 
ஏரியில் எப்போதும் அங்கங்கு மிதந்து கொண்டிருக்கும் பெலிக்கான் பறவைகள் இந்த மழையில் மிக அதிகமாகக் காணப்பட்டன. புறாக்கள் ஜன்னல் ஓரத்தில் அனத்தியபடி அடைந்து கிடந்தன. ஏரியின் மேற்புறத்தில் மீன்கள் மொய்த்துக் கிடந்தன. நீர்மூழ்கிக்காக்கைகள் தண்ணீரைக் கிழித்தபடி  மிதந்து கொண்டும் அடுத்த நொடியில் தண்ணீருக்குள் மூழ்கிக் கொண்டும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தன. வீட்டைச் சுற்றியிருந்த தென்னை மரங்களில் மொத்த மழைக்கும் சொட்டச் சொட்ட நனைந்தபடி தலை கவிழ்ந்து கிடந்தன காக்கைகள். தென்னம்பாளைகளை கொறித்தபடி அணில்கள் இங்குமங்கும் ஓடிக்கொண்டேயிருந்தன. சிறிய குருவிகளும் தட்டான்களும் வீட்டைச் சுற்றிப் பறந்து கொண்டிருந்தன.
தெருக்களில் எல்லா கடைகள், அலுவலகங்கள், காய்கறி/மளிகைக்கடைகள், மருந்துக்கடைகள் உள்பட அனைத்தும் மூடப்பட்டிருந்தன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்த மக்களை விட வெள்ளத்தை வேடிக்கை பார்க்கவும் செல்ஃபோனில் ஃபோட்டோ எடுக்கவும் குவிந்திருந்த மக்கள் தான் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையை ஆக்ரமித்திருந்தனர். சாலைக்கு நடுவே பள்ளம் வெட்டி வெள்ளத்தண்ணீர் வழிந்தோட வழி செய்திருந்தனர் நகராட்சி ஊழியர்கள். சாலைத்தண்ணீரும் ஏரி நீரும் கலக்கும் இடத்தில் நிறைய பேர் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

நேரடியாக அடைமழையில் எந்தவிதத்திலும் பாதிக்கப்படாமல் இருந்தாலும் வாட்ஸப், ஃபேஸ்புக் தாண்டி ஊரிலிருந்து ஒவ்வொரு உறவினர்களாக ஃபோன் செய்து அக்கறையுடன் நலம் விசாரித்தது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. 

1 comment: