96’ திரைப்படத்தை இன்னும் முழுதாகப் பார்க்கவில்லை….நேற்றைக்கு வாட்சப்பில் அந்தப் படத்திலிருந்து ”யமுனை ஆற்றிலே” பாட்டை ஜானு பாடும் காட்சியைப் பார்த்து விட்டு யூ ட்யூபில் அந்தப் படத்தின் மற்ற காட்சிகளைத் தேடிப் பார்த்துக் கொண்டிருந்தேன்….
ராம், அவனது பள்ளிப்பருவத்திலும் பிறகு அவர்களுடைய வகுப்பு ஒன்றுகூடலின் போதும் ஜானுவிடம் இந்தப்பாடலைப் பாடும்படி மிகவும் விரும்பி ….இன்னும் சொல்லப்போனால் ஜானு அந்தப்பாடலை ஒருமுறையாவது பாடிவிடமாட்டாளா என ஏக்கமாகக் கேட்கிறான்…..நண்பர்கள் முன்னிலையில் ராம் கேட்கும் ஒவ்வொரு முறையும் ஜானு அவன் கோரிக்கையை நிராகரிக்கிறாள்….
பிறகு ஜானு, ராம் இருவரும் ராம்-மின் வீட்டில் பேசிக்கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது கரண்ட் கட்டாகிறது….எதிர்பாராத அந்த சூழலில் அந்த இருட்டில் அவள் தடுமாறிவிடக்கூடாது என்று ராம் “ நீ இருட்டில் எழுந்துக்காத ஜானு இதோ நான் வர்றேன்” என்று எழுந்து போகிறான்….
முழுக்க இருள் சூழ்ந்த, பின்னணியில் மழைச் சாரல் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டிருக்கும் அந்த நேரத்தில் ராம் தன் வாழ்நாளில் ஒருமுறையேனும் ஜானுவின் குரலில் கேட்க விரும்பிய அந்தப் பாடலை அவள் பாடுகிறாள்…..அந்தப் பாடல் ராமுக்கு விருப்பமானதாகவே அதுவரை காட்டப்பட்டிருந்தது மறைந்து போய் ஜானுவுக்கு ராம் எத்தனை விருப்பமானவனாக இருந்தால் அவன் விரும்பிய அந்தப் பாடலை கூட்டத்தில் நண்பர்களுக்கு முன் பாடாமல் அவனும் அவளும் மட்டும் தனித்திருக்கும் போது அவன் எதிர்பாராத அந்த நேரத்தில் அதுவும் அவன் கேட்காமலே ஜானு பாடியிருப்பாள் என்று தோன்றியது….
அவளுக்கு இத்தனை விருப்பத்துக்குரியவனான ராம், ஜானு அந்தப் பாடலைப் பாடும்போது என்ன செய்திருக்க வேண்டும்…….இருட்டுக்குள் போனவன் அவள் குரலில் அந்தப் பாடலைக் கேட்ட நொடியில் கால்கள் மரத்துப் பேச மறந்து சுவாசிக்க மறந்து சிலையாக நின்றிருக்க வேண்டுமா இல்லையா …குறைந்தபட்சம் அதற்கு முன்பான காட்சிகளில் ஜானுவின் ஸ்பரிசம் பட்ட நொடியில் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு மயங்கி விழுவதைப் போல விழுந்திருக்கவாவது வேண்டுமா இல்லையா…..
இது எதுவும் செய்யாமல் அவன் இருட்டுக்குள் அங்குமிங்கும் ஓடி கைகளில் தட்டுப்படும் பொருட்களைத் தள்ளி விட்டு அந்த அமைதியைக் குலைத்து தட்டுத் தடுமாறி எதையோ எடுக்கிறான்…..சரி அது டேப் ரெக்கார்டர் போல…ஜானுவின் குரலைப் பதிவு செய்ய தேடி எடுத்திருக்கிறான் என்று நினைத்தால் அது டேப் ரெக்கார்டரும் இல்லை…அதுவொரு எமர்ஜென்ஸி லைட்… அதை உயிர்ப்பித்து எரிய வைத்து ஜானுவின் முகத்துக்கு நேரே கொண்டு வந்து நிற்கும் போது ”பாவம் ராதா” என்று அந்தப் பாடலைப் பாடி முடித்தே விடுகிறாள்….. உண்மையில் பாவம் நீ தான் ஜானு …..அடேய் ராம்….லைட்டாடா இப்ப முக்கியம் என்று கேட்கத் தோன்றியது…..
இந்த வீடியோவைத் தொடந்து யூ ட்யூப் பரிந்துரைகளின் நூல் பிடித்துச் சென்றதில் இந்தப் பாடலின் ஒரிஜினல் வர்சனான தளபதி படத்தில் இடம்பெறும் ”யமுனை ஆற்றிலே” பாட்டையும் பார்க்க நேர்ந்தது…..பாடலின் நிறைவு வரிகளின் போது ரஜினியும் ஷோபனாவும் எதிர் எதிரே உக்கார்ந்திருக்கும் காட்சி….அதிலும் தலைவரின் முக பாவனையும், தலையைக் கோதியபடி, ஒரு கையை தாடையில் வைத்துப் பாட்டையும் ஷோபனாவையும் ஒரு சேர ரசிப்பதும்……க்ளாஸிக் 😍😍😍😍
No comments:
Post a Comment