”ஆட்டிச நிலையாளர்களின் பெற்றோர் ஒன்றுகூடல்” நிகழ்வு நேற்று மாலை சென்னை தி.நகரில் “வினோபா அரங்கம், தக்கர் பாபா வித்யாலயாவில் மாலை 4 மணி அளவில் தொடங்கியது.
சிறப்பு விருந்தினர்களாக நடிகர் திரு.பிருத்விராஜ், மருத்துவர் திரு.சிவபிரகாஷ் ஸ்ரீனிவாசன் மற்றும் மருத்துவர் திருமதி தேவகி. சாத்தப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆட்டிச நிலையாளர்களின் பெற்றோர் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொள்ள வந்திருந்தனர். குழந்தைகள் பொழுதுபோக்கிற்காக அரங்கின் வெளியே இருபுறமும் பெரிய அளவிலான சறுக்கு பலூன்கள் அமைக்கப்பட்டிருந்தன. குழந்தைகள் மிகுந்த உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் விளையாடத் துவங்கினர். நிகழ்வில் தன்னார்வத்துடன் வந்திணைந்த இளைஞர்கள் அவர்களை கவனித்துக் கொண்டதால் பெற்றோர்கள் இலகுவாக அரங்கத்தினுள் பொருந்தி இருக்க முடிந்தது.
“அரும்பு அறக்கட்டளை”யின் நிர்வாகி திருமதி.லக்ஷ்மி பாலகிருஷ்ணனின் துவக்க உரையுடன் நிகழ்வு இனிதே தொடங்கியது. ”ஆட்டிச நிலையாளர்களின் பெற்றோர் ஒன்றுகூடல்” நிகழ்வின் காரணத்தையும், அவசியத்தையும், முக்கியத்துவத்தையும் மிகச் சிறப்பாக எடுத்துரைத்துப் பேசினார் திருமதி.லக்ஷ்மி பாலகிருஷ்ணன்.
அடுத்ததாகப் பேசிய “அரும்பு அறக்கட்டளை”யின் மற்றொரு நிர்வாகியும், “ஆட்டிசம் சில புரிதல்கள்” மற்றும் “சந்துருவுக்கு என்னாச்சு” போன்ற ஆட்டிச நிலையாளர்களை முன்வைத்து எழுதப்பட்ட நூல்களின் ஆசிரியருமான திரு.யெஸ்.பாலபாரதி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதன் பின்புலத்தையும் ஒரு பெற்றோராக தன்னுடைய அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். நடிகர் திரு.பிருத்விராஜ் பற்றிப் பேசும் போது ”ஒரு முறை பிருத்விராஜ் விமானப்பயணம் மேற்கொண்ட போது ஆட்டிசநிலையில் இருந்த அவர் மகனுக்கு விமானத்தில் பயணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டதை தொடந்து முனைப்புடன் அரசுடன் போராடி”ஆட்டிச நிலையாளர்கள் விமானத்தில் பயணம் மேற்கொள்ள தடையேதும் இல்லை” என்ற நீதிமன்ற தீர்ப்பினை வெற்றிகரமாகப் பெற்றுத் தந்திருக்கிறார் என்பது குறிப்பிட்டதோடு இன்றைக்கு ஆட்டிச நிலையாளர்கள் விமானத்தில் இலகுவாகப் பயணிக்க முடிவதின் பெரும்பங்கு திரு.பிருத்விராஜ் அவர்களையே சாரும்” என்று கூறியது அங்கு வந்திருந்த பலருக்கும் வியப்பான , பாராட்டத்தகுந்த செய்தியாக இருந்தது.
சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட நடிகர் திரு.பிருத்விராஜ் அவர்கள் பேசும் போது அவருடைய மகனுக்கு வயது 20 என்றும், இருபது ஆண்டுகளுக்கு முன் ஆட்டிசம் என்ற சொல்லே பரவலாக அறியப்படாத காலத்தில் இருந்து இன்றுவரை தான் சந்தித்து வந்த சோதனைகளையும் அவற்றை வெற்றிகரமாகக் கையாண்டதையும் தன்னுடைய மகனின் ஒவ்வொரு நடவடிக்கையும் ஒவ்வொரு நாளும் புதிதாய் ஒன்றைக் கற்றுக் கொண்டு அவர் செய்யும் செயல்களும் தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், சராசரி குழந்தைகளைப் பெற்ற பெற்றோருக்கு இருக்கும் எவ்விதக் கவலையும் தனக்கு இல்லையென்றும் தன் மகன் ஒரு ஆட்டிச நிலையாளர் என்பதை தான் எல்லாவகையிலும் ஏற்றுக் கொண்டு மகிழ்வுடன் வாழ்வதாகவும் கூறியது அங்கு வந்திருந்த அனைத்து பெற்றோர்களுக்கும் மிகுந்த ஆறுதலும் நம்பிக்கையும் அளிப்பதாக இருந்தது.
அடுத்ததாகப் பேசிய மருத்துவர் திரு.சிவப்ரகாஷ் ஸ்ரீனிவாசன் அவர்களின் பேச்சும் , மருத்துவர் திருமதி.தேவகி சாத்தப்பன் அவர்களின் உரையும் வந்திருந்த பெற்றோரின் மனத்தடைகளை உடைத்ததோடு வாழ்வின் இடர்களை உள்ளது உள்ளபடி ஏற்றுக் கொண்டு வாழப் பழகிக் கொண்டால் ”வாழ்தல் இனிதே” என்பதை தெளிவாக உணர வைத்தது.
நிகழ்வின் இனிய திருப்பமாக, ஆதித்யா தொலைக்காட்சியின் வழி நாம் அனைவரும் நன்கறிந்த “கலக்கப் போவது யாரு” நிகழ்ச்சி பிரபலம் திரு.வெங்கடேஷ் ஆறுமுகம் அவர்கள் தனி ஒருவனாக மேடையேறி நகைச்சுவை விருந்தளித்தார். அரங்கம் முழுவதையும் கைதட்டலாலும் சிரிப்பலைகளாலும் நிரம்பச் செய்தார்.
நிகழ்வில் கலந்து கொண்ட பெற்றோர்கள் சக பெற்றோர்களின் அன்றாடப் பிரச்சனைகளையும் ஒவ்வொரு நாளும் மேற்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்களையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டதோடு சிறப்பு விருந்தினர்களின் ஆலோசனையையும் பெற்று இதுபோல மேலும் பல நிகழ்வுகளின்வழி ஆட்டிசநிலையாளர்களின் பெற்றோரை ஒன்றிணைக்க வேண்டுமாறு அரும்பு அறக்கட்டளையின் நிர்வாகிகளான திரு.யெஸ்.பாலபாரதி, திருமதி.லக்ஷ்மி பாலகிருஷ்ணனை உரிமையுடன் கேட்டுக்கொண்டு நெகிழ்வோடு விடைபெற்றனர்.
ஆட்டிசம் குறித்த புரிதல் ஆட்டிசநிலையாளர்களின் பெற்றோர் மட்டுமன்றி மற்ற அனைவருக்குமே பரவலாகச் சென்றடைய வேண்டியதன் அவசியம் இந்நிகழ்வின் வாயிலாகத் தெளிவாகத் தெரிகிறது. ஆட்டிசநிலையாளர்கள் எந்தவொரு பொது இடத்திலும் இயல்பாகப் பொருந்தி இருக்குமாறு சூழலை மாற்றுவதில் சமுதாயத்தில் அனைவருக்கும் நிச்சயம் பங்கு இருக்கிறது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். மகிழ்ச்சியான வாழ்வு எல்லாருக்கும் பொதுவானது என்பதைத் தெளிவாக உணர்த்திய ஒரு சிறப்பான மன நிறைவான நிகழ்வின் தொகுப்பாளராக சிறிய அளவில் பங்கேற்றதில் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்கிறேன்.
பி.கு: நண்பர்கள் இந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள சுட்டினைப் பகிர்ந்து பலருக்கும் சென்றடைய உதவுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி !!!
No comments:
Post a Comment