வரும்ம்ம்...ஆனா வராது..
மூன்று நாட்களாக எலக்ட்ரிக் ட்ரெயினில் போய் வரும்படியான சூழல். மூன்று நாட்களிலும் வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு ஆட்களிடம் பார்த்த ஒரு பொருள் ஆச்சர்யப்படுத்தியது.
முதல் நாள் பார்த்த பெண், ரயில் கிளம்பிய கடைசி நொடியில் இடது கையில் ஹெல்மெட்டும் வலது கையில் போனில் பேசியபடியும் உள்ளே வந்து எதிர் சீட்டில் ஜன்னலோரம் உக்கார்ந்தாள். மறுமுனை குரலோடு வாக்குவாதம் போல. அந்தக்குரலின் முகத்தை மட்டுமே கண்ணில் நிறுத்திக்கொண்டு வெளி உலகை மறந்து கத்திக்கொண்டிருந்தாள்.
பேசிக்கொண்டே எழுந்தவள் ஹெல்மெட்டை தலைக்கு மேலிருந்த லக்கேஜ் வைக்குமிடத்தில் வைத்துவிட்டு அமர்ந்தாள். சுட்டு விரலில் அவள் அணிந்திருந்த மோதிரம் கவனத்தை ஈர்த்தது. வெள்ளி அல்லது அவள் தோற்றத்தை வைத்துப் பார்க்கையில் ப்ளாட்டினமாக கூட இருக்கலாம் என்று தோன்றியது. ஜன்னலுக்கு வெளியே பார்த்தபடி பேசிக்கொண்டிருந்தவளின் சுட்டு விரல் மொபைலின் முதுகில் அழுத்தமாகப் பதிந்திருக்க அந்த மோதிரம் அசைவற்று எனக்கு காட்சி தந்தபடி இருந்தது.
இரண்டாம் நாள் தி.நகரில் மழை தூறலோடு ஒரு குடும்பம் ரயிலுக்குள் வந்தது. அம்மா, மகள், மகன். மகள் கையில் ஒன்றரை வயது பெண்குழந்தை. அந்தப்பெண் கைவிரல்கள் முழுக்க அப்பிய வாழைப்பழப்பிசுக்கோடு குழந்தைக்கு ஊட்டிக்கொண்டிருந்தாள். அவள் கையிலும் முதல் நாள் பார்த்த பெண் அணிந்திருந்த அதே மோதிரம். எனக்கு இந்த தற்செயல் ஆச்சர்யமூட்டியது. இந்த மோதிரம் வெள்ளியாகத்தான் இருக்கவேண்டும் என்று உறுதியாக நினைக்கும்படி இருந்தது.
அந்தப்பெண் நான் இறங்கும் மௌண்ட் ஸ்டேஷனில் தான் இறங்கவேண்டும் போல. கை நிறைய வைத்திருந்த கட்டைப்பைகளை எதுஎது அவரவரது என்று அவசரமாகப் பார்த்துப் பிரித்துக் கொண்டிருந்தனர். பேச்சிலிருந்து அம்மாவும் மகனும் தாம்பரத்தில் இறங்குபவர்கள் எனத் தெரிந்தது. ரயிலில் ஏறியதிலிருந்தே அந்தப்பெண் சத்தமாக அவள் அம்மாவை அதட்டிக்கொண்டே கடை பெயர்களைச் சொல்லி அந்தப்பைகளைப் பிரித்து வைக்கும்படி சொல்லிக்கொண்டிருந்தாள்.
திடீரென ஞாபகம் வந்தவளாய் கொலுசு வாங்கின பை எங்கே என அவள் கேட்க, அது உன்னோட ஷோல்டர் பேக்ல தான வச்ச என்று அம்மா சொல்ல…நான் எங்கம்மா பேக்க வச்சிருந்தேன். இவன் தான் வச்சிருந்தான் என தம்பியைக்காட்ட அவன் எங்கிட்ட இல்லையே என்றபடி ஒவ்வொரு பையாகப் பார்க்க ஆரம்பிக்க இந்தப்பெண் அவள் அம்மாவை உன் பொருளெல்லாம் பாத்து பாத்து பத்திரமா எடுத்து வச்சியே என்னுது எடுத்து வைக்க தோணல உனக்கு என்று திட்டினாள். நீதான கவுண்ட்டர்ல காச குடுத்து வாங்கிட்டு வந்த என இவரும் கத்த மொத்தத்தில் அந்தப்பையை எங்கோ தொலைத்து விட்டிருக்கிறார்கள் எனத் தெரிந்தது.
