சென்னைக்கு வந்து இத்தனை வருசம் ஆனாலும்
இன்னும் கூட சில நேரங்கள்ல இங்க பேசுற சில வார்த்தைகள் எங்க ஊர்ப்பக்கம் பேசுற வார்த்தைகளோட
ரொம்பவே முரண்பட்டிருக்கும்….எனக்கும் சில வார்த்தைகள் சுட்டுப்போட்டாலும் இங்க பேசுற
மாதிரி வராது….
அதனாலேயே வெளி இடங்களுக்குப் போய் பேசும்
போது நம்ம இந்த ஊரு ஆளு இல்லன்னு ரொம்ப ஈஸியா கண்டுபிடிச்சுடுவாங்க…. ஆஃபீஸில இருந்தப்ப
கட்டடம் சம்பந்தமான பல வார்த்தைகளெல்லாம் ஊர்ல பேசுறதுக்கு அப்டியே ரிவர்ஸ்ல இருக்கும்….
பள்ளம் நோண்டிருக்காங்க - தோண்டியிருக்காங்க
காவா அடைச்சிருக்கு - வாய்க்கால் அடைச்சிருக்கு
இப்டி நிறைய்ய வார்த்தைகள்…..
ஆனாலும் இந்தக்காய்கறி வாங்கும் போது அதிலும்
குறிப்பா கிழங்கு வகைகள்லாம் ஒவ்வொண்ணுக்கும் ஒவ்வொரு பேர் இருக்க இவங்க ஏன் எல்லாக்
கிழங்கையும் ஒரே பேர் சொல்லிக் கூப்பிடுறாங்கன்னு இருக்கும்…..
இன்னைக்கு காய்கறிக்கடையில சிறு கிழங்கு
இருக்கான்னு கேட்டேன்….காய்கறி வாங்க வந்த ரெண்டு மூணு லேடீஸுக்கு அப்படி ஒரு கிழங்கு
இருக்குன்னே தெரியல….அது பரவால்ல….ஒரு அக்கா சேப்பங்கிழங்க எடுத்துக் காட்டி ”தோ ருக்கு
பாரும்மா”ன்னாங்க…
“அய்யோ அக்கா அது பேரு சேப்பங்கிழங்கு”ன்னு
சொன்னேன்….
“தோ பார்ரா….சேனக்கெழங்க சேப்பக்கெழங்குன்னுது”ன்னாங்க
“அதான பாரேன்ன்”ன்னு இன்னொரு அக்கா சொன்னதும்
“ஆமா…இது பேரு சேப்பங்கிழங்கு தான்….அதோ
இருக்கே அது பேரு தான் சேனக்கிழங்குன்னு சொன்னதும்
“தோ….இதான் சேனக்கெழங்கு”ன்னு கருணக்கிழங்க
எடுத்து காட்டுனாங்க
“இது கருணக்கெழங்குக்கா… பிடி கருணைன்னு
சொல்லுவோம் …இதுல புளிக்குழம்பு வைப்போமே”ன்னதும்
“ன்னாது அது புளிக்கொழம்பு”
“அதான்….இங்க காரக்குழம்புன்னு சொல்லுவீங்களே”
“ஆங்ங்ங்….சரியாப் போச்சு…..ஒவ்வொரு ஊருக்கும்
ஒவ்வொரு மாதிரி போல”ன்னுட்டு போய்ட்டாங்க
எல்லாத்தையும் வேடிக்கை பார்த்துட்டு இருந்த
பெரியம்மா ஒருத்தங்க மெதுவா கிட்ட வந்து ”யம்மா…இதுக்கு உங்கூர்ல என்னா பேரு”ன்னாங்க
“எல்லா ஊர்லயும் இதுக்குப் பேரு உருளைக்கிழங்குதான்”னதும்
ஒரு பெருமூச்சு விட்டு முகத்தை முந்தானையால துடைச்சிட்டு “இந்த ஊர் நாட்டுக்காரங்கல்லாம்
பேர் வைக்கிறதே வேலன்னு இருப்பாங்க போல”ன்னு முனகிட்டே போனாங்க….
இதெல்லாம் போகட்டும்….இந்த சிறுகிழங்கு பத்தி
நிறைய பேருக்குத் தெரியல….தை மாசம் ஒட்டி தான் இந்தக் கிழங்கு நிறைய கிடைக்கும்….கிழங்கு
முழுக்கவே மண்ணு ஒட்டியிருக்கும்….கொஞ்சம் ஈரப்பதத்தோட இருக்கும் போதே கையால அல்லது
சாக்குப்பையால கிழங்க தேய்ச்சோம்னா அதோட தோல்பகுதி தனியா வந்துடும்…கிழங்கு வெளேர்னு
இருக்கும்….கழுவிட்டு ஒண்ணு ரெண்டா துண்டாக்கி கனத்த இரும்புச்சட்டியில எண்ணெய் விட்டு
காய்ஞ்சதும் மிளகாய்த்தூள் உப்பு சேர்த்துப் போட்டு அதுல கிழங்க வறுத்து எடுத்து சாப்பிட்டா
அவ்ளோ ருசியா இருக்கும்….அல்லது குக்கர்ல ஒரு விசில் வேக வச்சு தோல உரிச்சு வதக்கியும்
சாப்பிடலாம்…..
கிழங்கு வகைகள் எல்லாமே மண்ணுக்குள்ள தான்
விளைஞ்சு வருது ஆனாலும் இந்தக்கிழங்கோட ஸ்பெஷல் என்னன்னா சமைச்சதுக்கப்புறம் கூட இந்தக்கிழங்குல
மண் வாசம் இருக்கும்….சாம்பார் பருப்பு மாதிரியான குழம்புக்கெல்லாம் சூப்பரான சைட்
டிஷ்…..இன்னும் ரெண்டு மாசத்துக்கு கிடைக்கும்னு நினைக்கிறேன்….கடைகள்ல பார்த்தீங்கன்னா
கண்டிப்பா வாங்கி சாப்பிட்டுப் பாருங்க….
No comments:
Post a Comment