மவுண்ட் ஸ்டேஷனில் இறங்கி மறுபடியும் தி.நகர் செல்லும் ரயிலில் ஏறி கடைக்குச் சென்று பார்க்கும் முடிவோடு இறங்கியவர்கள் வழியெங்கும் ஒருவர் மாற்றி ஒருவர் கத்திக்கொண்டே போவதைப் பார்த்தபடி அந்த மோதிரத்தை நினைவுக்கு கொண்டு வந்தேன். இவள் விரலிலும் அது அசையவில்லை.
மூன்றாவது நாளில் பார்த்த அந்த மோதிரம் கூப்பிய கரங்களில் ஆரத்தி தட்டின் ஒளிபட்டு தங்கத்தில் ஜொலித்துக் கொண்டிருந்தது. கூடுதலாக கற்கள் பதிக்கப்பட்டிருந்ததைப் பார்க்கையில் வியப்பாய் இருந்தது.
அவர் ஆரத்தியை தொட்டுக் கும்பிட்டபடியே வலப்பக்கம் திரும்பிப்பார்த்து சற்றுத்தள்ளி கையிலிருந்த பைக்குள் எதையோ துழாவிக்கொண்டிருந்த அம்மாளைப்பார்த்து அங்க என்னத்த நோண்டிட்டு கெடக்க ...வா இங்க என்று பல்லைக்கடித்துக் கூப்பிட்டார். அந்த அம்மாள் நெருங்கி வரவும் இவர் சட்டைப்பையிலிருந்து ‘ சூரிய பகவான் ஒளி முகம் காண பிள்ளையார்பட்டி வரவேண்டும்’ என்று சத்தமாய் ஒலித்தது. போனை எடுத்துப் பேசிக்கொண்டே அவர் நகர அந்த அம்மாள் இவரையே பார்த்தபடி நின்றுகொண்டிருந்தார்.
நிறைய பேர் அணியும் வகையிலான மோதிரங்கள் என்று நான் இதுவரை பார்த்ததை நினைவுக்கு கொண்டு வருகையில் இரண்டே இரண்டு மோதிர வகைகள் தான் ஞாபகத்துக்கு வந்தன. ஒன்று யானை முடி பதித்த மோதிரம். இரண்டாவது ஒன்பது வகை கற்கள் பதித்த ராசி மோதிரம்.
இப்போது பார்த்த இந்த மோதிரம் சமீபத்திய ட்ரெண்ட் போல. ஆனால் அணிந்திருந்தவர்களின் தோற்றம்படி பார்த்தால் எல்லா வயதினரையும் ஈர்த்திருப்பது தெரிகிறது .
ஒரு ஆர்வத்தில் இந்த மோதிரம் அணிவதால் என்ன பலன் என்று கூகுள் செய்து பார்த்தேன். அதை அணிந்திருந்தவர்கள் வெளிப்படுத்திய மனநிலைக்கும் இந்த மோதிரம் அணிவதால் ஏற்படும் பலன்களுக்கும் சம்மந்தமேயில்லாமல் இருந்ததை நினைத்து சிரிப்பு வந்தது.
இமேஜ் ஆப்ஷனில் போய் ஒவ்வொரு டிசைனாக ஜூம் செய்து உற்றுப் பார்த்துக்கொண்டே வருகையில் தான் மண்டையில் உரைத்தது.
விரல்ல போட்டிருக்கது ஆமை மோதிரம்… பின்ன பலன் மட்டும் வேகமாவா வரும்?….வர்ரூம்…மெதுவாத்த்த்தான் வரும் போல…